Teacher's Tasks in Classroom Management
வகுப்பறை முகாமைத்துவத்தில் ஆசிரியரின் செயற்பாடுகள்
கற்றல் செயன்முறையை எளிதாக்கும் கருமம் கற்பித்தல் என சுருக்கமாக கூறலாம்.கற்பதனால் மாணவன் பெற்றுக்கொள்ள முயலும் அனைத்தையும் அடைவதில் மாணவனுக்கு ஆற்றும் பல்வேறுபட்ட ஆசிரியச் செயற்பாடே கற்பித்தல் ஆகும். கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளைப் பொறுத்த வரையில் பிரதானமான மற்றும் நேரடியான பங்காளிகளாக ஆசிரியர்களும், மாணவர்களும் காணப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக ஒரு வகுப்பறையை வழி நடத்துவதில் அதிகளவான பொறுப்பு ஆசிரியருக்கே காணப்படுகின்றது. ஆசிரியர் கற்றலுக்கு வழிகாட்டுபவர், உதவுபவர், வசதி செய்து கொடுப்பவர், வள இணைப்புச் செய்பவர் என்பவற்றிற்கிணங்க வகுப்பறைக் கற்றல், கற்பித்தலில் அவரின் பங்களிப்பு முக்கியமானதும் அவசியமானதுமாகும். ஒரு வகுப்பறை கற்றல், கற்பித்தல் வெற்றிகரமாக அமைவதற்கு ஆசிரியர் ஒருவர் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு அமையும் போது வகுப்பறை முகாமைத்துவம் வினைத்திறன் மிக்கதாக அமையும்.
ஆசிரியர் கற்பிப்பதற்கான விருப்பம் உடையவராக இருத்தல் வேண்டும். ஒரு ஆசிரியரின் ஆளுமை அவர் பிள்ளைகளின் நேரத்தை எவ்வாறு உச்சப்பயன் பெறும் வகையில் மாற்றியமைக்கிறார் என்பதில் தங்கியுள்ளது. கற்பித்தல் என்பது பல்வேறுபட்ட ஆயத்த நிலைகள் இணைந்த ஒரு மொத்தமான செயற்பாடாகும். இன்றைய கற்பித்தலுக்கான முன்னாயத்தமானது, ஆரம்ப கால குரு-சிஸ்ய முறையிலிருந்து பாரிய அளவில் வேறுபட்டதாக காணப்படுகின்றது.
கற்பித்தலில் முன்தயார்நிலை
கற்பித்தலுக்கான முன்னாயத்தத்தின் முதல் நிலையில் ஆசிரியர் நவீன அறிவியல் பாதையில் பலதரப்பட்ட தரவுகளையும் அறிவையும் திரட்டி, அது விடயத்தில் தன்னை நன்கு தயார்படுத்திக் கொள்ளல் வேண்டும். விடயத்தின் எந்த அளவை, எப்போது, எவ்வாறு கற்பிப்பது என்பது அடுத்த அம்சமாகும். குறித்த பாடம் சார்ந்த பொதுவான மற்றும் சிறப்பான இலக்குகள் தீர்மானிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட உள்ளடக்கத்தினுள் இவற்றில் எவை உள்ளடங்குகின்றன என்பதையும் இணங்காண வேண்டும். அடுத்து கற்பித்தல்
முறையையும் அதற்கு அவசியமான துணைச்சாதனங்களையும் தீர்மானிக்க வேண்டும். பின் மாணவனின் முன்னறிவை கருத்திற் கொண்டு பாடத்தை எவ்வாறு நடாத்தி செல்வது என்பது பற்றிய திட்டமிடலும் மேற்கொள்ளப்பட வேண்டும். இறுதியில் கற்றல் எந்தளவு இடம் பெற்றுள்ளது என்பதை அறிய மதிப்பீட்டு திட்டமொன்று இலக்குகளுக்கமைய தீர்மானிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு ஒரு ஆசிரியர் கற்பித்தல் தொடர்பான முன்னாயத்தத்தை செய்யும் போது வேலைத்திட்டம், பாடக்குறிப்பு என்பவற்றை அழகாகப் பேணி பாடத்தை குறைபாடுகளின்றி சிறப்பாக நடத்தி முடிக்க முடிவதால் வகுப்பறை முகாமைத்துவம் விளைத்திறன் மிக்கதாக அமையும்.
வகுப்பறை முகாமைத்துவம் பேணல்
வளங்களை வினைத்திறனாக பயன்படுத்தி எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களை விளைத்திறனான முறையில் அடைந்து கொள்ள வகுப்பறை சூழலை கற்றலுக்கு உகந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு விஞ்ஞான ரீதியான செயற்பாடே வகுப்பறை முகாமைத்துவம் ஆகும். பொரன் (1985) என்பவர் “ வகுப்பறை முகாமைத்துவம் என்பது கற்றலுக்கான உதவிச் செயன்முறை என்ற முறையில் வகுப்பறையை ஒழுங்கு செய்வதும்
கற்றலுக்கான அணுகுமுறையை ஒழுங்கு செய்வதுமான ஒரு வழிமுறையாக உள்ளது” என்றார்.
பொருத்தமான கற்றல் கற்பித்தல் சாதனங்களை முன் தயார்படுத்தல்
வகுப்பறை முகாமைத்துவத்தின் போது ஆளணி வளம், பௌதீக வளம், தகவல் வளம் மற்றும் நேர வளம் என்பன வினைத்திறனாக பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக பௌதீக வளத்தில் கற்றல் கற்பித்தல் சாதனங்கள் ஆசிரியரால் முன்னரே ஆயத்தப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படும் போது அது அவருக்கு பெரிதும் துணை புரிகின்றது. கற்றல் கற்பித்தல் துணைச்சாதனங்களை பயன்படுத்துவதற்கு ஆயத்தமொன்று ஆசிரியரிடம் இருத்தல் வேண்டும். இதனூடாக சாதனங்களை பயன்படுத்துகையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைப் பற்றி ஆரம்ப விளக்கம் பெற்றுக் கொள்ள முடியும். உதாரணமாக ஆசிரியர் தயார் செய்த ஒரு சாதனம் பழுதடைந்த நிலையில் இருக்கலாம். அதனை பற்றி அறியாது ஆசிரியர் வகுப்பறையில் அதனை பயன்படுத்த முற்படும் போது தேவையற்ற குழப்பமும் நேர விரயமும் ஏற்படும். எனவே அதனை முன்னரே சரிபார்த்து ஒழுங்காக ஆய்த்தம் செய்யும் போது இவ்வாறான பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ள முடியும். மேலும் கற்றல் சாதனங்களை மாணவர்களுக்கு எவ்வாறு சமர்பிக்க வேண்டும், செயற்படுத்த வேண்டியவைகளை எவ்வாறு செயற்படுத்த வேண்டும் போன்றவை பற்றிக் கவனம் செலுத்தவும் முடியும். இத்தகைய முன் ஆயத்தம் பாடத்தை வளர்த்துச் செல்வதற்கு ஆசிரியருக்கு பெரிதும் துணையாக அமையும். அத்துடன் கற்றல் கற்பித்தல் சாதனங்களை முன்னரே ஆயத்தப்படுத்தி பயன்படுத்தும் போது வகுப்பறையில் சகல மாணவர்களுக்கும் பார்க்கக் கூடியதாகவும் கேட்கக் கூடியதாகவும் இருக்கும். உதாரணமாக தொங்கவிடப்படும் அட்டவணைகள், வரைபுகள் என்பன சகலருக்கும் பார்க்கக்கூடிய வகையில் பெரிய அளவில் தயாரிப்பதோடு அவற்றை தொங்க விடுதற்கு அவசியமான கருவிகளையும் முன் ஆயத்தப்படுத்திக் கொள்ளும் போது அநாவசியமான நேர விரயம் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்வதுடன் பாட குறிக்கோள்களை இலகுவாக அடைந்த கொள்ள முடியுமாகவும் இருக்கும்.
நேர முகாமைத்தவத்தைச் சரியாகப் பேணல்
ஒரு ஆசிரியர் என்ற வகையில் , நேரமுகாமைத்துவத்தினைப் பேணுவது சிறப்பான கற்றல் கற்பித்தல் விளைவினை ஏற்படுத்துவதில் மிக முக்கியமான விடயமாகும். வருடாந்த அடிப்படையில் பாடசாலை நாட்களில் இணைக்கலைத்திட்ட செயற்பாடுகள் மற்றும் திட்டமிடப்படாது திடீரென ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகள் தவிர்ந்த நாட்களுக்கு ஏற்ப வருடாந்த பாடத்திட்டமிடலைத் தயார்படுத்திக் கொளள்வதுடன், குறிப்பிட்ட நாள் பாடவேளையிலும் ஒவ்வொரு செயற்பாட்டிற்குமென நேரத்தைச் சரியாக தயார்படுத்தி வைத்திருப்பது கற்பித்தலின் நேர விரயத்தைத் தவிர்க்கச் செய்யும். மிக முக்கிய வளமான நேரம், முகாமைத்துவம் செய்யப்பட்டு, அதற்கேற்ப செயற்படுவது கற்பித்தலின் வினைத்திறனில் பங்களிப்புச் செய்யும் மிக முக்கிய விடயமாகும்.
சிறந்த வகுப்பறைச்சூழலை உருவாக்கல்
மாணவர்கள் விரும்பக்கூடிய வகையில் வகுப்பறைச் சூழலைக் கவர்ச்சிகரமானதாக மாற்ற வேண்டும். இதனால் மாணவர்களிடம் கற்றல் நடவடிக்கைகளில் ஆர்வத்தை ஏற்படுத்த முடியும். கற்றல் கற்பித்தலுக்கு இடைஞ்சலாக அமையும் எனக் கருதும் கவனக்கலைப்பான்களை இல்லாமல் செய்தல் ஆகும். இதனால் வகுப்பறையில் மகிழ்ச்சிகரமான கற்றல் சூழல் உருவாகும்.
பாடத்திட்டத்தைத் தயார்ப்படுத்தல்
உரிய பாத்திற்குரிய பாடத்திட்டத்தை ஆசிரியர் நேரகாலத்துடன் தயார்செய்து, அதற்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு நாளும் அடுத்தநாள் பாடசாலையில் எதனைக் கற்பிக்கவிருக்கின்றோம் என்பதற்கான பாடக்குறிப்பைத் தயார்செய்து கொள்வது சிறப்பானதாகும். இதனூடாக ஒரு ஆசிரியர் தனது கற்பித்தல் செயற்பாடுகளின் மூலம் அடைய எதிர்பார்க்கும் நோக்கங்களை இலகுவாக அடைந்துகொள்ள முடியுமாகின்றது. அத்துடன் கற்பித்தல் செயற்பாடுகளும் மேம்பாடடையும். தரவுகள் இற்றைப்படுத்தப்பட்ட அமைப்பில் மாணவர்களைச் சென்றடைவதன் காரணமாக விளைத்திறனான முடிவுகளாக அமையும். ஆசிரியருக்கும் திருப்திகரமானதாக அமைவதுடன் தடுமாற்றங்கள், சிக்கல்கள் ஏற்படுவதும் தவிர்க்கப்படும். கற்பித்தலும் தயார்ப்படுத்தப்பட்டபடி ஒரு தொடர்ச்சியாக
அமையும் போது மாணவர்க்கும் சுமுகமானதாகக் காணப்படும். மதிப்பீட்டைத் திட்டமிட்டிருத்தல் பொருத்தமான மதிப்பீட்டு முறைகளைக் கையாண்டு மாணவர்களின் அடைவு மட்டங்களை அறிந்து கொள்ள முடியும். மாணவர்களைத் தொடராகக் கற்றல் கற்பித்தலில் ஈடுபடுத்த தொடர்ச்சியான மற்றும் தயார்படுத்திய மதிப்பீடுகளையும் கணிப்பீடுகளையும் வழங்குவது
சிறப்பாக அமையும். இம் முன்தயார்நிலையானது தனக்கும் பயன்படுவதுடன் தான் சமூகமளிக்காத வேளை பிரதியீடாக வரும் மற்றைய ஆசிரியருக்கும் பயன்படும் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவர்.
பரிசுகள், பாராட்டுகள் மற்றும் தண்டனைகள் வழங்குதல்
நல்ல விடயங்களைச் செய்கின்ற மாணவர்களைப் பாராட்டுவதுடன் சில விடயங்கள் தொடர்பாக போட்டிகளை ஏற்படுத்தி பரிசில்களையும் வழங்கலாம். இதனால் மாணவர்கள் நல்ல விடயங்களில் ஈடுபடவும் வாய்ப்பு ஏற்படும்;. அதே போல போட்டிகள் மூலமாக செயற்பாடுகள் செய்யப்படும் போது மாணவர்கள் வேறு குழப்படிகளைத் தவிர்த்து வகுப்பறைச் செயற்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபடவும் வாய்ப்பளிக்கும். உதாரணம்:
வகுப்பில் குழுப் போட்டி முறைகளை ஏற்படுத்தல்.
வகுப்பறை விதிமுறைகளை ஏற்படுத்தல்.
முன்தயார்படுத்தலில் வகுப்பறையை ஒழுங்குபடுத்தி கற்றலுக்கான சூழலை
உருவாக்குவது ஆசிரியரது பொறுப்பாக உள்ளது. அந்த வகையில் வகுப்பறையில் சில விதிமுறைகளையம் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக குறித்தப்பாடத்தை எவ்வாறு கற்பிப்பது, குறித்த அப்பாடவேளையை வகுப்பறைச் சூழலிலா அல்லது வெளிச்சூழலிலா கற்பிப்பது, ஆசிரியர்கள் மாணவர்களை தமக்கேற்ற வகையில் குழுவாகப்பிரித்தல், மாணவர் குழுவில் இன்று யார் யார் முன்வைப்புக்ககளை முன்வைப்பது என்பதையும் ஆசிரியரே முன் திட்டமிட்டிருப்பதோடு மற்றும் எத்தனை நிமிடங்கள் முன்வைப்புக்களை முன்வைக்க வேண்டும், மீத்திறனுடைய மாணவருக்கு மேலதிகமான பயிற்சிகள் எதைக் கொடுக்கலாம் போன்ற விடயங்களுடன் கொடுக்கப்பட்ட பயிற்சிகளை சரியாக செய்தால் அம்மாணவர்களுக்கும், மாணவர் குழுவிற்கும் பக்கச்சார்பின்றி பாராட்டுக்கள் பரிசில்கள் வழங்குதல்.
மற்றும் இடைவேளையின் பின்பு பாடம் ஆரம்பிக்கப்படும் என்றால் வகுப்பறையானது கற்றலுக்கு உகந்த சூழலாகக் காணப்படாது அசுத்தமானதாகக் காணப்படும். அச்சந்தர்பத்தில் மாணவர்களுக்கென வகுப்பறை விதிமுறைகளை ஏற்படுத்துதல் அதாவது ஆசிரியர் பாடவேளைக்கு வரும் சந்தர்ப்பத்தில் வகுப்பறையானது சுத்தமாகக் காணப்பட வேண்டும் அவ்வாறு இல்லையெனில் தண்டப்பணம் அறவிடப்படும் போன்ற விதிமுறைகளை ஏற்படுத்தும் வேளையில் வகுப்பறையை கற்றலுக்கு உகந்த சூழலாக இலகுவாக மாற்றலாம்.
ஆகவே வகுப்பறையில் நடைபெறப்போகும் செயற்பாடுகளுக்கான அனைத்து
விதிமுறைகளை முன்கூட்டியே ஆசிரியரால் முன்தயார்படுத்திக் கொண்டு செல்லும் போது அன்றைய நாளுக்கான கற்றல் கற்பித்தல் இலக்கை இலகுவாக அடைந்து கொள்வதுடன் மற்றும் மீத்திறனுடைய மாணவருக்கு மேலதிகமான பயிற்சிகளை கொடுப்பதற்கு அதற்கான விதிமுறைகளை முன்தயார்படுத்திக் கொண்டு செல்லும் போது மாணவரால் வகுப்பறையில்
ஏற்படுத்தக்கூடிய குழப்பத்தைக் கட்டுப்படுத்தி இலகுவாக வகுப்பறை முகாமைத்துவத்தை மேற்கொள்ளக்கூடியதாகக் காணப்படும்.
ஆசிரியர் மாணவர் இடைவினைத் தொடர்பு
வகுப்பறை முகாமைத்துவத்தை வினைத்திறனாகக் கொண்டு செல்வதில் ஆசிரியர் மாணவர் இடைவினைத் தொடர்பு மிகமுக்கியமான ஒன்றாகக் காணப்படுகிறது இதற்கும் நன்கு திட்டமிட்டு ஆசிரியர் முன்தயார் நிலையில் செல்ல வேண்டும். உதாரணமாக இன்று மாணவருடன் நெருக்கமாக இணைந்து அவர்களை தன்பக்கம் ஈர்க்குமாறு கற்பித்தல் உத்திகளை கையாண்டு கற்பித்ததால் எவ்வாறு கற்றல் கற்பித்தலானது வினைத்திறனாகக் காணப்பட்டது, அதனை மென்மேலும் இடைவினைத் தொடர்பை மேற்கொள்ளும் போது சிறப்பாக கற்றல் கற்பித்தலைக் கொண்டு செல்லலாம், அதாவது நாளைப் பாடவேளையில் மாணவர்களை சிறப்பாக பாடத்துடன் இணைத்துக்கொண்டு செல்லுவதற்கு எவ்வாறான இடைவினைத் தொடர்பினை மேற்கொள்ளலாம், அதற்காக என்னென்ன செயற்பாடுகளை
முன்னெடுக்கலாம் மற்றும் அனைத்து மாணவர்களுடன் எவ்வாறு சுமூகமான உறவினைப் பேணலாம் என்பவற்றை சிந்தித்து முன்தயார்படுத்திக் கொண்டு செல்லும் போது மாணவர்கள் ஆசிரியர்கள் தங்கள் மீது அக்கறையுடனும் கருணையுடனும் மிகவும் நெருக்கமாகப் பழகுகிறார் என்று குறித்த ஆசிரியரின் பாடத்தின் மீது மிகவும் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் செயற்படுவார்கள். இதன் காரணமாக ஆசிரியருக்கு இலகுவாக கற்றல் கற்பித்தலை வினைத்திறனாகக் கொண்டு செல்லலாம்.
வகுப்பறையில் ஆசிரியர் மேற்குறித்த செயற்பாடுகளில் கவனத்தைக் குவிக்கும் போது வகுப்பறை முகாமைத்துவம் சிறப்பாக அமைவதோடு மாணவர்களும் தங்களது கற்றல் செயற்பாடுகளை ஆர்வத்துடன் மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் வகுப்பறையில் ஆசிரியரால் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
Comments
Post a Comment