Curriculum for 21st century, challenges and Solutions (in Tamil)
21 ஆம் நூற்றாண்டிற்கான கலைத்திட்டமும் அதன் சவால்களும், தீர்வுகளும்
அறிமுகம்
கலைத்திட்டம் என்பது எதிர்கால சந்ததியினருக்கு வாழ வழிகாட்டுகின்ற கல்வியின் ஒழுங்கமைப்பாகும். பாடசாலையும் எதிர்கால சந்ததியினரை தயார்படுத்தும் நிறுவனமாக காணப்படுகிறது. ஆகவே இலங்கை பாடசாலைக் கலைத்திட்டமானது 21ஆம் நூற்றாண்டிற்கான தொழிற்படையினை உருவாக்குவதற்கான போதிய தகைமைகள் வழங்குவதன் ஊடாக உலக சந்தைக்கு பொருத்தமான வினைத்திறனான மனித வளத்தை உருவாக்குவதன் மூலமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய வேண்டும். இலங்கைப் பாடசாலைக் கலைத்திட்டத்தின் பங்களிப்பு அதன் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் போன்றவற்றை இக்கட்டுரை ஆராய்கிறது.
இலங்கை பாடசாலைகளில் காணப்படும் கலைத்திட்டம்
கலைத்திட்டம் என்பது எதிர்கால சந்ததியினருக்கு வாழ வழிகாட்டுகின்ற கல்வியின் ஒழுங்கமைப்பாகும். அந்தவகையில் பாடசாலையும் எதிர்கால சந்ததியினரை தயார்படுத்தும் நிறுவனமாக காணப்படுகிறது. மேலும் கல்வி இலக்குகளை வினையாற்றலுடன் நடைமுறைப்படுத்தும் இயக்க வடிவமாக அமைவதே பாடசாலை கலைத்திட்டமாகும். கோட்பாட்டும் பரிமாணங்களையும் நடைமுறைப் பரிமாணங்களையும் உள்ளடக்கிய இயங்கு வடிவமாக பாடசாலை கலைத்திட்டம் விளங்குகிறது. ஆகவே இலங்கையில் பாடசாலை கலைத்திட்ட முறைகளை எடுத்து நோக்கும் போது ஆரம்பகல்வி, இடைநிலைக்கல்வி பாடசாலையால் வழங்கப்படுகிறது. பாடசாலை கலைத்திட்டம் இரண்டு முறைகளில் வழங்கப்படுகிறது. அவையாவன
➢ முறைசார்சந்த கலைத்திட்டம்
➢ முறையில் கலைத்திட்டம் என்பனவாகும்.
முறைசார்ந்த கலைத்திட்டம்
கல்வி அமைச்சின் விதந்துரைகளுக்கு அமைவாக பாடசாலையில் நடைமுறைப்படும் கலைத்திட்டமாகும். அதாவது பாடசாலை கல்வியின் ஊடாக வழங்க வேண்டிய அறிவுத்தொகுதி, திறன்கள், உளப்பாங்குகள் உள்ளடங்கிய சகல கல்வி செயற்பாடுகளின் தொகுதியாக அமைந்திருக்கிறது. அதாவது ஆரம்பகல்வி, இடைநிலைக்கல்வி போன்றவற்றை முறையாக நடைமுறைப்படுத்தும் பாடத்திட்டம் முறைசார்ந்த கலைத்திட்டத்தில் அடங்கும்,
முறையில் கலைத்திட்டம்
பூரண மனிதனை உருவாக்குவதற்கு உதவும் அனைத்து செயற்பாடுகளையும் உள்ளடக்கியதே முறையில் கலைத்திட்டம் ஆகும். இதில் இரண்டு கலைத்திட்டங்கள் காணப்படுகின்றன. அவையாவன
இணைக்கலைத்திட்டம்
மறைக்கலைத்திட்டம் என்பனவாகும்.
இணைக்கலைத்திட்டம்
பாடத்திட்டத்துடன் சேராத பாடசாலையினால் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் இதில் அடங்கும். உதாரணமாக விளையாட்டுக்கள், நாடகங்கள் மற்றும் கல்வி சுற்றுலாக்கள் போன்றவற்றை குறிப்பிடலாம்.
மறைக்கலைத்திட்டம்
பாட ஏற்பாடு கற்பிக்கும் அறிவுத் தொகுதிக்கு அப்பால் மாணவர்கள் பாடசாலையில் இருந்து பெறுகின்ற உளப்பாங்குகள், கருத்துக்கள், வாழ்க்கை பெறுமானங்கள் மற்றும் விழுமியங்கள் என்பன அடங்கும்.
இருபத்தோராம் நூற்றாண்டில் தொழிற்படையினர்
தொழிற்படை
தொழிற்படை என்பதற்கு ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விளக்கங்களை வழங்குகின்றன. அந்த வகையில் இலங்கையில் தொழிற்படை என்பது 18 வயதை பூர்த்தி செய்த தொழில் ஒன்றிலுள்ள, தொழிலைத் தேடும், தொழிலற்ற, தொழில் செய்யும் சக்தியுள்ள மொத்த உழைக்கும் வயது மக்கள் தொகையாகும். இத்தொழிற்படையில் வேலைவாய்ப்பில் உள்ளோர், வேலைதேடுவோர் மற்றும் வேலை வாய்ப்பற்றோர் காணப்படுகின்றனர். இந்த தொழிற்படையில் ஏற்படும் மாற்றங்களானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம் செலுத்தும். அதாவது தொழிற்படையில் உள்ளோர் வேலைகளை பெறும் போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது பங்காற்றும்.
இருபத்தோராம் நூற்றாண்டில் உலக சந்தை எதிர்பார்க்கும் தொழிற்தகைமைகள்
இருபத்தோராம் நூற்றாண்டானது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சாதனங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது. எனவே இந்நூற்றாண்டில் சகல துறைகளும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துடன் கைகோர்த்து அவற்றின் பணிகளை வெற்றிகரமாக மேற்கொள்கின்றன. இதில் உலக சந்தையின் வேலைவாய்ப்புகளும் உள்ளடங்குகின்றன அதாவது இன்றைய காலத்தில் உலக சந்தையில் பல்வேறு தொழில்வாய்ப்புகள் நிறைந்து காணப்பட்டாலும் அவற்றை பெற்றுக்கொள்ள தொழிற்படையானது பல தகைமைகளை கொண்டு காணப்படவேண்டும்.
தொழில் படையானது இலத்திரனியல் சாதனங்களை அணுகும் திறனை கொண்டிருக்க வேண்டும். அதாவது உலக சந்தைகளில் தொழில்களை பெற முனைவோர் கணினி அறிவு, தொழில்நுட்ப தொடர்பு, இணைய அணுகல் மற்றும் வலையமைப்பு தொடர்புகள் போன்றவற்றை கையாள்வதுடன் நவீன இலத்திரனியல் இயந்திரங்களை இயக்கும் வல்லமையைக் கொண்டு காணப்படல் வேண்டும்.
படைப்பாற்றல் மற்றும் புத்தாக்க சிந்தனையுடன் தொழிற்படகூடியவராக காணப்படுதல்.அதாவது இருபத்தோராம் நூற்றாண்டில் அதிகம் விரும்பப்படும் புத்தாக்க சிந்தனை மற்றும் புதிய படைப்பாற்றல் திறனுடையவர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர். அத்துடன் புதிய கோட்பாடுகளை சிந்தித்து சுயாதீனமாக வேலை செய்தல், நிலைபேண் அபிவிருத்தி எண்ணக்கருக்களுடன் செயற்படும் உயர் சிந்தனை மிக்கவராக தொழிற்பாடல் மற்றும் நிறுவனங்களில் நிலையான மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை மிக்கவராக காணபடல் என்பன எதிர்பார்க்கப்படுகின்றன. உதாரணமாக கூகுள் நிறுவனமானது உயர் சிந்தனை மற்றும் படைப்பாற்றல் கொண்ட கீழைத்தேய நாடுகளில் காணப்படும் இளவயது நபர்களை அதிக சம்பளத்துடன் தங்களது நிறுவனங்களில் இணைத்துக் கொண்டுள்ளன.
உற்பத்திதிறன் கொண்ட மனித வளங்களாக காணப்படுதல்.
அதாவது தொழிற்படையானது குறிப்பிட்ட நிறுவனத்தின் இலக்குகளை வினைத்திறனாக அடைதல், இலக்குகளை நோக்கி திட்டங்களை முன்னுரிமை ஒழுங்கில் அமைத்தல், பிரச்சினைகளை முகம்கொடுத்தலும் அவற்றிலிருந்து மீண்டு தீர்மானங்களை மேற்கொள்ளல், உற்பத்தித்திறனை அதிகரிக்க தேவையான விதத்தில் வளங்களை ஒதுக்குதல், வளங்களை வினைத்திறனாக பயன்படுத்தல் மற்றும் நிதி முகாமை மூலம் இலக்கை அடைதல் போன்ற பண்புகளை கொண்டு காணப்படவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தொழிற்படையானது சிறந்த தொடர்பாடல்திறனை கொண்டிருக்க வேண்டும்.
குறிப்பிட்ட நிறுவனமொன்றின் திட்டங்களில் பங்குபற்றும் போது குழு உறுப்பினர்களுடன் ஒத்துழைப்புடன் செயற்படல், சக தொழிலாளர்களுடன் இடைத்தொடர்புகளைப் பேணல், சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப தேவையான இடங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தல், தொடர்பாடல் சாதனங்களைதுல்லியமாக பயன்படுத்தல், குழு உறுப்பினர்களின் தனி மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும்; நெறிமுறைகள், கலாசார விழுமியங்களுக்கேற்ப ஒவ்வொருவரையும் மதித்தல் போன்ற குணாதிசயங்களுடன் குழுவாக வாழும் ஆளுமைமிக்கவரை தொழில் உலகு எதிர்பார்க்கின்றது.
மொழியாற்றலும் பேச்சாற்றல் மிக்கவராக காணப்படல்.
அதாவது உலக சந்தையில் உள்ள பிரபல நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெற ஆங்கில மொழி மூல பேச்சாற்றல்;, எழுத்தாற்றல் காணப்படுவதுடன் மொழிவளம் கொண்டவராக காணப்படுதல் வேண்டும்.
அறிவுசார் சமூகமாக தொழிற்படை காணப்படவேண்டும்
வேலைவாய்ப்பைப் பெற முனையும் தொழிற்படையானது குறிப்பிட்ட தொழில் தொடர்பான அறிவை கொண்டவர்களாகவும் அவற்றை காலத்திற்கேற்ப மேம்படுத்த கூடியவர்களாகவும் கற்ற அறிவை பிரயோகிக்க வேண்டிய இடங்களில் பிரயேகிக்க கூடியவர்களாகவும் காணப்படுவதுடன் அனுபவம் வாய்ந்தவர்களாக காணப்படவேண்டும்.
விளைவுகள்
வேலையில்லா பிரச்சினை
கற்ற கல்விக்கு ஏற்ற தொழில் வாய்ப்பு இன்மை. ஏனெனில் பாடசாலையில் மாணவர்களுக்கு செயன்முறை சார்ந்த கல்வி வழங்கப்படுவது ஒப்பீட்டளவில் மிக குறைவாகவே காணப்படுகின்றது. அத்துடன் வெறும் ஏட்டுக் கல்வியும் மனனம் செய்து ஒப்புவித்தல் போன்ற பரீட்சை மைய முறையும் அதிகமாக நடைமுறைப்படுத்தப்படுவதனால்;. பாடசாலையில் இருந்து வெளியேரும் மாணவன் தான் கற்ற கல்விக்கு ஏற்ற தொழில் வாய்ப்பை பெற முடியாத நிலையில் வேலையற்றவனாக இருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. மேலும் 2018 வருட மத்திய வங்கியின் ஆண்டறிக்கையின் பிரகாரம் தொழிலின்மை வீதம் 4.4மூ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வியை உதாசீனப்படுத்தும் நிலை
பாடசாலையில் தனது 11 வருட கல்வியை பூர்த்தி செய்த மாணவன் தொழிலுலகுக்கு செல்ல அங்கு தான் கற்ற கல்வியால் எவ்வித பயனும் இல்லை மற்றும் தொழில் உலகுக்கு தேவையான தகைமைகளை இவ் கல்வி முறைமை வளர்க்கவி;ல்லை என்பதை உணர எதிர்கால சந்ததியினரும் தாம் கல்வி கற்காவிடினும் நமக்கு வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. என்பதை அறிந்து கல்வியை உதாசீனப்படுத்தும் நிலை ஏற்படுகின்றது.
பலசாலிகள் (மூளைசாலிகள் வெளியேற்றம்.)
இன்று பாடசாலைக் கல்வி முறைமையால் வழங்கப்படாத தொழில் துறை கல்வியானது தனியார் நிறுவனங்களால் வழங்கப்படுவதால்; இந்நிறுவனங்களில் இணைந்து தொழில் கல்வியைப் பெறும் மாணவர்கள் குறித்த பயிற்சியை பெற்ற பின்னர் இங்கு தொழில் புரிவதற்கான சந்தர்பங்கள் இல்லாத நிலையில் தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அவ்வாறு தொழில் துறை கல்வி வழங்கும் நிறுவனமாக ஜேர்மன் டெக் காணப்படுகின்றது. மேலும் தொழில் பயிறசி பெற்ற இளம் ஊழியப்படை மற்றும் மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுவதனால் எமது நாடு ஊழியர்களை இழந்து பின்தங்கி காணப்படுகின்றது.
கற்றவர்களிடம் ஆங்கில மொழிப்புலமையின்மை
பாடசாலையில் நடைமுறைப்படுத்தப்படும் கலைத்திட்டத்தில் ஆங்கில மொழிப்புலமை குறித்து கவனம் செலுத்தாமையினால் பாடசாலையில் இருந்து வெளியேறும் மாணவர்கள் தொழில் உலகுக்கு தேவையான சர்வதேச மொழிப் புலமை இல்லாதவர்களாக வெளியேறுகிறார்கள். இந்நிலையில் அவர்கள் தொழில் உலகில்; நிராகரிக்கப்படுகிறார்கள். பாடசாலைகளில் அடிப்படை அறிவு தான் வழங்கப்படுகிறதே தவிர பிரயோகமாக மொழிப் பேசும் புலமை மிக்க எதிர்கால சந்ததியை உருவாக்க தவறிவிட்டது.
துறைசார் வல்லுனர்களின் விகிதம் குறைவாக காணப்படுதல்.
இன்றைய நடைமுறை கலைதிட்டம் கற்றவர்கள் மத்தியில் குறித்த தொழில் தகைமைகளை உருவாக்காததன் காரணமாக துறை சார் வல்லுனர்கள் பற்றாக்குறையாகவே காணப்படுகிறார்கள். இதனால் நாட்டில் உயர் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த பிற நாடுகளில் இருந்து துறைசார் வல்லுனர்களை வரவழைக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
புத்தாக்கம் புதிய கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்படாமை
பாடசாலை கலைத்திட்டம் மாணவர்கள் மத்தியில் புத்தாக்கம் பதிய கண்டுபிடிப்பு ஆகிய உயர் மட்ட திறன்களை உருவாக்கவில்லை. அதிக பாடங்கள் கோட்பாடு மற்றும் தத்தவ ரீதியாக காணப்படுவதால் அவற்றை மனனமிட்டு ஒப்புவித்து காட்டுவதாகவே இன்றைய கல்வி காணப்படுகின்றது. எனவே உலக பொது அறிவு புதிய தேடல் ஆர்வம் ஊக்குவிப்பு இல்லாதவர்களாக மாணவர்கள் வெளியேற்;றப்படுகிறார்கள். இந்நிலை புதிய கண்டுபிடிப்பு, படைப்பாற்றல் என்பவற்றுக்கு பிரதான தடையாகவுள்ளது.
நாட்டினுடைய கலைதிட்டம் குறித்த நம்பிக்கையை இழத்தல்
நாட்டு மக்கள் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் கலைதிட்டம் தொடர்பாக நம்பிக்கை இழக்க தனது பிள்ளைகளை தனியார் கல்வி நிலையங்களிலும் வெளிநாடுகளிலும் அதிக பணத்தை செலவழித்து கற்பிப்பதனால் அவர்கள் செலவழிக்கும் எமது நாட்டு பணம் வெளிநாடுகளுக்கு செல்ல எமது நாடு பின்தங்கி அந் நாடுகள் முன்னேறும் நிலை ஏற்படுகின்றது.
உயர் கல்வி பட்டங்களது தரம் குறைவடைதல்.
பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் உயர் பட்டசான்றிதழ்களும் தரம் இழக்கும் நிலை தோன்றுகின்றது. காரணம் கலைதிட்டம் மூலம் போதிய தகைமையை மாணவன் பெறாத நிலையில் தொழில் உலகில் அவன் எதிர்கொள்ள வேண்டிய பிரயோக பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியாமல் செல்ல அங்கு அவன் பெற்ற பட்டம் கூட பிற நாட்டு மாணவர்களோடு ஒப்பிட செல்லுபடியற்றதாகிறது.
நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைகின்றது.
ஒரு நாட்டில் வழங்கப்படும் கல்வியே அதன் முன்னேற்றத்துக்கான முதல் அத்திவாரமாக திகழ்கின்றது. அவ்வாறு இருக்க பாடசாலையில் வழங்கப்படும் கல்வி நாட்டிற்கு பயன்மிக்க பிரஜைகளை உருவாக்காது செல்லும் விடத்து நாட்டு பொருளாதாரம் மேலும் பின் தங்கிய நிலையினை எதிர்நோக்குகின்றது.
தீர்வுகள்
இலங்கையின் சமூக வளர்ச்சியும் அறிவு பரவலாக்கமும் தொடர்பாடல் ஊடகங்களின் வேகமான வளர்ச்சியின் காரணமாகவும் இந்நூற்றாண்டில் கல்வி இலக்குகள் வேறுபட்டு உள்ளன இதனால் தொடர்ந்து மாற்றமடைந்து வரும் கல்விச் சூழலுக்கு ஏற்ற கல்வி முறை ஒன்றினை வழங்க வேண்டிய தேவைப்பாடு உணரப்பட்டுள்ளது. டெலோ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வியின் நான்கு தூண்களின் அடிப்படையில் கற்றல் முறைகளும் தேர்ச்சிகளும் அடையப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வேலை உலகிற்கான கல்விமுறையின் திசைமுகப்படுத்தல்களை மேம்படுத்தும் திட்டங்கள், கலைத்திட்டத்தில் அதன் அபிவிருத்திக்காக முன்னுரிமை, கல்வியில் தொழில்நுட்ப பயன்பாடு, சரளமாக மொழியை பயன்படுத்தலும், தொழில் வழிகாட்டலும் ஆலோசனையும் என்பவற்றிற்கு முன்னுரிமை அளித்தல் வேண்டும்.
எழுதுதல் மற்றும் கணிதம் ஆகியவற்றின் முறையான அடித்தளம் இன்றைய அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் எதிர்கால உயர்மட்ட விரிவாக்கம் குறித்து மற்றும் டிஜிட்டல் திறன்கள் ஆகியவை இதன் தொடர்ச்சியாக மென்திறன்கள் வழங்குதல் வேண்டும் பிராந்திய இடைவெளிகளை அடையாளப்படுத்துவதற்கு கல்வி மற்றும் திட்டங்களை வளர்த்தல் வேண்டும்.
மற்றும் இலங்கையில் இன மற்றும் மொழியின் அடிப்படையில் கல்வி மற்றும் திறன்கள் அடைதலில் பல்வேறுபட்ட பிரதேச வேறுபாடுகள் காணப்படுகின்றன. கல்வி மற்றும் திறன் இடைவெளிகளை அடையாளப்படுத்தும் நோக்கில் பிரதேசங்களில் குறிப்பாக பெண்கள் மற்றும் ஏனைய விளிம்புநிலை குழுக்கள் மத்தியில் இலக்கு வைக்கப்படும் கொள்கை அளவுகோல்கள் அவசியமாக உள்ளன. இதன் மூலம் பொருத்தமான தொழில் துறையை குறிப்பிட்ட பிரிவினருக்கு வழங்கக் கூடியதாக இருக்கும்.
நடைமுறைக் கல்வி முறையின் கீழ் செயற்படுத்தப்படும் கலைத்திட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான உள்ளடக்கங்கள் போதுமானதாக இல்லை. கல்வியின் தரப்பண்பினை விருத்தி செய்ய தகவல் தொழில்நுட்பத்தினை உயர்வாக பயன்படுத்த முடியும். விசேடமாக கணினியினை ஆதாரமாகக் கொண்ட இணைய பயன்பாட்டை விருத்தி செய்த கற்றல் கற்பித்தல் முறைகள் கிரமமாக உள்வாங்கப்பட வேண்டி உள்ளது. இதன் அடிப்படையில் கலைத்திட்டத்தை நவீனமயப்படுத்த வேண்டும்.
பாடசாலையில் மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் முறைகள், கற்றல் அணுகுமுறைகள், பரீட்சைகள் என்பவற்றிற்கு தொழில்நுட்ப சாதனங்களுக்கு முதல் இடம் கொடுத்தல். அது மட்டுமன்றி பாடசாலைகளில் இடைவெளி நேரங்களில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களது தொழில் ஆர்வம், ஆற்றல் என்பவற்றை அறிந்து அதற்கேற்றாற்போல் கற்பித்தலை நடத்துதல்.
இன்றைய தொழிற்சந்தையில் ஆங்கில மொழியின் தேவையை அறிந்து பாடசாலைகளில் ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து கற்பிப்பது தொழிற்கல்வியின் பொருட்டே ஆகும். மேலும் நுண்திறன் வகுப்பறைகள் ஊடாக ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் தொழில்நுட்ப அறிவினை வளர்க்க முடியும். மேலும் மாணவர்களுக்கு மத்தியில் தொழிற் பயிற்சி முகாம்களை மேற்கொள்ள வேண்டும்.
ஆங்கில மொழித்திறன் மற்றும் டிஜிட்டல் எழுத்தறிவு ஆகியவற்றில் உள்ள பிராந்திய வேறுபாடுகளை சமாளிப்பதற்கு சமூகக் கவனம் தேவையாக உள்ளது. உள்நாட்டு மொழிகளில் டிஜிட்டல் தளங்களை அணுகல் மற்றும் கணிசமான கிராமப்புற இடைவெளிகளை கருதுகையில் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்தல் ஆகியவற்றை முன்னெடுப்பதற்கான முயற்சி தேவையாக உள்ளது. இதனை ஒத்ததாக கிராமப்புற மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் தொழில் நுட்பங்களை கற்பித்தல் சாதனமாக பயன்படுத்துவதற்கான பயிற்சிகளை வழங்குவதற்கான தேவை உள்ளது. கல்வித் துறை முழுவதும் டிஜிட்டல் எழுத்தறிவின் தேசிய மட்ட பின்பற்றல் செயற்பாடுகளுக்கு மேலதிகமாக இது அமைதல் வேண்டும்.
வாழ்க்கைத் தொழில் வழிகாட்டலை வழமையான பாடசாலையின் செயற்பாட்டின் பகுதியாக அமைக்க வேண்டும். தொழில் வாய்ப்புகள் பற்றிய தகவல்களை கொண்ட வாழ்க்கை தொழில் வழிகாட்டல் அலகு பாடத்தில் கொண்டுவருதல், தொழில் வழிகாட்டிக்கென்று தனி ஆசிரியர் பாடசாலையில் நிறுவப்பட வேண்டும்.
இவ்வாறான நவீன மாற்றத்திற்கு ஏற்ப இலங்கையின் கல்வித் துறையும் மாற்றம் பெறுமாயின் தொழில்துறை மிக்க ஒரு சமுதாயத்தை உருவாக்க கூடியதாக இருக்கும் இதனூடாக இலங்கை கல்வித் துறைக்கும் தொழில் துறைக்கும் இடையில் நிலவும் பாரிய இடைவெளி இல்லாமல் செய்து ஒரு திறன்மிக்க தொழிற்படையை உருவாக்கலாம்.
Comments
Post a Comment