Significant Curriculum Reforms in Sri Lanka (in Tamil)
இலங்கையின் முக்கிய கலைத்திட்ட சீர்திருத்தங்கள்
அறிமுகம்
தற்கால உலகில் பூகோளமயமாதல், கோளமயமாதல் காரணமாக பல மாற்றங்களுக்கு இவ்வுலகம் உள்ளாக்கப்படுகின்து. அந்தவகையில் இவ்வாறான உலக மாற்றங்களுக்கு ஏற்றாற்போல் கல்வி நிலையும் மாறவேண்டும் என கருதி கலைத்திட்ட சீராக்கம் இடம்பெறுகின்றது. அந்தவகையில் இலங்கையிலும் கால மாற்றத்துக்கு ஏற்ப காலத்துக்கு காலம் பல மாற்றங்களுடன் கலைத்திட்ட சீராக்கம் இடம்பெற்றுள்ளன. இவை முன்னர் ஏற்பட்ட கலைத்திட்ட சீராக்கங்களில் காணப்படும் சில குறைகளையும் சில தேவைகளையும் நிவர்த்தி செய்வதாக அமைய பெறுகின்றன. அந்த வகையில் இலங்கையில் காலத்துக்கு காலம் கொண்டுவரப்பட்ட முக்கிய சில கலைத்திட்ட சீராக்கங்களையும் கலைத்திட்ட சீராக்கத்தின் அவசியங்களையும் பின்வருமாறு நோக்கலாம்.
1950ஆம் ஆண்டு வெள்ளை அறிக்கை
1950ஆம் ஆண்டு வெள்ளை அறிக்கையானது சுதந்திர இலங்கையின் முதலாவது கல்வி சீர்திருத்தம் ஆகும். இச் சீர்திருத்தத்தில் குறிப்பிட்ட மிக முக்கிய அம்சமாக மொழி வேறுபாடின்றி ஆரம்ப நிலை, இடைநிலை, உயர்கல்வி என மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டு தாகும். ஆரம்பத்தில் ஆங்கிலக் கல்விக்கு கொடுக்கப்பட்ட விசேட முக்கியத்துவம் சீர்திருத்தத்தில் இல்லாமல் ஆக்கப்பட்டது. மேலும் தாய்மொழிக் கல்விக்கு இங்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இரண்டாம் மொழியாக ஆங்கிலத்தை தரம் மூன்றிலிருந்து
கற்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆரம்பக் கல்வி மாணவர்களை புத்தகத்திற்கு அடிமையாகாது மாணவர்களின் விருப்பம், திறமை, ஆற்றல்களுக்கேற்ப கற்பிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இங்கு இது ஒரு முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. ஏனெனில் ஒரு கலை த்திட்டமானது குறிப்பாக மாணவர்களுக்கு நன்மை பயக்க கூடியதாகவே அமையவேண்டும். அந்தவகையில் இங்கு மாணவரின் விருப்பம், திறமை, ஆற்றல் கருத்தில் கொள்ளப்படுவது சிறப்பானதாக காணப்படுகிறது.
இங்கு இடைநிலைக் கல்வியில் நூற்கல்விக்கும் தொழிற்கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை காணலாம். இது மாணவர்களின் எதிர்கால தொழில் திறமையை விருத்தி செய்வதற்கு சாதகமாக அமையும். அடுத்ததாக ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளின் தரத்தை உயர்த்துவதற்கான சிபாரிசுகள் இங்கு மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் ஆசிரியர்களின் பயிற்சியின் தரம் உயர்த்தப்பட்டுசிறந்த கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்குள்ள கல்வி கட்டமைப்பானது தொடக்கக் கல்வியின் இறுதியில் அதாவது 11வதுவயதில் தேர்வு இடம்பெற்று அதில் சித்தி பெறுவோர் கனிஷ்ட இடைநிலைக்கும் அதில் சித்தி பெறாதவர்கள் மீண்டும் தொடக்க நிலைக்கு அல்லது தொழிற் பயிற்சி வகுப்புகளிலும் அமர்த்தப்பட்டனர். அடுத்ததாக கனிஷ்ட இடைநிலை இறுதியில் தேர்வு வைக்கப்பட்டு அதில் சித்தி அடைவோர் சிரேஷ்ட இடைநிலைக்கும் சித்தி அடையாதவர்களுக்கு மூன்று விருப்பத்தேர்வுகளும் கொடுக்கப்பட்டன. இங்கு மொழிப்பயிற்சி வகுப்பு, தொழில் வாய்ப்புக்கள், கல்வி கட்டணம் செலுத்தி மீண்டும் சிரேஷ்ட இடைநிலை கல்வியை பயிலல் என மாணவர்களுக்கான பலவாறான கல்வி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது சிறப்பானதாகும.
1961 தேசிய கல்வி ஆணைக்குழு அறிக்கை
கல்வி வாய்ப்புக்களை விரிவாக்க து.நு.ஜயசூரிய தலைமையில் தேசிய கல்வி ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. தேசிய கல்வி ஆணைக்குழுவானது 1950ஆம் ஆண்டு வெள்ளை அறிக்கையில் கூறப்பட்ட சில விடயங்களை மேலும் விருத்தி செய்ததுடன் சில புதிய விடயங்களை உள்வாங்கிக் கொண்டது சிறப்பானதாகும். அந்தவகையில் ஆணைக்குழுவின் முக்கிய சிபாரிசு சிங்களம், தமிழ் போதனா மொழியாக இருக்க வேண்டும் என்பதை கூறலாம். நாட்டு மக்களின் தாய் மொழிகளான சிங்களம், தமிழ் மாணவர்களுக்கு போதனா மொழியாக இருக்கவேண்டும். இதன்மூலமே எல்லா மாணவர்களும் பயன் பெறக்கூடியதாக அமையும் என இங்கு கூறப்பட்டது. ஆனால் இங்கு ஆங்கில மொழியில் கல்வியைத் தொடர விரும்பியவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டன. கனிஷ்ட, சிரேஷ்ட பாடசாலைகளில் சகல தரங்களிலும் அரசாங்க மொழி கட்டாய பாடமாக கற்பிக்கப்பட வேண்டும். அதனுடன் அதனை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என நாட்டு மக்களுக்கு தேசியப் பற்றை உருவாக்கும் வண்ணம் இந்த ஏற்பாடு மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இங்கு தொழிற்கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதை காணலாம். தரம் 6 தொடக்கம் 8 வகுப்பு ஆண் பிள்ளைகளுக்கு மரவேலை, உலோக வேலை என்பனவும் பெண் பிள்ளைகளுக்கு மனையியல் என்பனவும் கற்பிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது எட்டாம் வகுப்பிற்கு பின் தொழிற்கல்வியை தொடர விரும்புவோர் விவசாய பாடசாலைகள், தச்சுத்தொழில் பாடசாலைகள், நெசவு
பாடசாலைகளில் கல்வி பயில முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பின் முடிவில் தொழிற்கல்வியை தொட விரும்புவோருக்கு ஆசிரியர் கலாசாலைகள், வணிகப் பாடசாலைகள், மிருக வளர்ப்பு, மீன்பிடி தொழில் போன்ற துறைகளில் கல்வியைப் பெற முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக மாணவர்கள் இங்கு நூற் கல்வியை மாத்திரம் பின் தொடராமல் மாணவர்களின் விருப்பம், தேர்வுக்கு அமைய தமது தொழில் திறன்களை விருத்தி செய்வதற்கான ஏற்பாடுகளும் இந்த சீர்திருத்தத்தில் முன்மொழியப்பட்டன. மேலும் இங்கு பெற்றோரின் சமயம் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் எனவும் முன்மொழியப்பட்டது. இது கட்டாய மதமாற்றத்தை தவிர்க்க கூடிய ஒன்றாக காணப்படுகிறது.
1972 இல் கல்வி மற்றும் கலைத்திட்டச் சீர்திருத்தம்
1970 ஆம் ஆண்டைத் தொடர்ந்து ஏற்பட்ட இளைஞர் கொந்தளிப்பும், படித்த இளைஞர்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியமையும் 1972ஆம் ஆண்டு கல்விச்சீர்திருத்த வருகையின் பிரதான காரணங்களாகும். இலங்கை எதிர்கொண்ட சென்மதி நிலுவை நெருக்கடி கல்வியிலே தொடர்ந்து கொண்டிருக்கும் குடியேற்றவாத எச்சங்கள் தொடர்பான எதிர் மனப்பாங்கு மற்றும் க.பொ.த உயர்தரத் தேர்வில் சித்தியடைவோர் அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்கப்பெறமுடியாத நிலை, பாடசாலைக் கலைத்திட்டம் முற்றிலும் ஏட்டுக்கல்விமயப்பட்டதாக இருந்தமை, தொழில்மையக்கல்விக்கு மாணவர் மத்தியில் ஏற்பட்ட நேர் மனப்பாங்கு, நாட்டின் புவியியல் வளங்களை மேம்படுத்துவதற்கு கல்வியைப் பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனை என்பன 1972ஆம் ஆண்டு கல்வியில் ஒரு சீர்திருத்தத்தை வேண்டி நின்றது.
கலைத்திட்ட உருவாக்கத்தின் பின்னணிக் காரணிகள் வருமாறு,
• 1971ம் ஆண்டில் ஏற்பட்ட இளைஞர் கிளர்ச்சி
• கல்வித்திட்டத்தின் குறைபாடுகள்
•கல்வி பெற்ற பெருந்தொகையினரிடைய வேலையின்மை நிலவியமை
• கல்வியின் தரம், அளவை உயர்த்துவதில் ஏற்பட்ட சிக்கல்
• கல்வியினால் பொருளாதார வளர்ச்சி ஏற்படாமை
1972ஆம் ஆண்டு கல்விச்சீர்திருத்த மாற்றங்கள் ஏற்பட்ட பகுதிகள்
- பாடசாலைக் கட்டமைப்பு
- கல்வி நிர்வாகம்
- பாடசாலை கலைத்திட்டம்
- ஆசிரியர் கல்வி
பாடசாலைக் கட்டமைப்பு
➢ 11 வருடங்கள் பாடசாலைக் கல்வி
• பொதுக்கல்வி - 9 வருடங்கள்
• உயர் கல்வி - 2 வருடங்கள்
➢ பாடசாலை அனுமதி வயது 6 ஆக உயர்த்தப்பட்டது.
➢ கட்டாய பாடசாலைக் கல்வி பயிலும ; காலம் 14 வயதாக காணப்பட்டது.
➢ கனிஷ்ட இடைநிலைக் கல ;வி முடிவடைந்ததும ; மாணவர்கள் தேசிய பொதுக்கல்விச் சான்றிதழ் (தே.பொ.க.சா) (N.C.G.E) பரீட்சை எழுதுவர். இப்பரீட்சைக்கு இரு முறை மட்டுமே தோற்ற முடியும். 1975ஆம் ஆண்டு முதன் முதலாக இப்பரீட்சை நடத்தப்பட்டது.
➢ தே.பொ.க.சா பரீட்சையில் பெறும் அடைவுகளுக்கமைய கலைப்பாடத் துறை, விஞ்ஞான பாடத்துறை, வணிகத்துறை, சமூகக்கல்வி ஆகிய பாடப்பிரிவுகளைத் தெரிவு செய்து சிரேஷ்ட இடைநிலைக் கல்வியின் இறுதியில் மாணவர் தேசிய உயர் கல்விச் சான்றிதழ் (தே.உ.க.சா) (H.N.C.E) பரீட்சைக்குத் தோற்றுவர்.
கலைத்திட்ட மாற்றங்கள்
➢ தரம் 1-11 வரை பொதுக் கலைத்திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டது.
➢ இடைநிலைக் கலைத்திட்டத்தில் காணப்பட்ட கலை, விஞ்ஞானம் என்ற பாகுபாடுகளும் ஒழிக்கப்பட்டு அனைத்து மாணவர்களும் கலை, விஞ்ஞானம், அழகியல் என்ற அனைத்தையும் கற்கும் சமநிலைக் கலைத்திட்டம் அறிமுகப்படுத்தபட்டது.
➢ கலைத்திட்ட சீர்த்திருத்தங்கள் இரு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டன. ஓராண்டின் பின் அடுத்த ஆண்டில் என்ற முறையில் கட்டம் கட்டமாக அமுல் செய்யப்பட்டன.
➢ வாழ்க்கை அனுபவங்களோடு தொடர்புடையதாக கலைத்திட்டம் அமைக்கப்பட்டது.
கலைத்திட்டம் 3 பகுதிகளைக் கொண்டதாக இருந்தது.
1. மையப்பாடங்கள் - முதல்மொழி, இரண்டாம் மொழி, புள்ளிவிபரவியல், முகாமைத்துவ அடிப்படைக் கோட்பாடு, எமது கலாசார மரபுரிமையும் சமூகப் பொருளாதார சுற்றாடலும், அடிப்படை சமூக விஞ்ஞானக் கோட்பாடு
2. விருப்பத்திற்குரிய பாடங்கள் - விஞ்ஞானப் பாடத்துறை, வணிகக்கல்வி, சமூகவிஞ்ஞானம், மொழிகள், மானிடவியல்
3. செயற்றிட்ட வேலை - பாடசாலைச் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு செயற்றிட்டங்களில் ஈடுபட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆசிரியர் கல்வி
➢ 1972 ஆம் ஆண்டிற்கு முன்னர் பெருந்தொகையான ஆசிரியர்கள் பயிற்சி எதுவும் இன்றி நியமிக்கப்படட்னர். எனவே இதனால் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் தேவை ஏற்பட்டது. 1972ஆம் ஆண்டு ஆசிரியர்களுக்கு தபால் மூல பயிற்சித்திட்டம் தொடங்கப்பட்டது. அறிமுகப்படதத்ப்பட்ட கலைத்திட்ட சீர்திருத்தத்திற்குப் பொருத்தமான ஆசிரியர்கள் உருவாக்கப்படவில்லை. எனவே மீள் பயிற்சி அளிக்கும் தேவை காரணமாக பிரதேச மட்டத்தில் பயிற்சித்திட்டங்களும் புத்தாக்க கற்கை நெறிகளும் தொடங்கப்பட்டன.
➢ கலைத்திட்டத்தில் தொழில்சார் பாடங்களை அறிமுகம் செய்தமையால் கல்வி உலகை வேலை உலகுடன் ஒன்றிணைப்பதற்கும் தொழில்சார் புலக்காட்சியை மாணவரிடத்து மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
1981 ஆம் ஆண்டு கல்வி வெள்ளையறிக்கை
இக் கலைத்திட்டத்தில் கொண்டுவரப்பட்ட சீராக்கங்கள் சமூகத்தில் அவசியம் பொருந்தியதாக காணப்பட்டது. ஏற்கனவே கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் கல்வி வாய்ப்புக்களை விரிவாக்கி இருந்தாலும் பொருளாதாரத்திற்கும் கல்விக்குமிடையிலான இடைவெளி தொடர்ந்து கொண்டே இருந்தது. இவ்வாறான பின்னணியில் பொதுக்கல்வி தொடர்பான போகொட பிரேமரத்ன குழு தொழிநுட்பக்கல்வி தொடர்பான ஞானலிங்கம் குழு மற்றும் தேசிய பயிலுனர் வெள்ளையறிக்கை வெளியிடப்பட்டது.
இதில் உள்ளடக்கப்பட்டிருந்த பிரதான சீர்திருத்தங்களாக, இவ்வறிக்கையில் வாழ்க்கை திறன்கள் எனும் பாடம் அறிமுகம் செய்யப்பட்டது. கனிஷ்ட இடைநிலை வகுப்புகளான 6-8 வரை உட்சேர்க்கப்பட்டது. மரவேலை விவசாயம் மனைப்பொருளியல் போன்ற தொழில்நுட்பப் பாடங்கள் தெரிவுப் பாடங்களாக அறிமுகம் ; செய்யப்பட்டது.
தொழில் உலகுடனும் நாட்டின் தொழிற்துறையுடன் போட்டியிட்டு திறன்களை வளர்த்துக் கொள்வது இன்றியமையாததாகிறது. இதனூடாக நாட்டின் முக்கிய பொருளாதார துறையாக விளங்கும ; விவசாயம் மற்றும் கைத்தொழில் துறையுடன் தொடர்பான பாட விடயங்கள் உள்ளடக்கப்பட்டது. இதன் மூலம் சுதேச தொழில்கள் பற்றிய அறிவு வழங்கப்பட்டது.
இங்கு பாடவிதானங்களாக முதல்மொழி சமயம் கணிதம் ஆங்கிலம் விஞ்ஞானம் சுகாதாரம் அழகியற்கல்வி என்பன கற்பிக்கப்பட்டது. இப்பாடங்களினூடாக நாட்டின் வளர்ச்சிக்கான பல அவசியப்பாடுகள் எதிர்பார்க்கப்பட்டன.
✓ முதல் மொழி – சுயமொழியில் கல்வியை வழங்குவதனூடாக ஆற்றல் மற்றும் திறன்களை விருத்தியடையச் செய்யலாம்.
✓ ஆங்கிலம் - சர்வதேச கல்வி மற்றும் தொடர்பாடலுக்கு ஊக்குவித்தல்.
✓ சமயம் - ஒவ்வொரு பிரஜைக்கும் சமயத்தை பின்பற்றவும் கற்கவும் உரிமை அளித்துள்ளமையை நடைமுறையில் பிரதிபலித்தல்.
✓ கணிதம் - நாட்டிற்கு பயனளிக்கக்கூடிய எண்ணறிவுமிக்க சமுதாயத்தினரை உருவாக்கல்.
✓ அழகியற்கல்வி – பல்கலாசார நாட்டின் பல்வேறு கலைகளை அறிதலும் மதித்தலும்
✓ சுகாதாரம் - தனிப்பட்ட மற்றும் சமூகச் சுகாதாரம் நாட்டின் அபிவிருத்திக்கு அவசியமாதல்.
✓ விஞ்ஞானம் - நாட்டையும் சூழலையும் பாதுகாத்தல்
பாடசாலை கொத்தணி முறை
ஒரு பெரிய பாடசாலையை மையமாகக் கொண்டு அதன் அருகில் உள்ள 10 – 15 சிறிய பாடசாலைகள் உள்ளடக்கியதாக கொத்தணி முறை காணப்பட்டது. இதன் மூலம் பல அவசியப்பாடுகள் எதிர்பார்க்கப்பட்டன.
மதிப்பீட்டு செயன்முறைகள்
இதன்கீழ் தரம் 8 இன் இறுதியில் தொடர் கணிப்பீடும் அளவுமட்டப் பரீட்சையும் கொண்டுவரப்பட்டது. சிரேஷ்ட இடைநிலை மட்டத்தில் இரு மதிப்பீட்டு முறைகளும் காணப்பட்டது. பாடக்கற்பித்தலின் போது வாய்மொழி செயற்பாடு சார்ந்த கணிப்பீட்டு முறைகளும் பாட நிறைவில் பரீட்சையும் எனஅமைந்திருந்தது.
✓ செயற்பாட்டுடன் கூடிய கற்றல் அதிக விளைவுகளையுடையது.
✓ ஞாபகத்தில் நிலைத்திருக்கக்கூடியது.
✓ மாணவர்களை பரீட்சைக்கு முன்னரே தயார்படுத்தல்
ஆகவே கல்வி வெள்ளையறிக்கையி;ல் கொண்டுவரப்பட்ட சிபாரிசுகள் நாட்டின் நிகழ்கால எதிர்கால அரசியல் சமூக பொருளாதார கல்வி கட்டமைப்பிற்கு அவசியமானதாக உள்ளது.
• கல்வியை வாழ்க்கை நீடித்ததாக மாற்றல்.
• கற்றல் உலகிற்கும் தொழில் உலகிற்கும் இடையில் தொடர்பினை ஏற்படுத்தி தொழில் வாழ்விற்கு தொடர்புபடுத்தலும் தயாராதலும்
•அவரவர் திறன்களுக்கேற்ப கல்வியைப் பெற முடியுமென நம்பிக்கையளித்தலும் வாய்ப்பளித்தலும்
•கல்வியையும் பயிற்சியையும் நாட்டின் தொழிற்துறை வாய்ப்புடன் இணங்காணச் செய்தல்.
• கல்வியின் பண்புத்தரத்தை உயர்த்துதல்.
1997 புதிய கல்விச் சீர்திருத்தம்
அப்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதியும் கல்வி அமைச்சராகவும் இருந்த திருமதி சந்திரிகா குமாரதுங்க அவர்களால் 1997ஆம் ஆண்டு "பொதுக்கல்வி சீர்திருத்தத்திற்கான ஆண்டு" என பிரகடனப்படுத்தப்பட்டது. இவ்வாறு 1997இல் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் 1998 இல் அமுலாக்கம் செய்யப்பட்டது. அந்த வகையில் கலைத்திட்டம் தொடர்பாகவும் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இச்சீர்திருத்தங்களாவன அக்காலத்தின் தேவைக்கேற்ப மிகவும் அவசியமான நிலைமையே காணப்பட்டிருந்தது. அந்தவகையில் அவ்வாறான கலைத்திட்ட சீர்திருத்தங்கள் பற்றி பின்வருமாறு நோக்குவோம்.
1. ஆரம்பக் கல்விச் சீர்திருத்தம்
2. கனிஷ்ட இடைநிலைக் கல்விச் சீர்திருத்தம்
3. சிரேஷ்ட இடைநிலைக் கல்விச் சீர்திருத்தம்
4. ஆங்கில நிகழ்ச்சித் திட்டத்தை வலுப்படுத்துதல்
5. பாடசாலை மட்டக் கணிப்பீடு
6. ஆலோசனை கூறுதலும் வழிகாட்டுதலும்
ஆரம்பக் கல்விச் சீர்திருத்தம்
ஆரம்ப கல்வியானது மூன்று முதன்மை நிலைகளாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. அதாவது
1. முதன்மை நிலை 1- (தரம் 1, 2)
2. முதன்மை நிலை 2 - ( தரம் 3,4)
3. முதன்மை நிலை 3 - (தரம் 5)
இவ்வாறு ஆரம்பக் கல்வியானது பிரிக்கப்பட்டு கலைத்திட்டமும் அதற்கேற்ப ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இதனால் இது முறையான கற்றல் கற்பித்தல்செயற்பாட்டிற்கும் இலகுவாக வழி அமைத்துக் கொடுத்தது எனலாம்.
அதற்கேற்ப பிள்ளை மையக் கற்றல் மற்றும் செயற்பாட்டினை அடிப்படையாகக் கொண்ட கற்றல் கற்பித்தல் செயற்பாட்டு அணுகுமுறைகள் முன்னெடுக்கப்பட்டன. இதனால் பாடத்திட்டம் உட்பட கலைத்திட்டமும் அவ்வாறே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிணங்க கற்றல் கற்பித்தல் முறையியல்களாக,
1. திட்டமிடப்பட்ட அல்லது வழிகாட்டப்பட்ட விளையாட்டு முறை
2. செயற்பாடுகள்
3. எழுத்து வேலை
போன்ற செயற்பாட்டினை அடிப்படையாகக் கொண்ட கலைத் திட்ட முறைமைகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மூலம் மாணவர்களுக்கு வெறுமனே பாடத்திட்டத்தைக் கற்பிப்பதை விட அவர்களின் வயதிற்கேற்ப செயற்பாட்டுடனான கல்வியை வழங்குவதன் மூலமே கற்றல் கற்பித்தலை வினைத்திறனாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் காணப்பட்டிருந்தது. இது படிப்படியாக இக்காலம் வரை உள்ள மாணவர் மையக் கல்விக்கும் வித்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் ஒருங்கிணைந்த கலைத்திட்டம் உருவாக்கப்பட்டது சிறப்பான அம்சமாக கொள்ளலாம். இதற்கிணங்க முதன்மொழி, கணிதம், தமிழ், சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் என 4 பாடப்பரப்புக்களைக் கொண்ட வகையிலான ஒருங்கிணைந்த கலைத்திட்ட முறைமையும் உருவாக்கப்பட்டது.இதன் மூலம் மாணவர்களை வெறுமனே பாடப்புத்தகத்தோடு மாத்திரம் தொடர்புபடுத்தாது நேரடியாகவும் மறைமுகமாகவும் மாணவர்களுக்கு உண்மைவாழ்க்கையுடன் தொடர்புடைய சூழல் மற்றும் அனுபவத்தை வழங்குவதனை எதிர்பார்ப்பாக கொண்டதற்கிணங்க மேற்குறிப்பிட்ட பாடங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டதாகவும் செயற்பாட்டுடன் தொடர்புபட்டதாகவும் காணப்படுகின்றமையைக் காணலாம். இதன் மூலம் மாணவர்களை செயற்பாட்டு கல்விக்கு ஊக்கம் அளிப்பதன் அவசியத்தை ஒருங்கிணைந்த கலைத்திட்டம் வேண்டி நின்றது.
மேலும் ஒவ்வொரு முதன்மை நிலைகளுக்கும் உரிய நுழைவுத் தேர்ச்சிகள், அத்தியாவசியமான கற்றல் தேர்ச்சிகள் என்பவற்றை இனங்காணல் என்பவற்றிற்கும் விருப்புக்குரிய தேர்ச்சிகளை கணிப்பீடு செய்வதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அவ்வாறே நியதிகளை அடிப்படையாகக் கொண்ட கணிப்பீடுகள் பாட ரீதியாகவும் பொதுவான தேர்ச்சிகளை அடைதல் தொடர்பாகவும் மாணவர்கள் தொடர்ச்சியாக கணிப்பீட்டிற்கு உள்ளாக்கப்பட்டுவர் என விதிக்கப்பட்டிருந்தது. எனவே இவ்வாறு மாணவர்களின் அடைவு மட்டத்தை சிறந்த முறையில் அளவிட்டுக் கொள்வதற்கு கலைத்திட்டத்தில் இவ்வாறான கணிப்பீடு மற்றும் தேர்ச்சிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
மேலும் முதன்மை நிலை 1 மாணவர்களுக்கு தரம் 6 மாணவர்களுடன் இடைத் தாக்கம் புரிய வாய்ப்பளிக்கப்பட்டது. இதன் மூலம் சுமூகமான ஒரு தொடர்பாடலை விருத்தி செய்யவும் பொறுப்புணர்ச்சியையும் தலைமைதாங்கும் பண்பை வளர்க்கவும் மாணவர் -மாணவர் மூலம் கற்றல் நடைபெறவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
2. கனிஷ்ட இடைநிலைக்கல்வி ( தரம் 6 தொடக்கம் 9)
இங்கு பிரதானமாக கலைத்திட்டத்தில் பாடரீதியாக மாற்றங்கள் பல ஏற்படுத்தப்பட்டிருந்தன. அதாவது இப்பிரிவு மாணவர்களுக்கு 9 கட்டாயப் பாடங்கள் வழங்கப்பட்டிருந்தன. அவையாவன... தாய் மொழி, கணிதம், ஆங்கிலம், சமயம், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், சமூகக் கல்வியும் வரலாறும், வாழ்க்கை தேர்ச்சிகள், அழகியற் பாடங்கள், சுகாதாரமும் உடற்கல்வியும் என்பவையே அவையாகும். இதற்கிணங்க "வாழ்க்கைத் திறன்களுக்கு" பதிலாக "வாழ்க்கைத் தேர்ச்சிகள்" எனும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. இது சமூகத்தில் பிள்ளை வாழ்வதற்காக எவ்வாறான தேர்ச்சிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கிணங்க மாணவர்களைத் தயார்படுத்தும் முகமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும் தரம் 7- 9 வரையான வகுப்புக்களில் "சமூகக் கல்வி" எனப்பட்ட பாடம் "சமூகக் கல்வியும் வரலாறும்" என்ற பாடமாக மாற்றப்பட்டது. இதன் மூலம் எமது நாட்டின் கடந்தகால வரலாற்றை அறிந்து கொண்டு நிகழ்கால மற்றும் எதிர்கால நாட்டில் வாழ்வதற்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வழிகாட்டுவதற்காக இம்மாற்றம் அவசியமாயிற்று. அத்துடன் செயற்பாட்டுடன் அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சித்திட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதற்காக பாடசாலைகளில் செயற்பாட்டு அறை ஒன்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இந்த செயற்பாட்டு
அறையானது 5 பிரிவுகளைக் கொண்டிருந்தது.
1. உணவும் விவசாயமும்
2. தகவல் ஒழுங்கமைப்பும் முயற்சி நடவடிக்கையும்
3. உருவாக்கமும் உற்பத்தியும்
4. கட்புலக் கலைகளும் வரைகலையும்
5. அரங்கற் கலைகள் என்பவையே அவையாகும்.
பிற்காலத்தில் இதனாலேயே செய்முறைத் தொழிநுட்பத் திறன்கள் பாடமானது அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே மாணவர்களுக்கு வெறுமனே பாடத்திட்டத்தையும் கோட்பாடுகளையும் கற்பிப்பதை விட செயற்பாட்டுடனான கல்வியினாலேயே அறிவிலும் சரி வாழ்க்கையிலும் சரி சிறந்த முன்னேற்றத்தை காண முடியும். மற்றும் தொழில் வாழ்க்கைக்கும் இச்செயற்பாடு கல்வியானது மிகவும் உறுதுணையாக அமையும் என்பதை கருத்திற் கொண்டு இவ்வாறு அமைக்கப்பட்டிருந்தது மிகவும் சிறப்பான அம்சமாக கொள்ளலாம்.
அது மாத்திரமன்றி ஆங்கில நிகழ்ச்சி திட்டங்கள் பெரிதும் கவனிக்கப்பட்டு தரம் 9 இல் பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட ஆங்கிலக் கணிப்பீடு ஒன்று செய்வது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. இது மாணவர்களிடையே ஆங்கில மொழி வளர்ச்சியினை ஊக்குவிப்பதற்கும் மேலும் பிற்கால தேசிய மற்றும் சர்வதேச தொழில் வாழ்க்கைக்கான ஒரு அடிப்படையாக உள்ள ஆங்கிலமொழியினை ஊக்குவிப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது.
மேலும் இரண்டாம் மொழி கற்க வாய்ப்பு அளிக்கப்படும் எனவே மிகவும் சிறப்பான ஒரு அம்சமாக கொள்ளலாம். இது மிகவும் அவசியமாயிற்று. ஏனெனில் பல்லின சமூகம் வாழும் இந்நாட்டில் தாய்மொழியை மாத்திரமன்றி ஏனைய மொழிகளையும் கற்க வேண்டிய தேவை அதிகமாக காணப்படுகின்றது. எனவே இதற்கான அடித்தளமாக இடைநிலை கல்வியின் மூலம் இரண்டாம் மொழியாக தமிழ் அல்லது சிங்களம் கற்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டவை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே கருதலாம்.
3. சிரேஷ்ட இடைநிலைக் கல்வி
• சிரேஷ்ட இடைநிலைக் கல்வியானது இரண்டு பிரிவுகளைக் கொண்டிருந்தது.
1. க.பொ.த சாதாரண தரம் (தரம்10,11)
2. க.பொ.த உயர் தரம் (தரம் 12, 13)
1. க.பொ.த சாதாரண தரம் (தரம்10,11)
இந்நிலையில் மாணவர்களுக்கு பிரதான பாடங்களாக 8 பாடங்கள் காணப்பட்டன.அவையாவன... முதன்மொழி, சமயம், ஆங்கிலம், கணிதம், அழகியல் கல்வி, விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், சமூகக் கல்வியும் வரலாறும், தொழில்சார் பாடம். மேற்குறிப்பிட்ட பாடங்கள் தவிர கீழ்வரும் பாடங்களிலிருந்து ஏதாவது ஒன்று அல்லது இரண்டு பாடங்களை தெரிவு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது. இதற்கிணங்க வரலாறு, புவியியல், அபிவிருத்தி கல்வி, இரண்டாம் தேசிய மொழி (தமிழ் அல்லது சிங்களம்), பிறிதொரு மொழி (பாலி, சமஸ்கிருதம், பிரஞ்சு, அரபு, மலாய், இலத்தீன்), உடற்கல்வியும் சுகாதாரமும், இலக்கியம்( தமிழ், சிங்களம், அரபு, ஆங்கிலம்) என்பன காணப்பட்டிருந்தன.மேற்குறிப்பிட்ட பாடம் சார்பான சீர்திருத்தங்களை
நோக்கினால்,
முதல் மொழி அல்லது இரண்டாம் மொழிகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம் அளிக்காமல் சர்வதேச மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது சிறப்பம்சமாக குறிப்பிடலாம். இதற்கிணங்க அக்கால மாணவர்களிடையே கல்வியை மேலும் விரிவுபடுத்தும் நோக்குடன் எதிர்காலத் தேவைகளைக் கருத்திற் கொண்டு இவ்வாறு மொழிக் கற்கைகளை அறிமுகப்படுத்தியமையானது அதன் அவசியத்தை உணர்த்தி நிற்கின்றது.
2. கா.பொ. த உயர்தரம் (தரம் 12,13)
பாடம் சார் சுமையை குறைக்கும் நோக்குடன் பிரதான 4 பாடங்களிலிருந்து பாடங்கள் 3 ஆக குறைக்கப்பட்டன. மேலும் பல்கலைக்கழக நுழைவை நாடும் மாணவர்களுக்கு பொதுச் சாதாரண பரீட்சை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் கலைத்திட்ட சுமையை குறைப்பதற்கும் மாணவர்களிடையே ஆக்கபூர்வமான ஆளுமை விருத்தியை ஏற்படுத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதற்கிணங்க மாணவர்களின் பின்வரும் தகைமைகளை அளவிடுவதாக பரீட்சைகள் அமையப் பெற்றன.
1. பொது விழிப்பு
2. பிரச்சினைக்கான தீர்வு
3. நியாயித்தலும் காரணம் காணும் திறனும்
4. கிரகித்தலும் (உள்வாங்கி தொடர்பு செய்யும் ஆற்றலும்)
இதன் மூலம் சிறந்த ஆளுமை உள்ள மாணவர்களை சமூகத்துக்கு விடுவிப்பதே நோக்கமாக இருந்தது. கலை வர்த்தகம் விஞ்ஞானம் என்பவற்றிற்கு மேலதிகமாக தொழில்நுட்பத் துறையும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. எதிர்கால தொழில்நுட்ப உலகுக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதற்கு மிகவும் அவசியமான ஒன்றாக இது காணப்பட்டிருந்தது. அத்துடன் இங்கு ஆங்கிலக் கல்வியும் கட்டாயமாக்கப்பட்டது. மேலும் 20% மாணவர்களின் கட்டாய வரவினை அமுலாக்கம் செய்யப்பட்டது. இது அனைவருக்குமான கல்வி கற்பதற்கான வாய்ப்பை மேலும் விரிவாக்கியது.
4. ஆங்கில நிகழ்ச்சித் திட்டத்தை வலுப்படுத்துதல். இதற்காக மேலே குறிப்பிட்டிருந்தவாறு,
1. ஆங்கில தொடர்பாடல் திறன்களின் அணுகுகை - தரம் 1,2 இல் செயற்பாட்டு அடிப்படையிலான ஆங்கிலம்
2. தரம் 12, 13 மாணவர்களை உயர்கல்விக்கும் தொழில் வாய்ப்புக்கும் சிறந்த முறையில் பொருத்தப்பாடுடையவர்களாக மாற்றுவதற்காக பொது ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும் இதற்குப் பின்னரும் இடம் பெற்ற சீர்திருத்தங்களிலும் இதற்கு மேலும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தமையைக் காணலாம்.
உதாரணமாக 2002 ஆம் ஆண்டிலிருந்து உயர்தரப் பரீட்சைக்கு விஞ்ஞானத் துறை மாணவர்களை ஆங்கில மொழி மூலம் தயார் படுத்துவதற்கான வேலைத்திட்டம் 2000ஆம் ஆண்டில் இருந்தே செயற்படுத்தப்பட்டது.
2000 ஆண்டில் இருந்து தரம் 6 இல் இருந்து கணிதம், விஞ்ஞானம், சுற்றாடல் கல்வி, சுகாதாரமும் உடற்கல்வியும் ஆகிய தெரிவுசெய்யப்பட்ட பாடங்களை ஆங்கில மொழிமூலம் கற்பதற்கு விருப்பத் தெரிவுக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இவ்வாறு ஆங்கில மொழிக்கு கலைத்திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டமை அக்கால சூழ்நிலையை மாத்திரமன்றி எதிர்காலத் தேவையையும் கருத்திற் கொண்டே எனலாம். எனவேதான் நிகழ்கால மற்றும் எதிர்கால உலகிற்கு மாணவர்களை தயார்படுத்தும் எண்ணத்துடன் 1997 இல் இருந்தே மாணவர்களுக்கு ஆங்கிலத்திற்கான அறிமுகமும் பயிற்சியும் வழக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
5. பாடசாலை மட்டக் கணிப்பீடு
ஆரம்பப் பாடசாலைகளில் தேர்ச்சி அடிப்படையிலான வகுப்புக் கணிப்பீடு அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் இடைநிலை வகுப்பிலிருந்து உயர்தர வகுப்பு வரை இப் பாடசாலை மட்ட கணிப்பீட்டு முறைமைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையானது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக உயர்தரத்தில் அமல்படுத்தப்பட்ட செய்முறை, செயற்றிட்டம், ஒப்படை என்பவற்றுக்கு புறம்பானதாக பாடசாலை மட்டக் கணிப்பீடு உயர்தரம் வரை விரிவாக்கப்பட்டிருந்தது. இதற்கிணங்க பல் திறமை ஆற்றல் கொண்ட ஆளுமை விருத்தியை ஏற்படுத்துவதற்கும் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஆகியோருக்கு பரிகார நடவடிக்கைகளுக்காக பின்னூட்டங்களும் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் பரீட்சையின் செல்வாக்கை குறைக்கவும் புதிய கணிப்பீட்டு முறைமைகள் அறிமுகம் செய்யப்பட்டமையானது மிகவும் அவசியமான ஒன்றாகவே கருதப்படுகின்றது. எனவேதான் எதிர்காலக் கலைத்திட்ட சீர்திருத்தங்களிலும் பாடசாலை மட்டக் கணிப்பீடு சார்பாக பல்வேறு விரிவான முன்னேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன எனலாம்.
6. ஆலோசனை கூறலும் வழிகாட்டுதலும்
1997 கல்வி சீர்திருத்தத்தில் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்ட வேண்டிய தேவை காணப்பட்டது . ஏனெனில் அக்காலகட்டத்தில் மக்கள் தனிப்பட்ட சமூக கல்வி மற்றும் தொழில் விருத்தியில் பின்தங்கியவர்களாகவும் இதனால் பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய தேவை காணப்பட்டது. எனவேதான் இதற்காக அவர்களது தனிப்பட்ட சமூக கல்வி விருத்தியிலும் தொழில் விருத்தியிலும்
ஆலோசனை வழிகாட்டுதலில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
மேலும் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து ஆலோசனை கூறுவோராகவும் தொழில் வழிகாட்டல் அலுவலர்களாகவும் பணியாற்றுவதற்கு நேரத்தைக் குறித்துக் கொள்ளுமாறும் முன்மொழியப்பட்டது.அத்துடன் வாழ்க்கை தொழில்சார் தொழில்நுட்பப் பாடநெறி களினதும் பிரதேசத்திலுள்ள தொழில் வாய்ப்புக்களினதும் தரவுத் தளத்தை உருவாக்கிப் பொருத்தமான பயிற்சிப் பாடநெறியை தேர்ந்தெடுப்பதற்கும் பாடசாலைகளில் மாணவர்களுக்கு உதவ வேண்டும் எனவும் முன்மொழியப்பட்டு இருந்தது. எனவேதான் கல்வி மற்றும் தொழில் துறையில் பின்தங்கியவர்களாக இருப்போருக்கு சிறந்த வழிகாட்டுதலை வழங்கும் நோக்குடன் இவ்வாறு பாடசாலையில் இம்முறைமை செயற்படுத்தப்பட்டமை சிறப்பான அம்சமாகும்.
1997 கலைதிட்ட சீரமைப்பிற்கு பின்னரான சீர்த்திருத்தங்களும் அதன் அவசியமும்.
காலத்திற்கு காலம் கலைதிட்டமானது சீரமைக்கப்பட்டு வருகின்றது. இது காலத்தின் தேவைக்கும் மாற்றம் ஒன்றினை விரும்பி நிற்கின்றது. அதாவது ஆரம்ப கால கலைதிட்டங்கள் மாணவர்களின் அறிவினை விருத்தி செய்யும் வகையில் அமையப்பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து குறுகிய காலகட்டங்களில் சீரமைக்கப்ட்ட கலைதிட்டங்களில் மாணவர்களின் அறிவினையும் தாண்டி தொழில் வாழ்க்கையினை தெரிவு செய்யும் அறிவை வழங்கும் ஓர் கலைதிட்டமாக இன்றைய கலைதிட்டம் காணப்படுகின்றது. 1997ற்கு பின்னரான முக்கிய சீர்த்திருத்தங்கள் பண்புத்தர விருத்திக்காக புதிய செயற்றிட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
• இடைநிலைக் கல்வியை நவீன மயப்படுத்தும் செயற்றிட்டம்
(Secondary Education Modernization Project I& II) (SEMP I&II)
•ESDFP (Education Sector Development Framework Project)
கல்வித்துறை அபிவிருத்திக்கான சட்டக நிகழ்ச்சித்திட்டம் 2013-2017
•EKSP- Education for Knowledge Society Project
அறிவுச் சமூகதுக்கான கல்விச் செயற்றிட்டம்
•HETC - Higher Education for 21 st Century
21ம் நூற்றாண்டுக்கான உயர்கல்விச் செயற்றிட்டம்
• IRQUE - Improvement of Relevant and Quality of Under Graduates Education
பட்டதாரி மாணவர்களின் கல்வியின் தரத்தையும் பொருத்தப்பாட்டையும் மேம்படுத்துதல்
புதிய பாடசாலைச் செயற்றிட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டமை
• Inclussion Education உட்படுத்தல் கல்வி நிகழ்ச்சித்திட்டம் : எந்தவித வேறுபாடுகளுமின்றி கல்வி வழங்கப்படும் ஒரு ஏற்பாடே உள்ளடக்கற் கல்வியாகும் இதற்கமைய இலங்கையிலும் உள்ளடக்கல் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
• உத்தரவாத கல்வித்திட்டம் - Guranted Education : ஒவ்வொரு பிள்ளையும் 13 வருடக் கல்வியை பெறுவதற்கான வாய்புக்களை உறுதிப்படுத்தும் ஒரு ஏற்பாடே உத்தரவாதக் கல்வி செயற்றிட்டமாகும். இதற்கமைய க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத பிள்ளைகளும் தொழில் கல்வி பாடத்தறையில் இணைந்து 13 வருட கல்வியை பெற முடியும்.
• SBM - School Based Management - பாடசாலை மட்ட முகாமைத்துவம் : பாடசாலைமட்ட முகாமைத்துவம் என்பது பாடசாலைகளுக்கு அதிகாரங்களையும் பொறுப்புக்களையும் பகிர்ந்தளிக்கும் ஒரு முறைசார்ந்த அதிகாரப் பரவலாக்கமாகும்.
• SBA- School Based Assessment பாடசாலை மட்டக் கணிப ;பீடு : 1994 ல் 6-9 ம் தரங்களுக்கு வகுப்பறைமட்டக் கணிப்பீட்டு செயற்றிட்டம் பரீடசார்த்தச் செயற்றிட்டமாக வடமேல் மாகாணத்தில் Nஐநு யினால் முன்னெடுக்கப ;பட ;டது. தொடர்ந்து அது பாடசாலை மட்டக் கணிப்பீடு என (ளுடீயு) மாற்றியமைக்கப்பட்டது.
• CBC - Competency Base Curriculum - தேர்ச்சி மையக் கலைத்திட்டம்
•CFS- Child Friendly School - பிள்ளை நேயப் பாடசாலை : பிள்ளைகள் விரும்பும் நிலையமாகப் பாடசாலையையை மாற்றியமைத்தலே பிள்ளை நேயப் பாடசாலையாகும்.
• SBPTD - பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட தொழில்சார் ஆசிரியர் அபிவிருத்தி வேலைத்தி;ட்டம் வேகமாக மாற்றமடையும் உலகுக்குப் பொருந்தக்;கூடியவாறான அறிவு, திறன் மற்றும் மனப்பாங்குடன் கூடிய பிள்ளைகளை உருவாக்குவதற்கேற்ற நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்களை அவர்கள் கற்பிக்கும் பாடசாலைகளிலேயே முறையான பயிற்சிகளை ஒழுங்கமைப்பதன் மூலம் உருவாக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டமே SBPTD ஆகும்.
EPSI - Empowered Programme for School Improvement-- வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் : 2006 இல் இச் செயற்றிட்டம் இலங்கையில் தொடங்கப்பட்டது. பாடசாலைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல், பாடசாலை அபிவிருத்தியில் சமூகத்தை பாங்காளியாக்குதல் என்ற பிரதான நோக்கங்களை மையப்படுத்தி இது நடைமுறைப்படுத்தப்பட்டது
கலைதிட்ட சீர்த்திருத்தம் ஒவ்வொரு எட்டு வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெற வேண்டும் என தேசிய கல்வி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது அதன் படி,
2007 கலைதிட்ட மறுசீரமைப்பு
2015 கலைதிட்ட மறுசீரமைப்பு
2007ஆம் ஆண்டு கலைதிட்ட கட்டமைப்பு சார் மாற்றங்கள் இடம்பெற்றாலும் கூட 2015ஆம் ஆண்டு பாரிய மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை. கலைதிட்ட வடிவமைப்பாளர்கள் பழைய கலைதிட்டத்தின் உள்ளடக்கத்தில் சுமார் 30 வீதமான பகுதிகளை மாத்திரமே மாற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன் படி பழைய உள்ளடக்கத்துடன் சுமார் 30 சதவீத மாற்றங்களுடன் புதிய கலைதிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2007 கலைதிட்ட மறுசீரமைப்பு
• மாணவர்களின் தேர்ச்சிகளை விருத்தி செய்தல்.
• செயற்பாடு சார்ந்த கற்றல்
• செயற்திட்டம் ஒப்படை மூலம் கற்றல்
• ஆக்கத்திறன், பிரச்சினை தீரத்தல் திறன் சமூகத்திறன்கள் மற்றும் கற்பனை விருத்தி திறன் போன்றவை விருத்தி செய்தல்.
• மாணவர்களில் அதிக சுமையை தகவல்களின் அடிப்படையில் சுமத்தாது அடிப்படை எண்ணக்கருக்களை வழங்குதல்
• அழுத்தமில்லாத சிநேகபூர்வ சூழலை பிள்ளையிடத்தில் முன்வைத்தல்.
இங்கு பாடசாலைக் கலைதிட்டம் மறுசீரமைக்கப்பட்டது. அவை 2008, 2009, 2010 என்றவாறு நடைமுறைப்படுத்தப்பட்டது. மாணவர்களின் கணிப்பீட்டு முறையினை ஒப்படை முறையாக மாற்றியமைக்கப்பட்டமையானது மாணவர்களின் தேர்ச்சி மட்டங்களை இலகுவாக விருத்தி செய்வதற்கும் அவர்களின் அடைவுமட்டத்தை கணிப்பதற்கும் ஆசிரியருக்கு இலகுவாக அமைந்தது.
இங்கும் மாணவர்களின் செயற்பாடு சார்ந்தே கற்றல் இடம்பெற்றது. (Activity Based Learning) இதன் மூலம் மாணவர்கள் வகுப்பறையில் சுறுசுறுப்பாக இயங்குவதோடு அவர்களின் கவனம் பாடத்துடன் தொடர்புபட்டே காணப்படும். இச்சீரமைப்பில் மாணவர்களிடத்தில் அழுத்தமில்லாத சூழ்நிலையொன்றை உருவாக்கி சிநேக பூர்வமாக மாணவரினை நடாத்திச் செல்ல வேண்டும். இவ்வாறு மேற்கொள்ளும் போது மாணவர்கள் தமது கற்றலை வினைத்திறனாக மேற்கொள்வர். ஆரம்பக்கல்வி கலைதிட்டத்தில் விளையாட்டு, மேசைவேலை, செயற்பாடு ஆகிய கற்பித்தல் முறைகளாக பயன்படுத்தப்படும். அத்தோடு மொழியின் அவசியம் உணரப்பட்டமையால் இன்று ஆசிரியர்கள் தமிழ்மொழி மூல கற்பிக்கும் மாணவர்களுக்காக சிங்களமொழி தொடர்பாடலை வளர்ப்பதோடு சிங்களமொழி மூல கற்பிக்கும் மாணவர்களுக்காக தமிழ்மொழி தொடர்பாடலை வளர்ப்பர். அத்தோடு ஆங்கில மொழியின் அறிவும் வாய்மொழி மூலம் வரிவாக்கினர். கணினியின் பாவனை அதிகரித்தமையால் மாணவர்களுக்கு தொழிநுட்ப கல்வியினை அறிமுகப்படுத்தினர்.
இவ்வாறு 2007 கலைதிட்ட சீரமைப்பிலேயே நவீன உலகிற்கு தேவையான விடயங்களை அடையும் வகையில் அமையப்பெற்றது.
2015 கலைதிட்ட மறுசீரமைப்பு
தொழில்சார் பாடத்துறைகளின் அறிமுகம்.
தரம் 13இன் இறுதிவரை கல்வியைத் தொடர வழிவகை செய்யும் வகையில் 13 வருடஉத்தரவாதம் அளிக்கும் அரசின் கொள்கைக்கு அமைய 2016இல் தொழில்சார் பாடத்துறை அறிமுகப்படுத்தப்பட்டது. தொழில்சார் பயிற்சி நிறுவனங்களுடனான இணைப்பு - பாடசாலை முறைமைக்கும் தொழிற் பயிற்சி முறைமைக்கும் இடையே இணைப்புக்கள் விருத்தி செய்யப்பட வேண்டும். இதன்படி வாழ்க்கைத்தொழில்சார் மற்றும் தொழிநுட்ப கல்வியை முன்னேற வேண்டும் என்பதற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.
பாடசாலை மட்டக் கணிப்பீடானது மேலும் வலுப்படுத்தப்பட்டது.
பாடசாலை மட்டக்கணிப்பீடு - பல்திற ஆற்றல் ஆளுமைகளை விருத்தி செய்யவும் மாணவர்கள், ஆசியர்கள் மற்றும் பெற்றோர்களுக்க பின்னூட்டல் வழங்கவும் பாடசாலை மட்டத்திலான கணிப்பீட்டு நடவடிக்கை கொண்டுவரப்பட்டது. ஆரம்ப பாடசாலைகளில் வகுப்பு ரீதியிலும் 9ம் தரத்தில் பாடசாலை ரீதியிலாக தேர்ச்சிப் பரீட்சை மூலமாகவும விஞ்ஞான செயன்முறை உத்தேச திட்டங்களை அளிக்கக்கூடிய ஒப்படைகள் மற்றும் அறிக்கை புத்தகம் அடிப்படையிலான கணிப்பீடு ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்டன. இம்முன்னேற்றகரமான திட்டம் பின்னர் எல்லாத்தரங்களிலும் எல்லாப்பாடங்களுக்குமான பொதுவான செயற்றிட்டத்தை தகுதிவாய்ந்த குழுவொன்றினால் விருத்தி செய்யப்படுகிறது.
முடிவுரை
இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட அனைத்து வித கலைதிட்ட சீரமைப்பிலும் அதன் அவசியத்தை எம்மால் அவதானிக்க முடிகின்றது. இதனை தொடர்ந்து 2023 கலைதிட்ட சீரமைப்பானது பாரிய மாற்றத்தை எதிர்நோக்கி உள்ளது. அதாவது இதுவரை கலைதிட்டங்களில் அமையப்பெறாத வகையில் வித்தியாசமாக காணப்படவுள்ளது.
மாணவர்களின் பாடநூல் மற்றும் ஆசிரியர்களின் கைநூல் என்பவை கையேடுகளாக மாற்றப்படவுள்ளது. இச்செயன்முறையானது மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை இலகுபடுத்துகின்றது. இதுவரை மாணவர்கள் பரீட்சைக்கு பாடநூலினை கற்கும் போது அது பாரிய சுமையாகவே காணப்படுகின்றது. இந்நிலை மாறி இலகுவாக பரீட்சைக்கு தயாராகும் நிலை உருவாகும் தவணை முறை (Semester) முறையாக மாற்றப்படும்.
இவற்றில் பின்வரும் சிறப்பம்சங்களும் உள்ளடக்கப்படுவதாக இருக்கின்றது
- SmartClass Room
- பாடவேளைகள் 1 மணித்தியாலயம் மற்றும் ஒரு நாளில் 5 பாடவேளை மிகுதி
- உடற்கல்வி செயற்பாடுகள்
- கலவை கற்பித்தல் முறை
- நேரடியாக கற்றல்
- நிகழ்நிலை கற்றல்.
இவ்வாறான கலைத்திட்ட சீர்திருத்தங்கள் இலங்கையின் பாடசாலைக் கல்வியில் காலத்திற்கு காலம் ஏற்படுத்தப்பட்ட முக்கிய சீர்திருத்தங்களாக அமைவதோடு காலத்தின் தேவையாக இருந்து பாடசாலைக் கல்வியின் வளர்ச்சிக்கு மைல்கல்லாக அமைந்துள்ளது.
Comments
Post a Comment