Growth and Development of Child (Tamil)

 குழந்தையின் வளர்தல் மற்றும் வளர்ச்சி 

 அறிமுகம்

பொதுவாக குழந்தைப் பருவம் என்பது பிறப்பிலிருந்து வளரிளம் பருவம் வரை உள்ள காலமாகும். இந்தப் பருவத்தில் குழந்தைகள் பள்ளி, விளையாட்டு ஆகியவைகளில் அதிக நேரம் பங்கெடுக்கின்றனர். மேலும் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் போன்றவர்களின் அன்பினையும், ஊக்குவிப்பினையும் பெறக்கூடிய காலமாகும். இந்த காலத்தில் குழந்தைகள் பயத்திலிருந்து விடுபட்டும், வன்முறைகளில் இருந்து பாதுகாக்கப்பட்டும், தவறான முறைகள், ஏமாற்றுகளில் இருந்து பாதுகாக்கப்பட்டும் வளர்க்கப்படவேண்டும். இந்தப் பருவத்தில் குழந்தைகள் தரமான வாழ்க்கையை மேற்கொள்வதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும்.

மாற்றம் என்பது இயற்கையின் நியதியாகும். உயிருள்ள ஜீவன்கள், உயிரற்ற சடப்பொருள்கள் அனைத்தும் மாற்றத்திற்குட்பட்டதாகும். குழந்தையானது, தந்தையின் உயிரணுவினால் தாயின் கருவறையில் கருவாக வளர்ச்சிபெற்று மனித உயிராக உருவெடுத்து வாழ்க்கையை தொடங்குகின்றது தாயின் கருவறையில், கருவானது கிட்டத்திட்ட ஒன்பது மாதங்கள் பாதுகாப்புடன் வளர்ந்து பச்சிளங்குழந்தையாக உலகிற்கு அறிமுகமாகின்றது. வளர்தல்,  வளர்ச்சி ஆகிய நிகழ்வுகளானது உயிர்களிடத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான ஊடகமாக அமைகின்றன. 

 வளர்தல் என்றால் என்ன?

‘வளர்தல்’ என்ற சொல்லானது உடலியல் முதிர்ச்சியின் செயல்பாட்டையும், அதன் விளைவாக உடல் அமைப்பு பெரிதாவதையும், உடலுறுப்புகள் வளர்ச்சியடைவதையும் குறிக்கின்றது. செல்களின் பெருக்கத்தினாலும், செல்லக பொருட்களின் கூடுதலினாலும் இந்த நிகழ்வு ஏற்படுகிறது. உடலமைப்பில் ஏற்படும் மாற்றத்தினை கிலோகிராம்,  மீட்டர், இன்ச் போன்றவைகளின் மூலம் அளவிட முடியும்.

‘வளர்தல்’ என்பது உருவ அளவு அதிகரித்தல் அல்லது அமைப்பில் மாற்றம் ஏற்படுதலாகும் என்று பிரிட்டானிக்கா கலைக் களஞ்சியம் (Encyclopaedia of Britannica) வரையறுக்கிறது. மனிதனின் முதிர்ச்சியடைதல் செயல்முறைகளில் ஏற்படும் அனைத்து உடலியல், அமைப்பியல் மாற்றங்களே ‘வளர்தல்’ எனப்படும்.
உருவ அளவில் மாற்றம், விகிதாச்சாரத்தில் மாற்றம், பழைய உடல் அமைப்பில் மாற்றமடைந்து புதிதாய் மிளிர்வதே வளர்தல் என்று ஹர்லாக் (Hurlock, 1959) குறிப்பிடுகிறார்;.
“வளர்தல்” என்பது அமைப்பியல் உடலியல் மாற்றங்கள் என்று குரோ குரோ  (Crow and Crow, 1962) குறிப்பிடுகின்றனர்.

வளர்ச்சி என்றால் என்ன? 

‘வளர்ச்சி’ என்ற சொல்லானது செயல்பாடுகளின் முதிர்ச்சியை குறிப்பிடுகிறது. நரம்பு மண்டல வளர்ச்சி  முதிர்ச்சி, மனிதர்கள் முழுமையாக செயல்படுவதற்கு தேவையான பல்வேறு திறன்களை பெறுதல், போன்றவைகள் வளர்ச்சியுடன் தொடர்புடையது. வளர்ச்சி என்பது குழந்தைகளின் செயல்களில் ஏற்படும் பண்புறு மாற்றத்தினை குறிப்பிடுகிறது இம்மாற்றத்தினை உற்றுநோக்கல் மூலம் அளவிட முடியும்.

உயிரியின் அளவு, அமைப்பு செயல்பாடுகளில் ஏற்படும் அபரிதமான மாற்றம் ஆகியவைகளின் விளைவாக மரபியல் ஆற்றலானது வளர்ச்சியடைந்த அமைப்பின் செயல்பாட்டிற்கு மாற்றமடைவதே வளர்ச்சி என்று பிரிட்டானிக்கா கலைக் களஞ்சியம் வரையறுக்கிறது
முதிர்ச்சி அனுபவங்களின் விளைவுகளினால் ஏற்படும் சீரான, யூகிக்கக்கூடிய அபரிதமான தொடர் மாற்றமே வளர்ச்சி எனப்படும் என்று ஹர்லாக் (1959) குறிப்பிடுகிறார்.
சுற்றுப்புற நிகழ்வுகளின் விளைவாக நடத்தையில் ஏற்படும் அபரிதமான வளர்தல் மாற்றமே வளர்ச்சி ஆகும் என்று ஆண்டர்சென் (1950) குறிப்பிடுகிறார்.

வளர்தல், வளர்ச்சி பற்றிய கொள்கைகள்
(Principles of Growth and Development)


ஹர்லாக்  (Hurlock, 2015) என்பவர் எழுதிய குழந்தை வளர்ச்சி (Child Development)
என்ற நூலில் வளர்தல் வளர்ச்சி பற்றி 10 கொள்கைகளை குறிப்பிட்டுள்ளார். அவைகளாவன,

  1. வளர்ச்சியானது மாற்றத்திற்கு உட்டபட்டதாகும்.
  2. முன் பருவ வளர்ச்சியானது பின்பருவ வளர்ச்சியை விட நெருக்கடியானதாகும்.
  3. வளர்ச்சியானது  முதிர்ச்சி கற்றலில் ஆகியவைகளின் வெளிப்பாடாகும்.
  4. வளர்ச்சிசார் நடைமுறையானது யூகிக்;ககூடிய பண்புகளை பெற்றுள்ளது
  5. வளர்ச்சிசார் நடைமுறையானது யூகிக்கக்கூடிய ஒன்றாகும்.
  6. வளர்ச்சியில் தனிநபர் வேறுபாடு காணப்படும்.
  7. வளர்ச்சிசார் நடைமுறையானது கால நிலைக்கு உட்பட்டது
  8. ஒவ்வொரு வளர்ச்சிசார் நடைமுறைக்கும் சமுதாய எதிர்ப்பார்ப்புகள் உண்டு
  9. வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையும் கடுமையான ஆபத்துகள் நிறைந்ததாகும்.
  10. மகிழ்ச்சியானது வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் மாறுபடுகிறது

 

வளர்தல் வளர்ச்சி ஆகியவைகளுக்கிடையேயான வேறுபாடு

(Difference between Growth and Development) 

 பெரும்பாலன மக்கள் வளர்தல், வளர்ச்சி ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே மாதிரியான பொருள் கொள்கிறார்கள், ஆனால் இவையிரண்டும் வௌவேறான பொருள் கொண்டவை வளர்தல் என்பது உடல்,  உடலமைப்பில் ஏற்படும் மாற்றத்தினை குறிப்பதாகும்; ஆனால் வளர்ச்சி என்பது உடலுறுப்புகளின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றத்தினை குறிப்பதாகும்.

 

குழந்தையின் வளர்தல், வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் காரணிகள்
(Factors Influencing Growth and Development of the Child

வளர்தல், வளர்ச்சியானது பல்வேறு காரணிகளை சார்ந்தது, இவைகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வளர்தல், வளர்ச்சி ஆகியவைகளின் செயல்முறைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது.

 இக்காரணிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்

1. பிறப்பிற்கு முந்திய காரணிகள்

  • ஜீன்களின் ஆற்றல்
  • பாலினம்
  • கரு ஹார்மோன்கள்
  • கரு வளர்தல் பண்புகள்
  • தொப்பூழ்கொடி காரணிகள்
  • தாயின் பண்புகள் 
 
2.பிறப்பிற்கு பிந்தைய காரணிகள்
  • சத்துணவு
  • தொற்று நோய்கள்
  • ஹார்மோன்களின் ஆதிக்கம்
  • வேதியியல் நிகழ்வுகள்
 3.சமூகக் காரணிகள்
  • சமூக பொருளாதார நிலை
  • வறுமை
  • இயற்கை வளங்கள்
  • தட்பவெப்ப நிலை
  • மனவெழுச்சி காரணிகள்
  • இயற்கை, உளவியல் சூழ்நிலை கலாச்சார காரணிகள்






Comments

Popular posts from this blog

Trends of Curriculum Development (Tamil)

Student Centered Teaching (Tamil)

Sociological Bases of Curriculum (Tamil)

Subject based Curriculum and Integrated Curriculum (Tamil)

Selection of Curriculum Content (Tamil)