Subject based Curriculum and Integrated Curriculum (Tamil)

 பாடமையக் கலைத்திட்டமும் இணைந்த கலைத்திட்டமும்



1. பாடமையக் கலைத்திட்டம் 

பாடமையக் கலைத்திட்டம் என்பது சம்பிரதாயமான மரபு வழி வந்த அமைப்பாகும். பெரும்பாலான பள்ளிகளில் இந்த வகையில் அமைந்த கலைத்திட்டமே செயற்படுத்தப்படுகிறது. பண்பாட்டின் பல பிரிவுகள் சுருக்கமாக பாடங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இவ்வுலகில் காணப்படும் பரந்த பண்பாட்டு அறிவு, மனிதன் கையாளக்கூடிய அளவை விட பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகிறது. எனவே இப்பரந்த பண்பாட்டு அறிவு பல பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு பாடங்கள் என்றழைக்கப்படுகிறது. பள்ளிகளில் வழங்கப்படும் அறிவு, சில பாடத்துறைகளை (கணிதம், மொழி, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல், வரலாறு, வணிகவியல் போன்றவை) சார்ந்ததாக மட்டும் உள்ளன. ஆனால் இவை மாணவர் கற்றலுக்கு அடிப்படையானவை என்றும், இவற்றைக் கற்றறிந்த மாணவர்கள் இதை அடித்தளமாகக் கொண்டு பிறவற்றை எளிதாகக் கற்றிட முடியும் என்றும் கருதப்படுகிறது.

பாடமையக் கலைத்திட்டத்தினை மேற்கொள்வதற்கான அனுமானங்கள் 

ஜெரோம் ப்ரூணர் என்ற உளவியல் அறிஞர் முன்மொழிந்த அறிவு வளர்ச்சிக் கோட்பாட்டில், குழந்தைகள் அறிவு பெறும் செயலும், வயதானோர் அறிவு பெறும் முறையும், கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் அமைந்துள்ளன. இதில் காணப்படும் வேறுபாடு தர அளவில் தான் அமையுமே தவிர அடிப்படைத் தன்மையில் மாற்றமிராது என்பதை முற்றிலும் ஒப்புக்கொள்கிறது. ஒத்தத் தன்மை வலியுறுத்தப்படுகிறது. பெரியவர்களின் சிற்றுருவமாகக் குழந்தையை உருவகப்படுத்துகிறார்கள். பாடத்துறை வாரியான அறிவுக் கட்டமைப்பு மூலம் மேன்மேலும் அறிவுப்பெருக்கம் விரைவாக ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும் என்றும் நம்பப்படுகிறது: 

அடுத்தடுத்த தலைமுறையினருக்கு பண்பாட்டுப் பாரம்பரியத்தைக் கொண்டு சேர்த்தலே பள்ளியின் முக்கிய செயல் என்று கருதுகிறது.  பண்பாட்டுச் சிறப்பு அம்சங்களை வகைபடுத்தி  பாடத்துறைகளாக, அமைத்திட முடியும் என்பதில் நம்பிக்கை கொள்வதால் பாடமைய கலைத்திட்டத்தில் பண்பாட்டு மரபுடைமை பாதுகாக்கப்படுகிறது.எளிய நிலையிலிருந்து கடின நிலைக்கு தொடர் வரிசைக்கிரமமாக செல்லுவதை தன்னகத்தே கொண்டு ஒவ்வொரு பாடத்துறையும் உட்புற ஒழுங்கமைவை பெற்றுள்ளன.

பாடத்துறை வாரியாக அமைக்கப்பட்டுள்ள கலைத்திட்டம் வாரியாக பயிலும் மாணவர்கள், எதிர்காலத்தில் தாம் சந்திக்கும் பண்பாட்டை கையாளும் ஆற்றலைப் பெற்றிடுவர் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. 

ஆசிரியர் ஆதிக்கம் அதிகமுள்ள கற்பித்தல் முறையே, ஜனநாயகப் போக்கினைக் கொண்ட பிற கற்பித்தல் முறைகளைவிட சிறந்தது என்னும் எண்ணம் ஏற்படுகின்றது. பாடநூல்களை மையமாகக் கொண்ட கலைத்திட்டப் பாங்கானது காலத்தினை வென்று பன்னெடுங்காலமாக சிறப்புடன் நீடித்து வருவதே அதன் சிறப்புத் தன்மையை பறைசாற்றுவதாக அமைகிறது. பாடமையக் கலைத்திட்ட அமைப்பின் காலமரியாதை மற்றும் அந்தஸ்து நிலையால் மாணவர், ஆசிரியர், பெற்றோர் ஆகிய அனைத்துத் தரப்பினரின் செல்வாக்கும் உரிய மதிப்பையும் பெறுகின்றன.

பாடமையக் கலைத்திட்டத்தின் முக்கியப் பண்புகள் 

குறிக்கோள் 

பாடமையக் கலைத்திட்டத்தில் கற்றுத் தெளிய வேண்டிய கற்பித்தல் குறிக்கோள்கள், மாணவரிடம் எதிர்பார்க்கப்படும் நடத்தைக்கூறுகள் வாயிலாக வெளியிடப்படுகின்றன. குறிப்பாக படித்து நினைவில் வைத்துக் கொள்வதையும், பாடப்பகுதிகளை கற்பவரின் மனதில் நிலைக்கச் செய்ய தொடர்ந்து பயிற்சியளித்தலையும் இவ்வகைக் கலைத்திட்டம் வலியுறுத்துகிறது.

பாடத்திட்டம் 

பண்பாட்டின் சிறப்பு அம்சங்களை வகைப்படுத்திப் பாடங்கள் அமைக்கப்படுகிறது. கற்பித்தலுக்கு முன்னரே பாடப்பொருள் தெரிவு செய்யப்பட்டு ஒழுங்குப்படுத்தப்படுகின்றன. கருத்துக்கள், விளக்கங்கள், உண்மைகள், கோட்பாடுகள், கொள்கைகள் போன்றவை பாடப்பொருள்களாகின்றன. பாடப்பொருள்கள் காலத்தால், அழியாத பொதுமைக் கருத்துகளை கொண்டு விளங்குவதால் அவை பல்வேறு நிலைகளுக்கு ஏற்ப மாற்றமடைவதில்லை. எனவே அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கலைத்திட்டத்தை அளித்திட முடியும். பாடப்பொருள்களை ஆசிரியர்கள் அல்லது வல்லுநர்கள் ஒன்றுகூடி தீர்மானிப்பர் பாடங்கள் கலைத்திட்ட ஒழுங்கமைவுக்கு அடிப்படையாக அமைகிறது. ஒவ்வொரு பாடப்பிரிவும் தனக்கென பிரிவுகளைப் பெற்று பாடப்பொருள்கள் வரிசைக்கிரமமாக அமையப் பெற்றுள்ளன. பாடத்துறைகள் அவற்றிற்கிடையே தொடர்புகள் ஏதுமின்றி, ஒருவித இறுக்கமான சூழ்நிலை நிலவும் தனித்தீவுகள் போல இயங்குகின்றன. உயர் கல்வி நிலையான பல்கலைக்கழக அளவில் மாணவர்கள் பிற பாடத்துறைகளுடன் இணைந்த விரிவுரைகளைக் கேட்டறிந்தாலும் தங்களுடைய பாடப்பகுதி அறிவு என்னும் பலகணி மூலமாகத்தான் பிற பாடங்களை காண்கிறார்களே தவிர, பாடப்பிரிவுகளுக்கு இடையே எழுப்பப்பட்டுள்ள தடைகளை அகற்ற முற்படுவதில்லை 

2. ஒன்றிணைந்த கலைத்திட்டம் 

ஒன்றிணைந்த கலைத்திட்டம் அல்லது முழுமையாக்கப்பட்ட அல்லது ஒருங்கமைக்கப்பட்ட கலைத்திட்டம் என இக்கலைத்திட்டம் அழைக்கப்படுகிறது. பாடங்கள் மற்றும் மாணவர்கள் ஆகிய இரண்டினையும் ஆதாரங்களாகக் கொண்டு இயல்பான உள்ளிடைத் தொடர்புடைய பல பாடப்பொருள்களை ஒன்றாக இணைத்து அகன்ற பாடக்களமாக வடிவமைப்பதே இக்கலைத்திட்டமாகும். 

ஹரி பிரௌடி என்ற கலைத்திட்ட வல்லுனர் அகன்ற கள கலைத்திட்டத்தில் கீழ்கண்ட அம்சங்களை சேர்க்கவேண்டும் என வலியுறுத்துகிறார். தகவலைப்பற்றிய சங்கேதக்குறி, அறிவியல் ஆங்கிலம், அந்நிய மொழி மற்றும் கணிதவியல் அடிப்படை விஞ்ஞானங்கள், பொது அறிவியல் உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல், வளர்ச்சிசார்ந்த ஆய்வுகள் பிரபஞ்சத்தின் பரிணாமம், சமூக நிறுவனங்களின் பரிணாமம், மனித பண்பாட்டின் பரிணாமம், முன்மாதிரிகள் கலை, இசை, நடனம், இலக்கியங்களை உள்ளடக்கிய அழகியல் அனுபவம், உலக பிரச்சினைகள், முக்கிய சமூகப் பிரச்சினைகள் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட அறிவின் வகைகளை ஒன்றிணைத்து அகன்ற கள கலைத்திட்டம் உருவாக்கப்படுகிறது. எதிர்கால, வாழ்க்கை என்பது புதிய அகன்ற ஆய்வுக்களம் அந்த அகன்ற கள கலைத்திட்டத்தை கணிதவியல், சமூகவியல், புள்ளியியல், அரசியல் அறிவியல், பொருளியல், கல்வியியல் போன்ற பாடங்களை தொகுப்பாய்வு செய்து உருவாக்க வேண்டும். 

பாடங்களை ஒருங்கிணைக்கும் வகைகள் 

ஒருங்கிணைப்பை இரண்டு வழிகளில் செயல்படுத்தலாம் 

  • தனித்தனியாக அமைந்த பாடப்பகுதிகளை இணைத்து ஒரேயொரு பெரிய பாடமாக அமைத்திடும் போது, தனிப்பட்ட பாடங்களுக்கு இடையேயான எல்லைகள் மறைந்துவிடும்.
  • தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல் போன்ற பாடங்களை இணைத்து உயிரியல் என ஒரே பாடமாக உருவாக்குதல் 
  • வடிவியல், முக்கோணவியல், எண் கணக்குகள், குறிக்கணக்கியல் போன்ற பாடங்களை இணைத்து கணிதவியல் என்ற ஒரே பாடத்தினுள் அடங்கச் செய்தல். 
  • பொருளியல், சமூகவியல், உளவியல், அரசியல் அறிவியல், வரலாறு, புவியியல் போன்ற பாடங்களை இணைத்து சமூக அறிவியல் என்ற ஒரே பாடமாகக் கற்பித்தல்.
  • இயற்பியலையும், வேதியியலையும் இணைத்து பொருளறிவியல் என்ற ஒரே பாடமாகக் கற்பித்தல். 

பாடப்பகுதிகளை இணைக்காமல், பொதுக்கருத்துகளையும் கோட்பாடுகளையும் மையப்படுத்தி, பல்வேறு பாடங்களிலிருந்து பொருத்தமான பகுதிகளை தேர்ந்தெடுத்து இணைத்தல் இவ்வகையைச் சார்ந்தது. உதாரணமாக காற்று மாசுபடுதல், உலகளவில் ஜனநாயக வளர்ச்சி, பன்னாடுகளுக்கிடையே சார்புத்தன்மை அதிகரித்து வருதல் போன்ற பொதுமைக் கருத்தின் அடிப்படையில் பல்வேறு பாடங்களிலிருந்து பொருத்தமான பகுதிகளைத் தேர்ந்தெடுத்து இணைக்க முடியும். காற்று மாசடைதல் என்ற பொதுக் கருத்தின் கீழ் காற்றை மாசடையச் செய்யும் வேதிப்பொருட்களும் அவற்றின் மூலங்களும் (வேதியல் பாடப் பகுதிகள்) அனல் மின்நிலையம், அணுமின்நிலையம் மற்றும் கதிர் வீச்சுப் பொருட்களால் காற்று மாசடைதல் (இயற்பியல் பாடப் பகுதிகள்) காற்று மாசுபடுதலுக்கான இயற்கை மூலங்களான எரிமலை வெடிப்புகள், புழுதிப்புயல், மணற்காற்று, காட்டுத்தீ, போன்றவை (புவியியல் பாடப்பகுதிகள்) உயிரினக் கழிவுகள் சிதைவதால் ஏற்படும் காற்று மாசுபாடு (உயிரியல் பாடப்பகுதிகள்) ஆகியவற்றை இணைத்து கலைத்திட்டத்தில் இடம் பெறச் செய்யலாம். 

பாடங்களை ஒன்றிணைப்பதால் விளையும் பயன்கள் 

நெருங்கிய தொடர்பு கொண்ட அறிவுப்பகுதிகள் இணைத்துக் கற்பிக்கப்படுவதால் மாணவர்கள் முழுமையான அறிவைப் பெறுவர் 

மாணவர்களின் பொருள் பொதிந்த கற்றலுக்கு அகன்ற கள கலைத்திட்டம் பெரிதும் உதவுகிறது. 

தொடர்பற்ற பாடங்களையும், கருத்துக்களையும் படித்து வெகு விரைவில் மறந்து விடுவதைக் காட்டிலும், பாடங்களுக்கு இடையேயான அடிப்படைக் கருத்துகளை கண்டுபிடித்து உணர்வதால் ஏற்படும் நிலையான கற்றல் மேலானது.


 


Comments

Popular posts from this blog

Trends of Curriculum Development (Tamil)

Student Centered Teaching (Tamil)

Sociological Bases of Curriculum (Tamil)

Selection of Curriculum Content (Tamil)