Selection of Curriculum Content (Tamil)

 கலைத்திட்ட உள்ளடக்கத்தை தெரிவு செய்தல் 

எந்தவொரு படிப்பிற்கும் (Course) கலைத்திட்டத்தை உருவாக்கிடும்போது, முதலில் குறிக்கோள்களை அமைத்துக் கொண்டு, அவற்றினை செயலாக்க பொருத்தமான பாடப் பகுதிகளையும் அவற்றின் உட்பிரிவுகளையும் தேர்ந்தெடுத்தல் அடுத்த படிநிலையாகும்.

பாடப்பொருள் (Content)” என்பதன் விளக்கம்

பல்வேறு பாடப்பொருள்களின் தொகுப்பே கலைத்திட்டத்தின் முக்கிய பகுதி ஆகும். ஒவ்வொரு பாடத்திலும் மாணவர் கற்க வேண்டிய அறிவு, திறன்கள், மனப்பான்மைகள், மதிப்புகள் ஆகியவை பாடப் பொருள்களிலிருந்தே பெறப்படுகின்றன. ஒரு பாடத்தில் இடம் பெறும் முக்கிய தகவல்கள், நிரூபிக்கப்பட்ட உண்மைகள், கருத்துகள், கோட்பாடுகள், விதிகள், விளக்கங்கள் ஆகிய யாவும் பாடப் பொருள்களை விரித்துரைக்கும் வகையிலேயே அமைகின்றன.

பாடப்பொருள்களைத் தேர்ந்தெடுத்தலின் தகுதிப்பாடுகள்

பின்வரும் எட்டு வகையான தகுதிப்பாடுகளை (Criteria) கருத்தில் கொண்டு கலைத்திட்டத்திற்கான பாடப்பொருள்கள் தெரிவு செய்யப்படுகின்றன.

தன்னிறைவு 

தெரிவு செய்யப்படும் பாடப்பொருள்கள் மாணவர்களின் நிகழ்காலத் தேவைகளையும், வருங்கால எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்வதாய் இருத்தல் வேண்டும்: அதாவது கலைத்திட்டம் தன்னிறைவுடன் விளங்கிட குறைவான பாடப்பொருள்களின் மூலம் நிறைய கருத்துகளை கற்றிடும் வகையில் அமைந்தவற்றிற்கு பாடப்பொருள் தேர்வின்போது முன்னுரிமையளித்தல் வேண்டும்.

முக்கியத்துவம் 

தேர்ந்தெடுக்கப்படும் பாடப்பொருள் மாணவரின் அறிவினை அதிகரிப்பதாகவும், பொருள் பொதிந்த அனுபவங்களை அளித்திடுவதாகவும், வாழ்க்கையில் எதிர்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் திறன்களை அளிப்பதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

ஏற்புடைமை 

தேர்ந்தெடுக்கப்படும் பாடப்பொருள்கள் உண்மையானதாகவும், கலைத்திட்டக் குறிக்கோள்களுக்கு ஏற்றவையாகவும் பொருத்தப்பாடு கொண்டு திகழ வேண்டும். 

பயனுடைமை 

தேர்ந்தெடுக்கப்படும் பாடக்கருத்துகள் மாணவர் வாழ்க்கையின் உடனடி மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு உள்ளாந்த திறன்களின் வளர்ச்சிக்கும், வாழ்க்கைச் சிக்கல்களை எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்த்திடுவதற்கும் உரிய பாடப் பொருள்களையே தெரிவு செய்ய வேண்டும். 

ஆர்வத்தைத் தூண்டும் தன்மை

கலைத்திட்டத்தில் இடம் பெறும் கருத்துகள் மாணவர்களது நடைமுறை வாழ்க்கையோடு தொடர்புடையவையாக இருந்தால் அவை மாணவர்களது ஆர்வத்தைத் தூண்டும். 

செயல்படுத்தக்கூடிய தன்மை 

கிடைத்திடும் வளங்கள் (நிதி உட்பட), கால அளவு, வல்லுனர்களின் உதவியைப் பெறக்கூடிய வாய்ப்பு, சமூக மற்றும் அரசியல் நிலைமை, தற்போதுள்ள சட்ட திட்டங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டே பாடப்பொருட்களை தெரிவு செய்தல் வேண்டும்: அவ்வாறு இல்லையேல் மிகச்சிறந்த கலைத்திட்டத்தை உருவாக்கினாலும், அது பல்வேறு சிதைவுகளுக்கு ஆட்பட நேரிடும். 

கற்கும் திறனுக்கு பொருந்தும் தன்மை 

மாணவர்களின் வயது மற்றம் வளர்ச்சி நிலையைக் கருத்தில் கொண்டே கலைத்திட்டத்திற்கான பாடப்பொருள்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்: பாடப்பொருட்கள் மாணவர்களின் கற்கும் வல்லமைக்கு அப்பாற்பட்டதாகவோ, மிகவும் எளிதானவையாகவோ இராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஜனநாயக மதிப்புகளைப் பேணும் தன்மை

கலைத்திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்படும் பாடப்பொருள்கள் சமூக மாற்றத்திற்கு ஏற்ற வகையில் அமைந்து ஜனநாயகத் திறன்களான விட்டுக் கொடுத்தல், இணைந்து செயல்படுதல், வேற்றுமைகளுக்கு இடையே ஒற்றுமையைக் காணுதல், சகிப்புத்தன்மை ஆகியவற்றை வளர்த்திடுவதாகவும், அறப்பண்புகளை ஊக்குவிப்பதாகவும் அமைதல் வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பாடப்பொருள்களை வரிசைப்படுத்தி ஒழுங்கமைத்தல்

பாடப்பொருள் அடுக்குமுறை

மாணவர்கள் எளிதில் கற்கவும், ஆசிரியர்கள் தமது கற்பித்தலை திறம்பட திட்டமிடவும் துணைபுரியும் வகையில், சில கல்விக் கோட்பாடுகளைப் பின்பற்றி பாடக்கருத்துகளை வரிசைப் படுத்தி அமைத்தலை ‘பாடப்பொருள் அடுக்குமுறை’ என்றழைக்கிறோம்.

பாடப்பொருள் அடுக்கமைப்பின் வகைகள்

கலைத்திட்டத்தில் கற்பிக்க வேண்டிய பாடப்பிரிவுக்ள (Subjects) கூறப்பட்டிருக்கும். அதனடிப்படையில் பாடதிட்டம் (Syllabus) தயாரிக்கப்படும் பாடநூல் எழுதுவதில் வல்லுனர்களும், அனுபவமிக்க ஆசிரியர்களும் பாடநூல்களை எழுதுவார்கள் ஒவ்வொரு பாடநூலும் ஒரு நிபுணரது ஆய்விற்குப் பிறகே பதிப்பிக்கப்படும். 

பாடப்பொருளை வரிசைப்படுத்தி படிப்படியாக உயர்த்திச் செல்ல சில வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன அவையாவன

  • தருக்க முறையிலானவை (Logical Methods
  • உளவியல் முறையிலானவை (Psychological Methods
  • பொதுமைய வட்ட அமைப்பு முறை (Concentric Plan
  • சுருள் அமைப்பு முறை (Spiral Plan
  • நிறையலகு முறை (Modular Method

இனி, இவற்றைப் பற்றி சுருக்கமாகக் காண்போம்

தருக்க முறையிலான அடுக்கமைப்பு

தெரிவு செய்யப்பட்ட பாடப்பொருள் ஒவ்வொன்றின் இயல்பும் அதன் கடினத்தன்மை, பிறவற்றோடு கொண்டிருக்கும் தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது. பின்பு பாடப்பொருள்கள் யாவும் அவற்றின் இயல்புகளுக்கு ஏற்ப தருக்க ரீதியில் வரிசைப்படுத்தப்பட்டு அடுக்கப்படுகின்றன. 

இம்முறையை ‘இயல்படுக்கு முறை’ என்றும் கூறுவர்: இம்முறையில் பாடப் பொருள்களின் இயல்பினைத் தீர்மானிப்பதில் ஆசிரியரின் புலமையும் அனுபவமும் பெரும் பங்காற்றுகின்றன: இம்முறையில் கீழ்க்கண்ட விதிகளைப் பின்பற்றி அடுக்கமைப்பு செய்யப்படுகிறது: 

  • தெரிந்ததிலிருந்து தெரியாதவற்றுக்குச் செல்லல் 
  • எளியவற்றைக் கற்பித்தபின் சிக்கலானவற்றைக் கற்பித்தல் 
  • சுலபமானதிலிருந்து கடினமானதற்குச் செல்லல் 
  • திட்டவட்டமானவற்றைக் கூறியபின் கருத்தளவிலானதை விளக்குதல் 
  • வரையறுக்கப்பட்டதை முதலிலும் வரையறுக்கப்படாததை அடுத்தும் கற்பித்தல் 
  • புலனனுபவங்களிலிருந்து அறிவுசார் நிலைக்கு இட்டுச் செல்லல் 
  • முழுமையைக் காணச் செய்தபின் அதன் பகுதிகளை விவரித்தல்: 
  • பகுப்பாய்விற்குப் பின் தொகுப்பாய்வு செய்தல் 
  • பருப்பொருட்களை கீழ்நிலைகளிலும் அவற்றின் அடையாளங்களை (குறியீடுகளை) மேல்நிலைகளிலும் 
  • பயன்படுத்துதல் 
  • விதிவிளக்கமுறை, விதிவருமுறை ஆகிய இரண்டையும் பயன்படுத்துதல் 
  • புதிய கருத்துகளை படிப்படியாக புகுத்துதல் 

உளவியல் முறையிலமைந்த அடுக்கமைப்பு

இம்முறையில், கற்போரை மையமாகக் கொண்ட கல்வி உளவியலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும்: குழந்தையின் வளர்ச்சி நிலைகளுக்கேற்ற அரும்பணிகள் (Tasks) தருவதை ஹர்லாக் (Hurlock) என்பார் பட்டியலிட்டுள்ளார்: பியாஜே (Piget) என்பாரது அறிதிறன் வளர்ச்சிக் கோட்பாடும், குழந்தைகளின் வளர்ச்சி நிலைகளுக்கேற்ப பாடப்பொருள்கள் வழங்கப்படுவதை வலியுறுத்துகிறது: இக்கோட்பாட்டின்படி, குழந்தையின் வளர்ச்சி நிலைகளாவன: 

1. புலனியக்க நிலை 

பிறந்தது முதல் 2 வயது வரை நீடிக்கும் இந்நிலையில், குழந்தை தன் சுற்றுப்புறத்தில் இருக்கும் எளிய பொருட்களைக் கையாள்வதன் மூலம் அனுபவங்களைப் பெற்று அறிதிறனை வளர்த்துக் கொள்கிறது: எனவே நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளில் ஆடல் பாடல்கள், விளையாட்டுகள, எளிய பொருள்களை கையாளுதல், தானே செயல்படுதல் போன்றவற்றின் மூலம் கற்றல் அனுபவங்களை வழங்கிட வழிவகை செய்தல் வேண்டும்.

2. செயலுக்கு முற்பட்ட நிலை 

2 வயது முதல் 7 வயது வரை உள்ள இப்பருவத்தில் புலத்தூண்டல்கள் மட்டுமின்றி முன்பு அனுபவித்த பொருட்கள், நிகழ்வுகள் பற்றிய சாயல்களும் (மனபிம்பங்களும்- Images) அறிவு வளர்ச்சிக்கு உதவுகின்றன. மொழி வளர்ச்சி ஏற்பட்டாலும், சொற்கள் குழந்தைகளின் தனித்தேவைகள், பயன்கள் ஆகியவற்றுக்கேற்ப பொருள் கொள்ளப்படுகின்றன: சொற்களின் பொதுவான பொருளை உணர, அவர்களுக்கு மொழிப் பயிற்சி தருதல் அவசியமாகிறது: எனவே இப்பருவத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு செயல்வழிக் கற்பித்தலோடு, பருப்பொருட்கள் பற்றிய கருத்துகளை விளக்க மொழியினையும் (எளிய சொற்களைக் கொண்டு) பயன்படுத்த வேண்டும்.

3. பருப்பொருள் நிலை 

7 வயது முதல் 11 வயது வரையுள்ள இப்பருவத்தினரின் சிந்தனை புலனீடான அளவிலேயே இருக்கும்: ஆதாவது புலன் உதவியின்றி, அனுபவங்களை உள்ளத்தால் சிந்திக்க முடிகிறது: ஆனால் பெறப்பட்ட அனுபவங்களுக்கு அப்பால் தம் சிந்தனையை செலுத்த இயலாது எனவே இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு படங்கள், மாதிரிப் பொருட்கள், செய்து காட்டல் போன்றவை மூலம் உடனடி அனுபவங்களை வழங்கும் வகையில் கற்பித்தலுக்கான பாடப் பொருள்கள் அமைக்கப்படுகின்றன.

4. கருத்தியல் நிலை

11 வயது முதல் 15 வயது வரை நீடிக்கும் இப்பருவத்தில் உள்ள மாணவர்கள் (குமரப்பருவத்தினர்) புலத்தூண்டல்கள் இன்றியும், சுய அனுபவம் இல்லாத நிலையிலும் சிந்திக்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்கள்: பிறரது கருத்துகளையும் அனுபவங்களையும் மொழியின் துணை கொண்டு புரிந்து கொள்ளும் திறன் பெற்றிருப்பதால், கருத்தியல் சிந்தனையைத் தூண்டும் வகையில் கலைத் திட்டத்திற்கான பாடப் பொருள்களை அமைத்தல் வேண்டும்.

இவ்வாறு குழந்தையின் வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்ப கலைத்திட்ட பாடப்பொருள்களை வரிசைப்படுத்தி அடுக்குதலை ‘உளவியல் முறையிலமைந்த அடுக்கமைப்பு’ என்கிறோம்.

பொதுமைய வட்ட அடுக்கமைப்பு

இம்முறையில் இன்றியமையாத சில பாடத்தலைப்புகள் கல்வி நிலையின் ஒவ்வோர் ஆண்டும் இடம் பெறும்;;: ஆனால் பள்ளி வகுப்பு நிலை உயர உயர அப்பாடத் தலைப்புகளில் இடம் பெறும் தகவல்கள் / கருத்துகள் ஆழமானதாகவும், விரிவானதாகவும், கடினமானதாகவும் அமையும்: 

சுருள் அடுக்கு முறை 

இம்முறை கம்பிச் சுருளைப் போன்றது சில மாடிக் கட்டிடங்களின் படிக்கட்டுகள் இம்முறையில் காணப்படும்: 

பொதுமைய வட்ட அடுக்கு முறையைப் போன்றே இம்முறையிலும் கீழ் வகுப்புகளில் எளிய கருத்துகளும், உயர் வகுப்புகளில் கடினமான கருத்துகளும் அமைக்கப்படுகின்றன: பொதுமைய வட்ட அடுக்குமுறையில் அடுத்தடுத்த வகுப்புகளில் கற்பிக்கப்படும் பாடக்கருத்துகளுக்கு இடைய தொடர்ச்சியின்மை காணப்படும்: ஆனால் சுருளடுக்கு முறையில் முந்தைய வகுப்புகளில் படித்தவற்றையும் சேர்த்து விரிவாகவும் ஆழமாகவும் படிக்கும் வகையில் பாடக்கருத்துகள் அமைக்கப்படும்: தவிரவும் கீழ்நிலைகளில் கற்றவற்றையே மீண்டும் கூறாமல் புதிய அணுகுமுறையைப் பயன்படுத்தி கற்பிக்கும் வகையிலும் பாடப்பொருள்கள் அமைக்கப்படும்: 

நிறையலகு அடுக்குமுறை

தொலைநிலைக் கல்வியில் பயன்படும் தானே கற்றலுக்கான கற்றல் கட்டுகளில் அச்சிட்ட பாடப்பொருள்களிலும் இம்முறை கையாளப்படுகிறது: ஒவ்வொரு நிறையலகும் ஒரு மையத் தலைப்பை ஒட்டியதாகவும், சராசரி அறிவாற்றலுள்ள கற்போரும் கற்க உதவும் வகையில் எளிய நடையிலும், எடுத்துக்காட்டுகள் மற்றும் பட விளக்கங்களுடன் கூடியதாகவும் இருக்கும்: 

ஓர் ஆண்டில் கற்க வேண்டிய பாடப்பொருள்கள் யாவும் பல்வேறு நிறையலகுகளாக அமைக்கப்படுகின்றன: மாணவர்கள் அவரவர் திறமைக்கேற்ப பல்வேறு நிறையலகுகளை தத்தம் வேகத்தில் கற்க முடியும்: முன் வகுப்பில் கற்ற பாடத்திற்கும், அடுத்த ஆண்டு படிக்கும் பாடத்திற்கும் இடையே தொடர்பு உள்ளவாறு பாடப்பொருள்கள் வரிசைக் கிரமமாக  நிறையலகுகளாக உருவாக்கப்படுகின்றன.

 


 


Comments

Post a Comment

Popular posts from this blog

Trends of Curriculum Development (Tamil)

Student Centered Teaching (Tamil)

Sociological Bases of Curriculum (Tamil)

Subject based Curriculum and Integrated Curriculum (Tamil)