Challenges of Curriculum Design ( in Tamil)

   கலைத்திட்ட வடிவமைப்பின் சவால்கள்

அறிமுகம்

கலைத்திட்டமானது காலத்திற்குக் காலம் தேவைகளுக்கு ஏற்ப மாறுகின்ற செயன்முறையாகக் காணப்படுகிறது. அது நடைமுறை உலகின் பல மாறுதல்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுகிறது. அத்துடன் அச்செயன்முறையின் போது பல்வேறு காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஆகையால் கலைத்திட்டம் கலைத்திட்ட வடிவடைப்பாளர்களுக்கு ஒரு சிக்கலான செயற்பாடாக காணப்படுகிறது. அதாவது அரசியல், பொருளாதாரம், சமூகவியல், தொழில், தத்துவம், மற்றும் உளவியல் அடிப்படை முக்கியமானதாகும். எவ்வாறாயினும் 21ம் நூற்றாண்டை பொறுத்தமட்டில் இக் காரணிகள் மேலும் சவால்களுக்கு உட்படுவதுடன் கலைத்திட்டத்திலும் செல்வாக்குச் செலுத்தி நிற்கின்றது. கலைத்திட்ட வடிவமைப்பின் போது கலைத்திட்ட வடிவமைப்பாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பின்வரும் பந்திகள் விவாதிக்கின்றன.

 கலைத்திட்டத்தின் சவால்கள் 

கலைத்திட்டம் ஒரு மாறுகின்ற செயன்முறையாகக் காணப்படுகிறது. கலைத்திட்ட வடிவமைப்பாளர்களும் கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோர்களும் உலகில் மாறுகின்ற பல மாறுதல்களின் அடிப்படையில் கலைத்திட்டத்தை மாற்றியமைக்கிறார்கள். கல்வியியலாளர்கள் தங்களால் உருவாக்கப்படுகின்ற கலைத்திட்டமானது தற்காலத்திற்குப் பொருத்தமானதாகவும் தற்காலப் பிரச்சினைகளையும் சவால்களையும் தீர்ப்பதாகவும் அமைவதை உறுதிப்படுத்த வேண்டும். இதனடிப்படையில் கலைத்திட்டமானது காலத்திற்கு காலம் சீர்திருத்தங்கள் என்ற போர்வையில் புதிதான பாடங்கள், புதிதான கற்பித்தல் கற்றல் முறைகள், புதிய கற்றல் வளங்கள் போன்ற பல அறிமுகப்படுத்தப்படுகிறது.

இவ்வாறான புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்ற போது பல்வேறு காரணிகள் தடைகளாகக் காணப்படுகின்றன. அவற்றில் சில, 

  • பொருளாதாரம்

கலைத்திட்ட வடிவமைப்பில் செல்வாக்கு செலுத்துகின்ற முக்கிய காரணியாக பொருளாதாரம் காணப்படுகின்றது. நாட்டினுடைய பொருளாதார கொள்கையை அடிப்படையாகக் கொண்டே கலைத்திட்டமானது வடிவமைக்கப்படுகின்றது. உதாரணமாக நாட்டின் பொருளாதார கொள்கை திறந்த பொருளாதார கொள்கையா அல்லது மூடிய பொருளாதார கொள்கையா என்பதற்கு இணங்க கலைத்திட்டமானது வடிவமைக்கப்படும். அரசாங்கங்கள் மாற்றமடையும் போது அவர்களின் பொருளாதார கொள்கைகளும் மாற்றமடைவதனால் அதற்கேற்ப கலைத்திட்டமும் மாற்றமடைவது கலைத்திட்ட வடிவமைப்பாளர்களுக்கு சவாலாக காணப்படுகின்றது.

21ம் நுற்றாண்டில் மற்றொரு முக்கிய விடயமாக சர்வதேச வியாபார கொள்கைகள் கலைத்திட்ட வடிவமைப்பை பாரிய சவாலுக்கு உட்படுத்துவதாக காணப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் உள்நாட்டு வியாபார கொள்கைகளுக்கு அமைவாக கலைத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. தற்காலத்தில் சர்வதேச ரீதியாக ஒவ்வொரு நாடுகளும் ஏனைய நாடுகளுடன் தொடர்பு பட்டிருப்பதால் சர்வதேச தொழிற் சந்தைக்கு ஏற்ற வகையில் கலைத்திட்டத்தை வடிவமைக்க
வேண்டிய தேவை காணப்படுவதனால் கலைத்திட்ட மாற்றங்கள் சவாலுக்கு உட்படுதாக காணப்படுகின்றது. 21ம் நுற்றாண்டின் கலைத்திட்ட வடிவபை;பின் மற்றொரு சவாலாக கல்வி ஒரு மூலதனமாக காணப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் கல்வி என்பது ஒரு உரிமையாக மட்டும் காணப்பட்டது. தற்காலத்தில் கல்வியானது உரிமையாக மட்டுமல்லாமல் மூலதனமாக மாற்றமடைந்துள்ளது.

நாட்டினுடைய பொருளாதார அபிவிருத்தியானது கல்வியில் தங்கியுள்ளது. எனவே குறிப்பாக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் கலைத்திட்டத்தை வடிவமைப்பதானது பாரிய சவாலாக காணப்படுகின்றது. 

  • அரசியல்

கலைத்திட்டத்தை வடிவமைப்பதில் செல்வாக்கு செலுத்துகின்ற மற்றைய காரணியாக அரசியல் காணப்படுகின்றது. கல்வி என்பது அரசுடமையாக காணப்படுவதனால் கலைத்திட்ட வடிவமைப்பானது அரசினுடைய கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாக காணப்படுகின்றது. அரசே, கலைத்திட்டமானது எவ்வாறு இருக்க வேண்டும், யாரால் உருவாக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றது. இவ்வாறு அரசியல் தலையீடு காரணமாக சிறப்பான கலைத்திட்டத்தை உருவாக்குவது என்பது பாரிய சவாலாக 21ம் நுற்றாண்டில் காணப்படுகின்றது. மேலும் அரசாங்கங்கள் மாற்றமடையும் போது கலைத்திட்டமும் மாற்றடைகின்றது. குறிப்பாக ஒவ்வொரு அரசாங்கங்களும் தங்களினுடைய கொள்கைகளுக்கு ஏற்ற வகையில் கலைத்திட்டத்தை மாற்றி அமைக்கின்றமையானது கலைத்திட்டத்தை சவாலுக்கு உட்படுத்துகின்றது. அத்துடன் அரசாங்கள் தங்களினுடைய இனம், மதம், கலாசாரம் என்பவற்றை முதன்மைபடுத்தியும் ஏனைய இனம், மதம், கலாசாரம் என்பவற்றை மட்டுப்படுத்தியும் கலைத்திட்டத்தை வடிவமைக்கின்றமையானது கலைத்திட்டத்தை வடிவமைக்கின்ற செயற்பாடு மேலும் சிக்கல் தன்மை கொண்டதாகக் காணப்படுகிறது.  

  • இன முரண்பாடும் உலக ஒற்றுமையும்

 கலைத்திட்ட வடிவபை;பின் மற்றொரு சவாலாக இன முரண்பாடுகள் மற்றும் உலக ஒற்றுமை காணப்படுகின்றது. கலைத்திட்டத்தை வடிவமைக்கின்ற போது இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படாத வண்ணம் சகல இனங்களையும் சமமாக மதித்து கலைத்திட்டத்தை வடிவமைக்க வேண்டும.; அத்துடன் உலக அமைதிக்கு பாதிப்பு ஏற்படாது உலக ஒற்றுமையை உருவாக்கும் வகையில் கலைத்திட்டத்தை வடிவமைக்க வேண்டும். இலங்கையில் இன முரண்பாடுகளை தீர்க்க இரண்டாம் மொழி ஒரு  பாடமாகவும் உலக ஒற்றுமைக்காக ஆங்கிலம் ஒரு பாடமாகவும் கற்பிக்கப்படுகின்றது. இவ்வாறன ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் இன்றும் இன முரண்பாடுகள் காணப்படுகின்றன. 21ம் நுற்றாண்டில் இவ்வாறனதொரு கலைத்திட்டத்தை வடிவமைப்பது பாரிய சவாலாக அமைகின்றது

  • சமூகவியல் காரணிகள்

கலைத்திட்ட வடிவமைப்பதில் சமூகவியல் காரணிகளும் செல்வாக்கு செலுத்துகிறன. இவை பல்வேறு சிக்கல் நிறைந்ததாகவும் 21ஆம் நூற்றாண்டில் மேலும் சிக்கல் நிறைந்ததாகக் அமைகிறன. துற்போதைய காலத்தில் சமூகமானது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையானது குறைவடைந்து கூட்டுக் குடும்பத்திலிருந்து கருக்குடும்பமாகவும் குடும்பத்திலுள்ள தாய் தகப்பன் ஆகிய இருவரும் தொழிலுக்குச் செலவதாலும் மாணவர்களின் செயற்பாடுகள் யாவும் மாற்றமடைகின்றன. மேலும் ஓர் சமூகத்தில் வாழப்போகும் மாணவருக்கு வேண்டிய விடயங்கள் அனைத்தையும் கலைத்திட்டம் வழங்க வேண்டிய தேவை காணப்படுகிறது. இது 21ஆம் நூற்றாண்டில் மேலும் சவாலினை எதிர் நோக்குகிறது. மேலும் இன்றைய கலைத்திட்டங்கள் அனைத்தும் பால் வயது மட்டத்திற்கு ஏற்ப காணப்படுகிறது
இது கலைத்திட்ட வடிவமைப்பை மேலும் சிக்கல் நிறைந்ததாக உருவாக்குகின்றது. சமூகத்துடன் பொருந்தி வாழக்கூடிய மனப்பாங்குகளை கலைத்திட்டம் வடிவமைப்பதில் முரண்பாடுகளை உருவாக்குகின்றது.

  • விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றங்கள்

விஞ்ஞான தொழில்நுட்பங்களின் விரைவாக ஏற்படுகின்ற மாற்றங்கள் கலைத்திட்ட வடிமைப்பில் சவால்களை ஏற்படுத்துவதை அவதானிக்கலாம். குறிப்பாக பின்வரும் மாற்றங்களைக் குறிப்பிடலாம்

  • கணனி தொடர்பான அறிவும் பிரயோகமும்
  • தகவல் தொடர்பாடல் வளர்ச்சி
  • புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புக்களும் அதன் அறிவும்
  • விஞ்ஞான ரீதியில் மாணவர்கள் சிந்திக்கும் திறன்

  • இயந்திர தொழிற்சாதனங்களின் அபரிதமான வளர்ச்சியும், பயன்பாடும்

உலகில் இயந்திர சாதனங்கள் வளர்ச்சி காரணமாக சகல தொழிற்துறைகளிலும் சாதனங்களைப் பாவிப்பதற்கான திறன் குடிமக்களிற்கு அவசியமானதாகக் காணப்படுகிறது. பாரிய தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தி நடைபெறுவதால் அவற்றிற்கு ஏற்ப திறன், மனப்பாங்கு மாணவர்களிற்கு வழங்க வேண்டியுள்ளது. மரபு ரீதியான கலைத்திட்டத்தின் பிரயோகமானது 21ம் நூற்றாண்டில் உலகமயமாதல் தொழிநுட்ப வளர்ச்சி கொண்ட சமூகத்திற்கு பொருத்தமற்றதாக அமைந்து விடுகின்றது.

  • பொழுதுபோக்குச் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பொழுதுபோக்கு நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது கற்றலின் தேர்ச்சிகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. தற்போதைய காலத்தில் ஏற்பட்டுள்ள புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிற்கு ஏற்ப கலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக மாணவர்களின் பொழுதுபோக்கானது தொழில்நுட்ப சாதனங்களின் ஊடான பொழுதுபோக்காக மாறியுள்ளது. மாணவர்களின் உடற்பயிற்சிக்குத் தேவையான வெளியக விளையாட்டுக்கள் இன்றி மாணவர்கள் நிகழ்நிலை ஊடான விளையாட்டுக்களில் மாணவர்களின் விருப்பங்கள் அதிகரித்துள்ளதைக் காண முடிகிறது. இது மாணவர்களின் உடற்திணிவு அதிகரிப்பு உட்பட பல நோய்கள் ஏற்படுவதாக பல கல்வி ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இவற்றினை தீர்க்கும் விதமாக கலைத்திட்டத்தை வடிவமைப்பது சவால் நிறைந்த பணியாகக் காணப்படுகிறது.

  • சனத்தொகையின் சடுதியான அதிகரிப்பு

சனத்தொகை அதிகரிப்பானது மிக உயர்வாக அதிகரித்துச் செல்கின்றது. எல்லோருக்கும் தரமான கல்வி எனும் சுலோகத்திற்கு அமைவாக கல்வி வழங்குவதில் சவால்கள் காணப்படுகின்றன. கல்விக்குத் தேவையான பௌதீக வளங்கள், நேர வளங்கள் ஆசிரிய வளங்கள் போன்ற பல வளங்களை ஒதுக்கீடு செய்வதில் பல இடர்கள் காணப்படுகின்றன. இவற்றினை ஒழுங்கமைக்கும் பொறுப்பு கலைத்திட்ட வடிவமைப்பாளர்களின் பொறுப்பாக அமைகின்றது. எனவே கலைத்திட்டவடிவமைப்பில் சனத்தொகையின் சடுதியான அதிகரிப்பு சவால்மிக்கதாகக் காணப்படுகிறது. 

  • சமூக கலாச்சார மாற்றங்கள்

குடும்ப கட்டமைப்பில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதாக கலைத்திட்டம் அமைய வேண்டும். குடும்ப வரிசல்கள், விவகாரத்துக்கள் ஒற்றைப் பெற்றோருடைய குழந்தைகள், அநாதைக் குழந்தைகள் போன்றவர்களின் எண்ணிக்கையானது குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பதாக புள்ளிவிபரவியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவற்றை உள்ளடக்கியதாகவும் பெற்றோர்களின் பங்குபற்றலுடன் கூடிய சிறப்பானதொரு கலைத்திட்டத்தை 21ம் நூற்றாண்டு கலைத்திட்டம் வேண்டி நிற்கின்றது.

  • நகரமயமாதல்

நகரமயமாதல் தற்போதைய உலகாளவிய பிரச்சினையாகக் காணப்படுகிறது. இது கல்வி மற்றும் கலைத்திட்டம் ஆகியவற்றின் மீது பெரும் தாக்கத்தை எற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக பல கிராமப் பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சி அடைவதோடு நகரப் பாடசாலைகளில் மாணவுhகளின் எண்ணிக்கையின் சடுதியான அதிகரிப்பு காரணமாக மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக இப்பாடசாலைகள் தடுமாறி வருவதைக் காண முடிகிறது. மாணவர்களின் அடர்த்தி சகல பாடசாலைகளிற்கும் பரவலாக்குவதற்கான உபாயங்களை வகுப்பதில் பாடசாலைக் கலைத்திட்டத்தின் பங்கு அளப்பரியதாகக் காணப்படுகிறது. எனவே இவற்றினை கலைத்திட்டத்தில் உள்ளடக்குவதென்பது கலைத்திட்ட வடிவமைப்பாளர்களிடையே சவாலாகக் காணப்படுகிறது. 

  • சூழல் மாசடைதல் தொடர்பான பிரச்சினைகள் 

சூழல் மாசடைதலும் தற்போதைய உலகளாவிய பிரச்சினையாகக் காணப்படுகிறது. மாணவர்களிடையே சூழல் நேய மனப்பாங்கு மாற்றங்களை உருவாக்குவதற்கான பாட அலகுகள் பாடசாலைக் கலைத்திட்;டத்தில் உள்வாங்கப்பட்டு வருகின்றமை அவதானிக்கக்கூடிய உள்ள போதிலும் அவற்றின் பயன்பாடு ரீதியலான மாற்றங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. சூழல் நேயமான மனித இனத்தை உருவாக்குவதற்கான பணியானது கல்வியின் அடிப்படையான கலைத்திட்டத்தின் மூலமாக நிiவேற்றப்பட வேண்டும் என்பது சூழலியாலாளர்களின் கருத்தாகக் காணப்படுகிறது. 

  • அறிவின் அபரிதமான வளர்ச்சிப் போக்கு

அறிவின் வளர்ச்சியானது தற்போதைய காலத்தின் அறிவுப் பிரவாகம் எனக் குறிப்பிட்ப்படுகிறது காரணம் கடந்த காலங்களைப் போலல்லாமல் அறிவானது ஒவ்வொரு ஆண்டும் வேகமாக அதிகரிக்கின்றது. புள்ளிவிபரத் தரவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இருக்கின்ற அறிவானது இரண்டு மடங்காக அதிகரிக்கின்றது. இவற்றின் சடுதியான அதிகரிப்பு ஏற்ற வகையில் கலைத்திட்டத்தில் புதிய அறிவுகளை உள்வாங்குவதும் தேவையற்ற அறிவாகக் கருதப்படுகின்றவற்றை நீக்குவது என்பதும் சவாலான விடயமாக அமைந்துள்ளது.

  • வேறுபட்ட உளவியல் கோட்பாடுகளின் தாக்கம்

கலைத்திட்ட வடிவமைப்பில் உளவியல் கோட்பாடுகள் அடிப்படையான காரணிகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. எனினும் காலத்திற்கு காலம் முன்வைக்கப்படுகின்ற வேறு வேறான உளவியல் கோட்பாடுகள் காரணமாக கலைத்திட்டத்தில் நிலையான உளவியல்; கோட்பாடுகளை முன்வைப்பது கடினமாகக் காணப்படுகிறது. உதாரணமாக தற்போது காணப்படுகின்ற சில உளவியற் கோட்பாடுகளாக,

  • நடத்தைவாதக் கோட்பாடு
  • அறிகைக் கோட்பாடு
  • கட்டுருவாக்கக் கோட்பாடு போன்றன காணப்படுகின்றன.

பியாஜேயின் கூற்றுப்படி 21ம் நூற்றாண்டிற்கான கலைத்திட்டமானது அறிவு, சிந்தனை, கண்டுபிடிப்பு திறன்கள், ஊடகம், தகவல்தொடர்பாடல் தொழிநுட்பம் பேன்ற முக்கிய பாடங்களின் பின்னணியில் நடைமுறை வாழ்க்கை அனுபவத்தை கொண்டதான யதார்த்தமான கலைத்திட்டமானதாக இருக்க வேண்டும் என்கிறார். எனவே கலைத்திட்ட வடிவமைப்பாளுர்களிடையே பொருத்தமான உளவியற் கோட்பாடுகளைத் தெரிவு செய்வதில் சவால்கள் காணப்படுகின்றன.

  • உலகில் ஏற்படுகின்ற நோய்கள்.

உலகில் புதிது புதிதாக ஏற்படுகின்ள தொற்றுநோய்கள் மற்றும் தொற்றா நோய்களின் தாக்கமானது கல்வி பல்வேறான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களிடையே காணப்படுகின்ற தொற்ற நோய்கள் வேறுபட்டதாகவும் இதனால் பாதிக்கப்டுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானதாவும் காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு தொற்று நோய் நிலைமைகளின் போது மாணவர்களுக்கு கல்வியை வழங்குவதானது மிகுந்த சவால்மிக்க ஒரு விடயமாவும் காணப்படுகிறது. உதாரணமாக கொரோனாத் தொற்றின் போது பாடசாலைகளை மூடியதன் விளைவாக மாணவர்களின் கல்வி மட்டம் பாரியளவு பின்தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவற்றினைக் கருத்தில் கொண்டு கலைத்திட்டம் வடிவமைத்தல் சவாலான விடயமாகக் காணப்படுகிறது.

  • 21 ஆம் நூற்றாண்டின் சம ஆளுமைத்தேர்ச்சிகள்

கல்வியின் பிரதான குறிக்கோள்களில் ஒன்றாக அமைவது மனிதனிடையே சம ஆளுமையை உருவாக்குவதென்பது. இவற்றிற்கு அடிப்படையான தேர்ச்சிகளாக அமைவது,

  • தனியாள் திறன்கள்
  • சமூகத் திறன்கள்.
  • சிந்திக்கும் திறன்

தற்போதைய காலப்பகுதியில் இத்தேர்ச்சிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களானது கலைத்திட்ட வடிவமைப்பில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்

  • கல்வியின் புதிய நோக்கங்களும் தேர்ச்சிகளும்

இலங்கை பாடசாலைக் கலைத்திட்டமானது ஒன்பது கல்விக் குறிக்கோள்களையும் ஏழு அடிப்படைத் தேர்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை 21 ஆம் நூற்றாண்டின் அடிப்படைத் தேர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவை பிரதானமாக நான்கு அடிப்படைத் தேர்ச்சிகளின் ஊடாகப் பார்க்கப்படுகின்றன.

  • Communication- தொடர்பாடல்
  • Collaboration  கூட்டுணர்வு
  • Critical Thinking- விமர்சன சிந்தனை
  • Creativity- புத்தாக்கம்

இவற்றினையும் கலைத்திட்ட வடிவமைப்பின் போது கலைத்திட்ட வடிவமைப்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  •  இளைஞர்களின் வேலையின்மையும் குழப்பகரமான நிலைமையும்.

கலைத்திட்டத்தின் பிரதான இலக்காக நாட்டிற்குத் தேவையான தொழில்படையினை உருவாக்க வேண்டும். இப்படையணியானது உலகின் தரங்களிற்கு ஏற்ற திறன்களைக் கொண்டிருப்பதோடு உலகின் வேலைகளின் போட்டித்தன்மையை சமாளிக்கக்கூடியவர்களை உருவாக்குவதாக அமைய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தோடு இளைஞர்களிடையே வேலையின்மை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அடித்தளமாக கலைத்திட்டம் அமைய வேண்டும் என எதிர்பாக்க்ப்படுகின்றது.

மேலும் அவர்களிடையே சுமூகமான வாழ்க்கைப் பழக்க வழக்கங்கள் அரிதாகிக் கொண்டு வருவதை அவதானிக்க முடிகிறது. தொழில் கட்டமைப்புக்கு ஏற்ற விதத்திலான கலைத்திட்ட வடிமைப்பை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் 21ம் நூற்றாண்டில் கற்று வெளிவரும் போது தொழில் சூழல் மாற்றமடைந்துவிடுகிறது. இந்நிலைமை 21ம் நூற்றாண்டு கலைத்திட்ட செயன்முறையில் எதிர் நோக்கப்படும் பாரிய சவாலாக காணப்படுகிறது.

முடிவுரை

கலைத்திட்டத்தின் வடிவமைப்பில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் உலகின் மாறுபடுதலுக்கு ஏற்ப புதிய வகையில் மாற்றம் பெற்று வருகின்றது. அதாவது 21ம் நூற்றாண்டின் கலைத்திட்டத்தின் வடிவமைப்பானது மேலும் சவாலுக்கு உட்பட்டு சிக்கலானதாக காணப்படுகிறது. ஆகவே இவற்றை இழிவளவாக்க சிறந்த தூரநோக்குடன் கலைத்திட்டம் காலத்திற்கு ஏற்ப வடிவமைப்பது அவசியமாகும்.






Comments

Popular posts from this blog

Trends of Curriculum Development (Tamil)

Student Centered Teaching (Tamil)

Sociological Bases of Curriculum (Tamil)

Subject based Curriculum and Integrated Curriculum (Tamil)

Selection of Curriculum Content (Tamil)