Thorndike’s Learning Theory (Tamil)
தோர்ண்டைக்கின் முயன்று தவறல் கற்றல் கோட்பாடு
அறிமுகம்
கற்றல் செயலில் பல முறை முயன்று, பல தவறுகளை புரிந்து, பின்னர் முயற்சியின் காரணமாக தவறின் எண்ணிக்கையை குறைத்து, முடிவில் தவறின்றி சரியாக கற்றல் செயலில் ஈடுபடுத்துவதையே இம்முறை விளக்குகிறது. இவ்வாறு முயன்று தவறிக் கற்றல் முறையில் கற்றலுக்காக எடுத்துக் கொள்ளும் நேரமும், தவறுகளின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து இறுதியில் சரியான கற்றல் நிகழும்.
சிக்கல் அறைப் பரிசோதனை
தோர்ண்டைக் ஒரு பசியுள்ள பூனையை மூன்று பக்கம் மரச்சட்டமும், ஒரு பக்கம் கம்பியுடன் கொண்ட கதவாலும் அமையப்பெற்ற ஒரு பெட்டியின் உள்ளே விட்டார். வெளியே பூனையின் கண் பார்வையின் அருகே கருவாட்டுத்துண்டுகள் வைக்கப்பட்டன. பூனை பசியால் உந்தப்பட்டு அங்கும், இங்கும் ஓடிக்கொண்டு சத்தமிட்டு குதித்தது. கால்களின் நகங்களால் கம்பியை பிராண்டியது. சட்டங்களை பிராண்டுதல், கம்பியை பற்களால் கடித்தல் போன்ற பல செயல்களுக்குப் பின்னர் கம்பியை திறந்து கருவாட்டுத்துண்டை எடுத்தது. இதன் பின்னர் இச்செயல்முறை பலமுறை நிகழ்த்தப்பட்டது. ஒவ்வொரு முறையும் முயற்சியின் நேரமும், தவறான துலங்களின் எண்ணிக்கையும் குறைந்து இறுதியில் சரியான முயற்சியை தவறின்றி பூனை செய்தது.
இப்பரிசோதனை அடிப்படையில் தோர்ண்டைக் மூன்று கற்றல் விதிகளை முன்மொழிந்தார்.
தோர்ண்டைக்கின் கற்றல் விதிகள்
1. ஆயத்த விதி
தூண்டல் துலங்களுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்தும் போது, தூண்டல் துலங்கள் இணைப்பு வலுப்பெறும். தூண்டல் துலங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்த தயாரில்லாத போது அவ்வித இணைப்பை ஏற்படுத்த முற்படுவது இணைப்பின் பலத்தை வலுவிழக்கச் செய்யும். எனவே ஆயத்த நிலையை அறிதல் கற்றலில் மிகவும் அவசியம் என்பதை இவ்விதி அறிவுறுத்துகின்றது.
2. பயிற்சி விதி
தூண்டல் - துலங்களுக்கு இடையேயான இணைப்பு திரும்ப திரும்ப பலமுறை முயற்சி செய்வதன் மூலம் இணைப்பின் வலு அதிகரிக்கும். பயிற்சியானது கற்றலில் தேர்ச்சிக்கு ஏதுவாக அமையும். உடனுக்குடன் பயிற்சி செய்தல் கற்றலில் அடிக்கடி நிகழ்வதால் இதனை “அண்மை விதி” எனவும் அழைப்பர்.
கற்றதை திரும்பத்திரும்ப பயிற்சி செய்வதும், நினைவு கூர்தலும் அவசியம். நற்பண்புகள் வளர்ப்பதும், தீயசெயல்களை குறைப்பதும் மெல்லக் குறைந்து காணப்படும்.
3. விளைவு விதி அல்லது பயன் விதி
தூண்டல் துலங்கள் இணைப்பை ஏற்படுத்தி, தொடர்ந்து கற்றல் செயலில் ஈடுபட்டவர்க்கு பரிசுப் பொருட்கள், பாராட்டுச் சான்றுகள் அளிப்பதன் மூலம் இணைப்பு வலுப்பெற்று இச்செயல் தொடர்ந்து நிகழும். மாறாக தண்டனை கிடைத்தால் கற்றல் வலுவிழக்கும். எனவே ஆசிரியர் வகுப்பறையில் பரிசுகள், பாராட்டுகளை பாரபட்சமின்றி வழங்கி தண்டனை தருவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு ஆசிரியர் செயல்பட்டால் மாணவர்கள் தங்களை முன்னேற்றும் செயலில் ஈடுபடுத்திக் கொள்வர். மாறாக தண்டனை பெற்றால் கற்றலில் தொய்வு ஏற்படும்.
கல்வியில் முயன்று தவறல் கற்றல் கொள்கையின் பயன்கள்
இம்முறையானது மாணவர்களின் விருத்திக்குப் பயனுள்ளது. முயன்று தவறலைக் கற்றலில் மாணவர்கள் பெறுவதால் வித்தியாசமான அனுபவங்கள் மாணவர்களிற்கு கிடைக்கின்றன.
மாணவர்களின் தொடர் முயற்சியால் சகிப்புத்தன்மை மற்றும் கடின வேலை ஆகிய பண்புகள் மாணவர்களிடத்தில் உருவாகின்றன.
இம்முறையானது மாணவர்களின் தொடர்பயிற்சியில் தங்கியுள்ளது. ஆசிரியர் மாணவர்கள் தவறுவிடும் பட்சத்தில் அவர்களின் தவறுகளைத் திருத்தும் முகமாக ஊக்கப்படுத்த வேண்டும். கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களிற்கு இம்முறை மிகவும் பொருத்தமானதாக அமையும். இதன் மூலமாக மாணவர்கள் பல தோல்விகளின் பின்னர் வெற்றியானது அடைய முடியும் என்ற எண்ணம் மாணவர்களிடம் உருவாகும்.
தன்னம்பிக்கை, சுயமாகத் தீர்வு காண்பதற்கான முயற்சி என்பன இதன் மூலமாக கட்டியெழுப்பப்படும்.
பெரும்பாலும் வயதுவந்நதவர்களுக்கு இம்முறை பொருத்தமற்றது. மேலும் மெல்லக்கற்போருக்கும் இம்முறை பொருத்தமற்றது.
Comments
Post a Comment