Pragmatism in Education (Tamil)
கல்வியில் பயன்கொள்வாதக் கொள்கை
அறிமுகம்
பயன்கொள்வாதக் கொள்கை (Pragmatism) என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. அதன் பொருள் ‘to do’, “to make” (உருவாக்குதல்) to accomplish (சாதித்தல்) ஆதலால் அந்த வார்த்தையானது செயல் அல்லது பயிற்சி அல்லது செயல்பாடு என்ற முறையில் பயன்படுத்தப்படுகிறது. அனுபவமே உலகின் மையமாக விளங்குகிறது. பயன்கொள்வாதக் கொள்கை என்பது அமெரிக்க நாட்டில் இருபதாம் நூற்றாண்டில் எழுந்த தத்துவக் கொள்கையாகும். கருத்தியல் கொள்கை, இயற்கைக் கொள்கை ஆகியவற்றைப்போன்று ஒருமைக் கொள்கையாய் இல்லாமல் பயன்கொள்வாதக் கொள்கை பன்மை கொள்கையாய் விளங்குகிறது. உண்மை என்பது ஒவ்வொருவரும் பெறும் அனுபவமே. வௌ;வேறு மனிதர்கள் பல்வேறு அனுபவங்களைப் பெற்று, மாறுபட்ட உண்மைகளை உணர்கின்றனர். பயன்கொள்வாதக் கொள்கையைத் தொடங்கி வைத்தவர் ஸாண்டர்ஸ் பியர்ஸ் (1839-1914) என்பவர். இதனை நடைமுறையாக்கியவர் வில்லியம் ஜேம்ஸ் (1842-1910). கல்விக் கருத்தாக உருவாக்கியவர் ஜான்டூயி (1859-1952) மற்றும் கில்பார்ட்ரிக் ஆவர்.
‘பயன்கொள்வாதக் கொள்கை’ என்பதன் பொருள்
பயன்கொள்வாதக் கொள்கை என்பது ‘செயல்’ என்ற பொருளுடைய ‘ப்ராக்மா’ என்னும் கிரேக்க சொல்லிருந்து வந்ததாகும்
சிந்தனையைக்காட்டிலும் செயலுக்கே முக்கியம் அளித்து, சிந்தனைகள் செயல்களுக்கான கருவிகளே என்று இக்கொள்கை வலியுறுத்துவதால், இக்கொள்கை ‘கருவிசார் கொள்கை’ என்று அழைக்கப்படுகின்றது.
மனித அனுபவங்களிலிருந்தே மதிப்புகள் தோன்றுவதாக இக்கொள்கை உரைப்பதால் இது ‘மனிதவியல்’ பயன்கொள்வாதக் கொள்கை என்றும் அறியப்படுகிறது.
அறிவைப் பெறுவதற்கு விஞ்ஞான முறையில் அமைந்த ‘பரிசோதனைக் கொள்கை’ என்றும் அழைக்கப்படுகிறது.
பேராசிரியர் ரீட் என்பாரின் கூற்றுப்படி ‘செயல்படுதல்’, ஈடுபடுதல், ‘பொறுப்பேற்றல்’, எதிர்கொள்ளுதல்’ போன்றவையே பயன்கொள்வாதக் கொள்கையின் மையக்கருத்து.
வில்லியம் ஜேம்ஸ் என்பாரது வரையறைப்படி கருத்துகள், நம்பிக்கைகள் ஆகியவற்றை மதிப்பிடவும், அவற்றின் உண்மைத்தன்மையை அறியவும், அவற்றினால் விளைகின்ற பயன்களைத் தர அளவுகோலாகப் பயன்படுத்திடும் மனப்பான்மை முறை அல்லது தத்துவமே பயன்கொள்வாதக் கொள்கையாகும்.
பயன்கொள்வாதக் கொள்கையின் கோட்பாடுகள்
மனிதன், இயற்கை, சமுதாயம், அறிவு, மதிப்புகள், கருத்துகள் என அனைத்தும் மாறியவண்ணம் உள்ளன.
உண்மை என்பது ஒருவர் பெறும் அனுபவமே, அனுபவம் என்பது ஒருவரது சிந்தனை, செயல், உணர்வு ஆகிய மூன்றையும் உள்ளடக்கியதுதான், நிரந்தர உண்மை என்ற ஒன்று இல்லை.
அறிவு என்பது அனுபவத்தில் விளைகின்ற பயன்.
உண்மை, அனுபவம் செயல்முறைக்கு பயன்படுகிறது. செயல்தான் அறிவுக்கு முன்னோடிhக விளங்குகிறது.
சிந்தனையைக் காட்டிலும் செயலே முதன்மை பெறுகிறது.
பிரபஞ்சத்தில் முழுமையான மதிப்புகள் என்றும் நிலையான அறப்பண்புகள் என்றும் எதுவும் இல்லை.
மதிப்புகளை, மனிதன் தானே படைத்துக் கொள்கிறான். எல்லாப் பொருள்களும் மனிதன் மூலமாகத்தான் அளிக்கப்படும் தன்மையைப் பெறுகின்றன.
நற்செயல் அல்லது அறச்செயல் என்பது, அதனால் பெறப்படும் பயன்களை ஒட்டியேதான் மதிப்பிடப்படும். எந்த ஒன்றின் மதிப்பையும் அதன் சமூக விளைவுகள் மூலமாகத்தான் அளவிடுதல் வேண்டும்.
மனிதனுடைய ஆளுமை வளர்ச்சியானது சமூக சூழ்நிலையில்தான் வளர்ச்சி பெறும்.
நிகழ்காலமே கவனத்திற்குரியது. இறந்த காலமும், நிச்சயமில்லாத எதிர்காலமும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை அல்ல.
சாதனங்களும், வழிமுறைகளும் தான் முக்கியமே தவிர இறுதி நோக்கங்கள் அல்ல.
கல்விக் குறிக்கோள்களும், பயன்கொள்வாதக் கொள்கையும்
தத்துவத்தினின்றும் கல்விக் கோட்பாடுகள் எழுகின்றன என்பதைக்காட்டிலும் பயனுள்ள கல்விக் கோட்பாடுகளிலிருந்து தான் தத்துவக் கருத்துகள் வெளிப்படுகின்றன.
கல்வியின் இறுதி நோக்கங்களை முன்கூட்டியே நிர்ணயிக்க முடியாது.
வாழ்க்கைக்கு உதவும் வகையில் புதிய மதிப்புகளை மாணவன் உருவாக்கிக் கொள்ளுவதே கல்வியின் முக்கிய குறிக்கோள்.
பயனளவைக் கொள்கையானது செயல், பொறுப்புகள், பங்கேற்பு, நிகழ்நிலைகளைச் சந்தித்தல் ஆகியவற்றைக் கல்விச் செயல்களுக்கு அடிப்படை என்கிறது.
‘கல்வி கல்விக்காகவே’ என்ற கூற்றினை ஏற்காமல் கற்போரின் ஆர்வம், ஆற்றல்கள், துடிப்புகள் ஆகியவற்றை அடைதலை நோக்கி வழிகாட்டுதல்தான் கல்வி என்று இக் கொள்கை நிறுவுகிறது.
செயலாக்கம் நிரம்பிய, உள்ளத்தை வளர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, அதனை வளர்க்கவும் முற்படுகின்றது.
மனிதனின் தனித்தன்மைக்கு இக்கொள்கை முதுகெலும்பு போன்றது.
எந்தப் பொதுவிதியையும், பொதுமைப்படுத்திச் செயல்படுத்த இயலாது. ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை நிரம்பியவன்.
பயன்கொள்வாதக் கொள்கையானது, முறையான அமைப்பு மற்றும் அமைப்புச் சாரா சூழல்களில் கல்விச் செயல் நிகழ வலியுறுத்துகின்றது.
கல்வியின் நோக்கமாகச் சமூகத்திறன்களை வளர்த்தலையும், அதன்வழிக் கற்போரைச் சமுதாயத்தில் பயனுள்ள குடிமக்களாக ஆக்குதலையும் இக்கொள்கை வலியுறுத்துகின்றது.
அனுபவங்களைச் செயல்வழியில் பெறவே பரிந்துரை செய்கிறது. அச்செயல்கள் சமூகப்பயன், தொழிற்பயன் ஆகியவற்றின் அடிப்படையில் அமைத்திருக்க வேண்டுமென்கிறது.
குழந்தையின் வளர்ச்சி, வயது மற்றும் ஆர்வங்களுக்கு ஏற்ற கல்வி ஏற்பாடு அமைய வேண்டும். தொடக்க நிலையில் வாசித்தல், எழுதுதல், எண் கணக்குகளைச் செய்தல், இயற்கை அறிவு, கைவேலை, சித்திரம் வரைதல் போன்றவற்றை மாணவாகளின் ஆர்வத்திற்கு ஏற்ப அமைக்க வேண்டும். மொழி, உடல்நலம், சமூக அறிவு, அறிவியல், கணிதம், புவியியல் போன்றவை சேர்க்கப்பட வேண்டும்.
கற்பித்தல் முறைகள்
வாழ்க்கையில் தோன்றும் உண்மை நிலைகளை எதிர் நோக்கி இவற்றில் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணத் தேவைப்படும் அறிவு, செயல்திறன்கள் போன்றவற்றைக் குழந்தை தானே முயன்று அடைய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
சிந்தனையைக் காட்டிலும் செயலே சிறந்ததாகும் என்று கூறுகிறது.
‘செய்து கற்றல்’ என்பது இவர்களது கல்வி முறையின் அடிப்படைக் கருத்தாக உள்ளது. பிரச்சனைகளைத் தீர்த்தல், தானே கண்டுபிடித்தல் ஆகியவை வலியுறுத்தப்படுகின்றன.
செயல்திட்ட முறையே இக்கொள்கையின் சிறப்பம்சமாகும். செயல் திட்டமுறையில் இடம்பெறும் 5 படிநிலைகளாவன:
பிரச்சினையை உணர்தல்
தேர்ந்தெடுத்த பிரச்சினைக்குரிய தீர்வை அடைந்திடும் வழிமுறைகளை வரிசைப்படுத்தி, செயல் திட்டத்தைத் திட்டமிடுதல்
செயல் திட்டத்தை நடைமுறைப் படுத்துதல்.
இறுதியில் விளைந்த பயனையும், செயற்படுத்தும் முறையையும் மதிப்பிடுதல்
செயல் திட்டத்தை மேற்கொள்வதற்கு வழிகாட்டியாக இருந்து தொடர்ந்து பணி செய்ய ஆசிரியர் உறுதுணையாக இருத்தல்
மாணவர் ஒழுக்கமும், கட்டுப்பாடும்
அறப்பண்புகள் நிரந்தரமானவை என்ற நிலை மறுக்கப்படுகின்றது.
குறிக்கோளுடன் அமைந்து, பள்ளிச் செயல்களை இணைப்பதால் நிகழும் கூட்டுச் செயல்களே, சமுதாய நிலையில் திகழவேண்டிய கட்டுப்பாடுகளுக்கு வகை செய்யும் என்று இக்கொள்கை கருதுகிறது.
அதிகாரத்தால் மேல்நிலையிலிருந்து திணிக்கப்படும் கட்டுப்பாடுகள் பயனற்றவை.
தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளுதல் என்பதுதான் மாணவர்கள் பெறும் கட்டுப்பாடு ஆகும்.
மாணவர்களே நியதிகளையும், விதிகளையும் பள்ளியில் உருவாக்கிச் செயற்படுத்துதல் வேண்டும்.
அவர்களே ஏற்படுத்திக் கொண்ட விதிமுறைகள், அவர்களிடம் அடக்கம், கட்டுப்பாடு போன்ற அறப் பண்புகளை வளர்க்கும்.
ஆசிரியரின் பங்கு
குழந்தைகளின் நண்பராகவும், வழிகாட்டியாகவும், அறிவுரைப் பகர்பவராகவும், சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்துபவராகவும் இருத்தல் வேண்டும்.
‘செயல் திட்டத்தின் நெறியாளர்’ என்ற வகையில் ஆசிரியர் செயல்பட வேண்டும்.
மாணவர்கள் கூட்டுச் செயலில் திறமையுடன் பங்கு கொள்ளுதலை ஊக்குவிக்க வேண்டும்.
மாணவர்கள் கலந்து ஆலோசித்தல், செயல்படுதல், திட்டமிடுதல், மதிப்பிடுதல் ஆகியவற்றை அனுபவத்தின் மூலமாகப் பெற அவர் துணைபுரிய வேண்டும்.
ஆசிரியர் சிறந்த பயிற்சி பெற்றவராகவும், திறன் வாய்ந்தவராகவும், செயல்தன்மை நிரம்பியவராகவும் விளங்க வேண்டும்.
ஜனநாயகப் பண்பு மிக்கவராக இருத்தல் வேண்டும்.
Comments
Post a Comment