Aims, Goals and Objectives of Curriculum (in Tamil)
கலைத்திட்ட நோக்கங்கள், இலக்குகள் மற்றும்குறிக்கோள்கள்
அறிமுகம்
கற்றல் என்பது இலக்குகளை கொண்டு செயற்பாடு. இனங்காணப்பட்ட குறிப்பிட்ட இலக்குகளை அடையுமாறு ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாணவர்களைத் தூண்டிய வண்ணம் உள்ளனர். அதீத இலக்குகளை நோக்கி மாணவர்கள் தூண்டப்படும் பொழுதே அவர்கள் மனப்பதகளிப்புக்கு தள்ளப்படுகின்றனர். கல்வி இலக்குகளை வினையாற்றலுடன் நடைமுறைப்படுத்தும் இயக்க வடிவமாக கலைதிட்டம் அமைகின்றது. ஒருபுறம் கோட்பாட்டு பரிமாணங்களையும் மறுபுறம் நடைமுறை பரிமாணங்களையும் உள்ளடக்கிய இயங்கு வடிவமாக இது அமைகின்றது. மாணவர்களின் வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்றவாறு கையளிக்கப்பட வேண்டிய அறிவை ஒழுங்கமைத்தல், அனுபவங்களை ஒழுங்கமைத்தல், முதலியவை கலைத்திட்டத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன. மாணவர்களின் உடல் வளர்ச்சி, உள வளர்ச்சி, மனவெழுச்சி வளர்ச்சி, சமூக வளர்ச்சி, இடைவினைகளின் வளர்ச்சி என்று அனைத்தையும் கருத்தில் கொண்டே கலைத்திட்டம் திட்டமிட்டு வடிவமைக்கப்படுகிறது. இத்தகைய கலைதிட்டம் பொருத்தமான குறிக்கோள்கள், நோக்கங்கள், இலக்குகள் என்பவற்றை கொண்டு அமைகின்ற போதே வெற்றிகரமானதாக அமைகின்றது.
1. கலைத்திட்டமும் கலைத்திட்ட உருவாக்கமும்
“ஒரு மாணவர் கூட்டத்தினர் இயன்றவரை கல்வியின் நோக்கங்களை அடைவதற்காக அல்லது விளைவுகளை பெறுவதற்காக தயாரிக்கப்பட்டு செயற்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்கள் கலைத்திட்டமாகும;” (எற்ஹேர்ஸ்ட்)
கலைத்திட்டம் என்பது கற்கும் மாணவர்களின் அறிவு, உடல் வளர்ச்சி, சமூக மனப்பான்மை, ஆன்மீக வளர்ச்சி போன்ற எல்லாவற்றிற்கும் துணைபுரியும் வகையில் பாடசாலைக்குள்ளும் பாடசாலைக்கு வெளியேயும் அமைக்கப்பட்ட எல்லாவிதமான கற்றல் அனுபவங்களையும் உள்ளடக்கிய ஒரு நிகழ்ச்சி நிரலாகும். (குறோ ரூ குறோ). கலைத்திட்டம் பற்றி தெரிகின்ற பொதுவான விளக்கம், அங்கு மாணவர்களும் ஆசிரியர்களும் தொழிற்படுகின்றார்கள் என்பதோடு சமுதாயத் தேவைகள் என்பவற்றை பூர்த்தி செய்யும் நோக்கம் கொண்டதாக கலைதிட்டம் வடிவமைக்கப்படுகிறது.
மாணவரின் பல்வகைப்பட்ட இயல்புகளையும் தனித்துவங்களையும் கருத்திற்கொண்டு நெகிழ்ச்சியான முறையிலும் இசைவாக்கம் செய்யக்கூடிய வகையிலும் கலைதிட்டம் உருவாக்கப்படல் வேண்டும். அத்தோடு அவை பரந்த பண்புகள், சமநிலைப் பண்புகள் பொருத்தப்பாட்டுப் பண்புகள் முதலியவற்றையும் உள்ளடக்கியிருத்தலும் வேண்டும். மாணவர்களை வெறுமனே நுகர்ச்சியாகவும் செயலூக்கம் அற்றவர்களாகவும் கருதாது பலதுறைகளிலும் பல தளங்களிலும் வெளிப்பாடுகளைக் காட்டக்கூடிய வகையில் கலைதிட்டம் உருவாக்கப்படல் வேண்டும். அத்தோடு கலைத்திட்டமானது கற்றல் கற்பித்தல், கணிப்பீடு, கணினித் தொழில்நுட்பம், மாற்றமடைந்து வரும் சமூகப் பொருளாதாரச் சூழல், சமூக நோக்கு முதலியவற்றுக்கு இடையே நேரிய தொடர்புகளை ஏற்படுத்துதல்போன்றவற்றை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்படல் சிறந்தது.
1. மாணவரின் உளவியல் தேவைகள்
2. கிடைக்கும் வளங்கள்
3. காலத்திற்கேற்ற கலாசாரம்
என்பவற்றுக்கு ஏற்ப பாடசாலைக்கூடாக தயாரிக்கப்படுகின்ற கல்விச் செயல்பாடுகளே கலைத்திட்டமாகும். உண்மையில் இவை மூன்றும் கலைத்திட்டங்கள் உருவாக்கும் போது அவசியமாக கவனித்துக் கொள்ளப்பட வேண்டியவையே. கலைத்திட்டங்கள் மாணவர்களுக்காக உருவாக்கப்படுபவை. பாட அமைப்பின் மூலம் தனியான விருத்தியை வளரவைப்பது சமுதாய கண்ணோட்டத்தினை வளர்ப்பதும் கலைத்திட்டங்கள் திட்டமிடப்படும் போது நோக்கங்களாக அமைதல் வேண்டும். கல்வி கல்விக்காக என்ற தத்துவத்தில் இருந்து விடுபட்டு சமூக அடிப்படையில் பொருளாதார ரீதியில் வாழும் வழியை வகுப்பதில் ஒரு நாடு தனது மக்களை எவ்வழியில் பயன்படுத்த முனைகின்றதோ அவ்வழியில் கலைதிட்டம் உருவாக்கப்படல் வேண்டும். எனவே கலைதிட்ட உருவாக்கத்தின்போது மாணவர்கள் மையப்படுத்தப்படல் வேண்டும். அவர்கள் உளவியல் தேவைகள் பூர்த்தியாக்கப்படத்தக்க வகையில் அமையவேண்டும் என்ற வரையறையில் முதலாவது அம்சம் பொருள் நிறைந்ததாக வளம் பெறுவதை இங்கு அவதானிக்க முடிகின்றது. அத்துடன் காலத்துக்கேற்ற கலாசாரச் சூழலைத் தழுவி கல்வி செயற்பாடுகள் ஒழுங்கு செய்யப்படாதுவிடின் அச்செயற்பாடுகள் மதிப்பிழந்து விடுதல் தவிர்க்க முடியாததாகிவிடும். எனவே மேற்கூறிய வரையறை கூறும் கலாசாரச் சூழல் சம்பந்தமான விடயமும் கருத்தேற்றம் பெறுவதை இங்கு கண்டுகொள்ள முடிகின்றது. சூழலை இணைக்காத, சூழலுடன் ஐக்கியமுறாத எந்நிகழ்வும் வெற்றி பெறுவதில்லை. இவ்வுண்மை கலைத்திட்ட உருவாக்கத்திலும் முக்கியம் பெறுவதால் வரையறையில் கூறப்பட்ட கலாசாரச் சூழல் என்பது கலைதிட்ட உருவாக்கத்தில் முக்கியமானது என்பது அவதானிக்கப்பட வேண்டியது.
கிடைக்கக் கூடிய வளங்கள் என்ற விடயமும் சிறப்பாக கலைதிட்ட உருவாக்கத்தின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றுமொரு முக்கிய அம்சமாகும். கிடைக்கக் கூடிய வளங்கள் பற்றிய அறிவின்றி கலைத்திட்டம் உருவாக்கப்படுமானால் அது தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும். எனவே குறிப்பிட்ட நாட்டில் கிடைக்கக்கூடிய வளங்களைக் கருத்திற் கொள்ளாது கலைத் திட்டங்களை உருவாக்குவது பயனற்றது.
2. கலைத்திட்ட நோக்கங்கள் (Aims of Curriculum)
“கல்வி நடவடிக்கைகளுக்கு திசையை வழங்கும் பொதுவான அறிக்கைகள் நோக்கங்களாகும்.” வில்ஸன் (2004)
எதிர்கால உருவாக்கம் மற்றும் நடத்தையை அடைய வடிவமைக்கப்பட்ட மேலும் குறிப்பிடப்பட்ட செயல்களுக்கு வடிவம் மற்றும் திசையை வழங்கும் பொதுவான அறிக்கையாகவும் நல்ல எதிர்காலத்திற்கான உத்வேகம் தரும் பார்வைக்கு தொடக்கப்புள்ளியாகவும் இந்த நோக்கங்கள் காணப்படுவதாக ழுசளவநin யுனெ ர்ரமெiளெ கூறுகின்றனர். நோக்கங்களானவை நாட்டின் அரசியலமைப்பின் அடிப்படையிலும் அமைந்திருக்கலாம் என்பதோடு கலைத்திட்டத்தினால் வழங்கப்படுகின்ற அனைத்து கற்றல் அனுபவங்களையும் நோக்கம் என்பதாக நாம் வரையறுக்கலாம்.
பயனுள்ள கல்வி முறையின் நோக்கங்களாக இருக்க வேண்டியவை
• தனியாளினது சமநிலை வாழ்க்கை
• அறிவு வளர்ச்சி
• ஞான வளர்ச்சி
• மனித குணாம்சங்களின் வளர்ச்சி
நோக்கங்களுக்கான உதாரணமாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
- ஜனநாயக குடியுரிமை வாழ்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்தல்.
- தார்மீக மற்றும் தனிப்பட்ட ஒழுக்கத்தை வளர்த்தல்.
- நெறிமுறை மற்றும் ஆன்மீக மதிப்புகளை வலுப்படுத்தல்.
- குடிமக்களின் உரிமைகள், கடமைகளை கற்பித்தல்.
- ஆக்கபூர்வமான மற்றும் விமர்சன சிந்தனைகளை உருவாக்கல்.
நோக்கங்கள் நீண்டகாலத்தில் அடையப்படக் கூடியவையாக இருப்பதோடு பரந்த தளத்தில் இடம்பெறும் நிரந்தர நடத்தைகளுடன் தொடர்புடையவையாகக் காணப்படுகின்றது. அந்தவகையில் கலைத்திட்டத்தினால் அடையப்பட வேண்டிய நோக்கங்களை நாம் கீழ்க்கண்டவாறு இனம் காட்டலாம்.
- தனியாரின் ஆளுமை மற்றும் படைப்பாற்றல் திறன், புத்தாக்கம் செய்யும் திறன் போன்றவற்றை வளர்த்து அவற்றை மேம்படுத்தல்.
- வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான ஊக்கங்களையும் திறன்களையும் வளர்த்தல்.
- இனத்துவ மற்றும் தேசிய அடையாளங்களை பராமரித்தல்.
- மரபுகளையும், மரபுரிமைகளையும், பண்பாட்டு கலாசார செல்வங்களையும் பாதுகாத்து அவற்றை எதிர்கால சந்ததியினருக்கு ஒப்படைப்புச் செய்தல்.
- அடிப்படைப் பாடங்கள் ஊடாக தேவையான ஆற்றல்களையும் பாண்டித்தியத்தையும் வளர்த்தெடுத்தல்.
- குடியாட்சிப் பண்புகளை அகல்விரிநிலையில் வளர்த்தெடுத்தல்.
- நாட்டின் அடிப்படை சமூக மற்றும் பொருளாதார ரீதியான அபிவிருத்திக்கு வினைத்திறனுடனும் விளை திறனுடனும் உதவுதல்.
- ஒரு தனியாளை மிகவும் வினைத்திறனான குடிமகனாக மாற்றி விருத்தி செய்தல்.
அந்த வகையில் நோக்கங்களானவை முழுக் கல்வி தொகுதியையும் அடிப்படையாகக் கொண்டவை என்பது புலனாகுவதோடு கலைத்திட்ட நோக்கம் எனும் போது சில பெறுமதிகளின் அடிப்படையில் எதிர்பார்க்கப்பட்ட வாழ்க்கை விளைவுகளை விபரிக்கும் விடயமாகும் என்பதோடு கலைத்திட்ட நோக்கங்களை இனம் காட்டும் 7 முக்கிய பகுதிகளை நாம் அடையாளப்படுத்தலாம். அவையாவன,
1. உடல் மற்றும் உள ஆரோக்கியம்
2. தொழில் தொடர்பான கல்வி
3. ஓய்வு நேரத்தை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான அறிவு
4. நெறிமுறைப்பண்புகள் - ஒழுக்கம் விழுயம் தொடர்பானது
5. குடியுரிமை தொடர்பான அறிவு
6. தகுதியான வீட்டு உறுப்பினராக இருப்பதற்கான அறிவு
7. அடிப்டைச் செயன்முறைக்கான அறிவு
இலங்கைக் கலைத்திட்டத்தை எடுத்துநோக்குவோமானால் இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஏழு அடிப்படைத் தேர்ச்சிகளை மையமாக வைத்து கலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
3. கலைத்திட்டத்தின் இலக்குகள் (Goals of Curriculum)
கலைத்திட்டத்தின் நோக்கங்களுக்கு அடுத்ததாக அதன் இலக்குகள் தூரநோக்கு உடையனவாகவும் சிறந்த வினைத்திறனை பெற்று தரக்கூடியனவாகவும் அமைந்தாலே கலைத்திட்டம் வெற்றிகரமானதாக அமையும். அதாவது குறித்த கலைத்திட்டமானது அதன்மூலம் மேற்கொள்ளப்பட இருக்கின்ற விடயங்களை சிறந்த இலக்குகளைக் கொண்டிருக்க வேண்டும்.
இத்தகைய கலைத்திட்டஇலக்குகளை 4 வகைப்படுத்தலாம்.
1. புலமை சார்ந்தவை
திறன்களை மேம்படுத்துதலில் பாண்டித்தியம் பெறவே அறிவை அகலமாக்கி ஆழமாய் கொள்ளுதல். நுண்மதி தொழிற்பாடுகளை மேற்கொள்ளல், முதலியவை இப்பிரிவில் இடம்பெறுகின்றன.
2. தொழில்சார் இலக்குகள்
தாம் மேற்கொள்ளவிருக்கும் தொடர் தொழிலை இனங்காணல் அதற்குரிய உளப்பக்குவம், பழக்கவழக்கங்கள் புலக்காட்சி மற்றும் ஆற்றல்களை வளர்த்துக் கொள்ளல். பொருளாதார வாழ்க்கையில் முழுவீச்சில் பங்கு கொள்ளல் இங்கே முக்கியத்துவம் பெறுகின்றது.
3. சமூகம்சார் இலக்குகள்
மனித விழுமியங்களுக்கு மதிப்பளித்தல், இசைவாக்கமுள்ள ஆளிடைத் தொடர்புகள், சமூகநீதியை நிலைநாட்டுதல், பண்பாடு காத்தல் முதலியவை இதில் இடம்பெறுகின்றன.
4. தனியார்சார் இலக்குகள்
உடல்நலம், உள நலம் மனநலம் முதலியவற்றின் மேம்பாடுகள் வளர்ச்சி, தன்னிலை விழிப்புணர்வு, தன்னிலை முன்னேற்றம் முதலியவை இங்கு சிறப்பு பெறுகின்றன.
சமகால பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் புலமை சார்ந்த இலக்குகளின் முக்கியத்துவம் பின்தள்ளப்பட்டு தொழில் சார் இலக்குகளிற்கு முன்னுரிமை பெற தொடங்கியுள்ளன. பல்கலைக்கழக மாணவர்கள் இலகுவாக உயர்ந்த தொழில்களை பெறுவதற்குரிய பாடத் தெரிவுகளையும் நாட்டங்களையும் காட்டி வருகின்றனர். ஆழ்ந்த ஆய்வுகளில் ஈடுபடல், படைப்பாற்றல் மலர்ச்சி, புத்தாக்க திறன்களை வளர்த்தல், அறிவின் முன்னரங்கை முன்னோக்கி நகர்த்துதல் முதலிய துறைகளில் உற்சாகம் குறைந்து வருகின்றது.
4. கலைத்திட்டத்தின் குறிக்கோள்கள் (Objectives of Curriculum)
ஆசிரியர்களது திட்டமிட்ட செயற்பாடுகளால் குறிக்கோள்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. தெளிவான குறிக்கோள்களே ஆற்றல்மிக்க கற்பித்தலையும் நெறிப் படுத்துகின்றன. கற்றல் கற்பித்தலில் நிகழும் முன்னேற்றங்கள் குறிக்கோள்களை அடிப்படையாக வைத்தே கணிப்பீடு செய்யப்படுகின்றன. எவற்றை கற்க வேண்டும் என்ற திட்டவட்டமான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு குறிக்கோள்கள் துணை நிற்கின்றன. இலக்கற்ற கற்பித்தல் செயற்பாடானது நிறுத்தத் தடையற்ற வாகனத்தின் நிலைக்கு ஒப்புமை கூறப்படுதல் உண்டு. குறித்துரைக்கப்பட்ட குறிக்கோள்களை அடையும் பொழுது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நம்பிக்கை மேலோங்குகின்றது. நேர விரயத்தையும் கற்றல் கற்பித்தல் ஐயப்பாடு களையும் நீக்கி ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே பொருத்தமான தொடர்பாடலை மேற்கொள்வதற்கு இலக்குகள் உதவுகின்றன.
கற்றலை நொதுமலாகவும் தெளிவற்றதாகவும் நோக்காது உறுதிப்பட நோக்குவதற்கு குறிக்கோள்களே துணை நிற்கின்றன. கற்றலின் பின்னர் இவை கடைப்பிடிக்கப்படும் என்ற தெளிவை குறிக்கோள்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. கணிப்பீடுகளை அடியொற்றி மாணவர்கள் குறிப்பிட்ட குறிக்கோள்களை அடைந்துள்ளனரா என்ற தெளிவான பின்னூட்டல் கிடைக்கப் பெறுகின்றது.
நடத்தை சார் குறிக்கோள்கள், போதனை சார் குறிக்கோள்கள் என்றவாறு குறிக்கோள்கள் பாகுபடுத்தப்படுகின்றன. மாணவரின் ஆற்றுகையிலும் நடத்தையிலும் நிகழும் மாற்றங்களை கண்ணியப்படுத்தும் முயற்சிகளை அண்மைக் காலத்து உளவியலாளர் மேற்கொண்டுள்ளனர்.
நடத்தைசார் குறிக்கோள்கள் பின்வரும் மூன்று தளங்களை அடியொற்றியதாக இருக்கும்.
1. ஆற்றுகை தொடர்பாக ஏற்றுக்கொள்ளக்கூடிய மட்டங்கள்.
2. ஆற்றுகை மேற்கொள்வதற்கு கட்டமைப்பு செய்யப்பட்ட நிலவரங்கள்.
3. அடைவுகளை நீக்குவதற்கான சான்றாதாரங்கள்.
மேற்கூறிய மூன்று தலங்களையும் இணைக்கும் பொழுது தான் நன்கு உற்று நோக்க கூடியதும் அளவீடு செய்யப்படக் கூடியதுமான நடத்தைசார் குறிக்கோள்களை உருவாக்க இயலுமானதாக இருக்கும். இது தொடர்பான எடுத்துக்காட்டு வருமாறு,
மாணவர் ஒன்றைச் செய்து காட்டுமாறு கேட்டலும் அவர்கள் அதனை ஆற்றுகை செய்தலும், அடைவினை ஈட்டியதற்கான சான்றாதாரமாகும்.
- இவ்வாறு தான் ஒரு வரைபை மேற்கொள்ள வேண்டுமென அதற்குரிய அளவீடுகளை வழங்குதல் ஆற்றுகையை மேற் கொள்வதற்குக் கட்டமைப்புச் செய்யப்பட்ட நிலவரங்களாகின்றன.
- குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தின் நதிகளை வரையும்படி கேட்கப்படும் பொழுது தொண்ணூறு சதவீதமானவற்றை வரைந்தாற் போதுமானது எனக் குறிப்பிடுதல் ஆற்றுகை தொடர்பாக ஏற்றுக்கொள்ளக் கூடிய மட்டமாகும்.
போதனைசார் குறிக்கோள்கள
குறிக்கோள்கள் தொடர்பான இரண்டாவது பிரிவாக இது அமைகின்றது. போதனாசார் குறிக்கோள்களின் முக்கியத்துவம் பின்வரும் நிரலினால் வற்புறுத்தப்படுகின்றது.
- நடப்பு நிலவரங்கள் மீது நேரடியான கவனக்குவிப்பை இவை ஏற்படுத்துகின்றன.
- எவை கற்பிக்கப்படல் வேண்டும் என்ற திட்டவட்டமான பணிப்பை இவை தருகின்றன.
- பொருத்தமான முறையியல்கள், வளங்கள், கணிப்பீடுகள் முதலியவற்றை ஆசிரியர்கள் தெரிந்தெடுத்துக் கொள்வதற்கு நேரடியாக உதவுகின்றன.
- மாணவர்களுடனும், பெற்றோர்களுடனும் திட்டவட்டமான தொடர்புகளை மேற்கொள்வதற்குத் துணைநிற்கின்றன.
- ஆசிரியர் தமது கற்பித்தலின் தரத்தைத் தாமே மதிப்பீடு செய்து கொள்வதற்கு இது வழியமைக்கின்றது.
- உடனடியான பின்னூட்டல்களைப் பெற்றுக் கொள்வதற்குப் போதனா குறிக்கோள்கள்கள் துணைநிற்கின்றன.
ஒவ்வொரு கற்றல் அலகுடனும் தொடர்புடைய போதனா குறிக்கோள்களை ஆசிரியர் உருவாக்கிக் கொள்ளலாம். போதனா குறிக்கோள்கள் ஆசிரியரையும் மாணவரையும் நெறிப்படுத்திச் செல்லும் சாலை வரைபடம் போன்றது. போதனா குறிக்கோள்களகள்; பின்வரும் பரிமாணங்களைக் கொண்டதாக அமைந்திருக்கும்.
1. உறுநோக்கு (Scope)
அறிவு, திறன், மனப்பாங்குகள் தொடர்பாக ஈட்டப்பட வேண்டிய வெளிப்பாடுகள் இதில் இடம்பெறும்.
2. உறு தொடர்பு (Consistency) :
ஒவ்வோர் இலக்குகளுக்குமிடையே முரண்பாடுகளும். முறிவுகளுமற்ற நேர்
இணைப்புக்கள் இருத்தல் இங்கே குறிப்பிடப்படுகின்றது.
3. பொருத்தப்பாடு (Suitability) :
மாணவரின் குறித்த வகுப்பு மட்டம், விருத்தி மட்டம் ஆகியவற்றுக்கும் பொருந்தக்கூடியதாக அமைந்திருத்தல் வேண்டும்.
4. தகவுடைமை (Validity):
எவற்றை வெளிப்படுத்தல் வேண்டுமோ அவற்றை வெளிப் படுத்தக் கூடிய தகைமை கொண்டதாக இருத்தல் வேண்டும்.
5.இயலுமை (Feasibility) :
அனைத்து மாணவர்களாலும் இலக்குகள் அடையப்படத் தக்கவையாய் இருத்தல் அவசியம்.
6. குறிமை (Specificity) :
குறிப்பிட்டுத் திட்ட வட்டமாகக் கூறக்கூடியவாறு இலக்குகள் வடிவமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
மாணவரின் நடத்தைப் புலப்பாடுகளை அறிந்து கொள்வதில் அண்மைக்காலமாக உளவியலாளர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். கற்பித்தல் உள்ளீட்டுடன் மாணவரின் வெளிப்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கும் என்பதை இங்குமீள வலியுறுத்த வேண்டியுள்ளது.
போதனா குறிக்கோள்களைப் பயன்படுத்தும் பொழுது ஆசிரியர்கள் பலவகையான பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவற்றைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
- குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட குறிக்கோள்கள் கொண்ட ஒருசில கற்பித்தல் நடவடிக்கைகளை மட்டும் மேற்கொள்ளும் வேளை, மாணவர்களது வெளிப்பாடுகளைக் குறிப்பாக நிர்ணயிக்க முடியாமலிருக்கும்.
குறிக்கோள்ளுடன் தொடர்புடைய வெளிப்பாடுகள் எவை என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருக்கும். இந்நிலையில் எதிர்பாராத வெளிப்பாடுகள் மேற்கிளம்பி வரும்
போது உள்வாங்கிக் கொள்ள முடியாத இடர் தோன்றலாம்.
குறிப்பிட்ட சிலவெளிப்பாடுகளை வரையறுத்துக் கூறும் பொழுது ஏனைய வெளிப்பாடுகள் முக்கியமானவையாயிருப்பினும் அவை புறந்தள்ளப்பட்டு விடலாம்.
கணிதம் விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கு போதான இ குறிக்கோள்கள் பொருத்தமாக இருத்தல் போன்று இசை, சித்திரம் போன்ற உணர்ச்சி வெளிப்பாட்டுப் பாடங்களுக்குப் பொருந்தாதிருத்தல் ஆசிரியர்களாற் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்களது வெளிப்பாடுகள் ஆசிரியர்கள் தம்மை ஆற்றுப்படுத்திக் கொள்வதற்குரிய வழிகாட்டிகளாக அமையும் அனைத்து மாணவர்களிடத்தும் கற்றலை உச்சநிலைப்படுத்து"வதற்குரிய திட்டங்களை மேற்கொள்வதற்கும் அவை உறுதுணை களாக இருக்கும். ஒவ்வொரு மாணவர் மீதும் தனித்தனி கவனக் குவிப்பை ஏற்படுத்துவதற்கு மாணவர்களின் வெளிப்பாடுகள் துணை செய்யும்.
பாடத்திட்டத்தைக் குறிப்பிட்ட காலப்பகுதியில் நிறைவேற்றி வைத்தல் வேண்டும் என்ற அறிவிப்பில் கவனம் செலுத்துமளவுக்கு அவர்களின் கற்கும் செயற்பாடுகளிலே கவனக்குவிப்பை ஏற்படுத்தாதிருக்கும் நிலை சமகாலத்து மேற்பார்வைத் திட்டங்களிலே காணப்படும் பொதுவான குறைபாடாகும்.
5. கலைத்திட்ட உருவாக்கத்தில் நோக்கங்கள், இலக்குகள் குறிக்கோள்களுக்கிடையிலான தொடர்பு
கலைத்திட்ட உருவாக்கத்தில் நோக்கங்கள் இலக்குகள் குறிக்கோள்கள் போன்ற மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புபட்டுக் காணப்படுவது முக்கியமானதாகும். அந்தவகையில் நோக்கும் போது, குறிக்கோள்கள் எனப்படுவது வகுப்பறையில் வழங்கப்படுகின்ற போதனையால் அல்லது பாடத்தினால் வழங்கப்படுகின்ற குறித்த பாட வருவினை இது குறிப்பாக குறிக்கிறது. இதன் மூலமே கல்வி இலக்குகளானது அடையப்படுகிறது.
அதாவது குறித்த பாடத்தினால் அல்லது தொகுதியான கற்றல் உள்ளடக்கத்தினால் வழங்கப்படுகின்ற கற்றல் அனுபவங்களையே நாங்கள் கல்வியின் இலக்காக குறிப்பிடுகின்றோம். இக்கலைத்திட்டத்தினால் வழங்கப்படுகின்ற அனைத்து கற்றல் அனுபவங்களையும் நோக்கம் குறித்து நிற்கின்றது. இதன் மூலம் இவை ஒவ்வொன்றும் ஒன்றிலிருந்து ஒன்று தொடர்புபட்டுள்ளது மிகத் தெளிவாக அவதானிக்க கூடியதாக அமைந்துள்ளமையும் முக்கியமானதாகும்.
நாட்டின் தேசிய இலக்கினை அடையும் வகையிலேயே வௌ;வேறு வகையான
செயற்பாடுகளினோடு அதாவது கல்வியின் குறிக்கோள் அமைத்து கலைத்திட்டத்தினை உருவாக்கியுள்ளமை முக்கியமானதாகும்.
உதாரணமாக மாணவனின் அளவு ரீதியான விருத்தியை அவனின் விருத்தியாக கருதப்படும். எனவே சிறந்த நடத்தை மாற்றத்தை உறுதிப்படுத்துவதற்கு ஆசிரியர் வகுப்பறையில் செயற்பாட்டு விடயங்களாக தான் எதிர்பார்த்ததை விசேட குறிக்கோள் ஊடாக அடையப்பட எதிர்பார்க்கப்படுகின்றன. அதாவது ஆசிரியர் வகுப்பறை செயற்பாட்டில் தனது தேவைகளை அடைவதற்கான முயற்சியில் மாணவரிடையே ஏற்படுத்த வேண்டிய நடத்தைக் கோலங்களை இனங்காணுதல் மூலம் கல்வியின் குறிக்கோளை அடைந்து படிப்படியாக பாடசாலையின் குறிக்கோள் அடையப்பட்டு அதன் பின் பிராந்திய மட்டத்தில் நோக்கங்கள் அடையப்பட்டு தேசிய மட்டத்தில் இலக்குகள் 13 வருட கால கலைத்திட்டத்தினால் அடையப்பட்டு வருகின்றன.
இராலப்; டெய்லர் என்பவரது கருத்துப்படி 'கலைத்திட்ட நோக்கங்கள் என்பவை கற்பித்தல் நோக்கங்களே. கலைத்திட்டத்தினை தயாரிப்போர் முதலில் கலை திட்டத்தின் இலக்குகளை அமைத்து கொள்வர.; இலக்குகளை அடைவதற்கான மைல் கற்களாக செயல்படுபவை நோக்கங்களாகும். கலைத்திட்டத்தில் உள்ள ஒவ்வோர் பாடத்திற்கு உரிய கற்பித்தலின் நோக்கங்கள் நிறுவப்பட வேண்டும் இவை,
பாடப்பொருள் (அறிவுத்தொகுதி) – Subject matter from the world of knowledge
கற்போனின் தேவைகள் - Need of the learner
அவர் சார்ந்துள்ள சமூகத்தின் தேவைகள் -Needs of the society
ஆகிய மூலங்களிலிருந்து தெரிவு செய்யலாம்." இதன்மூலம் நோக்கம், குறிக்கோள், இலக்கு என்பவை ஒன்றோடொன்று தொடர்பு பட்டுள்ளது புலனாகிறது. அடுத்த முக்கியமான விடயம் கல்வியின் நோக்கம் மிகவும் விரிவானவையாக காணப்படுகின்றன.
அவற்றைப் அடைவதற்கு நீண்டகாலம் எடுக்கும், என்றாலும் அவற்றை நிறைவேற்றிக் கொள்வது முக்கியமானதாகும். இவ்வகையில் வெளியிடப்பட்ட கல்வி நோக்கங்கள் இலக்குகளாக கொள்ளப்பட்டு அவை குறிக்கோள்கள் மூலம் அடையபடுகின்றன. இவை நடத்தைசார் நோக்கம் எனவும் அழைக்கப்படுகிறது.
உதாரணம் -
கல்வியின் நோக்கமாக ஜனநாயக பண்புடைய சிறந்த பிரஜை உருவாக்குதல் என்பதனை கொள்ளலாம்.
இதனை அடைவதற்காக கல்வி இலக்குகளாக
மனித கௌரவத்தை கண்ணியப்படுத்துதல் என்னும் எண.ணக்கருவுக்குள் தேசிய பிணைப்பு, தேசிய முழுமை, தேசிய ஒற்றுமை, இணக்கம், சமாதானம் என்பவற்றை மேம்படுத்தல் மூலமும் இலங்கை பன்மை சமூகத்தின் கலாசார வேறுபாட்டினை அங்கீகரித்தல் மூலமும் தேசத்தை கட்டியெழுப்புதலும் இலங்கையர் எனும் அடையாளத்தை ஏற்படுத்தலும்.
தனிநபரதும், தேசத்தினதும் வாழ்க்கை தரத்தை போசிக்கக்கூடியதும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிக்க கூடியதுமான ஆக்கப்பணிகளுக்கான கல்வி ஊட்டுவதன் மூலம் மனித வள விருத்தி. இதனை அடைந்து கொள்வதற்காக பாடநூல்களின் மூலம் தேசிய மற்றும் உள்நாட்டு அம்சங்களை மதிப்பர,;
தேசிய வரலாற்று மதிப்பர், தேசிய பழக்கவழக்கங்கள் எவை என்பதை ஆய்வர், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை ஆய்வர், இவை மனவெழுச்சி நோக்கங்களாக கொண்டு வகுப்பறைகளில் கற்பிக்கப்படுகிறது. இதன் மூலம் குறித்த குறிக்கோளை அடைந்து பின் இலக்கு அடையப்பட்டு அவற்றின் மூலம் கல்வியின் நோக்கமும் அடையப்படுகிறது. இவ்வாறான வகையில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன முக்கியமானதாகும்.
கல்வியின் குறிக்கோள்கள் எப்போதும் கல்வியின் இலக்குகளை நோக்கிச் செல்வதாக இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் கலைத்திட்ட செயன்முறைகளின் ஆக்கக் கூறுகளாகக் காணப்படுகின்றமையும் முக்கியமாகும்.
கல்வியின் நோக்கங்கள் பெரும்பாலும் பொதுவானதாகவும், இலக்குகள் கற்றல்
விளைவுகளை மனதில் கொண்டு நோக்கத்தைப் பிரதிபலிக்கின்றது. குறிக்கோள்கள் கல்வி முடிவுகளின் மிகக் குறிப்பிட்ட நிலைகளை மையப்படுத்தியும் இருக்கும்.
ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைந்துகொள்ள எடுக்கும் முயற்சி நோக்கமாகவும்,
குறிப்பிட்ட காலத்தில் அடையப்பட வேண்டிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நோக்கங்களின் அடிப்படையில் அளவிடக்கூடிய இறுதிமுடிவு குறிக்கோளாகவும் காணப்படுவதால் இலக்கு, நோக்கம், குறிக்கோள் மூன்றும் தொடர்புபட்டதெனலாம்.
நீண்டகால நோக்கத்தின் வெளிப்பாடாக இலக்கு உள்ளது. வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்ட குறிக்கோளின் விளைவாக நோக்கம் காணப்படுகிறது. ஓரு நாளுக்கு குறைவான அளவிடக்கூடிய கவனிக்கத்தக்க நடத்தைகளானவை அறிகையாட்சியின் கீழ் அறிதல் ஆட்சி, எழுச்சியாட்சி, மனப்பாங்குசார் நோக்கங்களாக பாகுபடுத்தியும் கற்றல் விளைவுகள் தீர்மானிக்கப்படுகின்றன.
குறிக்கோள்களிலிருந்து பெறப்பட்ட பாடத்திட்ட நோக்கத்தின் மிகவும் துல்லியமாக வரையறுக்கப்பட்ட அறிக்;கைகள் கற்றல ; விளைவுகளின் தேர்வுகளை ஊக்குவிக்கின்றது. புத்திசாலித்தனமான இளம் தலைமுறையினருக்கு இருக்கும் நிலைமைகளை ஆய்வுசெய்வதில் வெற்றிகண்டுள்ளதா? என்பது விமர்சனத்திற்குள்ளாகின்றது.
நோக்கத்தின் குறிப்பிட்ட வசதிகள் இலக்குகளிலிருந்து பெறப்பட்டது. இவ்வாறு கல்வி இலக்குகள், நோக்கங்கள் மற்றும குறிக்கோள்கள் என்பன ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து காணப்படுவதை காணக்கூடியதாகவே உள்ளது.
6. கலைத்திட்டத்தில் நோக்கங்கள் இலக்குகள் மற்றும் குறிக்கோள்கள் என்பவற்றை வெளியிடுவதன் அவசியம்
எந்த ஒரு வேலை திட்டத்தினையும் பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்த வேண்டுமானால் அது பற்றிய நிச்சயமான இலக்குகளும் நோக்கங்களும் இருத்தல் வேண்டும்.
ஒரு நாட்டின் கல்வி செயலொழுங்கு எவ்வகையில் அமைய வேண்டுமென தீர்மானிப்பதற்கு உதவும். கல்வி என்பது கற்றல் - கற்பித்தல், மதிப்பீடு என்பவற ;றைக் இடையே பரஸ்பரம் தங்கியிருத்தலான ஒரு செயலொழுங்காகும். இம்மூன்று அம்சங்களுமிடையே சிறந்த தொடர்பினை வைத்திருத்தல் கல்விச் செயலொழுங்கை பயனுள்ளதாகவும் உயர் மட்டத்திலும் கொண்டு நடத்துவதற்கு உதவியாக அமையும். மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் ஆகியோர் தம்மால் நிறைவேற்றப்படுகின்ற, நிறைவேற்றப்பட வேண்டிய வேலைத்தொகுதி பற்றி நன்றாக விளங்கிக் கொள்ளல் வேண்டும். அது போல அவர்கள் நிறைவேற்றுகின்ற பலவித காரியங்களுக்கிடையே சிறந்த தொடர்பும் ஒருங்கிணைப்பும் இருத்தல் அவசியம். அதற்கான அடித்தளமாக கலைத்திட்ட நோக்கங்கள், குறிக்கோள்கள் மற்றும் இலக்குகள் என்பவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஆசிரியர் தமது செயலொழுங்குகளை நோக்கங்களாகச் செயற்படுத்தும் போது, தமது மனம்போன போக்கில் செயற்படாமல் தேசிய திட்டத்திற்கேற்ப கற்பித்தல் செயற்பாடுகளை திட்டமிட்டு கொள்வதற்கு இது இயலுமாக அமையும். எனவே, தமது கடமையை இலக்கின் அடிப்படையில் நிறைவேற்றுகையில் தமது எண்ணத்தின் படி செயற்படாமல் தேசிய பொதுத் திட்டத்தின் அடிப்படையில் கற்பித்தல் கடமையை திட்டமிட ஆசிரியருக்கு உதவக் கூடியதாக அமையும்.
குறிப்பிட்ட ஒரு கல்விச் செயலின் நோக்கங்களை நேரகாலத்தோடு தீரமானித்துக் கொள்ளுதல் மாணவர்களுக்குத் தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு இலகுவாக அமையும். அவ்வாறு நோக்கங்களை வெளியிடும்போது மாணவனுக்குத் தன்னிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்ற அறிவு, திறன்களைச் சரியான முறையில் அறிந்து கொண்டு, அதற்கேற்பத் தமது கற்றல் செயற்பாட்டை திட்டமிட்டுக் கொள்வதற்குச் சந்தரப்பம் கிடைக்கின்றது.
நோக்கங்கள், குறிக்கோள்கள் மற்றும் இலக்குகள் தெளிவாக வெளியிடப்பட்டிருக்குமேயானால் மதிப்பீடு செய்பவருக்குத் தமது கடமைகளை இலகுவாகச் செய்து கொள்ளமுடியும் எதிர்பார்த்த நோக்கங்களை மாணவர்கள் அடைந்துள்ளார்களா? என்பதைக் கணிக்கக் கூடியதாக இருப்பது வெளியிடப்பட்ட நோக்கங்கள் மூலம் நடைபெறுவதாலேயேயாகும். மாணவர்கள் கற்றுள்ளவை எவை?, எவ்வளவு தூரத்திற்குக் கற்றல் நடைபெற்றுள்ளது?, கற்றவைகளிலுள்ள குறைபாடுகள் எவை?, ஆசிரியரின் கற்பித்தல் குறைபாடுகள் எவை? போன்றவை பற்றித் தெளிவான விளக்கத்தை வெளியிடப்பட்ட நோக்கங்களினூடாகப் பெற்றுக் கொள்ளமுடியும்.
கலைத்திட்ட நோக்கங்களை வெளியிடுவதன் முக்கியத்துவத்தை கலாநிதி ரொபர்ட் எச்.மார்கர் பின்வருமாறு கூறுகிறார்.
"கல்விச் செயலுடன் தொடர்புபடுகின்ற கலைத்திட்டத்தைத் திட்டமிடுவோர், பாடநெறியைத் திட்டமிடுவோர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோருக்கிடையில் கருத்துப் பரிமாறல்கள் அல்லது தொடர்பு கொள்ளும் வசதிகள் ஏற்படுவதற்காகக் கற்றல்-கற்பித்தல் செயலொழுங்கினது நோக்கத்தை நேரகாலத்துடன் வெளியிடுவது மிக அவசியமாகும்."
"நீங்கள் செல்லவேண்டிய இடத்தை உறுதியாக அறியாதிருப்பீர்களானால் உங்கள் பிரயாணம் வேறோர் இடத்தில் முடிவடையலாம்". இவ்வாறு இதன் முக்கியத்துவத்தை கூறுகிறார்.
- நடைமுறையிலுள்ள கல்வி முறையை மாற்றும் போது சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு அவசியமாகிறது.
- அறிவு விரிந்து செல்லும் காலகட்டத்தில் நவீன அறிவை கல்வித்துறைக்கு அறிமுகப்படுத்துவதற்கு இன்றியமையாதது.
- கல்விமுறை பற்றிய பொது மக்களின் நம்பிக்கையை உருவாக்குவதற்கு உறுதுணையாக அமைகின்றது.
எனவே, கலைத்திட்டத்தில் இலக்குகள்கள், நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள் என்பன இன்றியமையாத விடயமாக காணப்படுகின்றது. ஒரு மாணவனின் உடல், உள, சமூக, நல்லொழுக்க வளர்ச்சிக்கு தேவையான விழுமிய கற்றல் அனுபவங்களைப் பெற்றுக் கொடுப்பதன் மூலமாக சிறந்த பூரணமான பிரஜையாக வளர இவை அவசியமாகின்றது.
Comments
Post a Comment