Learning Experiences of Curriculum (in Tamil)
கலைத்திட்டத்தில் கற்றல் அனுபவங்கள்
அறிமுகம்
கலைத்திட்டம் கல்விச் செயன்முறையின் இதயம் ஆகும். கல்வி செயன்முறையாக இருக்கும் சமயத்தில் கலைத்திட்டம் அந்த செயன்முறைக்கான வழியாகவே அமைகின்றது எனலாம். கல்வியானது ஆற்றலை குறிக்க, கலைத்திட்டமானது கற்றலுக்கான சூழ்நிலையை குறித்து நிற்கின்றது எனலாம். அந்தவகையிலேயே கலைத்திட்டத்தையும் அனுபவங்களையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரித்தறிதல் என்பது முழுமையற்றதாகவே நோக்கப்படும் எனலாம். இதுபற்றி, கல்வியியலாளர்கள் பின்வருமாறு கூறியுள்ளனர்.
“கல்வியின் குறிக்கோள்களை அடைவதற்கு துணைபுரியும் அனைத்து அனுபவங்களும் கலைத்திட்டத்தில் அடங்கும்." - மாண்ரோ
எனவே ஆசிரியரின் உதவியுடன் மாணவர்கள் ஈடுபடும் அனைத்து செயல்களும் கற்றல் நோக்கங்களை அடைய உதவும் கற்றல் அனுபவங்களாகவே கொள்ளப்படுகின்றன. அந்தவகையில் இன்று பாடப் பொருளுக்கு உட்பட்டும் வெளிப்பட்டும் பல்வேறு வடிவங்களில் கற்றல் அனுபவங்கள் பெறப்படுகின்றன. எனவே தான் கலைத்திட்டத்தில் கற்றல் அனுபவங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக காணப்படுகின்றன.
விந்தை செய்யும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் அடுக்கடுக்காக பரவிக் காணப்படும் இருபத்தியோராம் நூற்றாண்டில் கல்வியும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துடன் இணைந்து விருத்தி கண்டு வருகின்றது. அதன் அடிப்படையில் கால ஓட்டத்திற்கு ஏற்ப கலைதிட்டங்களும் மாற்றங்களுக்கு உட்பட்டு வருகின்றது. கலைத்திட்டம் தேசிய கல்வி இலக்குகள் கற்றல் நோக்கங்கள் உள்ளடக்கங்கள் கற்றல் அனுபவங்களை ஏற்படுத்தக்கூடிய வகையிலேயே கட்டமைக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் இங்கு நாம் கற்றல் அனுபவம் என்பதை நோக்கும் போது பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் வழங்கப்படுகின்ற அனைத்து கல்விசார் கல்விசாரா செயற்பாடுகளினால் பெறப்படும் அனுபவங்களை கற்றல் அனுபவங்கள் என்போம்.
இந்தக் கற்றல் அனுபவங்களை உள்ளடக்கியதாகவே கலைத்திட்டம் காணப்படுவதால் கலைதிட்டமானது ஒரு கற்றல் அனுபவம் என கூறப்படுகின்றது. ஸ்மித், ஸ்டான்லி, ரோர்ஸ் ஆகிய அறிஞர்களின் கருத்துப்படி “கலைதிட்டம் என்பது பாடங்கள், அனுபவங்கள் மற்றும் செயல்முறைகள் அடங்கிய மாணவர்களின் பள்ளி வாழ்க்கை ஆகும். சிறார்களையும் இளைஞர்களையும் குழுமுறையில் சிந்திக்கவும் மற்றும் செயல்படவும் கட்டுப்படுத்தப்படும் வகையில் பாடசாலையில் அமைக்கப்பட்ட எதிர்கால பயனுள்ள செயல்திறன் அனுபவங்களே கலைத்திட்டம் எனப்படும்” என்று கூறியுள்ளனர். இதன் அடிப்படையில் நோக்கும்போது கலைத்திட்டமானது கற்றல் அனுபவத்திற்கு மிக முக்கியமான பங்கினை வழங்குகின்றது என அறியலாம்.
பாரம்பரிய கற்பித்தல் முறைகளில் கற்றல் அனுபவங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதுடன் நவீன கற்பித்தல் முறைகளில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக கற்றல் அனுபவம் காணப்படுகின்றது. அந்த வகையில் இருபத்தோராம் நூற்றாண்டில் ஆசிரியர் வகிபாகமானது மாணவர்கள் தேசிய குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்கு கற்றல் உள்ளடக்கத்தின் துணையுடன் கற்றல் அனுபவங்களை பெற ஆசிரியர் ஒரு வசதியளிப்பவராக தொழிற்படுகின்றார். புதிய திறன்களை கற்றுக்கொள்ள கற்றல் அனுபவங்கள் மாணவர்களுக்கு உதவியாக அமைகின்றன. இதனால் கற்றல் அனுபவங்களை திட்டமிடும் போது மாணவருடன் தொடர்பு கொள்ளும் விதத்தில் ஆசிரியர் செயற்பட வேண்டும்.
கற்றல் அனுபவங்களை மாணவர்கள் கல்விசார் முறையில் ஆசிரியர்கள் வகுப்பு தோழர்கள் உதவியுடன் பெறுகின்றனர். கல்வி சாரா அனுபவங்களே இணைப்பாடவிதான செயற்பாடுகள் ஆன விளையாட்டு, மாணவர் மன்றம் கலை நிகழ்ச்சிகள் போன்ற பலவற்றின் மூலம் பெற்றுக் கொள்கின்றனர்.
கற்றல் அனுபவமானது கற்றல் நிகழ்ச்சி நிரல், செயற்பாட்டு நிகழ்ச்சி நிரல், வழிகாட்டல் நிகழ்ச்சி நிரல் மூலம் பெறப்படுகின்றது.
கற்றலுக்கான நிகழ்ச்சி நிரல்.
பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற பிரதான கற்றல் அனுபவங்களாக விளங்குபவை கற்றலுக்கான நிகழ்ச்சி நிரலாகும். கற்றலுக்கான நிகழ்ச்சி நிரலென்பது பாடசாலையில் நடைபெறுகின்ற பாடங்கள் அனைத்தையும் இது குறிக்கின்றது. சுருக்கமாகக் கூறின் பாடமையக் கலைத்திட்டம் என்றும் இக்கற்றலுக்கான நிகழ்ச்சி நிரலைக் குறிப்பிடலாம்.
கல்வியமைச்சின் சிபாரிசுக்கு அமைவாக பாடசாலைகளில் நடைமுறைப் படுத்தப்படும் கலைத்திட்டமாகும். இது பாடசாலையின் பல்வேறு கட்டங்களுக்கு ஏற்ப மாற்றமடையும். இப் பாடக்கலைத்திட்டத்தின் (முறைசார்ந்த கலைத்திட்டத்தின்) ஒழுங்கு முறைக்கு அமைய பாடத்திட்டம், பாடப்புத்தகம், ஆசிரியர் கைந்நூல்களில் விதந்துரைக்கப்பட்டுள்ள மதிப்பீடு நியதிகள் போன்றவற்றின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும். இப் பாடக் கலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வழிகாட்டல்கள், அறிவுறுத்தல்கள் தேசிய கல்வி நிறுவனத்தின் நெறிப்படுத்தலுடன் கல்வியமைச்சு, கல்வித் திணைக்களங்களின் சுற்று நிருபங்களுக்கு ஊடாகவும் வழங்கப்படும்.
செயற்பாடுகளுக்கான நிகழ்ச்சி நிரல்
பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற பிரதான கற்றல் அனுபவங்களாக விளங்கும் கற்றலுக்கான நிகழ்ச்சி நிரலுக்கு அடுத்தபடியாக மாணவர்களுக்கு கற்றல் அனுபவத்தை வழங்குவதில் செயற்பாடுகளுக்கான நிகழ்ச்சி நிரல் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
பொதுவாக பாடசாலை கலைத்திட்டத்தில் தனியே பாடங்களை மாத்திரம் கருத்திற்கொண்டு கற்றல் அனுபவங்கள் வழங்கப்படுவதில்லை. அதற்காக பாடசாலை கலைத்திட்டமானது 03 வகையாக பிரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதாவது
01. பாடக்கலைத்திட்டம்
02. இணைப்பாடக்கலைத்திட்டம்
03. மறைக்கலைத்திட்டம்
இந்தவகையில் நோக்கும் போது பாடசாலை மட்டத்தில் மாணவர்கள் பங்குபற்றி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கூடாக மாணவர்களுக்கு கற்றல் அனுபவங்களை வழங்குவதையே இந்த செயற்பாடுகளுக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து நிற்கின்றது. அதாவது அந்த சமூகத்திற்கு ஏற்றாற் போல் உடல்இ உளஇ சமூகஇ பண்பாடுஇ ஆளுமை என சகல ஆற்றல்களையும் கொண்ட பூரண மனிதனாக மாறுவதற்கு தேவையான மேலதிக கற்றல் அனுபவங்களை இந்த நிகழ்ச்சி நிரலானது வழங்குகின்றது.
உதாரணமாக பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும்
கல்விச்சுற்றுலா
கழகச்செயற்பாடுகள்
விளையாட்டுப் போட்டி
வாழ்க்கை திறன் நிகழ்ச்சிகள்
கண்காட்சி
சஞ்சிகை வெளியீடுகள்
இலக்கிய மன்றங்கள் போன்ற பல்வேறுபட்ட செயற்பாடுகளை குறிப்பிட முடியும்.
அதாவது இவ்வாறான செயற்பாடுகள் மூலமாக புதிய அறிவு மைய நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளக்கூடியவர்களாக மாணவர்களை வளர்த்தெடுக்கவும் தொழில் உலகுடன் சிறந்த இணைப்பை ஏற்படுத்தவும் சிறந்த கற்றல் அனுபவங்களை இந்த செயற்பாட்டு நிகழ்ச்சி நிரலானது மாணவர்களுக்கு வழங்குகின்றது. இந்தவகையிலேயே தான் உளவியலாளர்கள் இச்செயற்பாடுகளை சமூக கற்றலுக்கான வாய்ப்புக்கள் என குறிப்பிடுகின்றனர். அதாவது பாடசாலைகள் தங்களது அன்றாட செயற்பாடுகளில் மாணவர்கள் செயற்படுவதற்கான முழுமையான கற்றல் அனுபவங்களை வழங்குகின்றன
வழிகாட்டல் நிகழ்ச்சி நிரல்
கலைத்திட்டத்தில் கற்றல் அனுபவங்களை வழங்கக்கூடியதாக வழிகாட்டல் நிகழ்ச்சி நிரல் காணப்படுகிறது. வழிகாட்டுதல் என்ற வார்த்தை 1530 களில் தோன்றியது. பாடசாலையினதும் சமூகத்தினதும் மிக முக்கிய பகுதியாக இது காணப்படுகிறது. சமுகத்திலும் பாடசாலையிலும் வீட்டிலும் மாணவர்கள் வாழ்வதற்கான வழிகாட்டல்கள் இதில் அடங்கும். இதன் மூலமாக மாணவர்கள் சுயமான விளக்கத்தையும் சுய நெறிப்படுத்தலையும் பெறுவதற்கு இது உதவுகிறது
இதனது பிரதான நோக்கமாக அமைவது மாணவர்கள் சந்தோசமாக வாழ்வதற்கும், வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவதாகவும் காணப்படுகிறது. வழிகாட்டலுக்கு தனியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்ற போதும் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களிற்கு அவர்களின் பயிற்சிக் காலத்தில் வழிகாட்டல் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகிறது.
வழிகாட்டுதல் என்பது ஒரு சமூக சேவையாக சமுதாய வரலாற்றில் நீண்ட காலமாக இருந்து வருகின்ற ஒரு செயற்பாடு ஆகும். இது பாடசாலையின் நோக்கங்களை நிறைவேற்ற பாடசாலைக்கு உதவுகிறது. வழிகாட்டுதலானது ஆலோசனையோடு தொடர்புபட்டு காணப்படுகிறது. கற்பவர்கள் தங்களைத் தெளிவாக பார்க்கவும், தங்களின் வாழ்க்கைக்கு என்ன தேவை என்பதை அறியவும், சமூக விதிமுறைகளின் வரம்பிற்குள் அதை எவ்வாறு பெறுவது என்பதையும் அறிந்து கொள்ள இது ஒரு சுய மேம்பாட்டுத் திட்டமாகும்.
வழிகாட்டுதலின் இறுதி இலக்கு மாணவர்கள் மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ உதவுவதாகும், ஏனெனில் அவர்கள் வாழ்வதில் அர்த்தத்தைக் கண்டறிந்து அவர்களின் தனிப்பட்ட நோக்கங்ளை அடைய சமூக விதிமுறைகளுக்கு இணங்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். கல்விக்கான தேசியக்கொள்கை பாடசாலையில் ஆலோசனை உட்பட கல்வி சேவைகளை வழங்குகிறது. ஆலோசகர்கள் மாணவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியான, ஆரோக்கியமான உறவுகளைப் பேண உதவுகிறார்கள். மற்றவர்கள் மீது அக்கறை காட்டும் பொறுப்பான குடிமக்களாக மாற மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள் ஆசிரியர் கல்வித்திட்டத்தின் ஒரு பகுதியாக பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் வழிகாட்டுதலின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டு மாணவர்களுக்கு அத்தகைய அறிவைப் பயன்படுத்த வேண்டும். தனியார் பாடசாலையில் வழிகாட்டி ஆலோசகர்கள் கட்டாயம் வழங்கப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆலோசனை என்பது ஒரு வழிகாட்டுதலின் துணைத்தொகுப்பாகும். இது பாடசாலை வழிகாட்டுதல் திட்டத்தின் இதயம் ஆகும். மாணவர்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ப ஆரோக்கியமான ஆளுமையை வளர்த்துக்கொள்ள பாடசாலை ஆலோசகர்கள் உதவுகிறார்கள். ஒலிவர் என்பவரின் கூற்றுப்படி வழிகாட்டல் திட்டம் ஒரு படிப்புத் திட்டத்தை விட சிறந்தது ஆகும். எனவே சிறந்த கற்றல் அனுபவங்களை வழங்க வழிகாட்டல் அவசியமாகும்.
அந்த வகையில் பாடசாலை வழிகாட்டல் திட்டத்தில் 3 அம்சங்கள் காணப்படுகின்றன.
தொழில் வழிகாட்டல் (Vocation Guide)
தொழில் வழிகாட்டுதல் என்பது தனிநபர்களுக்கு அறிவு, தகவல், திறன்கள், மற்றும் தொழில் வாய்ப்புகளை அடையாளம் காணத்தேவையான அனுபவத்தைப் பெற உதவும் வழிகாட்டுதல் ஆகும். இது மாணவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்கள் (விருப்பு, வெறுப்பு, திறமை ) மற்றும் நலன்களுக்கு ஏற்ப பொருத்தமான தொழிற்துறைகள் அல்லது தொழிலைத் தேர்;ந்தெடுக்க உதவும் சேவையாகும். இது பல்வேறு உளவியல் சோதனைகள் மற்றும் பாடசாலை ஆலோசகருடன் தனிப்பட்ட ஆலோசனை மூலம் தொழில் ரீதியாக செய்யப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் தனிப்பட்ட குணாதிசயங்கள், ஆர்வம், உந்துதல், ஆகைகள், திறன்கள், விருப்பு, வெறுப்புகள் போன்றவற்றை புரிந்து கொள்ள முடியும்.
இன்றைய தொழில்நுட்ப உந்துதல் உலகில் பணியாளர்களின் ஆற்றல்மிக்க தன்மைக்கு மாணவர்களைத் தயார்படுத்துவது இன்றியமையாதது. ஏனெனில் தற்பொழுது தொழிநுட்பத்தை மையப்படுத்தியே அதிக வேலை வாய்ப்புகள் காணப்படுகின்றன. கல்வியில் வெற்றி பெற மாணவர்களை அறிவுறுத்தும் அதே வேளையில் தொழிலுக்கான வழிகாட்டலையும் வழங்க வேண்டும். இதன் மூலம் மாணவர்களின் உண்மையான திறன் மற்றும் என்ன தொழிலை தொடர வேண்டும் என்ற அறிவையும் பெற்றுக்கொள்வர். அத்தோடு மாணவர்களுக்கு எந்த கற்கை நெறியை தெரிவு செய்தால் என்ன தொழில் வாய்ப்புகளைப் பெறலாம் என வழிகாட்ட வேண்டும்.
உதாரணமாக சாதாரண தர பரீட்சையை எழுதிய மாணவர்களுக்கு எந்த கற்கைத் துறையை தெரிவு செய்தால் என்ன தொழில் வாய்ப்புகளை பெறலாம் என்று வழிகாட்டலை வழங்க வேண்டும். அதாவது மருத்துவம், தொழிநுட்பம், வணிகம், கலைப்பிரிவு, கணிதப்பிரிவு என எதை தெரிவு செய்வது என வழிகாட்டலாம். எனவே தொழில் வழிகாட்டலின் முக்கியத்துவத்தை விளங்கி பாடசாலையில் இதனை மேற்கொள்ள வேண்டும்.
கல்வி வழிகாட்டல் (Education Guide)
கல்வி வழிகாட்டல் என்பது, மாணவர் சிறந்த கல்வி வளர்ச்சியை அடைய உதவும் ஒரு செயன்முறையாகும். இது மாணவர் சமூகத்திற்கு வழங்கப்படும் விசேட வழிகாட்டலாகும். கல்வி வழிகாட்டல் மாணவர்களுக்கு சரியான தெரிவுகளை செய்ய உதவுகின்றது. கல்வி வழிகாட்டலானது சுருக்கமாக பின்வரும் வினாக்களுக்கு பதிலளிக்கின்றது.
• ஒரு மாணவர் எதற்கு மிகவும் பொறுத்தமானவர்?
• எவ்வகையான கல்வி, மாணவரது உள்ளார்ந்த திறன்களை வெளிப்படுத்தி அவற்றை வளர்க்க உதவும்?
• கற்றலின் நோக்கம் என்ன?
இவ்வகையான வினாக்களுக்கு பதிலளிக்கும் வகையில் கல்வி வழிகாட்டலானது அமைந்து காணப்படுகிறது.
கல்வி வழிகாட்டல் தொடர்பான வரைவிலக்கணங்கள் கல்வி வழிகாட்டல் தொடர்பாக பல்வேறு அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் சிலவற்றை பின்வருமாறு நோக்குவோம்.
“கல்வி வழிகாட்டல் என்பது ஒரு தனிநபரின் அறிவுசார் வளர்ச்சிக்கு உதவும் ஓர் நனவான முயற்சியாகும்” – ப்ருவர்
“பாடசாலை, பாடத்திட்டம், கல்வி, பாடசாலை வாழ்கை தொடர்பாக மாணவர்களின் தெரிவுகள் மற்றும் சரிசெய்தலில் வழங்கப்படும் உதவியாக
கல்வி வழிகாட்டல் காணப்படுகின்றது” - ஆர்தர் எ. ஜோன்ஸ்
"கல்வி வழிகாட்டல் என்பது தனிநபருக்கு பொருத்தமான திட்டத்தை தேர்ந்தெடுத்து அதில் முன்னேற உதவுவதை நோக்காகக் கொண்ட ஒன்றாகும்” – ருத் ஸ்ட்ராங்
“மாணவரின் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் மறுபுறம் மாணவர்களின் வளர்ச்சி, தேவைகள் என்பவற்றை கல்விக்கு சாதகமான அமைப்பில் கொண்டு வரும் ஒரு செயன்முறையாகவே கல்வி வழிகாட்டல் காணப்படுகின்றது” – மேயர்ஸ்
கல்வி வழிகாட்டலின் முக்கியத்துவங்கள் மாணவர் சமூகத்திற்கு பல்வேறு வகையில் பயனளிக்கக் கூடிய அமைப்பில கல்வி வழிகாட்டலானது காணப்படுகின்றது. அவ்வகையில் பின்வருமாறு நோக்குவோம்.
மாணவரின் தனிப்பட்ட வேறுபாடுகளுக்கு அமைய செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வழிகாட்டுகின்றது.
அனைவரும் ஒரே மாதிரியான தேவைகள் மற்றும் விருப்பங்களை கொண்டவர்கள் அல்ல. முhணவர்களிடைளே தனிப்பட்ட வேறுபாடுகள் காணப்படுகின்றன. அதாவது, அறிவுசார் திறன்கள், ஆர்வங்கள், உந்துதல் மற்றும் அவர்களின் அபிலாசைகளின் அளவிலும் மாணவர்கள் வேறுபடுவதால் அவர்களின் இயல்புக்கு அமைய தேவைகளை பூர்த்தி செய்ய கல்வி வழிகாட்டுகின்றது.
கல்வியில் கால வீண்விரயத்தையும் தேக்கத்தையும் சரிபார்க்க உதவும்.
பாடசாலையில் பல மாணவர்கள் பரீட்சைகளில் சித்தியடையாமல் ஒரே வகுப்பில் பல வருடங்கள் பயில்கின்றனர் இதனால் பாடசாலைக் கல்விக்கு அப்பாற்பட்ட வேறு அறிவு, திறன்களை பெறுவதில் சிரமப்படுகின்றனர். அது மனித மற்றும் தேசிய வளங்களை வீணடிக்க வழிவகுக்கின்றது. எனவே கல்வி வழிகாட்டலின் பொறுத்தமான திட்டங்கள் மூலமே இதனை சரிசெய்யலாம்.
மாணவர்களின் முறையான கல்விக்கு வழிகாட்டல்
சரியான கல்வி வளர்ச்சிக்கு மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வுக்கு கல்விச் செயற்பாட்டை சரிசெய்யவேண்டும். கல்வி முறைமையில் ஒழுங்கும் நேரமும் கடைபிடிக்க வேண்டும். புதிய கற்பித்தல் சாதனங்களை பயன்படுத்தல், மதிப்பீடு
சோதனைகளை தயார்படுத்தி கொள்ளல் என்பவற்றில் சில பிரச்சினைகளை கல்விச் செயன்முறை எதிர் கொள்கிறது. எனவே இவற்றுக்கு சரியாக கல்வி வழிகாட்டல் தேவைப்படுகின்றது.
சரியான கல்வி தெரிவுகளை மேற்கொள்ள உதவும் ஒவ்வொரு கல்வி முறைமையும் இரண்டு அனுமானங்களை கொண்டது. அவையாவன, சுய வளர்ச்சிக்கு போராடல் மற்றும் ஒவ்வொரு மாணவரும் சமூகத்தில் பயனுள்ள உறுப்பினராக தமது இடத்தை ஏற்படுத்தி கொள்ளல். இதன அடிப்படையில் மாணவர்கள் தமது உயர் கல்வியை அடைய பாடநெறிகளை திட்டமிட கல்வி வழிகாட்டல் அவசியமாகும். இதன் மூலம் கல்வி தரத்தையும் மேம்மடுத்தலாம்.
விசேட தேவையுடைய மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்ய, பாடசாலையில் அல்லது ஒரு வகுப்பறையில் காணப்படும் அனைத்து மாணவர்களும் சுகதேகிகளாக காணப்படமாட்டார்கள். விசேட தெவையுடைய விதிவிலக்கான பிள்ளைகளும் காணப்படுவார்கள். எனவே இவர்களின கல்வி மேம்பாட்டிற்கு கல்வி வழிகாட்டல் மிகவும் அவசியமானது. இவ்வாறாக கல்வி வழிகாட்டல் பல்வேறு வகையில் முக்கியத்துவம் பெற்றதாக காணப்படுகின்றது.
அந்த வகையில் மாணவர்களின் அடிப்படை தரவுகள் சேகரிக்கப்பட்டு உதாரணமாக, திறன்கள், குறிக்கோள், தேவைகள், மாணவர்களின் இயலுமை, இயலாமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தனிப்பட்ட நேர்காணல் அல்லது வழிகாட்டல், குழு வழிகாட்டல் அடிப்படையில் பாடசாலையில் கல்வி வழிகாட்டல் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
தனியாள் சமூக வழிகாட்டல் (Individual and Social Guide)
வழிகாட்டல் பொதுவாக மூன்று வகைப்படுத்தப்படுகின்றது அவற்றில் மூன்றாவது வகையாக விளங்குவது தனியாள் சமுக வழிகாட்டல் ஆகும். தனியாள் சமூக வழிகாட்டலானது மாணவர்களின் முழுமையான ஆளுமையை விருத்தி செய்வதாக அமையும். இளைஞர்கள் பல்வேறு விருத்திப் படிநிலைகளில் காணப்படுகின்ற போது வீடு, பாடசாலை மற்றும் சமூகத்தில் பல்வேறான சிக்கல்களை எதிர்நோக்குகிறார்கள். அதாவது சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளுடன் முரண்பட்டவர்களாகக் காணப்படுகின்ற போது அவர்களிற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதாகும்.
இளைஞர்களால் வீடு, பாடசாலை மற்றும் சமூகத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள்.
இளைஞர்கள் தமது கருத்துக்களை முன்வைக்கின்ற போது அவை புறக்கணிக்கப்படுமாயின் சமூகம், பாடசாலை மற்றும் குடும்ப அங்கத்தவர்களுடன் வன்முறைகள், தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட முனைவர். அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறை செயற்பாடுகளில் ஈடுபடல்.
வெறுக்கத்தக்க நடத்தைகளை வெளிப்படுத்துதல்.
குற்றச் செயல்களில் ஈடுபடுதல்.
போதைப்பொருட் பாவனைகள்.
வேலைவாய்ப்புகள் இன்மை. போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
தனியாள் / தனிப்பட்ட வழிகாட்டல் பற்றிய அறிஞர்களின் கருத்துகள்.
வில்சன் (Wilson) தனிப்பட்ட வழிகாட்டலென்பது ஒருவரது உடல், உணர்வு, வளர்ச்சி, நல்லொழுக்கம் மற்றும் இணக்கம் ஆகியவற்றை மேம்படுத்த உதவுவதேயாகும்.
மில் (Mill) தனிப்பட்ட வழிகாட்டல் ஒருவரது புலன் உணர்வுகளுக்கும் புற வாழ்க்கைச் சூழலுக்கும் இடையே ஏற்படும் பரிமாற்றத்தால் செயல்படுவதாகும்.
1960 -1961 ஆம் ஆண்டு அனைத்திந்திய கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் சங்கம் இந்தியாவில் 17 பல்கலைக்கழகங்களில் மூவாயிரம் மாணவர்களை ஆய்வு செய்த போது கீழ்வரும் பொதுவான பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டது.
மற்றவர்கள் நிறைய எதிர்பார்ப்புக்களை என்னிடம் இருந்து எதிர்பார்த்தாலும் என்னால் படிப்பில் சிறப்பாகச் செயற்பட முடிவதில்லை.
என்னென்ன தொழில்களுக்கு என்னென்ன கல்வித் தகைமைகள் தேவை என்பது பற்றி எனக்குத் தெரியாது.
என்படிப்பு முடிந்தவுடன் என் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நான மிகவும் கவலைப்படுகிறேன்.
முறையான வழிகளில் படிப்பது எப்படியென்று எனக்குத் தெரியாது.
என்னுடைய தவறுகளை நான் மறப்பதற்கு மிகவும் க~;டப்படுகிறேன்.
குறித்த நேரத்தில் என்னால் வேகமாகப் படித்து முடிக்க இயலவில்லை.
இதனைத்தவிர தனியாளினுடைய உடல், மனவெழுச்சி மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றின் நடத்தைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவும் வகையில் தனிப்பட்ட வழிகாட்டல் உதவி செய்கின்றது.
சமூக வழிகாட்டல் (Social Guide)
சமூக மதிப்புக்கள், வாழ்க்கைத் தத்துவங்கள் மற்றும்; தனிமனிதர்களுக்கு இடையேயான தொடர்புகள் போன்ற பல்வேறு சமூகப் பண்புகளை மாணவர்களிடம் வளர்க்க உதவுவது சமூக வழிகாட்டல் எனபபடுகிறது.
நல்ல குடிமகனாகத் திகழ்வதற்கும்.
சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கும்
மனித வளங்களை பாதுகாத்துப் பயன்படுத்துவதற்கும்.
ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வகையில் சமுதாயத்திற்குப் பயன்படுத்துவதற்கும் சமூக வழிகாட்டல் தேவைப்படுகின்றது.
முடிவுரை
கலைத்திட்டம் என்பது கற்றல் அனுபவத்தினை அடிப்படையாகக் கொண்டது. மாணவர்கள் பாடசாலைகளின் மூலம் பெற்றுக்கொள்ளும் அனைத்துவித அனுபவங்களும் கற்றல் அனுபவங்கள் என அழைக்கப்படுகின்றது. இக் கற்றல் அனுபவங்களானது பாடசாலைக்கு பாடசாலை மாணவர்களின்திறன் வேறுபாடுகளுக்கு ஏற்ப வேறுபடும். அந்த வகையில் கலைத்திட்டமானது மூன்று வகைகளை கொண்டதாக காணப்படுகின்றது. அவை கற்றலுக்கான நிகழ்ச்சிநிரல்,செயற்பாட்டுக்கான நிகழ்ச்சிநிரல்,வழிகாட்டலுக்கான நிகழ்ச்சி நிரல் என்பவையாகும். இவ்வாறான வகைகளுக்கு ஏற்பவே கற்றல் அனுபவங்களானது மாணவர்களுக்கு கலைத்திட்டம் ஊடாக பாடசாலையால் வழங்கப்படுகின்றது.
Comments
Post a Comment