Impact of Nature and Nurture on Child Development (Tamil)

 குழந்தை வளர்ச்சியில் மரபு மற்றும் சூழ்நிலையின் தாக்கங்கள்

 அறிமுகம்

வளர்ச்சிசார் மாற்றமானது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து நடைபெறக்கூடிய ஒன்றாகும். இந்த செயல்முறையானது வாழ்நாளில் நன்மையும், தீமையும் கொண்டதாக இருக்கும். கடந்த காலங்களில் குழந்தை வளர்ச்சியில் மரபு மற்றும்  சூழ்நிலை ஆகியவைகளின் தாக்கத்தினை பற்றிய விவாதங்கள் நடைபெற்றாலும் தற்போதும் அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இன்றைய சூழலில் குழந்தைகளின் வளர்ச்சியில் மரபு, சூழ்நிலை ஆகிய இரண்டுமே மிக முக்கியமான காரணிகளாக அமைகிறது என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தையின் உருவாக்கத்தில் மரபின் பங்கு முக்கியமானதாக கருதப்பட்டாலும், அதன் உள்ளார்ந்த ஆற்றலை வெளிக்கொணர்வதில் சூழ்நிலையின் பங்கும் அதிகமாக உள்ளது இவ்வாறு மரபு, சூழ்நிலை ஆகியவைகளின் தாக்கம் குழந்தைகளின் வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்துவதை தான் இடைவினை புரிதல் அணுகுமுறை (Interactionist Approach) என்கிறோம்.

 சூழ்நிலை எதிர் மரபு (Nature Vs Nurture

மரபு (Nurture), சூழ்நிலை (Nature) ஆகிய இரண்டுமே உளவியல் சார்ந்த சொற்களாகும். மனிதனின் உளவியல்சார் வளர்ச்சிகளான நடத்தைமாற்றம் (Behavior), நுண்ணறிவு (Intelligence), ஆளுமை (Personality) போன்றவைகளில் அதிக அளவு விளைவுகளை மரபு, சூழ்நிலை காரணிகள் எவ்வாறு ஏற்படுத்துகின்றது என்பதையும் தெளிவாக்குகிறது.

மரபு, சூழ்நிலை ஆகியவற்றின் பற்றி விவாதிக்கும் போது, மரபு என்பது தனிமனிதனின் பிறவிசார் குணங்களையும், சூழ்நிலை என்பது அவரது சுய அனுபவங்களையும் குறிப்பிடுகிறது. கேள்வி என்னவென்றால் குழந்தையின் வளர்ச்சியில் அதிக அளவு செல்வாக்கு (Influence) செலுத்தக்கூடியது மரபியலா? அல்லது சூழ்நிலையா? என்பதுதான். குழந்தையின் வளர்ச்சியில் உயிரியல் சூழ்நிலையியல் காரணிகள் எந்த அளவு தாக்கத்தினை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி இன்றளவும் அதிகப்படியான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஜான் லாக் (1632 - 1704) என்பவரது கருத்துப்படி குழந்தைகள் ஒன்றும் வெற்று எழுது பலகை அல்ல. இதனடிப்படையில் பார்த்தால் குழந்தைகளின் பண்பு நலன்கள் அவர்களின் அனுமானத்தின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்படுகிறது. லாக் அவர்களின் கருத்துப்படி பெற்றோர்கள் தான் சிறந்த ஆசிரியர்கள், அவர்கள் தங்களின் குழந்தைகளை கனிவான கற்றுக்கொடுத்தல் மூலமும், நல்ல எடுத்துக்காட்டுகள் மூலமும், நல்ல நடத்தைகளை பின்பற்றும்போது வெகுமதியளித்தும் தங்கள் விருப்பபடி உருவாக்குகிறார்கள். மேலும் லாக் அவர்களின் கூற்றுப்படி வெற்று எழுது பலகையாக உள்ள குழந்தைகளை மரபு, சூழ்நிலை ஆகிய இரண்டும் அவர்களை வெற்றியாளர்களாக வடிவமைக்கிறது.

ஜீன் ஜேக்ஸ் ரூசோ (1712-1778) அவர்கள் குழந்தைகளைப் பற்றி புதிய கருத்தினை அறிமுகப்படுத்தினார். ரூசோ அவர்களின் கருத்துப்படி முதிர்ச்சி பெற்றவர்களின் அறிவுரைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு குழந்தைகள் ஒன்றும் வெற்று எழுது பலகையுமல்ல அல்லது வெற்று பாத்திரமும் அல்ல அவர்கள் புனிதர்கள், நல்லது எது, கெட்டது எது என்பதை அறிந்து நலமுடனும், சீருடனும் வளர்வதற்கான ஆற்றலை இயற்கை அவர்களுக்கு கொடுத்துள்ளது. குழந்தை மைய தத்துவம் அறிவுறுத்துவது என்னவெனில் குழந்தைகளின் பல்வேறு நிலைகளான குழவிப்பருவம், குழந்தைப்பருவம், பின்குழந்தைப் பருவம்,  வளரிளம் பருவம் ஆகியவைகளில் வயது முதிர்ந்தவர்கள் குழந்தைகளின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்பவராக இருக்க வேண்டும்.

ரூசோவின் தத்துவமானது படிநிலை (Stage), முதிர்ச்சி (Maturity) ஆகிய இரண்டும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய கருத்துக்களை உள்ளடக்கியதாகும்; முதிர்ச்சி என்பது மரபுகளால் நிர்ணயிக்கப்பட்டு இயற்கையாக மலரக்கூடிய வளர்ச்சியை குறிப்பதாகும். ரூசோவின் பார்வைப்படி குழந்தைகள் தங்களின் தலைவிதியை தாங்களே நிர்ணயித்துக் கொள்கிறார்கள். குழந்தைகளின் வளர்ச்சியானது, தொடர்ச்சியற்ற, வரிசைகிரமமான இயற்கை வகுத்து கொடுத்த பாதையில் நடைபெறும் செயலாகும் என்று ரூசோ குறிப்பிடுகிறார்.

மரபியல் குறைபாடுகள் (Genetic Disorder)

தற்போது 7000 க்கும் மேற்பட்ட மரபியல் குறைபாடுகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது பெரும்பாலான மரபியல் குறைபாடுகள் குழந்தைகளின் வளர்ச்சிசார் செயல்களை பாதிப்பதுடன், உடல்சார்ந்த நோய்கள், மனநோய்கள், மனவளர்ச்சி குன்றுதலுக்கும் காரணமாகின்றது. உதாரணத்திற்கு Down syndrome, Fragile syndrome Alzheimer’s diseases போன்றவைகள். Down syndrome, Fragile syndrome Alzheimer’s diseases போன்றன மரபணு சார்ந்தது மன இறுக்கமானது (Autism) மரபியல் சூழ்நிலை ஆகிய காரணிகளால் ஏற்படுவதாகும்.

ஜிம் லெவிஜ் (Jim Lewis) ஜிம் ஜ்பிரிஞ்சர் (Jim Springer) ஆகிய ஒரு கரு இரட்டையர்களை (Identical twins) அவர்களின் இளம் வளதிலேயே பிரித்து தனித்தனியே வளர்த்தனர். மின்னசோட்டா (Minnesota) இரட்டையர் ஆய்வானது அவர்களின் வளர்ச்சி மாற்றத்தில் மரபியல் சூழ்நிலை எந்த அளவு தொடர்பு கொண்டுள்ளது என்பதை குறிப்பிட்டு காட்டுகிறது. ஜிம் லெவிஜ்,  ஜிம் ஜ்பிரிஞ்சர் ஆகிய இருவர்களின் வாழ்க்கையிலும் சில திகைப்பான ஒற்றுமைகள் இருப்பதை மின்னசோட்டா ஆய்வானது நிரூபித்துள்ளது.

  •  இரு குழந்தைகளுமே பதற்றத்துடன் உறங்குதல், நகம் கடித்தல் போன்ற பழக்கங்களை கொண்டிருந்தனர்.
  • இருவருமே ஒற்றைத் தலைவலி, இரத்த உறைவு, அதிக இரத்த அழுத்தம் உடையவர்களாக இருந்துள்ளனர்.
  • இருவருமே தங்களின் செல்ல பிராணியான நாய்க்கு ஜாய் (Joy) என்று பெயர் சூட்டடியிருந்தனர்.
  • இருவருமே லிண்டா என்ற பெயருடைய பெண்களை திருமணம் செய்துள்ளனர், இருவருமே விவாகரத்து பெற்றிருந்தனர்,பிறகு இருவருமே பெல்டி (Belty) என்ற பெயருடைய பெண்களை மறுமணம் புரிந்துள்ளனர்.
  • ஜிம்ஜ் லெவிஜ், ஜிம் ஜ்பிரிஞ்சர் இருவருமே தங்களின் முதல் ஆண் குழந்தைக்கு ஜேம்ஜ் ஆலன் என்று பெயர் சூட்டி இருந்தனர்.
  • இருவருமே Sheriff’s deputies ஆக பணி செய்துள்ளனர்.
  • இருவருமே விடுமுறை நாட்களில் புளோரிடா கடற்கரைக்கு செல்வதை விரும்பியுள்ளனர்.
  • இருவருமே ஒரே பெயருடைய பீர் (Beer) குடிப்பதையும், ஒரே பெயருடைய வெண்சுருட்டை (Cigarette) புகைப்பதையும் விரும்பியுள்ளனர்.
ஒரு கரு இரட்டையர்கள் (identical twins) மாறுபட்ட இரட்டையர்களை (Non identical twins) விட பெரும்பாலான உளவியல் சோதனைகளில் ஒருமித்தவர்களாக காணப்பட்டனர். உதாரணத்திற்கு ஜிம்ஜ் இரட்டையர்கள் ஆளுமை,  நுண்ணறிவு  ஆகிய சோதனைகளில் ஒரே மாதிரியான மதிப்பெண்களை பெற்றிருந்தனர. மேலும் ஒரே மாதிரியான கையெழுத்து உடையவர்களாகவும் திகழ்ந்துள்ளனர்.(Tollegenetal 1988)

குழந்தைகளின் வளர்ச்சியில் மரபு, சூழ்நிலை இரண்டுமே அதிக அளவு பங்கு பெற்றுள்ளது இவை இரண்டையும் தனித்தனியாக பிரித்து பார்ப்பது மிகவும் கடினமான ஒன்றாகும், ஆனாலும் இந்த இரண்டில் எந்த ஒன்று குழந்தைகளின் வளர்ச்சிசார் செயல்களில் அதிகளவு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதே கேள்வியாகும்.

பெரும்பாலான நிகழ்வுகளில் உள்ளீடுகளை தீர்மானிப்பதில் மரபணு பங்கெடுத்தாலும், வெளியீடுகளை சூழ்நிலை தீர்மனிக்கிறது. மேற்கண்ட ஆய்வு முடிவுகளில் இருந்து நாம் புரிந்துகொண்டது என்னவென்றால் "Nature Vs Nurture" என்ற கூற்றினை  "Nature and Nurture" என்று மாற்ற வேண்டும்;


 


Comments

Popular posts from this blog

Trends of Curriculum Development (Tamil)

Student Centered Teaching (Tamil)

Sociological Bases of Curriculum (Tamil)

Subject based Curriculum and Integrated Curriculum (Tamil)

Selection of Curriculum Content (Tamil)