கற்பித்தலில் மாணவர்களிற்கான ஊக்கங்கள்
ஊக்கம்
இலக்கு நோக்கிய நடத்தையை தொடங்கி வைத்தலிலும், தொடங்கிய நடத்தை தொடர்ந்து இயங்குவதற்கும், இறுதியில், இந்நடத்தை முடிவு பெறுவதற்கும் காரணமாக இருப்பது ஊக்கமாகும். இவ்வாறு ஊக்கம் என்ற செயல் அதாவது ஊக்குவித்தல் நடைபெற தூண்டும் காரணிகளை ஊக்கிகள்; (Motives) என்று குறிப்பிடுகிறோம். திட்டவட்டமான சில செயல்களில் ஓர் உயிரியின் நடத்தை அமைய ஊக்கிகள் அதனைத் தூண்டுகின்றன. இவ்வூக்கிகள் உயிரியின் உள்ளிருந்து செயல்பட்டு அதன் நடத்தையைக் கட்டுப்படுத்தும். இவ்வூக்கிகள் உடல் சார்ந்தவையாகவோ,உள்ளத்தைச் சார்ந்தவையாகவோ இருக்கலாம்.
ஊக்கத்தின் பணிகள்எந்த ஒரு செயலிலும் ஊக்கம் அதிகரித்துக் காணப்பட்டால், அதைச் செய்வதில் அதிக ஆர்வமும், அதை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். ஏதோ ஒரு வகை ஊக்கி எல்லா கற்றல் நிலைமைகளிலும் இருத்தல் இன்றியமையாதது என்கிறார் கெல்லி (Kelly) என்பவர். பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியர்களது கற்பித்தல் முயற்சி பலதடவை எதிர்பார்க்கப்படும் பயனை அளிக்காமல் வீணாவதற்கு மாணாக்கர்களிடம் போதிய ஊக்கம் இன்மையே காரணமாகும். இதன் விளைவாக மாணவர்கள் ஆர்வமின்றி, இயந்திரம் போல்கற்றலில் செயல்படுவர். மாணவர்களது திறமைக்கும், அவர்களது வகுப்பறைக் கற்றல், அடைவுக்குமிடையே காணப்படும் பெரும் இடைவெளி ஊக்கத்துடன் தொடர்புடையது ஆகும்.
ஊக்குவித்தலுக்கான வகுப்பறை உத்திகள்வகுப்பறைக் கற்றல்-கற்பித்தலில் மாணவர்களை ஊக்குவிக்கும் (Tips of Classroom Motivation) வழிமுறைகள் கல்வியில் மிக முக்கியமானதாகும். பொதுவாக மாணவர்களை, கற்றலில் ஊக்குவிக்க ஆசிரியர்கள் பயன்படுத்தும் உத்திகளாவன:
1. பாராட்டும், குறைகூறலும்
வகுப்பறையில், ஆசிரியர் மாணவர்களை ஊக்குவிக்கும் முறைகளில் பரிசும், தண்டனையும் (Praise and Blame) ஒருவிதம். இது தவிர பாராட்டும், குறைகூறலும் மற்றொரு வகையான ஊக்குவித்தலாகும். பாராட்டுதலை விரும்புவது, அங்கீகாரம் பெற விரும்புவது மனித இயல்பு, அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களான குமரப்பருவத்தினரிடையே இது அதிகம் உண்டு. ஆசிரியர் மாணவர்களை அவர்களின் கற்றல் வெளிப்பாடு நடத்தை சிறப்பாக அமையும் பொழுது, மாணவர் மனம் மகிழும் விதத்தில் வார்த்தைகளால் பாராட்டுவது அவசியம்.
அத்தகையப் பாராட்டுகள் அவனுக்கு ஊக்கமாக அமையும், அவனது கற்றலும் நடத்தையும் சிறப்புற மேம்படும். ஆனால் மற்றவர்கள் அதனை அங்கீகரிக்கும் விதத்தில் பாராட்டு அமைய வேண்டும். அத்தகையப் பாராட்டுகள் அக ஊக்கியாகவும், புற ஊக்கியாகவும் செயல்படும். அது நேர்முக வலுவூட்டலாகவும் அமைகின்றது. குற்றம் கூறல் குறைகூறல் என்பவை எதிர்மறை ஊக்கிகள். ஆசிரியர் கையாளும் முறையில், அவை நேர்மறை- விளைவுகள் தோற்றுவிக்கும் விதத்தில் செயல்படுத்தலாம். குறைகூறல் மாணவர் மனம் புண்படாத வகையில், ஆனால் அதேசமயத்தில், குறையை உணரும் வகையில் அமைந்தால் அதுவும், ஊக்குவித்தலாகவே அமையும். தொடர்ந்து குறைகூறுவது, தொடர்ந்து திட்டுவது மாணவரிடம் எதிர்மறையான விரும்பத்தகாத நடத்தை விளைவுகளை ஏற்படுத்தும்.
2. பரிசும், தண்டனையும்
ஊக்கிகள் உள்ளிருந்து எழக்கூடியவைகளாகவோ, வெளியிலிருந்து தூண்டுபவையாகவோ இருக்கலாம். புறத்தூண்டுபவை ஊக்குவிக்கும் பொருட்கள் எனப்படுகின்றன (Incentives). ஊக்குவித்தல் செயலில் உந்துதல்கள் யாவும் உள்ளேயிருந்து தோன்றக்கூடியன. புறத் தூண்டல்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, பின்னர் தாமே செயல்களை ஊக்குவிக்கும் பண்புள்ளவை. அக ஊக்கியின் விளைவாக ஒருவனின் நடத்தையே இலக்காகிறது. விளையாட்டு குழந்தைகளுக்கு இயல்பாவதால் அதனை அகஊக்கி எனலாம். ஆனால் பரிசுகள், தண்டனைகள் போன்றவற்றால் ஊக்குவிக்கப்படும் நடத்தைகள் புறஊக்கிகளால் தோற்றுவிக்கப்படுகின்றன. குழந்தைகளின் கற்றலில் அக ஊக்கிகளைப் பயன்படுத்துவது நல்லது. பரிசுகள், பாராட்டு நல்ல ஊக்கியாகும். பரிசுகள் மாணவரது சக்தி, ஆக்கத்திறன், வெளிப்பட வாய்ப்புகளாகின்றன. கற்றலைத் தொடங்கி வைக்க பரிசுகள் பயன்படுத்தப்பட்டுப் பின்னர் மாணாக்கர் தாமே ஆர்வமுடன் தொடர்ந்து கற்கும் வகையில் வகுப்பறை செயல் அமைக்கப்பட வேண்டும். பரிசுகள் அடிக்கடி பயன்படுத்தப்படுதல் தவிர்க்கப்பட வேண்டும். மாணவர்கள் பரிசு பெறுவதே, இறுதி இலக்கு என தவறான கருத்துடன் தேவையற்ற போட்டி, ஏமாற்றுதல் போன்றவற்றில் ஈடுபட வழிவகுக்கக்கூடாது. பரிசுகளை ஒரு சிலரே பெற முடியுமாதலால், மற்றவர்களுக்கு வகுப்பறை ஆர்வம் குறையக் கூடும்.
தண்டனை எதிர்மறைப்பட்டவை. விரும்பத்தகாத நடத்தையைத் தடுக்க, ஓர் புற ஊக்கியாக தண்டனை பயன்படுகிறது. அதிக வேலையளித்தல், அபராதம், வெளியில் நிறுத்துதல், மன்னிப்பு கோரச்செய்தல், பள்ளியைவிட்டு நீக்குதல் போன்றவை தண்டனைகளாகும். உடலை வருத்தும் தண்டனைகள் மதிப்பு நிலையைக் கீழ்த்தரப்படுத்துவதாகக் கருதப்படுகின்றன. எனினும், எளிய தண்டனைகள் தேவைப்படுகின்றன. தண்டிப்பது தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் மட்டுமே கையாளப்பட வேண்டும்.
- தேவை ஏற்பட்டால் தவிர தண்டனையளித்தல் கூடாது. கற்றலை ஊக்குவிக்க தண்டனையைப் பயன்படுத்தப்படக் கூடாது.
- குற்றம் செய்தால் தண்டனை உறுதி என்ற உணர்வு ஏற்படும் வகையில் தண்டனையைக் கையாளுவது, சீர்த்திருத்த முயல்வது சிறந்தது.
- குற்றம் புரிந்தவன் எதனால் தண்டிக்கப்படுகிறான் என்பது தெளிவாக்கப்பட வேண்டும்
- ஒரு சிலரின் நடத்தைக்காக வகுப்பில் உள்ள அனைவரையும் தண்டிக்கப்படக் கூடாது
- தண்டனையளிப்பதில் தலைமையாசிரியர் மற்றும் பிறரது தலையீடு இருக்குமாயின் ஆசிரியர் மதிப்பு குறையும், தண்டனை பயனற்றதாகிவிடும்
- தண்டிக்கப்பட்டவரும் பிறரைப் போல் பரிவுடன் கவனிக்கப்பட வேண்டும்
வெற்றி, தோல்விகளும் கற்றலில் மாணவர்களை ஊக்குவிப்புவைகளாக அமைகின்றன, வெற்றிகள் நேர்மறையானவை. தோல்விகள் எதிர்மறையானவை. எனவே கற்றலின் துவக்க நிலையில் தோல்வி தவிர்த்து வெற்றி ஏற்படும் வகையில் கற்றல் செயல்களை ஆசிரியர் அமைத்தல் வேண்டும்.
3. பின்னூட்டமும், முடிவு பற்றிய அறிவும்
எந்த ஒருவருக்கும் அவரது செயலின் முடிவு பற்றிய அறிவு சிறந்த நடத்தைக்கு வழிவகுக்கும். செயலின் முடிவு பற்றிய அறிவு பெற பின்னூட்டம் (Feedback) முதல்படியாகும். ஒருவன் ஒரு செயலில் ஈடுபட்டபின் அச்செயல் பற்றிய கருத்து, ஈடுபட்டவரின் நிலை ஆகியவை பற்றிய ஒரு ஆய்வு பின்னூட்டம் எனப்படுகின்றது. பின்னூட்டத்தின் மூலம் அச்செயலின் முடிவு பற்றிய தெளிவான அறிவு செயலில் ஈடுபட்டவருக்கு நிறைவாகயிருப்பின் அதுவே குறைகள் பற்றிய அறிவும், உணர்வும், குறைகள் நீக்கவும், செம்மைப்படுத்திக் கொள்ளவும் துணைபுரிகின்றன. எனவே கற்றலில் ஆசிரியர் உடனடியாகப் பின்னூட்டம் கொடுத்து கற்றல் முடிவு பற்றிய அறிவை கற்பவர் அறியச் செய்வது சிறந்ததாகும், இக்கருத்தின் அடிப்படையிலும், உளவியல் கருத்துகளின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டதே திட்டமிட்டுக் கற்பித்தல், திட்டமிட்டுக் கற்றல், கணினி வழிக்கற்றல் முறைகளாகும்.
4. எதிர்பார்ப்பு நிலை
ஒன்றினை அடைவதில் உள்ள மிகுந்த விருப்பமே, எதிர்பார்ப்பு (Level of Aspiration) எனப்படுகின்றது. அடைய விரும்பும் இலக்கினை அடைய எவ்வளவு கடினமான முயற்சி தேவைப்படும் என்பதன் அடிப்படையில் எதிர்பார்ப்பு நிலை அமையும். ஒருவன் எளிதில் அடையக்கூடிய இலக்குகளை அடைய விரும்பினால் அவனது எதிர்பார்ப்பு நிலை கீழ்மட்டமாக இருப்பதைக் குறிக்கும். ஆனால் மென்மேலும் சாதனை படைக்க வேண்டுமென்று தன் இலக்கை ஒருவன் உயர்த்தினால் அவன் எதிர்பார்ப்பு நிலை உயர்ந்தது. ஊக்குவித்தல், ஈடுபாடு, தன்னம்பிக்கை போன்றன எதிர்பார்ப்பு நிலையை உயர்த்த உதவக்கூடியன. சிறிய தோல்வி கற்பவனை முயன்று கற்கத்தூண்டும். ஆனால் தொடர் தோல்விகள் எதிர்பார்ப்பு நிலையினைக் குறைத்துவிடும். வகுப்பில் பயிலும் மாணவர்களின் வயது, பிறரின் சாதனை போன்றவைகளும் எதிர்பார்ப்பு நிலையினைக் கட்டுப்படுத்துவன. சமூக, பொருளாதாரக் கராணமும் எதிர்பார்ப்பு நிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
முடிவுரை
உந்துதலும் உணர்ச்சியும் சிக்கலானதாக ஒன்றோடொன்றாக இணைக்கப்பட்டுள்ளன, ஆனால் அவை இரண்டும் அடிப்படையில் வேறுபட்டவை. உந்துதல் ஒரு இலக்கை நோக்கி நேரடி நடத்தை விரும்பும் தேவைகள் அல்லது தேவைகளை விவரிக்கிறது இதற்கு நேர்மாறாக, ஒரு உணர்ச்சி என்பது நாம் அடிக்கடி ஒரு உணர்வு என்று விவரிக்கும் ஒரு அகநிலை நிலை. உணர்ச்சியும் உந்துதலும் பல வழிகளில் இணைக்கப்பட்டுள்ளன. இரண்டும் நடத்தையை பாதிக்கும் அல்லது முன்னேற வழிவகுக்கும், மேலும் உணர்ச்சியே ஒரு ஊக்கமாகவும் செயல்பட முடியும். உதாரணமாக, பயத்தின் உணர்ச்சி ஒரு மன அழுத்த சூழ்நிலையை விட்டு வெளியேற ஒரு நபரை ஊக்குவிக்கும், அதே நேரத்தில் மகிழ்ச்சியின் உணர்ச்சி அந்த உணர்ச்சியை வலுப்படுத்தும் ஒரு திட்டத்தில் ஒரு நபரை அதிக உற்பத்தி செய்ய ஊக்குவிக்கும். எனவே ஆசிரியர்கள் மாணவர்களை, கற்றல் செயற்பாட்டில் பொருத்தமான கற்றல் ஊக்கிகளைப் பயன்படுத்தும் போது சிறந்த அடைவுமட்டத்தை நோக்கி நகர்த்த முடியும்.
Comments
Post a Comment