Teaching Technology of Educational Technology (Tamil)


 கல்வித் தொழிநுட்பத்தில் கற்பித்தல் தொழில்நுட்பம்.

 கல்வித்தொழில்நுட்பங்கள் என்பது கல்வியில் ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டவையாகும். இது கல்வியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கற்பவர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் சூழல்களை உருவாக்க ஒருங்கிணைந்த அமைப்பை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு கற்றல் தளமாகும். கல்வியில் தொழில்நுட்பம் என்று சொல்வதன் மூலம், கல்வி முறையிலும் பயன்படுத்தக்கூடிய எந்தவொரு தொழில்நுட்ப கருவிகள், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மற்றும் மென்பொருள், பயன்பாடுகள்; போன்ற சாதனங்களை உள்ளடக்கலாம். அந்தவகையில் கல்வித் தொழிநுட்பத்துக்கான சில வரைவிலக்கணங்களை நோக்குவோம்,

“கல்வி தொழில்நுட்பம் என்பது பொருத்தமான தொழில்நுட்ப செயல்முறைகள் மற்றும் வளங்களை உருவாக்குதல், பயன்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதன் மூலம் கற்றலை எளிதாக்குவது மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கான ஆய்வு அல்லது நெறிமுறை கொண்ட நடைமுறை ஆகும்;”

                                                                                                                             
“கல்வித் தொழிநுட்பம் கற்றல், அறிவுறுத்தல், மற்றும் செயற்றிறனை மேம்படுத்துவதற்கான நோக்கத்திற்காக அறிவின் ஒத்த பயன்பாட்டை உள்ளடக்கியது”


“கல்வித் தொழிநுட்பம் செயற்றிறனை மேம்படுத்துவதற்கான போதனை மற்றும் வடிவமைப்புக்களை ஒரு முறையாகவும் தொடர்ச்சியாகவும் வழங்கும் செயன்முறையாகும்.”

“விஞ்ஞான அறிவின் பிரயோகத்தினை கொண்ட செயற்பாட்டுக் கற்றல் நிலைமைகள் கல்வி தொழில்நுட்பம் எனப்படும்”.

கல்வியல் தொழிநுட்பத்தை முதன்முதலில் பயன்பாடாக  ஆக்கியவர் ஸ்கின்னர் ஆவார். 1960களில் திட்டமிட்ட கற்பித்தல் எனும் தனது கோட்பாட்டின் மூலமாக இதனைப் பரப்பினார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சனத்தொகைப் பெருக்கம், தேவைகளின் அதிகரிப்பு, விஞ்ஞான வளர்ச்சி மற்றும் காலத்திற்குக் காலம் கண்டுபிடிக்கப்பட்டு வந்த இலத்திரனியல் சாதனங்கள்,  இவற்றைத் தொடர்ந்து வந்த ஈடு இணையற்ற தொழிநுட்பமான கணினி, வலைத்தளம், இணையம் ஆகியவற்றால் உலகம் முழுவதும் தொடர்புடைய கல்வியல் தொழில்நுட்பம் உருவானது.

கற்பது தொடர்பாக அறிவியல் துறையில் உருவாகியுள்ள அனைத்து வழிமுறைகளையும் முறையாகப் பயன்படுத்திக் கொண்டு கல்வியில் வளர்ச்சியினைப் பெறுவதே கல்வியியல் தொழில்நுட்பத்தின் நோக்கமாகும். எந்த முறையில் கற்றுக் கொடுப்பது, எந்த முறையில் கற்பது, கற்பிப்பதற்கான வழிமுறைகள், கற்பிக்க உதவும் ஊடகங்கள், கற்றல் கற்பித்தலுக்கு எளிமையான மின்சார மற்றும் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துதல், திறமையாகக் கற்கும் விதத்தில் சூழலைக் கட்டுப்படுத்துதல் என்பன இந்த தொழில்நுட்பத்தில் அடங்குகின்றன. 

அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் கல்வித்துறையில் முறையாகப் பயன்படுத்தி விளைவுகளைப் பெறும் நோக்கில் கல்வி தொழில்நுட்பம் 3 வடிவங்களில் செயல்முறைப்படுத்தப்படுகின்றது. அவையாவன,

  • கற்பித்தல் தொழில்நுட்பம்  (Teaching Technology)
  • போதனா தொழில்நுட்பம்  (Instructional Technology)
  • நடத்தைசார் தொழில்நுட்பம் (Behavioral Technology) 

 கற்பித்தல் தொழில்நுட்பம்  (Teaching Technology)

கற்பித்தல் என்பது மாணவர்களின் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்காக, நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு செயற்பாடாகும். இன்று கற்பித்தலில் தொழிநுட்பத்தின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. “கற்பித்தல், தொழிநுட்பம் என்பது வடிவமைப்பு, மேம்பாடு,பயன்பாடு, மேலாண்மை மற்றும் கற்றலுக்கான செயல்முறைகள் இவற்றோடு வளங்களை மதிப்பீடு செய்தல் எனப்படும்.” அதாவது கற்பித்தலில் ஒரு பாடத்தை எவ்வாறு திட்டமிட்டுக் கற்பிக்க வேண்டும் என்பதனையே இத்தொழிநுட்பம் விளக்குகின்றது. 

I.K.DEVIS , ROBERT GLASER ஆகியோர் 1962ம் ஆண்டு கற்பித்தல் தொழில்நுட்பத்தின் உள்ளடக்கங்களாக 4 பகுதிகளைச் சுட்டிக்காட்டினர். அவையாவன,

  • ஆசிரியர் கற்பித்தலை மேற்கொள்ளும் முன் முன்திட்டமிடல் உருவாக்கப்பட வேண்டும். அதாவது கற்பிக்கப்படுகின்ற பாடப்பகுதியின் உள்ளடக்கங்களை ஒழுங்குபடுத்தி நோக்கங்களை தீர்மானித்து கற்பித்தல் முடிவில் அடையப்பட வேண்டிய இலக்குகளை மதிப்பீடு செய்தல்.
  • கற்பித்தலின் போது பொருத்தமான நுட்பங்கள், உபாயங்கள் மற்றும் துனைச்சாதனங்களை மாணவர்களின் அனுபவத்திற்கு ஏற்ற வகையில் உபயோகித்தல்.
  • தொடர்பாடல் மற்றும் மீளவலியுறுத்தல் ஊடாக மாணவர்களை ஊக்குவித்தல்.
  • மதிப்பீடு
இவற்றின் அடிப்படையில் நோக்கின் கற்றல் கற்பித்தல் செயன்முறையின் வினைத்திறனை அடையத்தக்க வகையில் தொழில்நுட்பக்கருவிகள் மற்றும் மாணவர்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தும் வகையிலான கற்பித்தல் அணுகுமுறைகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகவே கற்பித்தல் தொழில்நுட்பம் நோக்கப்படுகின்றது. இது பயனுறுதிமிக்கக் கற்பித்தலுக்கு உதவும் ஒரு தொழில்நுட்பமாகும். நவீன தொழில்நுட்பங்களைக் கல்வியில் பிரயோகித்து கற்றல் கற்பித்தல் இடம்பெறும் போது மாணவர்களின் அறிகையாட்சி மட்டுமன்றி உளஇயக்க ஆட்சி மற்றும் மனவெழுச்சி ஆட்சி என்பன விருத்தி செய்யப்படுகின்றது.
 
இக்கற்பித்தல் தொழில்நுட்பமானது மனித மற்றும் மனிதரல்லாத வளங்களின் கலவையைப் பயன்படுத்துகிறது. இத் தொழில்நுட்பம் சகல விதமான பாடங்களையும் கற்பிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது. இது மனித கற்றல் மற்றும் தகவல் தொடர்பு ஆராய்ச்சியின் அடிப்படையில் குறிப்பிட்ட குறிக்கோள்களைக் கொண்டு கற்றல் கற்பித்தல் ஆகியவற்றின் மொத்த செயல்முறையை வடிவமைத்தல், செயல்படுத்தல் மற்றும் மதிப்பீடு செய்வதற்கான ஒரு வழியாகும். இதனாலேயே இலக்கியங்கள், செயன்முறைத் தொழில்நுட்பம், சமூகக்கல்விசார் பாடங்களைக் கற்பித்தல் தொழில்நுட்பம் ஊடாகச் சிறப்பாகக் கற்பிக்கலாம். இப் பாடங்களுக்கு இத்தொழில்நுட்பம் மிகவும் பொருத்தமானதாகும்.
 
கற்றல் கற்பித்தலில் தொழிநுட்ப கருவிகளைப் பயன்படுத்தி, மாணவர்களை கல்வியின்பால் ஒருங்கிணைக்கவும், புதிய பணிகளை (Task) சுயமாகவும் ஆர்வமாகவும் கற்றுக்கொள்ளும் வகையில் விளைத்திறனாகவும், வினைத்திறனாகவும் மேற்கொண்டு வெற்றி மிக்க இடைத்தொடர்பினை வகுப்பறையில் மேற்கொள்ள கற்பித்தல் தொழிநுட்பம் உறுதுணையாகக் காணப்படுகிறது. ஆனால் இன்று கற்பித்தல் தொழிநுட்பமானது இவற்றோடு, ஆசிரியர்கள்-மாணவர்கள் தகவல்களைப் பெறல் (Access), ஒன்றிணைத்தல் (Together), பகுப்பாய்வு செய்தல் (Analysis) முன்வைத்தல் (Present) மற்றும் பரிமாறுதல் (transmit) மூலம் வகுப்பறை கற்றல்-கற்பித்தலை மேலும் சக்தி வாய்ந்ததாக மாற்றியுள்ளது. (Dooly, 1999).

கற்பித்தல் தொழில்நுட்பத்தின் பிரதான நோக்கங்களாக,
  • நடத்தை விதிமுறை நோக்கங்களை தீர்மானித்தல் மற்றும் நடைமுறைப்பபடுத்தல்
  • கற்போரின் பண்புகளை பகுப்பாய்வு செய்தல்
  • தர்க்க மற்றும் உளவியல் தொடர்புகளின் உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்தல்
  • கற்போரின் கல்வியியல் நோக்கங்களின் அடைவு, செயற்றிறன்களை மதிப்பிடல் கற்றல் மாற்றங்கள் தொடர்பாக பின்னூட்டல்களை வழங்கல்

இந்நோக்கங்களை அடைந்து கொள்ளும் வகையில் கற்பித்தல் தொழிநுட்பம் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். அதே போன்று இக் கற்பித்தல் தொழிநுட்பமானது, பின்வரும் உள்ளடக்கங்களையும் கொண்டுள்ளது. அவையாவன:
1. திட்டமிடல்
    1.1. பணிப்பகுப்பாய்வு
    1.2. நோக்கத்தினை அடையாளம் காணல்
    1.3. நோக்கங்களை மதிப்பீடு செய்தல்
2. ஒழுங்கமைத்தல்
    2.1. கற்பித்தல் தொழிநுட்பத்தினையும் உபாயங்களையும் தெரிவு செய்தல்
    2.2.கற்பித்தல் துணைச்சாதனத் தெரிவு தெரிவு
3. கற்பித்தலில் முன்னணி வகுத்தல்
4. கட்டுப்படுத்தல்


என்பனவாகும். இவற்றை ஒழுங்குமுறையில் நடைமுறைப்படுத்துவதினூடாக கற்பித்தல் தொழிநுட்பத்தின் மூலமான பயன்பாட்டினை முழுமையாக பெறக்கூடியதாக இருக்கும். அதோடு கற்பித்தல் தொழில்நுட்பத்தின் பண்புகளாக பின்வருவனவற்றையும் முன்வைக்கலாம்.

  • அறிவியல் மற்றும் தொழிநுட்ப முன்னேற்றங்களை அடிப்படையாகக் கொண்டது
  • அதிக நடைமுறை ஒழுக்கம் (Discipline) மற்றும் குறைவான தத்துவ ஒழுக்கம்(Logical Discipline ) கொண்டவையாகவும் காணப்படல்
  • வேகமாக வளர்ந்து வரும் நவீன ஒழுங்குகளை அடிப்படைகளாகக் கொண்டு காணப்படல்
  • மாணவர்-ஆசிரியர்களின் தொழிநுட்ப வழிமுறைகளை ஒழுங்குமுறையில் ஒருங்கிணைத்தல்
  • கல்வியில் உள்ள சிக்கல்களை கண்டறிந்து , அவற்றை சரி செய்து, கல்விமுறையை மேம்படுத்தல்
  • மூன்று ஆட்சிகளையும் அடையக்கூடியதாக இருத்தல் (அறிகை, உளவியக்கம், மனவெழுச்சி)
  • மூன்று படிமுறை ஒழுங்கில் செயன்முறை இடம் பெறல்(ஞாபகம், புரிந்து கொள்ளல், வெளிப்பாடு)
  • ஒரு முறைமையாகச் செயற்படல் (Input, Process, Output )

இவ்வாறான பண்புகளைக் கொண்ட கற்கபித்தல் தொழில்நுட்பமானது குறித்த கல்வியியல் இலக்குகளை சரிவர நிறைவேற்றுவதில் முக்கிய பங்கினை வகிக்கின்றது. எனவே தான் குறிப்பிட்ட இலக்குகள் மற்றும் நோக்கங்களை அடைந்து கொள்ளும் பொருட்டு கற்பித்தல் தொழிநுட்பத்தில் பயன்படுத்தக்கூடிய நவீன தொழிநுட்பங்களையும் அவற்றிற்கான சாதனங்களையும் அறிந்திருத்தலும் முக்கியமாகும். தற்போது பயன்படுத்தப்படுகின்ற சாதனங்களாவன,

 ·         Video conferencing
·         Computer/ Laptop/ MacBook
·         Computer Assistant Instruction
·         Computer Assistant Learning
·         Internet
·         E-mail
·         Electric Learning (E- Learning)
·         Smart Classes
·         Power point
·         LCD Projector
·         Smart phones /Tablets &IPADS
 
மேற்குறிப்பிட்ட கற்பித்தல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலமாக,
•    இலகுவாக தகவல்களைப் பெறல்
•    அதிக ஆர்வத்துடன் கற்றல்
•    அதிக தகவல்களை சேமித்து வைத்திருத்தல்
•    வலுவான தகவல் சேமிப்பு
•    கற்ற
ல்-கற்பித்தலில் சிறந்த இடைத்தொடர்பாடல்
•    அறிவுப்பரிமாற்றம் இலகுவாக காணப்படல்
•    வினைத்திறனான கற்பித்தல்
•    பொருள் பற்றிய விளக்கங்களை இலகுவாக பெறல்
போன்ற பயன்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
 
அவ்வகையில், இக் கற்பித்தல் தொழில்நுட்பமானது சமூக வாண்மைத்துவச் செயற்பாடாகவும், விஞ்ஞானத்துடன் இணைந்த கலைச் செயற்பாடாகவும் ஆசிரிய மாணவர்களுக்கு இடையிலான இடைவினையை அதிகரித்து தற்கால உலகின் தேவைக்கும், வருங்கால சமூகத்தின் அவாக்களை நிறைவேற்றும் வகையிலான பயனுறுதி மிக்க கல்வியை வழங்கும் முக்கிய செயன்முறையை மேற்கொள்கின்றது.

 


 


 






Comments

Popular posts from this blog

Trends of Curriculum Development (Tamil)

Student Centered Teaching (Tamil)

Sociological Bases of Curriculum (Tamil)

Subject based Curriculum and Integrated Curriculum (Tamil)

Selection of Curriculum Content (Tamil)