Developing Creativity of Students (Tamil)

 படைப்பாற்றல் சிந்தனையை வளர்த்தல்

அறிமுகம்

படைப்பாற்றல் என்பது பள்ளி மற்றும் வாழ்வில் மாணவர்கள் வெற்றிபெற வேண்டிய முக்கியமான திறமையாகும். இது சிக்கலைத் தீர்க்க உதவுகிறது, வாழ்க்கையில் எங்கள் திருப்தியை ஊக்குவிக்கிறது, மேலும் நமக்கு ஒரு நோக்க உணர்வை அளிக்கிறது. ஆக்கப்பூர்வமாக இருப்பது நமக்கு ஓய்வெடுக்க உதவுகிறது மற்றும் நம் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது.

ஆக்கத்திறன் (Creativity) என்பது புதியனவற்றை படைக்கும் ஆகும். தொழில்நுட்ப சமுதாய வளர்ச்சிக்கு புதிய கருத்துகளும், கண்டுபிடிப்புகளும் தேவைப்படுகின்றன. இதற்கு அடிப்படை ஆக்கச் சிந்தனையே. ஆக்கச் சிந்தனையின் விளைவு புதுமை (Novelty) உடையதாக இருக்கும். பயனுள்ள முறையில் ஆக்கச் சிந்தனை அமைவதற்கு உதவக் கூடிய பல்வேறு பண்புகள், ஆற்றல்கள் ஆகியவற்றின் தொகுப்பை நாம் ஆக்கத்திறன் எனக் குறிப்பிடலாம். பழைய எண்ணங்களை புது வடிவத்தில் அமைப்புறச் செய்தலும், பழைய எண்ணங்களிடையே புதுத்தொடர்புகளைக் காணுதலும், ஆக்கச் சிந்தனையினனால் உருவாதலாகும். ஸி.ஆர். ரோஜர்ஸ் (C.R. Rogers) வரையறைப்படி, ஆக்கச் சிந்தனை என்பது ஒருவரது தனித்தன்மைக்கும், அவரது வாழ்வில் எதிர்படும் பொருட்கள், மனிதர்கள், நிகழ்வுகள், சூழ்நிலைகள் ஆகியவற்றிற்கும் இடையே ஏற்படும் இடைவினையினால்புதுமையான பொருட்களோ அல்லது தொடர்புகளோ விளைவதாகும்.

ஆக்கத்திறனுக்கும், நுண்ணறிவுக்கும் இடையேயான வேறுபாடு மற்றும் தொடர்பு

நுண்ணறிவுக்கு குவிசிந்தனையும், ஆக்கத்திறனுக்கு விரிசிந்தனையும் அடிப்படையாக விளங்குகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குவிசிந்தனையில், எல்லோராலும் ஒப்புக்கொள்ளக்கூடிய சரியான விடையை அல்லது தீர்வைப் பெறுவதே குறிக்கோளாகக் கொள்ளப்படுகிறது. ஆனால் விரிசிந்தனையில் வேறு விதமான பல்வகைத் தீர்வுகளை பெற முயற்சிக்கப்படுகிறது. எனவே, நுண்ணறிவுச்சோதனையில் ஒவ்வொன்றிற்கும் ஒரே ஒரு சரியான விடையே உண்டு. ஆனால் ஆக்கத்திறன் சோதனையில் ஒவ்வொன்றுக்கும் பல கிடைக்கும். ஆக்கத்திறனுக்கும், நுண்ணறிவு ஈவு அதிக அளவு பெற்றிருக்க வேண்டுமென்பதில்லை. அதாவது, அதிக நுண்ணறிவு ஈவு உடையோர் மிகுந்த ஆக்கத்திறனோடு திகழ வேண்டியதில்லை. ஆனால்,போதுமான சராசரி அளவு நுண்ணறிவு இன்றி, ஆக்கத்திறன் தோன்ற வாய்ப்பில்லை.

குவிசிந்தனையும், விரிசிந்தனையும்

குவிசிந்தனை(Convergent Thinking

ஒன்றைப்பற்றி எல்லோராலும் ஒப்புக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் உள்ளார்ந்த ஆய்வு குவிசிந்தனை. இது குறுகலானது. ஒரு திசையில் சிந்திக்கக்கூடியது. பொதுவாக தீர்வு வழியை மட்டும் சிந்திப்பது குவி சிந்தனையாகும், ஒரு நோக்கில் அமைக்கப்படுவது திசைப்படுத்தப்பட்டது. பல்வேறு தூண்டல்கள் இணைந்து ஒருமுகமாகச் செயல்படுவது குவிசிந்தனையை வளர்க்கும்.

விரிசிந்தனை (Divergent Thinking)

ஒன்றைப்பற்றி சுதந்திரமாக பல்நோக்கில், பலகோணங்களில் ஆழ்ந்து, பரிசோதிப்பது, சிந்திப்பது விரிசிந்தனையாகும். கற்பனை, யூகங்கள் கலந்தது விரிசிந்தனை. ஒரு பிரச்சனையை நன்கு ஆராய்ந்து, அப்பிரச்சனையின் பல்வேறு பரிமாணங்களையும் சிந்தித்து ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுமுறைகளைச் சிந்திப்பது விரிசிந்தனையாகும். பல வகையான பல்வகைத் தீர்வுகளைப் பெற முயற்சிக்கப்படுகின்றது. ஒரு தூண்டல் ஒன்றோடொன்று தொடர்புடைய பல துலங்கல்களை வெளிப்படுத்தினால், அது விரிசிந்தனை.


ஆக்கத்திறன் செயல்முறைப் படிநிலைகள்

இது படைப்புச் சிந்தனையின் அடிப்படை. படைப்பாற்றல்; படைப்புச் சிந்தனை நான்கு படிநிலைகளைக் கொண்டது.

  • தயார் நிலை/ஆயத்தம் (Preparation)
  • உள்வளர்ச்சி/உள் உறக்க நிலை (Incubation)
  • உள் ஊக்கம்/உள்ளொளி (Inspiration Or Illumination)
  • சரிபார்த்தல் (Verification)

1. தயார்நிலை

பிரச்சினை தேர்வு செய்யப்பட்டு, அது பற்றிய சிந்தனைக்கு வரையறை செய்தல், ஒருமுகப்படுத்துதல், தொடர்பான விபரங்கள் சேகரித்தல், பகுத்தாய்தல் இதன் மூலம் தீர்வுகாண தன்னைத்தானே உளகதியாக, செயலுக்கு தயாரித்துக் கொள்ளும் செயலையும், தீர்விற்கான சேகரிப்பு நிலையையும் குறிப்பதாகும். இவ்வாறு தயாரிக்கும் பொழுது, தேவைப்பட்டால், செயல்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு திட்டம் வரையப்படும். சில சமயங்களில், தேர்வு செய்யப்பட்ட பிரச்சனை கடினமானதாயின் அதை செயல்படுத்துவதை சற்று தள்ளிவைத்து அதனைப்பற்றி ஆழ்ந்து அறிய முயல்வது இரண்டாம் நிலையாகும்.

2. உள்வளர்ச்சி/உள் உறக்கநிலை 

இந்நிலையில் பிரச்சினை தொடர்பான செயல்கள் வெளிப்படுத்தாமல், முன் அனுபவத்தையும், பெறப்பட்ட தகவல்களையும் உள்வளர்த்து புதிய கோணத்தில் இணைத்து சிந்தித்தலைக் குறிப்பதாகும். சற்று, அதனை உள்நிலையில் வைத்து, ஆர்வமுள்ள வேறு செயல்பாடுகளில் ஈடுபடுவதையும் குறிப்பதால் நம்மையும் அறியாமல் ஏற்பட்ட உள்வளர்ச்சியின் காரணமாக பளிச்சென்ற தீர்வு பற்றிய சிந்தனை தோன்றும். இது, அடுத்த நிலைக்கு வழி செய்கின்றது. உள்வளர்ச்சிக்காலம் நபருக்கேற்ப, இயல்பிற்கேற்ப, பிரச்சனைக்கேற்ப வேறுபடக்கூடியதாகும்.

3. உத்வேகம் /உள் ஒளி நிலை 

உள்வளர்ச்சியின் காரணமாக உட்காட்சி மூலம் திடீர் கருத்து தோன்றும் நிலையைக் குறிப்பதாகும். இது முந்திய சிந்தனையை உறுதிசெய்வதாகவோ, சிறு மாற்றங்களை உள்ளடக்கியதாகவோ, புதிய ஒன்றாகவோ இருக்கலாம். இது எந்த நேரத்திலும் தோன்றலாம். புதுமையானதாகவும் இருக்கலாம்.

4. சரிபார்த்தல் நிலை

இதுவே ஆக்க சிந்தனை வளர்ச்சியின் இறுதிநிலை. சிந்திக்கப்பட்ட தீர்வு, சரியானதா என சோதித்து சரிபார்க்கப்படும். தேவையான திருத்தங்களுடன் தீர்வு முடிவு செய்யப்படும். இந்நான்கும், வரிசைப்படி நிகழ வேண்டுமென கட்டாயமில்லை. இந்நான்கு நிலைகளும் தேவைப்பட்டால் மறு சுழற்சிக்கும் செல்லவேண்டியிருக்கலாம். இவை எல்லாமே பிரச்சினையின் கடினத்தன்மை, தேவை, பயன்பாடு போன்ற காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன. திட்டம் எந்த நேரத்திலும், நிலையிலும் மாற்றத்தக்கதாகும். எந்த ஒரு படைப்பும், இத்தகைய நிலைகளின் விளைவாகத் தோன்றுகின்றன. படைப்புகள் பயனுள்ளதாக ஏற்கப்பட்டால் எல்லோராலும் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய படைப்பு, கருத்து வடிவமானதாகவோ, செயல் வடிவமானதாகவோ, பொருள் வடிவமானதாகவோ அமையலாம்.

ஆக்கத்திறனை வளர்த்திடும் வழிமுறைகள்

1. கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரம்

மாணவர் தன் கருத்துகளை வெளிப்படுத்த சுதந்திரம் அளிக்கப்படுவதுடன், தானே உண்மைகண்டறிந்து வடிவமைக்க சுதந்திரம் அளிக்கப்பட்டு மாணவரின் ஆக்க சிந்தனையை ஊக்குவிக்க வேண்டும்.

2. உற்சாகப்படுத்துதல்

மாணவர் கருத்துக்களை ஏற்று, மதிப்பளித்து, வளர்ச்சியை ஆராய்ந்து அவர்களுக்குத் தேவையான புத்தகங்கள், கற்றல் வளங்கள் கிடைக்கச் செய்து உற்சாகப்படுத்த வேண்டும்.

3. ஆர்வமூட்டுதல் (Curiosity)

மாணவர்களின் அறிய வேண்டும் என்ற ஆர்வத்தை தடைசெய்யாது பொறுமையுடன், அன்புடன், பரிவுடன் அவர்களை அணுக வேண்டும். அவர்களின் அவசியத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாணவர்களை மதிப்பது, ஊக்கப்படுத்துவது அவசியம். மனதில் தோன்றும் வினாக்களை, சந்தேகங்களை வெளிப்படுத்த வாய்ப்பளிக்க வேண்டும். கேலி செய்தல், அடக்கியாளுதல் கூடாது. சரியான கருத்து வெளிப்படுத்தும் பொழுது பாரட்டப்பட வேண்டும். கருத்து ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.

4. கலைத்திட்டம் (Curriculum)

பள்ளியின் பாடக்கலைத்திட்டம், அந்தந்த நிலையில் மாணவர்கள் ஆக்கத்திறன் வளர்க்க ஏதுவாக அமைக்கப்பட வேண்டும். கலைத்திட்ட செயல்பாடுகளில் படைப்பாற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

5. வழிகாட்டுதலும், நெறிப்படுத்துதலும் (Guidance and Counseling)

ஆக்கத்தின் வளர்ச்சியில் முக்கிய இடம் பெறுகின்றது. மாணவர்கள் தனித்தன்மையுடன் தனித்தியங்கி படிக்கவும், செயல்திட்டங்களை மேற்கொள்ளவும், செயல்திட்டங்கள் மூலம் புதியன கண்டறியவும், சரியான வகையில் அவர்களை வழிநடத்தி நெறிப்படுத்துதல் அவசியம்

6. தேர்வு முறை (Examination)

மாணவர்களுக்கான தேர்வானது சுதந்திரமாக, சுயசிந்தனை வளர்க்கக் கூடியதாக, கற்பனை வளம் வெளிப்படுத்தக்கூடியதாக, படைப்பாற்றல் சிந்தனைக்கு வாய்ப்பளிக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட வேண்டும்.

7. ஒப்படைப்புகள் (Assignment)

ஆக்கத்திறன் வளர்க்கக்கூடிய வகையில் வீட்டு ஒப்படைப்புகள் வழங்கி சிறந்த ஒப்படைப்புகள் ஊக்கப்படுத்தப்படல் வேண்டும்

8. சமுதாயப் படைப்பாற்றலை பயன்படுத்துதல்

படைப்புத்திறன் மிக்க பொருட்காட்சிகள், அறிவியல் மற்றும் தொழில் சார்ந்த படைப்புத் திறன் கைப்பொருட்காட்சிகள், அருங்காட்சியக மையங்கள் ஆகியவற்றிற்கு மாணவர்களை அழைத்துச் சென்று பார்க்கச் செய்வதன் மூலம் படைப்பாற்றலைத் தூண்டலாம்.

9. கற்பித்தல் முறைகள் (Teaching methods)

மாணவர்களுக்குக் கருத்து மற்றும் சிந்தனைகளுக்கு சுதந்திரமளித்து, எண்ண சுதந்திரமளித்து, கற்பித்தலில் ஆசிரியர்கள் மாணவரது படைப்பாற்றலைத் தூண்டும் வகையிலும், வளர்க்கும் வகையில் புதுமையைக் கையாண்டு, கற்பித்தல் முறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். ஆசிரியரே படைப்பாற்றலை உருவாக்குபவராய் இருத்தல் வேண்டும்.

முடிவுரை

இன்றைய குழந்தைகளுக்கு முன்பை விட படைப்பாற்றலை வளர்ப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. முன்னைய காலங்களில், குழந்தைகள் தங்கள் பெரும்பாலான பொம்மைகள் மற்றும் நண்பர்களுடன் விளையாடி நேரத்தை வெளியில் செலவிட்டனர். இப்போது குழந்தைகள் டிவி அல்லது யூடியூப் வீடியோக்களைப் பார்க்கவும், வீடியோ கேம் விளையாடவும் அல்லது குறுஞ்செய்தி அனுப்பவும் அதிக நேரம் செலவிடுகிறார்கள். இந்த செயல்பாடுகள் குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்க்கத்தடையாகக் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நிஜ வாழ்க்கையுடன் இணைப்பதன் மூலம் ஆக்கப்பூர்வமாக இருக்க மாணவர்களுக்கு உறுதியான உந்துதலைக் கொடுங்கள். படைப்பாற்றலைப் பயன்படுத்தும் ஆராய்ச்சித் தொழில்களுக்கு உதவுங்கள், அது ஏன் அவர்களுக்கு முக்கியமானது, அல்லது அவர்கள் இப்போது அதை தங்கள் சொந்த வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய வழிகள். அவர்கள் தங்கள் படைப்பாற்றலைப் பயன்படுத்தும் போது, அதை குறிப்பிட்ட வழிகளில் பாராட்டுங்கள். உங்கள் வேலையில் படைப்பாற்றல் உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை மாணவர்களுக்குக் காட்டுங்கள், ஆக்கப்பூர்வமாக இருப்பதன் மூலம் வகுப்பறையில் நீங்கள் தீர்த்த ஒரு பிரச்சினையை அவர்களுக்கு காட்டுங்கள். மாணவர்களை புதிய உலகிற்கு பொருத்தமான புத்தாக்குநர்களாக உருவாக்குங்கள்.







Comments

Popular posts from this blog

Trends of Curriculum Development (Tamil)

Student Centered Teaching (Tamil)

Sociological Bases of Curriculum (Tamil)

Subject based Curriculum and Integrated Curriculum (Tamil)

Selection of Curriculum Content (Tamil)