Teaching based on Constructivism Learning Theory (Tamil)

 கட்டுருவாக்கக் கற்றல் கொள்கையில் ஆசிரியரின் கற்பித்தல்

 அறிமுகம்

கற்றல் செயல்பாட்டின் புதிய நோக்கமானது வைகாட்ஸ்கி, பியாஜே, புரூணர் மற்றும் ஆசுபெல் ஆகியோரின் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் முன்மொழியப்பட்ட அறிவுக் கட்டமைப்பு கற்றல் ஆகும். இதன் பொருட்டு கற்போர்கள் சுறுசுறுப்பாகவும், ஆக்கப்பூர்வமாகவும், விரைந்து செயல்படக் கூடியவராகவும் தங்களது கற்றல் செயல்பாட்டை சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் மற்றும் அரசியல் ரீதியாகவும் பொருளுடையதாக வடிவமைக்கப்பட்டதே இத்தொகுப்பாகும். 

கட்டுருவாக்கக் கற்றல் கொள்கை என்றால் என்ன?

கற்றல் என்பது அறிவை ஒருமைப்படுத்திடும் ஒரு செயல்முறை ஆகும். இது கற்போர் தங்களது கற்றல் செயல்பாட்டில் பெரும் தகவல்களையும், சிந்தனைகளையும் ஒருங்கிணைத்து பொருளுடையதாக மாற்றி, நினைவில் பதிய வைப்பதே இச்செயலாகும்.

இதில் அறிவுசார் வழிகாட்டியின் பங்கானது மாணவர்களின் மெய்யுணர் இடைவினையை உருவாக்கும் சூழலை தகுந்த கல்வியியல் துணைக் கருவிகளோடு வழங்குதல் ஆகும். இதில் மாணவர்கள் (கற்போர்) தங்களது கற்றல் செயலில் தேர்வு செய்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் கருத்துக்களை உருவாக்குதல் போன்றவை உள்ளடங்கும்.

கற்றலில் அறிவுக் கட்டமைப்பு செயலானது ஆக்கப்பூர்வமான பங்கேற்பு, துடிப்புடன் செயலாற்றல், பிரச்சனைக்கு தீர்வு காணுதல் மற்றும் இணைந்து கற்றல், எதையும் ஆராய்ந்தறியும் திறன் ஆகியவற்றை மேற்கொள்வதற்காக தகுந்த சூழலை ஆசிரியர் அமைத்துத் தருதல் வேண்டும்.

கற்போர் தாம் கற்ற புதிய அனுபவங்களையும், தகவல்களையும் ஒருங்கிணைத்திடும் செயல்களில் ஆசிரியர் உதவிடுகிறார்.

கட்டுருவாக்கக் கற்றல் கொள்கையின் இருமாதிரி அணுகுமுறைகள் :--   
(1) உளவியல் ரீதியான அறிவுக்கட்டமைப்பு (பியாஜே, புரூணர்) 

(2) சமூக ரீதியான அறிவுக்கட்டமைப்பு (வைகாட்ஸ்கி, பாண்டூரா)

கட்டுருவாக்கக் கற்றல் கொள்கை வரைவிலக்கணம்

க்ரோல் & பாஸ்கி, “தொடர்பு கொள்ளும் ஒன்றைப் போலவே செய்தலும் அல்லது திரும்பத் திரும்ப அதைச் செய்தலும் அறிவை பெற்றுத் தராது. அதன் உட்பொருளோடு தொடர்பு கொள்வதாலேயே அறிவினைப் பெறுகிறோம்”, என வரையறுத்துள்ளனர். 

கட்டுருவாக்கக் கற்றல் கொள்கையின் அடிப்படையில் வகுப்பறையில் ஆசிரியர் வகிபாகம் :-

  • ஆசிரியர் மாணவர்களிடையே திறந்த நிலை வினாக்களை எழுப்பி, விடை கூறும் வரை காத்து இருப்பர். 
  •  ஆசிரியர் உயர்நிலை சிந்தனைக்கும், தர்க்க ரீதியான சிந்தனைக்கும் அதிக முக்கியத்துவத்தினை மாணவருக்கு அளிப்பர்.
  •  மாணவர்கள் ஆசிரியருடனும், சக மாணவருடனும் இடைவினை புரிய ஆர்வத்தோடு செயல்படுவர்.
  •  ஆசிரியர் மாணவர்களின் மனநிலைக்கு ஏற்ப வகுப்பறைச் சூழலை மாற்றி அமைத்திடுவர்.
  •  ஆசிரியர் ஆராய்ந்தறியும் கற்றலை உருவாக்குவர்.
  •  ஆசிரியர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கற்றலை மேம்படுத்துவர்.
  •  குழு இடைவினை புரியும் வகுப்பறை அமர்வுகள், கூட்டுறவு கற்றல், இணைந்து கற்றல், குழு செயல்திட்டப்பணி போன்றவை வகுப்பறையில் கற்பித்தல் உத்திகளாக ஆசிரியர் பயன்படுத்துவார். 

கட்டுருவாக்கக் கற்றல் கொள்கையின் அடிப்படையில் கற்பித்தல் படிமுறைகள் :--   

  1.  பாடத்தை தொடங்குவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய முடிவுகள்.
  2.  பாடத்தை கற்பதற்கான செயல்களை அமைத்தல்.
  3.  மாணவர்கள் குழுவாக கற்றல் செயல்களில் ஈடுபடுதலை முறையாகக் கண்காணித்தல்.
  4.  குழுப்பணி நடைபெற்ற விதம் மற்றும் விளைபயனை மதிப்பிடல்.  

பாடத்தை தொடங்குவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய முடிவுகள்:--

மாணவர்கள் குறிப்பிட்ட பாடத்தை கூட்டுறவு முறையில் கற்க தொடங்கும் முன், கல்விசார் மற்றும் சமூக குறிக்கோள்கள் குறித்து ஆசிரியர் முடிவு செய்திட வேண்டும். கல்விசார் குறிக்கோள்கள் என்பவை பாடப்பொருள் சார்ந்தறிவு மற்றும் செய்திறன் ஆகும். சமூக குறிக்கோள்கள் என்பவை மாணவர்கள் எய்திட வேண்டிய சமூக இடைவினையாற்றும் திறன்களாகும்.

பாடத்தை கற்பதற்கான செயல்களை அமைத்தல் :--  

ஆசிரியர் மாணவர் குழுக்களுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகளை விவரித்தல் வேண்டும். அந்த விவரமானது மாணவர்களிடையே சீராக சென்றடைந்ததா என்று ஆசிரியர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பாடம் சம்பந்தமான குறிக்கோள்களை அடைவதுடன் சமூகத்திறன்களையும் வளர்த்திட வேண்டும்.

மாணவர்கள் குழுக்களாக கற்றல் செயல்களில் ஈடுபடுதலை முறையாக கண்காணித்தல் :--  

ஆசிரியர் குழு செயலின் போது மாணவர்களிடையே மேற்பார்வையிடுதல் வேண்டும். தேவைப்படுமிடங்களில் ஆசிரியர் வினாக்களை எழுப்பி தெரிவு செய்தல் வேண்டும். மாணவர்கள் கற்றல் அடைவை அடைந்திருக்கின்றாரா என்பதை ஆசிரியர் கேட்டறிய வேண்டும்.

குழுப்பணி நடைபெற்ற விதம் மற்றும் விளைப்பயனை மதிப்பிடல் :--   

ஒவ்வொரு குழுவினரும் தத்தம் குழு உறுப்பினரது கல்வி தேர்ச்சியை மதிப்பிடவும், குழுவின் அடைவு தேர்ச்சியையும், பிறக் குழுக்கள் கண்டறியவும் ஆசிரியர் வாய்ப்பளிக்க வேண்டும். அடைவு தேர்ச்சி என்பது பாடத்தின் கல்விசார் குறிக்கோளையும் சமூக வளர்ச்சியை மேம்படுத்தக் கூடியதாகவும் அமைதல் அவசியம்.

கட்டுருவாக்கக் கொள்கையில் கற்றல் செயலின் தன்மை :--    

அறிவுக்கட்டமைப்பு கோட்பாடு, கற்றலின் போது கற்பவரின் குறுகிய கால நினைவு பகுதியில் அறிவை கட்டமைத்திடும் செயல் நடைபெறுகிறது. அதாவது கற்பவர் தாம் பெறும் புதிய தகவல்களை ஏற்கனவே நினைவில் பாதுகாத்து வைத்திருக்கும் அறிவு தொகுப்பில் இருக்கும் தகவல்களில் பொருத்தமானவற்றை தெரிவு செய்து அவற்றோடு ஒப்புநோக்கி பொருளுணர்ந்து கொள்கிறார். பின்பு புதிய தகவல்களை ஒழுங்குப்படுத்தி தனது அறிவுத் தொகுப்போடு ஒருங்கிணைத்து கொள்வர்.

கற்றல் எனும் செயல்பாட்டில் இடம்பெறும் மூன்று முக்கிய செயல்பாடுகள் (SOI)

 
(1) பெறும் தகவல்களை தேர்வு செய்து முந்தைய அறிவு தொகுப்பிலிருந்து பொருத்தமான தகவல்களை தெரிவு செய்து, பெற்ற புதிய தகவல்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டவை. முந்தைய அறிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தகவல்களோடு ஒப்பிடப்பட்டு பொருள் உணரப்படுதல். இப்படி நிலையில் தெரிவு செய்தல் (Selecting) பொருளுணர்தல் நடைபெறுகின்றன. 


(2) பொருளுணரப்பட்ட புதிய தகவல்களை வகைப்படுத்தி, ஒழுங்குற அமைத்தல் (Organizing). நிலையில் நடைபெறுகிறது. 


(3) ஒழுங்குற அமைக்கப்பட்ட புதிய தகவலை, ஏற்கனவே தாம் கொண்டிருக்கும் அறிவு தொகுப்போடு ஒருங்கிணைந்து (Integrating) அறிவுக் கட்டமைப்பை மாற்றி அமைத்தல். 


மேற்கண்ட மூன்று படிநிலைகளையும் கருத்தில் கொண்டு இக்கொள்கை “SOI” படிமம் என்று அழைக்கப்படுகிறது.

இணைந்து கற்றல் :--   

 இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து, தமது கற்றல் செயல்களை பகிர்ந்து கொண்டு கற்றல் தேர்ச்சி பெற முயற்சித்தலே, இணைந்து கற்றலாகும். 

(உ.ம்.) மூன்று மாணவர்கள் ஒன்றிணைந்து குறிப்பிட்டப் பாடத்தலைப்பை தெரிவு செய்து கற்க முனைப்பின் ஒருவர் இணையதளத்தை பயன்படுத்தி தகவலை சேகரித்திடவும், பிறிதோருவர் தேர்வு செய்த சேகரித்த தகவலை பொருள் உணர்ந்து நன்கு கோர்வைப்படுத்தி, அமைத்திடவும், மூன்றாமவர் தொகுக்கப்பட்ட தகவல்களை அவற்றின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப தொடர்புக்கு ஏற்பவும் வகைப்படுத்தி சீராக்கி மூன்று நகல்களை எடுத்திடுவர். மூவரும் தொகுக்கப்பட்ட பாடக்கருத்துக்களை தனித்தனியே கற்று ஒன்றுகூடி விவாதித்து கருத்து பரிமாற்றம் செய்துக் கொண்டு மூன்று பேருமே, கற்றல் தேர்ச்சி பெற முயற்சிப்பர். இதுவே இணைந்த கற்றலாகும். 

வகுப்பறையில் இணைந்து கற்றலை செயல்படுத்துதல் :--

  1. ஆசிரியர் மாணவர்களிடம் பொதுவான கற்கும் தன்மையுடைய கற்றல் செயல்பாடுகளைக் கருத்தில் கொள்ளுதல். 
  2. இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் இணைந்து குழுவாகக் கற்கும் செயல்பாடுகளைக் கொண்ட பாடப்பொருளைத் தருதல். 
  3. பாடப்பொருளை பிரித்து ஆய்ந்து, அதில் உள்ள பகுதிகளை குழுவில் உள்ளோர் பகிர்ந்து கொண்டு கற்றலில் ஈடுபடச் செய்தல். 
  4. தொடர்புடைய இணைய தளங்கள் பற்றிய குறிப்புகளை ஆசிரியர் அளித்தல். 
  5. தேவைப்படும் பிற உதவிகளையும் ஆசிரியர் மாணவர் குழுக்களுக்கு அளித்தல். 
 இணைந்து கற்றலின் முக்கிய அம்சங்கள் :--   
  1.  இணைந்து கற்றலின் மூலம் குழு மாணவர்களிடையே நேர்மறையான எண்ணங்கள் வெளிப்படும்.
  2.  இணைந்து கற்றல் குழுவில் உள்ள மாணவர்களது குறிக்கோள் சமமாக இருத்தல்.
  3.  இணைந்து கற்றல் குழுவில் உள்ள மாணவர்கள் குறிக்கோளைப் பற்றி உணர்ந்து இருத்தல் வேண்டும்.
  4.  இணைந்து கற்றல் குழுவில் ஒவ்வொரு மாணவர்களும் குழுவின் தலைவராகவே திகழ்வர். கருத்துக்களையும் பரிமாறிக் கொள்வர்.
  5.  தனி மாணவன் தனது குழு வேலையை மேற்பார்வை மற்றும் மதிப்பீடு செய்தல்.
  6.  இணைந்து கற்றல் குழுவில் மாணவர்கள் கல்வியியல் செயல்பாட்டை மட்டுமின்றி சமூக திறன்களை பெறுவதற்காகவும் பயிற்சி பெறுகின்றனர்.
  7.  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்தே குழு வேலைப்பாட்டை கவனித்து அதை மேம்படுத்த செய்வார்கள்.
  8.  இணைந்து கற்றலின் மூலம் மாணவர்கள் தங்களுக்கு கொடுத்திருக்கும் குழு வேலைப்பாட்டை விரைந்து முடித்து விடுவர்.
  9.  மாணவர்களின் குழு வேலைகளை பராமரித்து  அவற்றை சீராக செய்து முடிக்க ஆசிரியர் உதவிடுதல் வேண்டும். சில சமயத்தில் கொடுத்த செயல்பாட்டை நிறைவு பெறாமலும் இருக்கலாம்.
  10.  மாணவர்கள் குழு இடைவினைக்கு ஏற்ப அமருதல் வேண்டும். ஒருவருக்கொருவர் தமது கருத்துக்களை பரிமாறக் கூடிய வகையில் இருக்க வேண்டும்.
 கட்டுருவாக்கக் கற்றல் கொள்கையின் கற்பித்தல் அணுகுமுறைகள் :--
 
1. பொதுவாக கற்றல் என்பது, நாம் அறிந்தவற்றோடு தற்போது கற்பவற்றை தொடர்ந்து இணைத்து அறியும் செயல்முறையாகும். மாணவர்களின் முன்னறிவு, தற்போது கற்பவற்றிற்கு துணை புரிவதாகவோ, பாதிப்பு ஏற்படுத்துவதாகவோ அல்லது முற்றிலும் வேறுபட்ட கற்றலை மேற்கொள்வதாகவோ அமைத்திடும். ஓவ்வொரு மாணவரும் தமது முன்னறிவு மற்றும் முந்தைய அனுபவங்களுடன் வகுப்பறைக்கு வருகிறார்கள் என்பதை ஆசிரியர்கள் நினைவிற் கொண்டு, தமது கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும்.  
2. பாடப்பொருளை மாணவர்களுக்கு வழங்கிடும் விதம், அவை மாணவர்களது அன்றாட வாழ்க்கைச் சூழலோடு தொடர்புடையதாக இருந்தால் மட்டுமே, மாணவர்கள் பாடக் கருத்துக்களை பொருளுணர்ந்து கற்பர். மாணவர்கள் தாமே எதையும் கண்டறிந்து தாம் கற்பவற்றை நடைமுறை வாழ்க்கையில் சோதித்தறிந்து புரிந்து கொள்ளும் வகையில், ஆசிரியர் பாடக் கருத்துக்களை வழங்கிடும் அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்.  
3. மாணவர்கள் பாடக்கருத்துக்களை பொருள் உணர்ந்து புரிந்து கொள்ளச் செய்வதோடு மட்டுமின்றி, அவை குறிப்பிட்ட சமூக பண்பாட்டுச் சூழலில் எவ்விதம் பயன்படுகின்றன பொருள் கொள்ளப்படுகின்றன என்பதையும் உணர்ந்தறியச் செய்ய வேண்டும். இதற்கு சமூகச் செயல்பாடுகளில் மாணவர்களது நேரடிப் பங்கேற்பும் கூட்டுறவுக் கற்றலில் ஈடுபடுதலும் பெரிதும் உதவும்.







 






Comments

Popular posts from this blog

Trends of Curriculum Development (Tamil)

Student Centered Teaching (Tamil)

Sociological Bases of Curriculum (Tamil)

Subject based Curriculum and Integrated Curriculum (Tamil)

Selection of Curriculum Content (Tamil)