SMART Classroom (Tamil)
நுண்திறன் வகுப்பறைகள்
இன்றைய காலத்தில் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கின்றது. கல்வி, தொழில், பொழுதுபோக்கு போன்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அதன் பங்களிப்பு இன்றியமையாததாகிவிட்டது. அதாவது மாற்றத்திற்கான ஓர் ஊக்கியாக இவை கருதப்படுகின்றது. கல்வியை பொறுத்தவரையில் ஓர் குறுகிய வட்டத்தில் இருந்துவிடாது பரந்த வட்டத்திலிருந்து தகவல்களை பெற்றுக்கொள்ளவும், கையாளவும், பரிமாற்றிக்கொள்ளவும், வேறுபட்ட கற்றல் நுட்பங்களை இனங்கண்டு கொள்ளவும், கற்பித்தல் நுட்பங்களை வினைத்திறனுடன் பயன்படுத்திக் கொள்ளவும், விஞ்ஞான முறை ஆய்வுகளை மேற்கொள்ளவும் என பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களுக்காக தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பிரிவுகளான கணினியின் பயன்பாடு, பல்லூடகத்தின் பயன்பாடு, மற்றும் இணையத்தின் பயன்பாடு ஆகியன பிரதான இடத்தினை பெறுகின்றது. விஷேடமாக கடந்த சில தசாப்தமாக கல்வித் துறையில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமானது கணினி, மென்பொருள், இணையத் தளத்துடன் தொடர்பு, தகவல் முறைமைப்படுத்தல், தொடர்பாடல் தொழிற்பாடுகளை நிறைவேற்றும் தொழில் நுட்பங்களை உள்ளடக்குகின்றது. கல்வி முறையை நவீனப்படுத்துவதிலும், மாற்றுவதிலும் மட்டுமல்லாது கற்பித்தல், கற்றல் செயற்பாடுகளிலும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமானது முக்கிய இடம் பெறுகின்றது. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் விரிவான முன்னேற்றமானது நவீன உலகின் அறிவு விருத்திக்கு வழிவகுத்துள்ளது. இந்நவீன தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் விளைவாக உடனடித் தகவல்களை விரைவாகப் பெற்றுக்கொள்ள முடிவதுடன், தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும், விரைவான தொடர்பாடல் காரணமாக வளங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளவும் முடிகின்றது. கல்வியில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமானது பிரதான பங்கு வகிக்கின்றது. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினால் உருவாகின்ற வசதி வாய்ப்புக்கள் வகுப்பறை கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளில் ஓர் நேர்த்தன்மையான விளைவுகளை உருவாக்குகின்றது என கல்வியியலாளர்களால் நம்பப்படுகிறது.
பாடசாலைகள் தங்களின் விளைதிறனை அதிகரிக்க இப்புதிய மாற்றங்களுக்கு ஏற்ப இயங்க வேண்டியது அவசியமானதாகும். பாடசாலைகளின் பிரதான பணி அறிவாற்றல்மிக்க சமூகத்தை உருவாக்குவதாகும். இப்பணியை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு கல்வித் தொழில்நுட்பத்தை வினைத்திறனாக கையாளல் இன்றியமையாதாகின்றது. அந்த வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி; உயிர்ப்பான கற்றலுக்கு வழிவகுப்பது வினைதிறனாக அமையும். இன்றைய உலகில் தரமான கல்வி இன்றியமையாததாகி விட்டது, ஒவ்வொரு நபரின் திறனும் நாளுக்கு நாள் புதுமையைத் தேடி நகர்கிறது, இதனை சாதாரண பாரம்பரிய முறைகளினூடாக வழங்க முடியாது. புத்தாக்கத்தைக் கொண்ட திறன் விருத்திக்கு தொழில்நுட்பங்களின் முன்னேற்றகரமான பரிமாணங்களைக் கொண்ட அணுகுமுறைகளைக் கையாள்வதே சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்பங்கள் ஒவ்வொரு அம்சத்திலும் தாக்கம் செலுத்துவதால் சமூகத்தின் எதிர்பார்ப்பும் அதனை நோக்கியே காணப்படுகிறது. எனவே தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிறந்த கருத்து உருவாக்கம், கல்வி சார் சாதனைகளை ஊக்குவித்தல் போன்ற பல செயற்பாடுகள் மூலம் தரமான கல்வியை வழங்குவதாக நுண்திறன் வகுப்பறைகள் (SMART Classroom) காணப்படுகின்றன. இந்நுண்திறன் வகுப்பறைகள் சிறந்த கற்றல் கற்பித்தல் நோக்கத்திற்காக தொழில்நுட்ப உபகரணங்களுடன் மேம்படுத்தப்பட்ட வகுப்பறைகளாகும். கல்வியின் நவீன சகாப்தத்தில் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் பயன்படுத்தப்படும் சமீபத்திய தொழில்நுட்பமே நுண்திறன் வகுப்பறைகளாகும். இந்நுண்திறன் வகுப்பறைகளின்; குறிக்கோள்கள் பின்வருமாறு காணப்படுகின்றன.
- கல்வி முறைகளில் முன்னேற்றத்தை உருவாக்கல்.
- சிறந்த கற்றல் மற்றும் புரிதலை உருவாக்கல்.
- மாணவர்கள் தங்கள் பாடசாலைகளின் நுண்திறன் அணுகுமுறைகளை கற்றுக்கொள்ளல்
- மாணவர்களை வழிநடத்தவும் கண்காணிக்கவும் உதவி பெறல்.
- முறைசார் கற்றலை ஊக்குவித்தல்.
- புதிய சவால்களை எதிர்கொள்ள ஆசிரியர்களுக்கு உதவுவதற்கும் மாணவர்களின்
- திறன்களையும் செயற்றிறனையும் வளர்க்க உதவுதல்.
நுண்திறன் வகுப்பறை ஒன்றின் பிரதான நோக்கமானது கலப்பு கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டை மேம்படுத்துதல் ஆகும். இது அதிகளவில் தொழில்நுட்ப ரீதியில் மெருகூட்டப்பட்டதாகவும் அதிகளவான கற்றல் மற்றும் கற்பித்தல் வாய்ப்புக்களை வழங்குவதாகவும் விளங்குகின்றது. மாணவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும் பாடங்களை கற்பதனை சுவாரஸ்யமானதாக்குவதற்கு இவை பெரிதும் உதவுகின்றன. எண்முறையான (Digital) கற்றல் தொழில்நுட்பத்திற்குரிய உபகரணத்தொகுதி மற்றும் பிரத்தியேகமான மென்பொருட்கள், செவிப்புல மற்றும் கட்புலத் துணைச் சாதனங்கள் என்பன ஒரு வகுப்பறையில் பொருத்தப்படுவதனூடாக எண்ணற்ற கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகளை பரிமாற்றிக் கொள்வதற்கான அலகாக இவை தொழிற்படுகின்றது.
நுண்திறன் வகுப்பறையில் பொதுவாக பின்வரும் கூறுகள் காணப்படும்.
ஊடாடும் காட்சி (Interactive display/ Interactive Board)
கூட்டுறவு கற்றல் என்பது கற்பித்தல் மற்றும் கற்றலுக்கான ஒரு கல்வி அணுகுமுறையாகும், இது ஒரு சிக்கலைத் தீர்க்க, ஒரு பணியை முடிக்க அல்லது ஒரு தயாரிப்பை உருவாக்க மாணவர்களின் குழுக்கள் ஒன்றிணைந்து செயல்படுவதை உள்ளடக்கியது. புலவிதமான அம்சங்களை உள்ளடக்கிய ஊடாடும் காட்சி தொழில்நுட்ப உபகரணத்தின் உதவியுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மிகவும் இலகுவாகவும் வேகமாகவும், வகுப்பறையில் உள்ள அனைவருக்கும் காட்சிப்படுத்துவதன் ஊடாக எண்ணங்கள் மற்றும் சந்தேகங்களைக் காட்சிப்படுத்தி ஒன்றிணைந்த கற்றலுக்கு வழிவகுக்கலாம்.
நிர்வகிக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் ( Curated educational material )
ஆசிரியர்கள், கல்வி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் கற்பித்தல் உள்ளடக்கத்தின் இணையத்தை எவ்வித தயக்கமுமின்றிப் பயன்படுத்தலாம். ஏனெனில் இணைய தயாரிப்புக்களின் வரிசை ஏற்கனவே நிர்வகிக்கப்பட்ட கல்விப் பொருட்களுடனும் புதுப்பிக்கப்படும் இணைய உள்ளடக்கம் எப்பொழுதும் வகுப்பறை நோக்கங்களுக்காக வடிகட்டப்பட்டு பெறப்படுகிறது.
ஒரு பாரம்பரிய வகுப்பறையில் கற்பித்தலை இலகுபடுத்துவதற்கான கற்பித்தல் துணைச்சாதனங்களை பயன்படுத்துவது அரிதாகவே காணப்படுகிறது. நுண்திறன் வகுப்பறையில் இவ்வகையான துணைச்சாதனங்கள் நம்பகத்தன்மையுடையதாகவும், ஒளிர் சாதனங்களில் பயன்படுத்தக்கூடியதாகவும், இலகுவில் இயக்கக்கூடியதாகவும் என பல நன்மைகளைக் கொண்டதாகக் காணப்படுகிறது. இதனால் ஆசிரியர்களுக்கு பாடங்களை இலகுவில் தயாரிக்கவும், எண்ணக்கருக்களை இலகுவான முறையில் திறம்பட கற்பிக்கவும் உதவுகின்றது.
பாடசாலைக்கு மாணவர்கள் சமூகமளிக்கமுடியாமல் இருப்பது என்பது ஒரு பொதுவான சம்பவம் ஆகும். ஆனால் நுண்திறன் வகுப்பறையில் உள்ள மாணவர்கள், வகுப்பறையில் இல்லாத சந்தர்ப்பங்களிலும் ஒரு நாள் கற்றல் நேரத்தை இழக்க மாட்டார்கள். அதாவது வகுப்பறையில் கற்றல்-கற்பித்தல் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, ஆசிரியரின் அனுமதியுடன் வகுப்பறைக்கு சமூகமளிக்காத மாணவர்கள் எங்கிருந்தாலும் தொலைநிலை அணுகலை பயன்படுத்துவதன் மூலம் வகுப்பறைச் செயற்பாடுகளில் கலந்து கொள்ளலாம்.
ஒரு ஆசிரியர் பாடத்திட்டமிடலின் கடினமான செயல்முறையினை பயன்பாட்டு மூலத்தின் உதவியுடன் இலகுபடுத்திக் கொள்ளலாம். பயன்பாட்டு மூலத்தினுள் இணையத்தின் உதவியுடன் உள்நுழைந்து தேவையான பாடத்திட்டம் மற்றும் அவை தொடர்பான தலைப்பு தொடர்பாக தகவல்களை விரிவாக விளங்கக்கூடிய வகையில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு மேற்கொள்வதன் மூலம் அமர்விற்கான பாடத்திட்டம் இலகுவில் தயாரிக்கப்படுவதுடன் ஆசிரியர்கள் கற்பிப்பதில் தமது முழு கவனத்தையும் செலுத்தலாம்.
எதிர்கால குறிப்பு அல்லது மாணவர்களின் மேலதிக திருத்தம் போன்றவற்றின் தேவை கருதி, ஒரு ஆசிரியர் நிகழ்ந்த வகுப்பறைச் செயற்பாட்டினை சேமித்து வைக்கலாம். முழு அமர்வையும் My cloud எனும் இணைய பயன்பாட்டு மூலத்தில் சேமித்து வைக்க முடியும். மேலும் அது எப்போது வேண்டுமானாலும் புதுப்பிக்கப்பட முடியும்.
இன்றைய வகுப்பறைகளில் மாணவர்கள் தகவல்களை ஆசிரியர்கள் கற்பிக்கும் விடயத்தில் மட்டுமின்றி இணையம் போன்ற மாற்று தகவல்களுக்கான அணுகல்களின் உதவியுடன் பெற்றுக் கொள்கின்றன. எனவே ஒரு நுண்திறன் வகுப்பறை, இந்த தொழில்நுட்ப ஆர்வமுள்ள மாணவர்களுக்காக, அவர்களின் கையில் உள்ள பாடம் தொடர்பான காணொளிகள், படங்கள், ஒலிகள் போன்ற அனிமேஷன் ஊடகங்களின் உதவியுடன் கற்றலுக்கான ஆர்வத்தை மேலும் தூண்டுகிறது. இது கற்பித்தலின்
அழகியலை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மாணவர்கள் தங்கள் மனதில் உள்ள கருத்துக்களை நினைவில் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. மேலும் அவற்றைக் கற்றுக்கொள்வதை எளிதாக்குகின்றது.
உசாத்துணை இருப்பின் அருமை. வாழ்த்துகள்
ReplyDelete