Pavlov’s Conditioned Theory (Tamil)
பாவ்லோவின் நிபந்தனைக் கோட்பாடு
அறிமுகம்
இவான் பாவ்லோவ் என்ற இரஸ்யா நாட்டு அறிஞர் பல பரிசோதனைகளை செய்து பெற்ற உண்மைகளின் வழியே உருவாக்கிய கற்றல் கோட்பாடுதான் நிபந்தனைக் கற்றல் கோட்பாடு ஆகும். பாவ்லோவ் தன்னுடைய சோதனைக்கு நாயை எடுத்துக்கொண்டார். நாயினுடைய நடத்தைகளான உணவு உண்ணுதல், உண்பதற்கு முன்பு நடத்தையில் ஏற்படும் மாற்றம் ஆகியவற்றை கவனித்தார். உணவு கொண்டுவரும் போது நாயிடம் ஏற்படும் உடலியல் நடத்தை மாற்றத்தை உற்றுநோக்கினார்.
பாவ்லோவின் பரிசோதனை
இச்சோதனையில் பாவ்லோவ் நாயை பசியோடு பல நாட்கள் வைத்திருந்தார். பின்பு அதனை சோதனை மேடையில் கட்டினார். நாயின் செயல்பாடுகள் பார்ப்பவர் நாயின் கண்ணில் படாமல் கண்ணாடி வழியே அதன் நடத்தையை கவனித்தனர். உணவு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மணி ஓசை எழுப்பி உணவு வழங்கப்பட்டது. உணவைக் கண்டவுடன் நாயின் வாயில் உமிழ்நீர் சுரக்கவில்லை. மணி ஓசை வந்த திசையை பார்த்து குரைத்தும், ஒலி எழுப்பும் செயலில் ஈடுபட்டது. உணவு வாயில் பட்டவுடன் உமிழ்நீர் சுரந்தது. பின்னர் இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு முறை உணவு வழங்கும் போதும் மணி ஓசை எழுப்பப்பட்டது. நாய் மணி ஓசை அடித்தவுடன் எழுந்து நிற்பதும், வாயில் உமிழ்நீர் சுரக்கவும் செய்தது. ஒவ்வொரு முறையும் உமிழ்நீர் அளவும், நேரமும் கணக்கீடு செய்யப்பட்டது. பலமுறை இந்த செயல்கள் தொடர்ந்து செய்யப்பட்டது. பின்னர் உணவு வழங்காமல் மணி ஓசை மட்டும் எழுப்பப்பட்டது. மணி ஓசையை கேட்டவுடன் நாயின் வாயில் உமிழ்நீர் சுரந்தது. உமிழ்நீர் அளவும் குறிக்கபட்டது. இந்த சோதனை மூலம் பாவ்லோவ் ஒரு தூண்டலுக்கு ஏற்ற துலங்கல் நிகழ்வு நிபந்தனைக்கு அமைவாக செயலில் நிகழும் என கண்டறிந்தார்.
நிபந்தனைக் கோட்பாட்டின் விதிகள்
பாவ்லோவ் நிபந்தனைக்குட்பட்ட பரிசோதனையில் இருந்து பல்வேறு விதிகளை கண்டுபிடித்தார்.
1. உருவாதல்
தொடர்ச்சியாக தூண்டல் - துலங்கலுக்கான உந்துதலின் செயல்பாடுகளை கொடுக்கும்போது தான் தூண்டலுக்கான துலங்கல் வெளிப்படும்.
2.அழிந்துபோதல்
தூண்டலுக்கேற்ற துலங்கலை வெளிப்படுத்திய பிறகு தொடர்ந்து வழங்கும் இயற்கையான தூண்டலை வழங்காமல் இருந்தால், துலங்கல் மெல்ல மெல்ல வலுவிழந்து கடைசியில் மறைந்து போகும். இத்தகைய மறைவு நிரந்தரமாக மறையாது. சிறிது கால இடைவெளியில் ஒலி மீண்டும் எழுப்பியவுடன் நாயின் வாயில் உமிழ்நீர் சுரக்கும். அழியும் நிபந்தனை மீண்டும் உயிர்பெறுதலை “மீண்டும் கொணர்தல்” என்று அழைக்கிறோம்.
3.பொதுமைப்படுத்தல்
தூண்டலுக்கான துலங்கலை அதனோடு ஒத்த பண்புடைய மற்ற தூண்டல்களை கொண்டு பெறுவதை பொதுமைப்படுத்துதல் என்பர். அழைப்பு மணி ஓசைக்கு பதிலாக ஒரு பாடல் ஓசையை தூண்டலாக வழங்குதல்.
4.வேறுபடுத்துதல்
ஒரு குறிப்பிட்ட தூண்டலுக்கு ஒரே வகையான துலங்களும், வேறுபட்ட தூண்டலுக்கு வெவ்வேறான துலங்கலை பெறுவதுமே ஆகும். வெவ்வேறான இரண்டு ஓசைகளுக்கு இடையே குறைந்த வேறுபாடு இருந்தால், நாய் எந்த ஓசைக்கு துலங்கலை வெளிப்படுத்துவது எனத் தெரியாமல் குழம்பும். இதன் விளைவாக உமிழ்நீரை சுரக்காமல் குரைக்கும்.
இவ்வாறு இவான் பாவ்லோவ் நாயை கொண்டு செய்த நிபந்தனைக் கற்றல் பரிசோதனை மூலம் பல்வேறு கற்றல் கோட்பாடுகளையும், விதிகளையும் கற்றல் செயல்முறைக் கோட்பாடுகளாக காட்டியுள்ளார்.
கல்வியில் நிபந்தனைக் கோட்பாட்டின் பிரயோகங்கள்
- நடைமுறை வாழ்வில் அன்பு, பயம், வெறுப்பு போன்ற செயல்கள் ஒரு வகையான நிபந்தனை அடிப்படையில் நிகழும் செயல்பாட்டின் வெளிப்பாடே ஆகும்.
- பல்வேறு கற்றல்கள் நிபந்தனைக்கமைவான தூண்டலைச் சார்ந்தவை, எனவே கற்றல் மொழிக் கற்பித்தலுக்கு ஏதுவாகிறது.
- கற்றல் செயலில் கற்பவர், கற்பிப்பவர், பாடசாலை, பாடம், இவற்றிற்கிடையே சாதகமான மனப்பாங்கினை உருவாக்க நிபந்தனைக் கற்றல் பயன்படும்.
- நற்பண்புகள், தன்சுத்தம், மூத்தோரை மதித்தல், நேரம் தவறாமை, சுகாதாரம், நல்ல எண்ணங்கள் இவ்வகை கற்பித்தலின் மூலம் ஏற்படுத்த முடியும்.
- கற்பவரிடையே அச்சத்தை போக்கவும், தீய பழக்கவழக்கங்களை களையவும் கற்றல் பயன்படும்.
Comments
Post a Comment