Teachers in Finland Educational System (Tamil)
பின்லாந்துக் கல்வி முறைமையில் ஆசிரியர்கள்
உலக கல்வி முறைத் தரத்தில் 2017 ஆம் ஆண்டின் கணிப்பீட்டின்படி பின்லாந்து 3 ஆவது இடத்தில் உள்ளது. முதலிடம் சுவிட்சர்லாந்துக்கும் இரண்டாம் இடம் சிங்கப்பூருக்கும் கிடைத்துள்ளது. 2006 இல் மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தலில் பின்லாந்து முதலிடம் பெற்றது. உலகிலேயே குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முன்னணியில் இருக்கின்றது. 100 வீதம் குழந்தைகள் பாடசாலை செல்லும் நாடாக பின்லாந்து விளங்குகின்றது. பல்கலைக்கழகப் பட்டத்தை ஏறத்தாழ எல்லோரும் பெறும் நாடாகவும் அதுவே விளங்குகின்றது.
பின்லாந்து மக்கள் “சிறிதளவே அதிகமானது போதுமானது" என்ற தத்துவத்தைப் பின்பற்றுபவர்கள் (Less is More) அவர்களுடைய இல்லங்கள் சிறியவை ஆனால் வசதியானவை எளிமையான வாழ்க்கையை விரும்புபவர்கள் மித மிஞ்சிய நுகர்வாளர்கள் அல்லர், பெரிய வாகனங்கள், அதிக அலங்காரங்கள் ஆகியவற்றை விரும்பாதவர்கள். நீண்ட காலம் உழைக்கக்கூடிய சில தரமான பொருட்களையே வாங்குவர். பின்லாந்தின் கல்வி முறையிலும் இதே தத்துவம் பிரதிபலிக்கின்றது. அதிக நேரம் செலவிடாமல் கற்றுக்கொள்ள முடியும் என்பது அவர்கள் கொள்கை.
மாணவர்கள் ஏழு வயதிலேயே பாடசாலையில் அனுமதி பெறுகின்றார்கள். வகுப்பறையில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதை விட மாணவர்கள் பிள்ளைகளாக இயங்கவும் விளையாட்டு, துருவி ஆராய்தல் மூலம் எதனையேனும் கற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றார்கள். பிள்ளைகள் கற்க ஆயத்தம் பெறும் நிலையிலேயே பாடசாலை செல்கின்றார்கள்.
பாடசாலைகளில் குறைந்த நேரமே கல்வி வழங்கப்படுகின்றது. காலை 9–9.45 மணியளவில் பாடசாலை தொடங்குகின்றது. ஆய்வு முடிவுகளின்படி பிள்ளைளுக்குப் போதுமான நித்திரை தேவை. 75 நிமிட நேர வகுப்புகள் 3 அல்லது 4 நடைபெறும். மொத்தத்தில் ஆசிரியரும் மாணவரும் ஓய்வெடுககப்போதிய நேரம் வழங்கப்படுகின்றது.
பின்லாந்தில் கல்வியில் ஆசிரியர்கள்
பின்லாந்தில் மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும். பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி. ஒரு வருடத்துக்கு வௌ;வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி. ஏதாவது ஒரு பாடத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பது. குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது. நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ். தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும். இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் நெகிழ்ச்சியற்ற தரமான முயற்சிகள் தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. இதன் காரணமாக மருத்துவர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் உரிய சமூக அந்தஸ்த்து ஆசிரியர்களுக்கும் உண்டு. வைத்தியருக்கு நிகரான அதே அளவு ஊதியம் ஆசிரியருக்கும் வழங்கப்படுகின்றது. வரவுசெலவுத் திட்டம் தயாரிப்பில் ஆசிரியர்களும் பங்குகொள்ளும் ஒரே நாடு பின்லாந்து ஆகும். வகுப்பறைகளில் கற்கும் 3 மாண வர்களில் ஒருவர் ஆசிரியராவதை தன் வாழ்வில் இலட்சியமாக் கொண்டுள்ளார் என்பது கருத்துக் கணிப்பீட்டில் மூலம் தெரிய வந்தது.
ஆசிரியர்கள் பாடசாலைகளில் நீண்ட நேரம் கற்பிப்பதில்லை. பின்லாந்து ஆசிரியர் ஒரு நாளைக்கு 4 பாடவேளைகள் மட்டுமே கற்பிப்பார்; ஆண்டுக்கு 600 மணித்தியாலங்கள் கற்பிப்பார். இது ஒரு நாளைக்கு 6 மணித்தியால வேலையைக் குறிக்கும். வகுப்பு இல்லாத நேரங்களில் ஆசிரியரும் மாணவரும் கூட பாடசாலையில் இருக்க வேண்டியதில்லை. பின்லாந்துக் கல்வியியலாளர்களின் சிந்தனையின்படி, இதனால் ஆசிரியர்கள் ஓய்வாகவும் சுதந்திரமாகவும் தமது பாடங்களையும் கல்விப்பணியையும் திட்டமிட முடிகின்றது.
ஆரம்பக்கல்வி நிலையில் மாணவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு ஒரே ஆசிரியரிடமே கல்வி பயில்வர். 15–20 மாணவர்கள் வரை ஒரே ஆசிரியரிடம் கல்வி பயில்வதால், அவர் ஒவ்வொரு பிள்ளையினுடைய கல்வித் தேவைகள், கற்கும் பாணிகள் (Styles) என்பவற்றை அறிந்து கொள்வார். அவர் பிள்ளைகளின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து கவனிப்பார். தவறுகளை ஆரம்பத்திலேயே தவிர்க்க முயலுவார். ஒவ்வொரு பிள்ளையும் தனிப்பட்ட முறையில் ஆசிரியரால் கவனிக்கப்படுவர். மாணவர்களின் கற்றல் வேகத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வார். பின்லாந்தின் கல்வி முறையின் வெற்றிக்கு இந்த ஏற்பாடு ஒரு முக்கிய காரணமாகும்.
ஆசிரியர்களுக்;கு இடைவேளைகளில், ஓய்வு நேரம் கிடைக்கின்றது. அவர்களுக்கென உள்ள ஆசிரியர் அறைகளில் ஓய்வெடுக்க, கலந்துரையாட, அடுத்த வகுப்புக்கான ஆயத்தங்களை செய்ய போதிய வசதிகள் வழங்கப்படுகின்றன.
பின்லாந்தில் மக்கள் பரீட்சைகளை நம்பாது ஆசிரியரிடமும் அதிபரிடமும் நம்பிக்கை வைத்துள்ளனர். பரீட்சைப் புள்ளிகளையும் பெறுபேறுகளையும் வைத்து ஆசிரியர்களையும் பாடசாலைகளையும் மதிப்பிடும் பழக்கம் பின்லாந்தில் இல்லை.
பின்லாந்து மாணவர்கள் தமது 12 ஆண்டு காலக் கல்வியில் எதுவித பொதுப் பரீட்சைகளுக்கும் அமர வேண்டியதில்லை. அங்கு ஆசிரியர்களே பரீட்சைகளை தயாரிக்கின்றனர். எனவே பரீட்சைகள் பாடசாலைக்குப் பாடசாலை வேறுபடுகின்றன. மாதிரி (Samples) களைக் கொண்டு நடத்தப்படும் மாணவர் மதிப்பீடுகளைக் கொண்டு கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. பின்லாந்தின் கல்வி முறைமை எவ்வாறு அறிவிக்கப்படுகின்றது என்று மக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு எதுவித பாதிப்பும் இல்லை.
முடிவுரை
பின்லாந்து கல்வி முறைமையின் சிறப்பான இடத்திற்கு காரணமாக ஆசிரியர்களின் ஆட்சேர்ப்பு, ஆசிரியர்களின் சுதந்திரம், பரீட்சை மைய கற்பித்தலினால் ஏற்படுகின்ற மன அழுத்தமின்மை, ஆசியர்களிற்கு வழங்கப்படுகின்ற கௌரவம் போன்ற பல காரணிகள் முக்கிய இடத்தைப் பெறுவதை அவதானிக்க முடிகிறது. இலங்கை போன்ற நாடுகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் ஆசிரியர்கள் வகிபாகமும் முக்கிய கவனத்தில் கொள்ளப்படும் இடத்தில் தரமான மகிழ்ச்சியான கல்வியை வழங்கும் இடத்தில் இலங்கையும் இடம்பெறும்.
Comments
Post a Comment