Sociological Bases of Curriculum (Tamil)
கலைத்திட்ட உருவாக்கத்தில் சமூகவியலின் பங்களிப்பு
அறிமுகம்
இன்றைய 21 ஆம் நூற்றாண்டின் அறிவுப் பொருளாதார உலகிலே சவால்களை எதிர் கொண்டு வாழ்வதற்கு கல்வி இன்றியமையாததாகும். கல்வியின் வெற்றி தோல்வி சிறந்த கலைத்திட்டத்திலேயே தங்கியுள்ளது. கலைத்திட்டத்தை வடிவமைப்பதில் தத்துவவியல் சமூகவியல் உளவியல் என்பன செல்வாக்கு செலுத்துகிறது. அவற்றில் சமூகவியலின் செல்வாக்கு அளப்பெரியது.
சமூகவியல் என்பது சமூக நடத்தை அதன் தோற்றம் வளர்ச்சி அமைப்பு இசமூகத்தின் ஆய்வு போன்றவற்றை உள்ளடக்கியதாகும். கல்வியில் சமூகவியல் என்பது ஒரு கிளையாக கருதப்படுகிறது. கலைத்திட்டத்தினை வடிவமைக்கும் போது கருத்திற் கொள்ள வேண்டிய நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள் குறித்து சமூகம் அதன் சொந்த எதிர்பார்ப்புக்களை கொண்டுள்ளது.
ஒவ்வொரு மாணவனும் பாடசாலைக் கல்வியை தொடரும் போதும் நிறைவு செய்த பின்னரும் சமூகத்துடன் இணங்கி வாழ வேண்டும். “மனிதன் ஒரு சமூக விலங்கு” என்ற அடிப்படையில் அவன் சமூகத்துடன் இணைந்து வாழ வேண்டும். கலைத்திட்டமானது பாடசாலையில் மாணவர்களை சமூகத்தில் பொருந்தி வாழ்வதற்கான திறன் மனப்பாங்கை கட்டியெழுப்ப வேண்டும்.
கலைத்திட்டத்தை உருவாக்குவோர் சமூக பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கேற்றவாறான தேர்ச்சிகளை உள்வாங்க வேண்டும். நிகழ்கால எதிர்கால சமூகத்தில் வாழத் தேவையான அறிவு திறன் மனப்பாங்குகளை ஏற்படுத்துவதாய் அமைய வேண்டும்.
சமூக பெறுமானங்கள் கட்டுப்பாடுகள் கொள்கைகளை சீர்குலைப்பதாக உடைப்பதாக முரணானதாக கலைத்திட்டம் அமையக் கூடாது. மாறாக சமூகத்தையும் சமூகத் தேவைகளையும் பேணுவதாகவும் காலங்காலம் மாற்றமடையும் புதிய சமூக விடயகளை உள்வாங்கியதாகவும் சமூகப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாகவும் வடிவமைக்கப்பட வேண்டும். இதனை நோக்காகக் கொண்டு சமூகக்கல்வி வாழ்க்கைத் தேர்ச்சியும் குடியுரிமைக் கல்வியும் வரலாறு சுகாதாரம் புவியியல் போன்றவாறான பாடங்கள் உள்வாங்கப்பட்டுள்ளது. ஆகவே கலைத்திட்டத்தை வடிவமைக்கும் போது சமூகவியற் காரணிகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
கலைத்திட்டத்தில் செல்வாக்குச் செலுத்தும் சமூகவியல் காரணிகள்
கலைத்திட்ட வடிவமைப்பில் சமூகவியலின் கொள்கைகள் அடித்தளமாகக் காணப்படுகின்றன. சமூவியற் கொள்கைகள் கலைத்திட்டத்தை வடிவமைப்பதில் எவ்வாறு உதவுகின்றன என்பதை பின்வரும் காரணிகளின் அடிப்படையில் நோக்கலாம். அவையாவன:-
- குடும்ப அமைப்பு
- தொழில் அமைப்பு
- பெண்களின் வகிபாக மாற்றம்
- வகுப்புவாதம்
- விழுமியம் என்பனவாகும்.
குடும்ப அமைப்பு
மனித வாழ்வில் குடும்பம் என்பது முக்கியம் பெற்ற தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகும். மனித வரலாற்றில் இக் குடும்ப அமைப்பு பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது. கற்றலுக்காக பிள்ளைகளை தயார்படுத்துவதற்கான சிறந்த ஒரு இடமாக குடும்பம் காணப்படுகிறது. இது பிள்ளைகள் மையமாக கொண்டுள்ள குறித்த குடும்பத்தின் தனிப்பட்ட தகுதி நிலை மற்றும் நம்பிக்கை பொறுப்புக்களில் தங்கியுள்ளது. இக்குடும்பத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் நேரத்தை செலவிட்டு பேசுவதன் மூலமும், குழந்தைகள் கற்க ஊக்குவிப்பதன் மூலமாகவும் தங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக பாடசாலை செயற்பாடுகளில் தொடர்பில் இருப்பதன் மூலமாகவும் பெற்றோர்கள் குடும்ப அமைப்பினர் என்ற ரீதியில் பாடசாலை கலைத்திட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு கொள்கின்றனர்.
கலைத்திட்ட உருவாக்கத்தில் பிள்ளைகளுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டும், பாடசாலைகள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்பதனை சமூக அமைப்பில் ஒன்றான குடும்பமும் தீர்மானிக்கின்றன. குழந்தைகளின் வளர்ச்சித் தேவைகள் அனைத்தையுமே தனியே பாடசாலைகளால் மாத்திரம் பூர்த்தி செய்ய முடியாது. குடும்ப உறுப்பினர்கள் என்ற வகையில் பெற்றோரின் அர்த்தமுள்ள ஈடுபாடும் அவசியமாகும். சிறந்த கலைத்திட்ட நோக்கமொன்றினை அடைவதற்கு பாடசாலைக்கும் குடும்பங்களுக்கிடையிலும் ஒரு வலுவான தொடர்பு அவசியமாகும். அதனால் பாடசாலை மற்றும் குடும்பங்களின் தொடர் பங்களிப்பை தக்க வைத்துக்கொள்ள பாடசாலைகள் கலைத்திட்டத்தினூடாக சில ஏற்பாடுகளை செய்துள்ளன. அவையாவன
- பாடசாலையில் பெற்றோர் அமைப்புக்களை உருவாக்கி அதன் மூலம் மாணவர்களின் கல்வி செயற்பாட்டில் பெற்றோர்களை ஈடுபட வைத்தல்
- பாடசாலையுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.
உதாரணமாக : சிரமதான பணிகளில் பெற்றோர்களின் ஈடுபாடு
பாடசாலை விழாக்களில் பெற்றோர்களின் பங்குபற்றுதல்கள் - பாடசாலை திட்ட கலந்துரையாடல்களில் பெற்றோர்களை இணைத்தல்.
- பாடசாலை விழாக்களில் கலந்து கொள்ளுதல்
- வீடுகளில் உள்ள கற்றல் செயற்பாடுகள்
- குடும்பத்தினரின் பாடசாலை நோக்கிய வள அர்ப்பணிப்புகள்
பாடசாலையில் குழந்தையின் கல்வி செயல்திறனில் குடும்ப பின்னணி; தாக்கம் செலுத்துவதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. HealthLit4kids program எனும் திட்டம் பங்கேற்பு மற்றும் சூழல் ரீதியாக பொருத்தமான வழியில் சுகாதார கல்வியறிவை உருவாக்குவதை நோக்கமாக கொண்டது. முக்கியமாக மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கிடையிலான தொடர்பினையும் திறனையும் வளர்ப்பதுவே பாடசாலை மற்றும் பாடத்திட்ட உத்திகளின் நோக்கமாகும். பெற்றோர்களின் மனப்பான்மையும் நடத்தைகளும் பிள்ளையின் கற்றல் பழக்கத்தையும் ஏனைய நடத்தைகளையும் வடிவமைக்கின்றன. மாணவர்கள் பாடசாலைக்கு அடுத்ததாக அதிகம் தொடர்பு கொள்ளுமிடமாக குடும்பம் காணப்படுவதானால் கலைத்தி;ட்டத்தில் குடும்பத்தின் செல்வாக்கு அதிகமாகவே காணப்படுகிறது.
தொழில் அமைப்பு
கலைத்திட்டத்தையும் கல்விச் செயற்பாடுகளையும் தொழில் உலகத்தோடு ஒன்றிணைத்தல் அண்மைக்காலமாக மேலும் தீவிரம் பெற்று வருகிறது. தொழில் அமைப்பு மாறிக்கொண்டு வருவதால் கலைத்திட்டத்தை உருவாக்குபவர்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். ஏனெனில் தொழில் வழங்குவோரது கவனம் இப்பொழுது இரண்டாம் நிலை கல்வியிலிருந்து மூன்றாம் நிலைக் கல்வியை நோக்கி திரும்பியுள்ளது. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இரண்டாம் நிலைக்கல்வி தொழில் வழங்குவொரது இயல்புகளுக்கேற்றவாறு உலகம் முழுவதும் நவீனமாக்கப்பட்டு வருகிறது.
“வேலை என்பது மனிதன் வாழும் கலையின் பிரதான பண்பாகும்.தனிநபரொருவர் தனது தொழிலுக்கும் தினசரி நிறைவேற்றும் உண்மையான செயற்பாடுகளுக்கும் இடையிலான தொடர்பே வேலை உலகாகும்” என்பது டிச்லர் (1999) என்பவரின் கருத்தாகும். தொழில் நிலையங்களும் தொழில்களின் வகைகளும் வேறுபட்ட இயல்புகளைக் கொண்ட பன்மைத்தன்மைகளை வெளிப்படுத்தி நிற்பதனால் எல்லா தொழில்களுக்குமுரிய அடிப்படையான அறிகைக் கட்டமைப்பையும் அடிப்படை உளப்பாங்கினையும் பாடசாலைகளும் உயர்கல்வி நிறுவனங்களும் ஆக்கித்தரும் நடவடிக்கை அனைத்திற்கும் பொருந்தக்கூடிய ஒரே பிடிமானத்தைக் கொண்ட செயற்பாடாகின்றது.
கலைத்திட்டமானது வேலை விழுமியங்கள் வேலைத்தளத்தில் ஏற்படும் சவால்களுக்கு எவ்வாறு முகங்கொடுத்தல் இதிறமை இபல மொழி பேசும் ஆற்றல் உலக வேலைக்கு ஏற்ற மாதிரியான திறன்கள் இஅனைத்து தொழில்களுக்கும் பொதுவாக உள்ள பொருத்தமான திறன்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.
தற்போது காணப்படும் வேலை உலகானது தொழிநுட்ப அறிவை வேண்டி நிற்கின்றது. எனவே இலங்கைளில் மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் மற்றும் வேலை சந்தையில் சிறந்த வாய்ப்பை வழங்குவதற்காக தொழிநுட்ப கல்வியை அறிமுகப்படுத்துகின்றனர்.
அந்தவகையில் தரம் 6-9 வரை தொழிநுட்ப பாடம் வாரத்தில் ஒரு பாடவேளை காணப்படுகின்றது. இதன்மூலம் தகவல் தொடர்பாடல் பற்றிய ஆரம்ப அறிவு வழங்கப்படுகின்றது. மேலும் தரம் 10-11 இல் தெரிவுப்பாடமாக விவசாயம் சுகாதாரம் மனையியல் இஊடகம் என்பவற்றோடு 3ஆம் தெரிவுப் பாடமாக தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் காணப்படுகின்றது. உயர்கல்வியின் போது அரசாங்க மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் ஒரு விசேட அலகாக உள்வாங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சமூகத்தில் காணப்படும் தொழில் வாய்ப்புகளுக்கான அடிப்படை திறன்களை கலைத்திட்டம் வழங்குகிறது. தொழிற்சந்தைகளின் தேவைகளைக் காட்டிலும் அறிவாற்றலை எந்தத் தொழில்களிலும் பிரயோகிக்கக்கூடிய பிரயோக தர்க்கத்தை கலைத்திட்டச் செயற்பாடுகள் வழியாக வளர்த்தெடுக்க வேண்டும்.
மாணவர்களை அவர்களின் விருப்பிற்கமைய தொழில் செய்ய வழிகாட்ட வேண்டும். அந்தத் தொழில் மூலம் பணத்தை மட்டும் எதிர்பார்க்காமல் சமூகத்திற்கு சேவையாற்றுவதுடன் புதிய விடயங்களை கற்றுக்கொடுக்கவும் கலைத்திட்டம் உதவி செய்ய வேண்டும். இதன்மூலம் சமூகத்திற்கு சிறந்த அறிவு திறன் மனப்பாங்குடைய தொழிற் சமூகத்தை உருவாக்கலாம்
பெண்களின் வகிபாக மாற்றம்
கலைத்திட்ட வடிவமைப்பில் சமூகவியலின் கொள்கைகள் அடித்தளமாக காணப்படுகின்றன. அந்தவகையில் கலைத்திட்டத்தை வடிவமைக்கும் போது பெண்களின் வகிபாக மாற்றம் எவ்வாறு உதவுகின்றது என்பதை பின்வருவனவற்றை கொண்டு விளக்கலாம்.
அதாவது பெண்கள் பற்றிய மரபு ரீதியான இரண்டாம் நிலை எண்ணப்பாடு சமூகத்தினால் அன்று தொட்டு காணப்படுகிறது. அதாவது பெண்கள் மென்மையானவர்கள் அவர்களால் கடினமான வேலைகள் செய்ய முடியாது. நீண்ட நேரம் செலவழித்து எதனையும் செய்ய இயலாது களைத்து விடுவார்கள், பலமில்லாதவர்கள் போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன.
இவ்வாறான பால்நிலை தொடர்பாக சமூகம் வடிவமைத்த பாத்திரச் செயற்பாடுகளே கலைத்திட்ட வடிவமைப்புக்கு காரணமாகும். அந்தவகையில் மொழி சார்ந்த ஆற்றல்களில் ஒப்பீட்டளவில் பெண்கள் மேலோங்கியிருந்தாலும் கணிதம், விஞ்ஞானம் முதலான பாடங்களின் ஆற்றல்களில் ஆண்;கள் மேலோங்கியிருத்தலும் பொதுவான தோற்றப்பாடுகளாகவுள்ளன. இவ்வாறான தள்ளுபடிக்காரணங்களாக உயிர் மரபுக் காரணிகளை முன்வைத்தே பெண்களால் முடியாது என்ற கருத்துக்கள் வேறூன்றப்பட்டு காலம் காலமாக கூறப்பட்டு வருகின்றதே ஆகும்.
இவ்வகையான காரணங்கள் அறிவு ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பது தெளிவு. ஏனெனில் யாரால் எது இயலும் எது இயலாது என எவரும் வரையறுத்து விட முடியாது. அதனால் கலைத்திட்ட வடிவமைப்பில் எதிர்கால அரசியல் தலைவர்களையும் சிவில் சேவையாளர்களையும் தயார்ப்படுத்தும் துறையாக இருப்பதனால் பால்நிலை சமத்துவத்தை கல்வித்துறையுள் முன்னெடுத்தல் பொதுசன சேவைக்கு உத்தி ரீதியான முக்கியத்துவமுடையதாகிறது. கல்வித்துறையில் பால்நிலை அணுகுமுறை மிகவும் குறிப்பாகப் பொருத்தமுடையதாகின்றது. ஏனெனில் பொது நலவாயத்தில் சில பிராந்தியங்களி;ல் இரணடாம் நிலைப் பாடசாலைகளில் மாணவர்களிலும் மேலான செயற்திறனுடையவர்களாக மாணவிகள் காணப்படுகின்றார்கள். ஆகையால் பெண்கள் இயலாதவர்கள், வலிமையில்லாதவர்கள் என்கிற மாறுபாடான கருத்துக்கணிப்புக்களுக்கு அப்பால் சென்று கலைச் செயற்பாடுகளில் பங்கெடுக்கப் பண்ணுதல் வேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான சிந்தனை கலைத்திட்ட வடிவமைப்பிற்கு கிடைக்கப்பெறும்.
பெண் -ஆண் குழந்தைகளுக்கிடையே உள்ள ஒற்றுமைகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக இந்த சமுதாயம் வேற்றுமைகளை அழுத்திச் சொல்கிறது. அதனால் தான் பெண் குழந்தைகளுக்கும் ஆண்; குழந்தைகளுக்கும் வேறுவிதமாக வளருகிறார்கள். அவர்களுடைய வழிகளும் வேறாகி விடுகின்றன. இத்தகைய வேறுபாடுகள் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே உள்ள முரண்பாடுகள் மற்றும் மோதல்களுக்கு காரணமாகிறது.
ஆனால் சிறுவர்கள் இயல்பாகவே வேறுபாடின்றி ஓற்றுமையாக ஆடிப்பாடி விளையாடி மகிழ்வது நம் கண்முன்னே நடக்கும் பொதுவான ஒரு விடயமாகும். ஏனெனில் அவர்களிடம் வேற்றுமை இல்லை, கபடம் இல்லை ஒத்த வயதுடையவர்களிடம் ஒற்றுமைதன்மையை நாம் காண முடிவது இதனால் தான். எனவே பாகுபாட்டை ஏற்படுத்தும் சமூக நடைமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் பெண்கள் தொடர்பாக சமூகம் மேற்கொண்ட கட்டுமையை மாற்றியமைப்பதற்குக் கல்வியும் கலைத்திட்டமும் வலிமையான சாதனங்களாகும். எனவே கலைத்திட்ட வடிவமைப்பில் பால்நிலை சமத்துவம் தொடர்பான கருத்துக்கள் பாடத்திட்டத்தில் உள்வாங்கப்படுத்தல் அவசியமாகிறது.
வகுப்புவாதம்
சமூகவியல் அடிப்படையில் ஒன்றான வகுப்புவாதம் பிள்ளைகளின் வாழ்க்கை மற்றும் வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்துவதாய் உள்ளது. இது கலைத்திட்ட வகுத்தலிலும் செல்வாக்குச் செலுத்துகிறது. அதாவது கலைத்திட்ட உருவாக்கலில் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களுக்கான பொது வழிபாட்டு மையங்கள் உள்வாங்கப்படுகிறது. இருப்பினும் மக்கள் தங்கள் ஆன்மீகத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கடவுளை வணங்கச் செல்லும் இவ்விரண்டு வழிபாட்டு மையங்களினைத் தவிர மக்களின் ஆன்மீகத் தேவைகளினை பூர்த்தி செய்வதற்கான பிற வழிபாட்டு மையங்களும் உள்ளன என்பதனை தற்காலத்தின் கலைத்திட்டம் உள்வாங்கியுள்ளது. இஸ்லாமிய மதம் வாசிப்ப விளக்கம் பெறல் எழுதுதல் கலையை ஊக்குவிக்கிறது. தேவாலயமும் மசூதியும் சர்வ வல்லமையுள்ள கடவுளின் சட்டத்திற்கும் சமூகத்தின் அரசியலமைப்பு சட்டங்களிற்கும் கீழ்படிதலின் நல்லொழுக்கத்தினை கற்பிக்கின்றன.அதேவேளை சமூகங்களில் அமைதியை கொண்டுவரக்கூடிய விதிகளினையும் வகுப்புவாதம் கலைத்திட்ட வடிவமைத்தலில் செல்வாக்குச் செலுத்துகிறது.
உதாரணமாக:-“உன்னைப் போலவே உன் அயலவரையும் நேசி”
மேலும் சமூக அடுக்கமைவுகளை ஏற்படுத்தும் வர்க்கம் சமூகத்தின் மக்களை தொகுதிகளாக பிரிக்கின்றது. பொதுவாக உயர்; வர்க்கம் நடுத்தர வர்க்கம் கீழ்வர்க்கம் என வகுக்கப்படுகிறது. இவை கலைத்திட்டத்தில் காலாகாலமாக உள்வாங்கப்பதுகிறது. ஆரம்ப கால கலைத்திட்டத்தில் வகுப்புநிலையில் உயர் வகுப்பினர் கல்வி சொத்து தொழில் வருமானம் உடையவராக வகுக்கப்பட்டது. அதனடிப்படையில் கலைத்திட்ட உள்வாங்கலில் வைத்தியராக ஆசிரியராக மேல் வகுப்பினரை பிரதிநிதித்துவப்படுத்தி அமையப் பெற்றது. கீழ்நிலை வகுப்பினருக்கு பெரும்பாலும் கல்வி மறுக்கப்பட்ட நிலை காணப்பட்டது. கீழ் வகுப்பினர் கல் உடைத்தல் செருப்பு தைத்தல் முடி வெட்டல் போன்றவேலைகளை செய்வோராக காணப்பட்டது.
ஆனால் தற்காலத்தில் கலைத்திட்ட வகுத்தலில் திறமை முன்னுரிமை பெறுகிறது. “திறமை உடையவன் தனக்கான தொழிலை தானே செய்வான்” என்பதாக அமைகிறது. வகுப்புவாதிகள் அனைத்துப் பாடங்களையும் ஓர் இனவாத நிறத்தில் முன்வைக்க விரும்புகின்றனர். குறிப்பாக இந்திய பாடப்புத்தகத்தில் கலைத்திட்ட வடிவமைப்பில் இந்து சமயத்திலுள்ள அனைத்து சமூகத் தீமைகளும் முஸ்லீம்களால் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வலியுறுத்தி கலைத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கலைத்திட்டமானது வகுப்புவாதங்களை இல்லாமற் செய்து ஒற்றுமை ஒத்துழைப்பு ஐக்கியம் என்ற தேசிய குறிக்கோள்களை வலியுறுத்துவதாக அமைய வேண்டும்.
விழுமியம்
கலைத்திட்ட வடிவமைப்பில் சமூகலியலின் கொள்கைகள் அடித்தளமாக காணப்படுகின்றன. அந்த வகையில் சமூகவியல் கொள்கைகள் என்ற ரீதியில் விழுமியம் சார் கொள்கைகளும் கலைத்திட்ட உருவாக்கத்தில் பிரதானமானவை. விழுமியம் எனப்படுவது, “தனிநபர்,சமூக வாழ்கை என்பவற்றை வளப்படுத்தி அதனை அர்த்தமுள்ளதாக மாற்றும் குணநல பண்பாகும்” மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் தனிமனித விழுமியங்களான அன்பு, தைரியம், ஒழுக்கம், அகிம்சை, அறம்செய்தல், சமாதானம், நேர்மை, புரிந்துணர்வு,மரியாதை என பல விழுமியங்கள் இருத்தல் அவசியமாகும்.
ஒருவன் சிறந்த விழுமியக் கல்வியை பெறுவதன் மூலம் உலகையே ஆள முடியும். உதாரணமாக உலகில் நாம் வியந்து போற்றும் பெரியார்களான மகாத்மா காந்தி,அன்னை தெரேசோ,ஆப்ரகாம் லிங்கன்,அப்துல் கலாம்,ஜவகர்லால் நேரு ஆகிகோர் எவ்வாறு சிறந்து விளங்கினார்களோ அவ்வாறே தமத விழுமியப்பண்புகள் மூலம் உலகே வியந்து போற்றும் அளவிற்கு சிறப்பினை பெற்றார்கள். ஆகவே ஒரு மாணவனுக்கு எந்த அளவிற்கு அனுபவக்கல்வி அவசியமோ அதே அளவிற்கு விழுமியக் கல்வியும் அவசியமானதாகும். ஒரு பிள்ளை வளர்ந்து பூரண மனிதராவதற்கு ஐந்து வளர்ச்சிகள் இடம்பெற வேண்டும். அவையாவன,
1. அறிவு வளர்ச்சி
2. உடல் வளர்ச்சி
3. உள வளர்ச்சி
4. அன்பு வளர்ச்சி
5. ஆத்மீக வளர்ச்சி
இவை அனைத்திலும் விழுமியம் புலப்படுகின்றது. அந்த ஐந்து வளர்ச்சிகளையும் கல்வியில் பெறுகின்ற போது மாணவரது ஆளுமை சிறக்கின்றது. எனவே கலைத்திட்ட வடிவமைப்பின் போது விழுமிய அம்சங்களும் இடம் பெறுவது கட்டாயமாகும். குழந்தை பிறந்ததும் அதற்கு விழுமியத்தை போதிப்பது குழந்தையின் பெற்றோரும் சுற்றுச்சூழலுமாகும். பிள்ளை தொடர்ந்து பாடசாலை சென்றதும் அப்பிள்ளைக்கு விழுமியத்தை வழங்குவதாக ஒவ்வொரு பாடசாலை கலைத்திட்;டமும் அமைக்கப்பட வேண்டும். மாணவன் தனது பாடசாலை காலப்பகுதியிலும் அதற்கு பின்னரும் சமூகத்தோடு அதிகம் தொடர்புபடக்கூடியவன். மேலும் தொழில் வாழ்க்கையில் இணைய வேண்டும். இவ்வாறாக பல்வேறு வகையில் சமூகத்தோடு தொடர்பு கொள்ளும் போது விழுமியம் என்ற விடயம் மிக அவசியமானது. அவ்வகையில் பாடசாலைகளில் விழுமியமானது கலைத்திட்டத்தின் ஊடாக போதிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. அதாவது பாடக் கலைத்திட்டம், இணைக்கலைத்திட்டம்,மறைக்கலைத்திட்டம் ஆகியவற்றினூடாக கட்டியெழுப்பப்படுகின்றது.
உதாரணமாக, குடியுரிமைக்கல்வி,சமயம்,தமிழ் மற்றும் ஏனைய பல பாடங்களின் ஊடாக அறக்கருத்துக்கள் மற்றும் பல விழுமியப்பண்புகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
இலங்கை ஒரு பல்கலாசார நாடு என்ற வகையில் ஏனைய இனங்களை மதித்தல், மற்றவர்களின் உரிமையை பேணுதல், ஒற்றுமை முதலிய விழுமியப்பண்புகள் குடியுரிமைக்கல்வி பாடத்தின் மூலம் கற்பிக்கப்படுகின்றது. அவை மட்டுமன்றி பாடசாலையில் விளையாட்டுப் போட்டிகள், சுற்றுலா,மாணவர் மன்ற நிகழ்ச்சிகள் போன்ற இணைக்கலைத்திட்ட செயற்பாடுகள் மூலம் ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு, புரிந்துணர்வு,அன்பு முதலிய விழுமியப்பண்புகள் வளர்ச்சியடைகின்றன. மேலும் மறைக்கலைத்திட்டத்தின் மூலம் நியதிகள்,ஒழுக்கங்களுக்கு கட்டுப்படும் தன்மை, சட்டதிட்டங்களை மதிக்கும் பண்பு,நேர முகாமை,நேர்த்தி ஆகிய பண்புகள் வளர்ச்சியடையும்.
எனவே விழுமியம் என்ற அம்சமானது கலைத்திட்ட உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானதும் பங்களிப்பு செய்வதாகவும் காணப்படுகின்றது. மாணவர்களிடையே இதன்மூலம் விழுமியப்பண்புகளை கட்டியெழுப்புவதில்; பாடசாலை ஆசிரியர்களின் பொறுப்பு அதிகம் காணப்படுகின்றது. எனவே பாடசாலை கலைத்திட்ட உருவாக்கத்தில் சமூகலியலின் கொள்கைகள் என்ற அடிப்படையில் விழுமியம் என்ற விடயமும் மிக முக்கியமானது
முடிவுரை
எல்லா வகையான கல்வி நிறுவனங்களினதும் ஒழுங்குமுறையான தொழிற்பாட்டிற்கு அடிப்படையான சட்டகமாக கலைத்திட்டம் காணப்படுகின்றது. கல்வி நிறுவனங்களது ஓடுபாதையாக காணப்படுகிறது. கலைத்திட்டமானது தரமான உள்ளீடாக இடப்படும் போது தான் தரமான கற்றற் செயன்முறையையும் தரமான கற்றல் வெளியீடுகளை அடையலாம்.
கலைத்திட்டம் ஒரு சமூகத்தின் கலாசார தெரிவாக உள்ளது. குறிப்பிட்ட சமூகத்தில் வாழும் பிரஜைகளின் பழக்க வழக்கங்கள் தேவைகள் எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்தி நிற்கின்றது. மேலே குறிப்பிட்ட சமூகவியல் காரணிகளிலிருந்து கலைத்திட்டத்தின் மீதான சமூகவியல் துறையின் செல்வாக்கும் பங்களிப்பும் புலனாகிறது.
Very useful , thanks lot.
ReplyDelete