Maslow's Hierarchy of Needs (Tamil)
மாஸ்லோவின் தேவைக் கோட்பாடு
மாணவர்கள் தங்களின் திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தி சிறப்பான வளர்ச்சியை அடைவதற்கு சுயமான ஊக்கம் மிகவும் தேவையான ஒன்றாகும். மனிதனுடைய ஊக்கிகள் பெரும்பாலும் தேவையுடன் தொடர்புடையவை. மனிதனின் சுய தேவைகளை அடிப்படையாகக் கொண்டு மாஸ்லோ ஊக்கிகளை வரிசைப்படுத்தி உள்ளார். கீழ்கண்ட ஏழு நிலைகளாக மனிதனின் தேவைகளையும், ஊக்கிகளையும் பட்டியலிட்டுள்ளார்.
- உடலியல் தேவைகள்
- பாதுகாப்புத் தேவைகள்
- அன்பு – உரிமைத் தேவைகள்
- தன் மதிப்புத் தேவைகள்
- அடைவூக்கத் தேவைகள்
- அழகுணர்த் தேவைகள்
- தன்னிறைவுத் தேவைகள்
உடலியல் தேவைகள்
ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவு, நீர், காற்று, உறக்கம், பாலுணர்ச்சி போன்றவை உடலியல் தேவைகள் ஆகும். இத்தேவைகள் முழுமையாக கிடைத்தால் தான் குழந்தைகள் கற்றலில் ஆர்வமுடனும்,ஈடுபாட்டுடனும் செயல்படமுடியும்.
பாதுகாப்புத் தேவைகள்
பாதுகாப்புடன் வாழ்வதற்கு ஆதாரமான உடை, உறைவிடம், பய உணர்வின்றி
சமூகத்தில் இருப்பது, ஒழுக்கம், பாதுகாப்பின் முக்கியதுவம் உணரச் செய்தல் போன்றவை பாதுகாப்பு தேவைகளாகும்.
அன்பு உரிமைத் தேவைகள்
குழந்தைக்கு பெற்றோரின் அன்பு, பாசம், முதியவர்களுக்கு மனைவி, மக்களின் அன்பு, சுற்றத்தாரின் நட்பும், உறவும், சரிவர கிடைக்க வேண்டும். ஒரு மாணவனுக்கு அன்பும் பாசமும் சரியாக கிடைக்கவில்லை எனில் அவனால் கற்றலில் முழுமையாக ஈடுபட முடியாது.
தன் மதிப்புத் தேவைகள்
கற்பவரின் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, சுயபலம், தன்னால் இயலும் என்ற எண்ணம், வெற்றிபெற முயலுதல்,இவை தன் மதிப்பிற்கான தேவைகள். தன்மதிப்புத் தேவையை அடையாத மாணவனும், நிராகரிக்கப்படும் குழந்தையும் நிலையற்ற நம்பிக்கை, தாழ்வு மனப்பான்மை பெற்று காணப்படுவர்.
அடைவூக்கத் தேவைகள்
எதை, எவ்வாறு, எங்கு, கையாள வேண்டும் என்ற தெளிவு, பொருட்களின் தன்மையறிந்திருத்தல், ஒன்றை மற்றொன்றுடன் தொடர்புபடுத்திப் பார்த்தல் போன்றவை அடைவுத் தேவைக்கானவை. அறிவு திறன் வளர்ச்சியைப் பொறுத்தே அடைவுத் தேவை அமையும்.
அழகுணர்த் தேவைகள்
அழகுபடுத்துதல், தன் சுத்தம் பேணல், விரும்பிய பாடத்தை படித்தல் போன்றவை இத்தேவையின் கூறுகள் ஆகும். தனியாள் தேவைகள் இதில் நிறைவேறினால் மட்டும் இது சமூகத் தேவையில் வெற்றி பெற இயலும். தன்னை அழகுடன் தூய்மையாக பேணிக்காத்துக் கொள்பவரால் மட்டுமே தன் வீட்டையும் சுற்றத்தையும் அழகுணர்வுடன் வைத்துக்கொள்ள முடியும்.
தன்னிறைவுத் தேவைகள்
முதலில் உடலியல், அன்பு, பாதுகாப்புத் தேவைகளை நிறைவு செய்து கொண்டு அதன் வழியே மற்ற தேவைகளான தன்மதிப்புத்தேவை, அடைவூக்கத் தேவைகள், அழகுணர் தேவைகள் ஆகியவற்றை முழுமைபெறச் செய்தல் தன்னிறைவுத் தேவையாகும்.
Comments
Post a Comment