Trends of Curriculum Development (Tamil)


 இலங்கையின் கலைத்திட்ட விருத்தி


அறிமுகம்

கலைத்திட்டமென்பது திட்டமிட்ட கற்றல் அனுபவங்களின் அமைவான தொடராகும். இது இனங்காணப்பட்ட பாட ஒழுங்குகளினூடாக வழங்கப்படும் கற்றல் அனுபவங்களையும் பாடசாலையின் பொதுவான தொலைநோக்கு, நோக்கக் கூற்று, மரபுகள், பண்பாண்மை என்பவற்றையும் உள்ளடக்கும். இவை யாவும், கல்வியின் இறுதி இலக்கு எனக் கருதும் எல்லா நோக்குகளிலும், ஒரு சிறாரின் முழுமையான விருத்திக்குப் பங்காற்றவேண்டும். ஒரு சிறாரின் ஆளுமையின் வௌ;வேறு பண்புக்கூறுகள் எனக் கல்வி மெய்யியலாளர்கள் எடுத்துரைப்பவை ஒரு சிறாரின் உடல், உள, சமூக, உணர்ச்சி, ஆன்மீக விருத்திகளை உள்ளடக்கும்.

இந்தப் பொதுவான குறிக்கோள்களை விட, இலங்கை தன் வரலாற்று, பண்பாட்டு மரபுரிமை, சமூக நியமங்கள், அரசியல், சமூக, பொருளாதாரத் தேவைகள் சார்ந்து குறிப்பான குறிக்கோள்களையும் உடையது. இப் பொதுவான குறிக்கோள்களையும் சிறப்பான குறிக்கோள்களையும் கருத்திற்கொண்டு, தேசிய கல்வி ஆணைக்குழு தேசிய கல்விக் குறிக்கோள்களை உருவாக்கியுள்ளது. தேசிய கல்வி ஆணைக்குழு தனது 1992ம் 2003ம் ஆண்டுகளின் அறிக்கைகளில், இத்தகைய தேசிய குறிக்கோள்களை அடையும் ஒரு வழியாக அடிப்படைத் தேர்ச்சிகளின் தொகுதியொன்றையும் இனங்கண்டுள்ளது. அடிப்படைத் தேர்ச்சிகளைப் பதியவைத்தல் மூலம் தேசிய நோக்கங்களை அடைவதே இலங்கையின் கலைத்திட்ட விருத்தியின் பிரதான இலக்காகும்.

இலங்கையிற் கல்விக்கான மத்திய அதிகாரமே கலைத்திட்டத்தை எப்போதும்பரிந்துரைத்துள்ளது. தற்போதைய பாடசாலை முறை முதலில் அறிமுகமான பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலேயே இந் நடைமுறை தொடங்கியது. கல்வித் திணைக்களம், பாடசாலைகளிற் கற்பித்தற்குரிய கலைத்திட்டத்தைப் பரிந்துரைத்து அதைப் பாடசாலைகட்குச் சுற்றுநிருபமாக வழங்கியது. சுதந்திரத்தின் பின் அரசாங்கம் நிறுவிய கலைத்திட்ட விருத்தி மையம் பின்னர் தேசிய கல்வி நிறுவனமாக (NIE) விருத்திபெற்றது. எல்லாவகையான கல்விப் பணியாளர்களின் தொழில்முறை விருத்திக்கும் கல்வி சார்ந்த ஆய்வுகளை நடத்துதற்கும் மேலாகக் கலைத்திட்ட விருத்திப் பணியும் இந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மத்தியில் விருத்தியான கலைத்திட்ட விவரக்கூற்றுகளில் நிகழ்ச்சித்திட்ட அமைப்புக்கள், பாடப் பிரிவுகளும் உள்ளடக்கமும், கற்பித்தல் அணுகுமுறைகள் அல்லது செய்முறைகள், கலைத்திட்டம் சார்ந்த வளப் பொருட்கள், கலைத்திட்டத்தின் வெற்றியை அளவிடவல்ல பெறுமதியீட்டு, மதிப்பீட்டு நுட்பங்கள் ஆகியன உள்ளடங்கும். இவற்றின் அடிப்படையில்தேசியப் பொறுப்பதிகாரிகள், பாடவிதானம், கற்றல் வெளிப்பாடுகளையோ கற்றல்-கற்பித்தல் செய்முறைகளுடனான திறன்களையோ சுட்டும் கற்கைநெறி வழிகாட்டிகள் அல்லது ஆசிரியர்அறிவுறுத்தலற் கையேடுகள், பாடநூல்கள், கற்பித்தற் துணைகள், மாதிரி வினாக்கள் என்பன உட்பட்ட விரிவான வளத் திரவியங்களைத் தயாரிக்கின்றனர். கலைத்திட்டத்தின் செயற்படுத்தலைக் கண்காணித்தல் அமைச்சின் மேற்பார்வைப் பணியாளர்களதும் மாகாணக் கல்விப் பொறுப்பதிகாரிகளதும் பொறுப்பாகும்.

NIE யும் கல்வி வெளியீட்டுத் திணைக்களமும் எல்லாக் கலைத்திட்டப் பொருட்களையும் வடிவமைத்துப் பாடசாலைகட்கு வழங்குகின்றன. எனினும், இவ்வாறு மத்தியில் தயாரித்த கலைத்திட்டத்தின் பயன் மாணவர்கட்கு ஆர்வமூட்டி அவர்களின் நடத்தையில் மாற்றத்தை கொண்டுவரக்கூடிய பல்வேறு நுட்பங்களைக் கையாளற்கான வழிகாட்டலில் தங்கியுள்ளது. எனவே ஆசிரியருக்கும் மாணவர்க்கும் இடையே வகுப்பறையில் நிகழும் இடைவினையை ஆசிரியரின் தரமே பெரும்பாலும் தீர்மானிக்கிறது. இச் செயற்பாட்டை ஒழுங்குவிதிகளாற் கட்டுப்படுத்த இயலாது. கற்றல் ஆசிரியரதும் வகுப்பிலுள்ள மாணவர்களதும் ஆர்வத்திலேயே மிகத் தங்கியுள்ளது. கற்றல்-கற்பித்தல் செயற்பாடு வெறுமனே தகவல்களை வெளிப்படுத்துவதைப் பற்றியதாயன்றிச், சிக்கலாகிவரும் சமூகத்தில் வெற்றிகரமாக வாழ அவசியமான தேர்ச்சிகளையும் திறன்களையும் விருத்திசெய்வதைப் பற்றியதாகியுள்ள சூழலில் இது மிக முக்கியம்.

திட்டமிட்ட கலைத்திட்டத்திற்கும் செயற்படுத்திய கலைத்திட்டத்திற்கும் அடைந்த கலைத்திட்டத்திற்கும்  பாரிய இடைவெளி இருப்பது உண்மை. திட்டமிட்ட கலைத்திட்டமென்பது மத்திய பொறுப்பதிகாரிகள் பரிந்துரைப்பது. செயற்படுத்திய கலைத்திட்டம் வகுப்பறையில் உண்மையாக நடைபெற்றது. அடைந்த கலைத்திட்டம் கற்றல்- கற்பித்தல் செயற்பாட்டிற் பங்குகொண்டதன் பயனாகக் கற்பவர் பெற்றதைக் குறிக்கிறது.

பல்வேறு குழுக்களும் ஆணைக்குழுக்களும் முன்வைத்த கலைத்திட்ட மறுசீரமைப்பு ஆலோசனைகளைப் பரீட்சித்தால், அவை உன்னதமான ஆலோசனைகளாயினும், நடைமுறைப்படுத்தலிற் குறைபட்டு இருப்பதைக் காணலாம். எனவே பரிந்துரைக்கும் கலைத்திட்டத்தைச் செயற்படுத்தக்கூடியமை பற்றிக் கலைத்திட்டத்தைத் திட்டமிடுவோர் கூடிய கவனமெடுக்க வேண்டும்.

நம் எல்லை கடந்து நம்மைப் பாதிக்கும் அறிவு, தொழில்நுட்பம், வணிகப் போக்குகள் ஆகியவற்றில் நிகழும் மாற்றங்கள் நம்மை உலகளாவிய தாக்கங்கட்கு ஆளாக்கலாம். என்பதால் தேசிய கலைத்திட்டம் காலத்தால் மாறாதிருக்க இயலாது. மேலும், ஒரு தேசமாக நமது அபிலாட்சைகளும் தேவைகளும் நாம் கட்டுப்படுத்தவியலாத புவிப்-பருவநிலை மாற்றங்களும் தனிப்பட்ட தேவைகளும், மாறுந் தேவைகட்கு எதிர்வினையாற்றக் கல்வி ஆயத்தமாயிருப்பதை வேண்டுகின்றன. எனவே இம் மாற்றங்கட்கு அமைவாகக் கலைத்திட்டத்தைக் கிரமமாக மீளாய வேண்டும். இவ்வாறு, கலைத்திட்ட விருத்திச் செயற்பாடு, ஆசிரியர்களதும் பிற பயனுரித்தாளர்களதும் ஒழுங்கான பின்னூட்டல்களைப் பெறுதலையும், தேவையானபோது, புதிய விருத்திகளை உட்சேர்ததலையும் களச் சோதிப்புகளையும் பரிந்துரைகளின் முற்றாக்கலையும் ஆசிரியர்களைப் பயிற்றுதலையும் நாடும் ஒரு சுழற் செயற்பாடாகிறது.

கலைத்திட்ட விருத்திப் போக்குகள்

சமகால உலகில், நாடுகள், உலகமயமாதலினதும் தொழில்நுட்ப முன்னேற்றங்களது கட்டாயங்கள் உந்தும் தேசியக் கலைத்திட்டங்களைத் தழுவியுள்ளன. மேலும், மக்கள் வேலைக்காகத் தேச எல்லை கடந்து நகர்தலால், ஒப்பிடத்தக்க சான்றிதழ்களைப் பெறுமாறு அவர்கள் கட்டாயப்படுகின்றனர். இது, சர்வதேசத் தரங்கட்கு இசைவான தேசியப் பரீட்சைகளை நடத்த வழிசெய்தது. தமது கலைத்திட்டத்தை வடிவமைக்கப் பாடசாலைகட்குச் சுதந்திரம் இருந்த ஐக்கிய இராச்சியம் (ருமு) போன்ற நாடுகள், 1980ம் ஆண்டில் தேசிய கலைத்திட்டத்துக்கு மாறின. உள்ளடக்கத்திலும் தரத்திலும் தேசம்-பரந்த ஒருசீர்மையை உறுதிப்படுத்துமாறு வடிவமைத்த பொதுவான கல்வி நிகழ்ச்சித்திட்டம் எனத் தேசிய கலைத்திட்டம் வரைவிலக்கணப்படும்.

செல்வத்தை உருவாக்கலில் அறிவு அதிமுக்கிய காரணியாகியதால் உலக நாடுகள் யாவும் அறிவு-அடிப்படைச் சமூகத்தை நோக்கி நகர்கின்றன. இத் தொடர்பில், மனித வள விருத்தி  உற்பத்தியின் மரபுவழி அம்சங்களை விட அதிக முக்கியம் பெற்றுள்ளது. கல்விச் சாதனையில் உயர் தரத்தை எய்தத் தேசிய கலைத்திட்டத்தைக் கொண்டிருத்தலை ஒரு மூலோபாயமாகப் பல நாடுகள் மேற்கொண்டுள்ளன. மேற்கிலும் கிழக்கிலும், பெரும்பாலான விருத்திபெற்ற நாடுகள் தேசிய கலைத்திட்டத்தைத் தேர்ந்துள்ளன. நவீன காலத் தொடக்கத்திலிருந்தே இலங்கை தேசிய கலைத்திட்டத்தைக் கொண்டுள்ளது.

முன்னேறிய நாடுகளில் தேசிய கலைத்திட்டத்தோடு உள்ளடக்கஞ்சார் நியமங்களும் விருத்தியாகின்றன. இந் நியமங்கள், எல்லா மாணவர்கட்கும் பொதுவான எதிர்பார்ப்புத் தொகுதி ஒன்றை வழங்குவதன் மூலம், எதிர்பார்ப்புகளைத் தெளிவுபடுத்தி உயர்த்தும் நோக்குடையன. ஒவ்வொரு பாடத்திற்கும் சிறப்பான நியமங்களை விதித்தலால், நியமங்கள் மேலும் விரிவாகின்றன. பாடப்பரப்பு ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான கற்பித்தல்மூலோபாயங்களதும் தகவமைப்புக்களதும் பின்னணித் தகவல்களதும் மாதிரிகளை வழங்கும் பாடப்பரப்புக்கான கலைத்திட்டச் சட்டவரம்பை மத்திய பொறுப்பதிகாரிகள் பாடசாலைகட்கு வழங்குவர். மேலும், மத்திய-மட்ட மதிப்பீடுகள் கலைத்திட்ட உள்ளடக்க நியமங்களுடன்சீரமைந்திருக்கும். நியமங்களை விதித்த பின், அப் பகுதிக் கல்விப் பொறுப்பதிகாரிகளும் பாடசாலைகளும் தமது கலைத்திட்டத்தையும் போதனை நிகழ்ச்சித்திட்டத்தையும் குறித்த நியமங்கட்குச் சீரமைக்கும் சுதந்திரமுடையோராவர்.

ஆரம்ப நிலையிற் பொதுவான ஒன்றிணைந்த கலைத்திட்டத்தைக் கொண்டு, மாணவர் கல்லூரி மட்டத்துக்குப் போவதையொட்டிப் பாட அடிப்படையான சிறப்பு கலைத்திட்டமொன்றுக்குப் படிப்படியாகப் நகர்வது இன்னொரு போக்காகும். ஆரம்ப ஒன்றிணைந்த கலைத்திட்டம் பரந்தளவில் மொழிகள் — தாய்மொழியும் ஒரு அயல் மொழியும் — கணிதம், அடிப்படை விஞ்ஞானம், சுகாதாரமும் உடற் கல்வியும், அழகியற் கல்வி ஆகியவற்றைக் கொண்டது. சில நாடுகள் பாடாலைகளிற் சமயக் கல்வி வழங்குகின்றன; வேறு சில அதை அந்தந்த மதஅமைப்புக்கள் வழங்குமென எதிர்பார்க்கின்றன. சிங்கப்பூர் போன்ற நாடுகள் மொழிகள், கணிதம், விஞ்ஞானம் போன்றவற்றிற் கூடிய கவனஞ் செலுத்துகின்றன. ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, மலேசியா, இந்தியா ஆகியன மானிடக் கல்வியும் சமூக விஞ்ஞானமும் உள்ளடங்கிய விரிவான கலைத்திட்டத்திற் கவனமுடையன. இடைநிலை மட்டத்தில், பிரதான பாடங்களின் தொகுதியும் மாணவர்களின் ஆற்றகளில் தங்கியுள்ள பாடத்தெரிவும் உள்ளன. இவ்வகையில் இலங்கை பிற நாடுகள் பின்பற்றும் கோலத்திலிருந்து வேறுபடவில்லை.

எதிர்காலத் தேவைகளை எதிர்கொள்ளும் திறன்களின் விருத்தி அறிவு வழங்கலினும் முதன்மைபெறுகிறது. இப் போக்கு, தொழில்நுட்பச்செறிவானதொரு உலகிற் பிழைத்திருக்க, விரிந்த “21ம் நூற்றாண்டுத் திறன்களின்” தொகுதியொன்றைப் பாடசாலைகள் மாணவர்க்கு வழங்க வேண்டுமெனக் கல்விச் சீர்திருத்தவாளர்களை வாதிடத் தூண்டியது. எனினும், இத்திறன்கள் எவையெனத் தீர்மானிப்பது சவாலானது. மென்திறன்கள், வாழ்க்கைத் திறன்கள், தொழில்வாய்ப்புத் திறன்கள், மனிதர்க்கிடையிலான திறன்கள், தொழிற்படைத் திறன்கள், புலனுணர்வுசாராத் திறன்கள் ஆதியனவாக அவை விவரிக்கப்பட்டுள்ளன. இத் தொடர்பில், முன்னேறிய நாடுகள் பலவற்றிற் தேர்ச்சி-அடிப்படைக் கலைத்திட்டங்கள் தேர்வாயப்படுகின்றன.

வகுப்பறையில் தகவல் தொழில்நுட்பத்தின் வளருஞ் செல்வாக்கு மேலுமொரு போக்காகச் சுட்டப்பட்டுள்ளது. கணனிப் பாவனையும் மெய்நிகர் வகுப்பறைகளும் இணையப் பெறுவழியும் அறிவின் பெறுவழியை அடிப்படையில் மாற்றுகின்றன. முறைசார் வகுப்பறைக் கற்றலை மட்டுமன்றி வகுப்பறைக்கு வெளியே முறைசாராக் கற்றலையும் தொழில்நுட்பம் எளிதாக்குகிறது.

முன்போலன்றி, ஆசிரியர்களும் பாடசாலைகளுமே அறிவை வழங்குவோரல்ல. சிறார் தமது அன்றாட வாழ்வுச் செயற்பாடுகளின்போதும் விடாது கற்கின்றனர். பெற்றோரிடமிருந்தும் சமூகத் தொடர்புகளினின்றும் சக மாணவர்களிடமிருந்தும் ஊடகங்களினின்றும் சுற்றாடலில் இயங்கும் பிற தாக்கங்களினின்றும் அவர்கள் கற்கின்றனர். பெரிதும் முறைசாராது நிகழும்  கற்றல் வகுப்பறையின் ஒழுங்குபட்ட கற்றலினும் அதிக பயன்பாடுடையது. கற்றலை இட்டு நிரப்பப் பயனுறப் பாவிக்கக்கூடிய இக் காரணிகளைக் கலைத்திட்ட வடிவமைப்பாளர்கள் கவனிக்க வேண்டும்.

 


 


Comments

Popular posts from this blog

Student Centered Teaching (Tamil)

Sociological Bases of Curriculum (Tamil)

Subject based Curriculum and Integrated Curriculum (Tamil)

Selection of Curriculum Content (Tamil)