Environmental Pollution and Sustainable Development (Tamil)
சூழல் மாசடைதலும் பேண்தகு அபிவிருத்தியும்
அறிமுகம்இயந்திரமயமான இந்த உலகில் தொழிற்சாலைகளினதும், கைத்தொழில் பேட்டைகளினதும் அதிகரிப்பினால் சுற்றுச்சூழலனானது பல்வேறு வகையான பாதிப்புகளிற்கு உள்ளாகின்றது. சுற்றுச்சூழலில் உள்ள இயற்கை வளங்களானவை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்படுகின்றன. எனவே அரிதான அவ்வளங்களை மிகவும் கவனமாகப் பயன்படுத்தி நம் எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.
அதிகரித்து வரும் மனிதத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பாரியளவிலான சுற்றுச் சூழல் வளங்களின் உபயோகத்தினையும், அதேநேரம் இதனால் சூழலுக்குள் விடப்படும் பெருமளவிலான கழிவுப்பொருட்களின் வெளியேற்றத்தையும் கவனத்தில் எடுக்கும்போது சுற்றுச்சூழலின் தரத்தை பேணிப் பாதுகாப்பதில் நிலைத்துநிற்கும் அபிவிருத்திக்கான தேவை முக்கியத்துவமடைகின்றது.
அந்தவகையில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி எனும்போது சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் வருங்கால சந்ததியினரும் பயன்படுத்தக்கூடிய வகையில் வளங்களைப் பயன்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி அல்லது பேண்தகு அபிவிருத்தி எனப்படுகின்றது.
உணவு விவசாய தாபணம் (FAO) :- நிலைத்து நிற்கும் அபிவிருத்தி என்பது இயற்கை வளங்களின் அடிப்படை முகாமைத்துவத்தையும் நிகழ்கால எதிர்கால சந்ததியினரின் தேவைகள் அவற்றின் கிடைப்பனவுகளை நிச்சயப்படுத்திக் கொள்ளக் கூடிய வகையில் தொழிநுட்ப ரீதியான மாற்றங்களை நெறிப்படுத்துவதாகும்.
புறுண்லாண்ட் ஆணைக்குழு (சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்தி உலக ஆணைக்குழு):- வருங்கால தலைமுறையினர் தமது தேவைகளை நிறைவு செய்து கொள்ளக் கூடிய ஆற்றலின் மீது தாக்கம் எதனையும் எடுத்துவராமல் இன்றைய தலைமுறையினரின் தேவைகளை நிறைவு செய்து வைக்கும் அபிவிருத்தி செயன்முறை நிலைத்து நிற்கும் அபிவிருத்தி ஆகும்.
சுற்றுச் சூழல் அறிமுகம்
சுற்றுச்சூழல் எனப்படுவது எம்மைச் சுற்றியுள்ள இயற்கைப் பரப்பாகும். இவ் இயற்கையானது காடுகள்,கடல்கள் மற்றும் பல்வேறு நிலப்பரப்புகளையும் கொண்டமைந்துள்ளது. மேலும் புதுப்பிக்க முடியாத வளங்களாகிய கனிமங்கள், எரிபொருட்கள் போன்றனவற்றையும் உள்ளடக்கியுள்ளது. அந்த இயற்கைச் சூழலில் பல்வேறுபட்ட உயிரினங்கள், மனிதர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிர்களும் இயற்கையோடு இணைந்த வாழ்வினை வாழ்ந்து வருகின்றன. கணக்கிடமுடியா பேருயிர்களையும், சிற்றுயிர்களையும் தன்னகத்தே கொண்டமைந்த இயற்கையை பேணி பாதுகாத்தால் மட்டுமே பூமியின் உயிர்ப் பல்வகைமையைப் பாதுகாக்க முடியும். நாம் வாழும் சூழலானது ஆரோக்கியமாக இருந்தால் மாத்திரமே நீண்ட காலம் நீடித்து வாழ முடியும்.
சூழல் மாசடைதல்
இயற்கையின் அரும்பெரும் கொடைகளை உள்ளடக்கிய சூழலானது பல்வேறுபட்ட காரணிகளால் மாசடைதலிற்கு உட்படுகின்றது. பல்வேறு மனித நடவடிக்கைகளே பெரும்பாலும் மாசடைதலை ஏற்படுத்துகின்றன. சூழல் மாசடைதலை நீர் மாசடைதல், நிலம் மாசடைதல், வளி மாசடைதல் என வகைப்படுத்தலாம். நீரானது தாவரங்களினதும், உயிரினங்களினதும் வாழ்தகமைக்கு மிக அவசியமானது.
பூமியின் எழுபத்தைந்து வீதமான பரப்பு நீரினாலே சூழப்பட்டுள்ளது. இந்த நீரானது தொழிற்சாலைக் கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவதாலும், கிருமி நாசினிகளை விவசாயத்திற்குப் பயன்படுத்தும் போது அவை நீரில் கலப்பதாலும் மாசடைகின்றது. சூழல் மாசடைதலை பின்வரும் வகையில் நோக்கலாம்
நிலம் மாசடைதல்
நில உயிரினங்கள் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது. நிலத்தில் கலக்கும் ஆலைக் கழிவுகளும், அணு கழிவுகளும், செயற்கை உரங்களும், பிற நச்சுப் பொருட்களும் நிலத்தின் தன்மையை மாற்றி விடுகின்றன. இதன் மூலம் பூமியுடன் தொடர்பு கொள்ளும் உயிரினங்கள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. நிலத்தில் விளையும் காய்கறிகளில் இந்த நச்சுத் தன்மை படர்வதால் மனிதனின் உடலிலும் கலந்துவிடுகிறது. குழந்தைக்கு ஊட்டப்படும் தாய்ப்பாலில் கூட இந்த காய்கறிகளின் நச்சு கலந்திருப்பதாக மருத்துவ ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
நீர் மாசடைதல்
தண்ணீரை மாசுபடுத்துவது என்பது நிலத்தடி நீரை மாசுபடச் செய்யும். தேங்கி நிற்கும் தண்ணீருக்கு சரியான வடிகால் வசதிகள் இல்லாமல் போவதால் தண்ணீர் மாசுபடுகிறது. உலக அளவில் உள்ள தண்ணீரில் 0.01 விழுக்காடு மட்டுமே நாம் பயன்படுத்தும் குடிநீர் ஆகும். அந்த தண்ணீரும் தற்போது குறைந்தும், மாசுபட்டும் வருவது உயிரினத்துக்கே கேடு விளைவிக்க கூடியதாகும்.
வீட்டுக் கழிவுகள், ஆலைக் கழிவுகள் என கழிவுகளை இரண்டாகப் பிரிக்கலாம். இதில் ஆலைக் கழிவுகள் பெரும்பாலும் நச்சுத்தன்மை உடையதாக இருக்கின்றது. மனித அலட்சியங்களினால் அசட்டை செய்யப்படும் கழிவுகள் ஏதோ ஒரு வகையில் மனிதனையே சென்றடைகிறது. கடலில் கொட்டப்படும் கழிவுகள் மீன்களின் வாயிலாகவோ, தரையை சேதப்படுத்தும் கழிவுகள் தானியங்களாகவோ, நீராகவோ காற்றில் கலக்கும் நச்சுகள் சுவாசம் வழியாகவோ ஏதோ ஒரு விதத்தில் மனிதனைச் சரணடைகின்றன.
ஒலி மாசடைதல்
ஒலி மாசு என்பது மனதிற்கு ஒவ்வாத இயந்திரங்கள் பிறப்பிக்கும் இரைச்சல் அல்லது ஓலியாகும், அது மனிதனின் வாழ்க்கை முறைகளையும், விலங்குகளின் வாழ்க்கை முறைகளையும், அவர்களின் செயல்பாடுகளையும் வெகுவாக பாதிக்கின்றது. பொதுவாக போக்குவரத்து நம்மை இக்காலத்தில் வெகுவாக பாதிக்கும் ஓலி மாசு குறிப்பாக தானுந்து, பேருந்து போன்ற மோட்டார் வாகனங்கள் ஆகும்.
அலுவலகங்களில் பயன்படும் கருவிகள், வாகனங்களின் ஹாரன் ஓசை, ஆலை இயந்திரங்கள், கட்டிட பணிகள், ஒளிபரப்பு கருவிகள், தரையை சுத்தம் செய்யும் இயந்திரங்கள், கருவிகள், மின் விசைகள், ஒலிபெருக்கி, மின்சார விளக்குகள் எழுப்பும் ஒலி, குரைக்கும் நாய்கள், ஆடல் பாடலுக்கான பொழுதுபோக்கு சாதனங்கள், மேலும் சத்தம் போட்டு பேசும் மனிதர்கள், ஆகியவை அனைத்தும் வீட்டின் உள்ளும், வீட்டின் வெளியேயும் இரைச்சல் உண்டாவதற்கான காரணிகள் ஆகும்.
பச்சைவீட்டு விளைவு
பூமிக்கு வெப்பத்தையும் ஒளியையும் வழங்குவது சூரியன் எனும் சக்தி முதல் சூரியனில் இருந்து வரும் வெப்பம் புவி மேற்பரப்பை நோக்கி வருகின்றது. அதில் ஒரு பகுதியை தரையும், தாவரங்களும், நீரும் அகத்துறிஞ்சும் ஒரு பகுதி வான்வெளியை நோக்கி தெறிக்க செய்யப்படும் இது ஒரு சீரான சமநிலையில் இடம்பெறும். மற்றும் பூமிக்கு உள்வரும் கதிர்களில் பாதகமான வெப்ப கதிர்களை வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படை தடுத்து நிறுத்துகிறது. மற்றும் இந்த சீரான தெறித்தல் செயன்முறைகள் இடம்பெறுவதனால் பூமி வெப்பமடையாது சீராக இருக்கும். ஆனால் இன்று மனித செயற்பாடுகளால் வெளிவிடப்படும் பச்சை வீட்டு வாயுக்களான “குளோரோ புளோரோ காபன், காபனீரொட்சைட், மீதேன்” போன்ற வாயுக்களால் வெளிச் செல்ல வேண்டிய வெப்பம் தடுக்கப்படுவதனால் பூமியில் வெப்பம் தேங்கி உயர்வடைகிறது.
இதனை பச்சை வீட்டு விளைவு என்று கூறுவார்கள். இந்த விளைவே பூமியின் வெப்பம் உயர்வதற்கு காரணமாக உள்ளது. 800 ஆயிரம் வருடங்களாக சீராக இயங்கி வந்த இந்த சமநிலை கடந்த நூற்றாண்டுகளாக குழம்பியுள்ளது.
கடல்நீர் வெப்பமடைதல்
பனிப்பாறைகள் மற்றும் போலார் பனி படிவுகள் உருகுதளால், அடுத்த நூற்றாண்டுக்குள் சுமார் அரை மீட்டர் அளவுக்கு கடல் மட்டம் உயரப்போகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வதால், மணல் அரிப்பு ஏற்பட்டு நிலப்பகுதிகள் கடலில் மூழ்குதல், வெள்ளப் பெருக்கு ஏற்படுவது அதிகரிப்பது, நீர்நிலைகள் உவர்ப்பாக மாறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். ஓசோன் படலம் : துருவப் பகுயில் வானில் விழுந்துள்ள ஓசோன் ஓட்டை இன்னொரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.
காற்று மாசடைதல்
காற்றில் ஏற்படும் மாசு (குளோரோபுளூரோகார்பன்) இதன் முக்கிய காரணியாக விளங்கும் அதே நேரத்தில் குளிர்சாதனப் பெட்டி, தானியங்கி விற்பனை இயந்திரங்கள் போன்றவற்றிலிருந்து வெளியாகும் வாயுவும் இந்த ஓசோன் ஓட்டைக்கு குறிப்பிடத்தக்க காரணமாக விளங்குகிறது. புற ஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து பூமியைப் பாதுகாக்கும் ஓசோன் படலம் வலுவிழப்பதால் தோல் புற்று நோய் உட்பட பல்வேறு நோய்கள் மனிதனுக்கு வருகின்றன. கடலின் மேற்பரப்பில் வாழும் மீன்கள் அழிகின்றன.
காலநிலை மாற்றமும் அனர்த்தங்களும்
காலநிலை மாறுபாட்டின் காரணமாக உலகில் அதிகளவில் இயற்கை அனர்த்தங்கள் ஆண்டு தோறும் இடம் பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. அளவுக்கு மீறிய மழை வீழ்ச்சி ஏற்படுவதனால் வெள்ளப்பெருக்குகள் ஏற்படுகின்றன. மற்றும் கடுமையான வரட்சி, வெப்ப அலைகள் உருவாகுதல், பாலைவனமயமாதல் போன்ற நிகழ்வுகள் அதிகம் இடம்பெறுகின்றன.
வங்காள விரிகுடாவை அண்மித்த பகுதிகள் காற்றழுத்த தாழ்வினால் தாழமுக்க நிலைகள் உருவாகி கடும் வெள்ளஅனர்த்தங்கள் வருடம் தோறும் இடம்பெறுகின்றன. அவுஸ்திரேலியா, வடஅமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் காட்டுத்தீ உருவாக காலநிலை மாற்றமே காரணமாக அமைகின்றது.
காலநிலை மாற்றத்தினால் விவசாயம், பொருளாதாரம், வாழ்வாதாரம் என்பன பாதிக்கப்படுகின்றன. இயற்கை சூழலும் உயிரினங்களும் கூட இவற்றினால் பாதிக்கபடுகின்றன.
கடந்த 20 வருடங்களாக பூமியின் நிலை மிகவும் மோசமடைந்து வருகின்றது. கோடைகாலங்களில் வெப்பநிலை உச்சம் தொடுகின்றது. இதனால் நீர் தட்டுப்பாடு அதிகமாகின்றது. குடிப்பதற்கான நீர் மற்றும் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதனால் உணவு தட்டுப்பாடுகள் உலக அரங்கில் அரங்கேறி வருகின்றது. வெப்பநிலை உயர்வின் காரணமாக காலநிலை மாற்றம் உருவாகின்றது கடுமையான வெள்ளம், வரட்சி நிலமைகள், புயல்தாக்கம், காட்டுத்தீ போன்ற பேரிடர்கள் உருவாகி மனிதர்களை கொல்வதுடன் அவர்கள் இயல்பு வாழ்க்கையினையும் கேள்விக்குறி ஆக்குகின்றன.
வெப்பம் உயர்வடைவதனால் துருவ பிரதேசங்களான ஆக்டிக் மற்றும் அந்தாட்டிக் பிரதேச பனி கவிப்புகள் உருகுவதனால் கடல்நீர் மட்டம் உயர்வடைகிறது. கடல் நீர்மட்டம் உயர்வடைவதனால் சிறிய சிறிய தீவுகள் கடலில் மூழ்கும் அபாயமானது உருவாகியுள்ளது. உதாரணமாக “மாலைதீவு, துவாளு” போன்ற தீவுகள் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. வெப்ப உயர்வினால் காடுகளில் வாழும் உயிரின பல்வகைமைகள் அழிவடைந்து வருகின்றன. மற்றும் கடலின் உயிர்பல்வகைமையான முருகை கற்பாறைகள் அழிவடைய இந்த வெப்பமயமாதல் தான் காரணமாகும்.
சூழலைப் பாதுகாப்போம்
அதிகரித்து வரும் மாசடைதலானது தாவர மற்றும் விலங்கு உயிர்ப் பல்வகைமையையும், ஏனைய உயிர்களின் நீடித்ததன்மயையும், மனித இனத்தின் வாழ்தகைமையும் கேள்விக் குறியாக மாற்றியுள்ளது. இந்நிலையை மாற்றியமைக்க வேண்டுமாயின் சூழலானது அதன் உயிர்த்தன்மை மாற்றமடையாதவாறு பாதுகாக்கப்படல் வேண்டும். சூழல் பாதுகாப்பு எனப்படுவது நிலம், நீர், வளி உட்பட அனைத்து இயற்கை வளங்களையும் பாதிக்காதவாறு மனித நடவடிக்கைகளை மேற்கொள்வதையும், அருகிவருகின்ற புதுபிக்கக் கூடிய வளங்களை மீள உருவாக்குவதையுமே குறிப்பிடுகின்றது.
தற்போதைய அவசர உலகில் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனை அதிகரித்துள்ளது. இவை சூழலிற்கு மட்டுமின்றி மனிதர்களிற்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தவல்லன. எனவே இவற்றைத் தவிர்த்து கடதாசி மற்றும் துணிப்பைகளையும், கண்ணாடி மட்பாண்டப் பொருட்களையும் பயன்படுத்த வேண்டும்.
அத்துடன் வேளாண்மை நடவடிக்கைகளின் போது இரசாயன கிருமி நாசனிகள், செயற்கைப் பசளைகள் போன்றவற்றை தவிர்த்து இயற்கை உரங்களையும், பூச்சி நாசினிகளையும் பயன்படுத்த வேண்டும்.
இதனால் நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் இரசாயனங்கள் ஏதுமற்று எமக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை பெற்றுத் தரும்.
சூழல் பாதுகாப்பு நடைமுறைகள்
மனித நடவடிக்கைகளால் சூழலிற்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காக சர்வதேச ரீதியிலும் நாடுகள் அதன் தனிப்பட்ட ரீதியிலும் பல்வேறு சட்ட திட்டங்களை இயற்றியுள்ளன. அத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குறித்து பல்வேறு மாநாடுகள் நடாத்தப்பட்டு, நாடுகளிற்கிடையில் ஒப்பத்தங்கள் பல உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுள் கியோட்டா உடன்படிக்கை, வியன்னா மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஓசோன் பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கை போன்றன முக்கியமானவையாகும்.
அமெரிக்கா, மற்றும் நோர்வே போன்ற நாடுகள் சூழலிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் குளோரோ புளோரோ காபன், மெதேன் போன்றவற்றின் பயன்பாட்டில் கடுமையான சட்டதிட்டங்களை ஏற்படுத்தியுள்ளன.
மேலும் மக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கில் சர்வதேச அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 16 இல் சர்வதேச ஓசோன் தினத்தையும், யூலை 28 இல் உலக இயற்கை பாதுகாப்பு தினத்தையும் மற்றும் மார்ச் 22 இல் உலக நீர் தினத்தையும் அனுஸ்ரித்து வருகின்றன.
நிலைத்து நிற்கும் அபிவிருத்தியின் அவசியம்
1. அதிகரித்துவரும் குடித்தொகை தேவைகளை நிறைவு செய்தல்:-
இன்று உலகின் சனத்தொகையானது ஆரம்பகாலங்களைவிட பல மடங்கு அதிகரித்து வருகின்றது. 1999 இல் ஆறு பில்லியனாக காணப்பட்ட சனத்தொகை 2012 இல் 7 பில்லியனாகவும், 2024 இல் எட்டு மில்லியனாகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக்குடித்தொகைக்கு தேவையான உணவு, சேவை மற்றும் நுகர்வுப் பொருட்களின் தேவையினை வழங்குவதிலுள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு நிலைத்து நிற்கக் கூடிய அபிவிருத்தி பற்றிய எண்ணக்கரு ஒரு சிறந்த உத்தியாக உள்ளது.
2. வளங்களின் வீண்விரயம் தடுக்கப்படும்:-
எல்லா நாடுகளிலும் வழங்கள் ஒழுங்கான முறையில் பரந்து காணப்படாதமையுடன் இவை சரியான முறையில் உச்சப்பயன்பாட்டினைப் பெற்றிருப்பதாகவும் இல்லை. இதனால் வளங்களின் கணிசமானளவு விரயம் காணப்படுகின்றது. இதனால் நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்தி செயன்முறையின் கீழ் வளங்களிள் பயன்பாடு அதி உச்ச நிலையினைப் பெற்றதாக அமையும்.
3. வறுமை நாடுகளுக்கான வறுமை போக்கப்படும்
அபிவிருத்தி அடைந்த நாடுகளில் உலக சனத்தொகையில் 1/3 பங்கினர் உள்ளனர். ஆனால் உலக வளங்களில் 2/3 பங்கினை அவை அனுபவித்து வருகின்றன. அதே வேளை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் உலக சனத்தொகையில் 2/3 பங்கினைக்; கொண்டிருந்தாலும் உலக வளங்களில் 1/3 பங்கினையே பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலைமையை மாற்றுவதுடன் வளங்களின் மீள்பரம்பல் மூலம் வறிய நாடுகளின் வறுமை போக்கப்படும்.
4. சூழல் மாசடைவினை கட்டுப்படுத்தலாம்
சனத்தொகை அதிகரிப்பினால் அதிகளவில் காடுகள் அழிக்கப்படுவதுடன், கழிவுகளினால் சுற்றுப்புறம் மாசடைதல் முதலிய சூழல் மாசடைவுகள் ஏற்படுகின்றன. இவை நிலைத்து நிற்கும் அபிவிருத்தி கொள்கையினால் சூழல் மாசடைவைக் கட்டுப்படுத்த வழிவகுக்கும்.
5. பௌதீக இடர்களை தவிர்த்துக் கொள்ளலாம்:-
இன்று உலகில் அதிகரித்துவரும் புவி வெப்பமடைதல், ஓசோன்படை அருகிச் செல்லல், கடல்மட்ட உயர்வு, துருவப்பனி உருகுதல், காலநிலை மாற்றம் போன்றவற்றைத் தடுப்பதற்கு அல்லது இழிவளவாக்கவதற்கு நிலைத்து நிற்கும் அபிவிருத்தி முறை அவசியமாகும்.
6. வனவிலங்குகளின் அழிவை கட்டுப்படுத்தல்:-
உணவுக்காக அதிகளவில் வனவிலங்குகள் மற்றும் கால்நடைகள் அழிவடைவதனால் உயிர்பலவகைமை பாதிக்கப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்வதற்கு நிலைத்து நிற்கும் அபிவிருத்தி பற்றிய எண்ணக்கரு முக்கியமானதாகும்.
7. தற்போதைய அபிவிருத்தி முறைகளின் குறைபாட்டினை களையலாம்:-
தற்போதைய அபிவிருத்தி நடைமுறைகள் எதிர்காலத்திற்கு தாக்குப் பிடிக்கக் கூடியனவாகவில்லை. இதனால் எதிர்காலத்திற்கு ஏற்றவகையிலான அபவிருத்தி முறைகள் அவசியமாகும்.
முடிவுரை
சூழல் நேயமான மனித குலத்தை உருவாக்குவதன் அவசியமானது தற்போது உணரப்பட்டுள்ளதோடு பேண்தகு அபிவிருத்தியானது சூழலில் ஏற்பட்டுள்ள சாதகமற்ற மாற்றங்களிற்கு ஒரு தீர்வாகப் பல நாடுகளால் பின்பற்றப்படுகின்ற கோட்பாடாக மாற்றமடைந்துள்ளதோடு மாணவர்களின் கல்வி மூலமாக சுற்றுச்சூழல் கல்வியானது பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதோடு எதிர்காலத்தில் சூழல்நேயமான குடிமக்களை உருவாக்குதற்காக பல நாடுகள் தங்களது கல்வியின் கலைத்திட்டங்களை மாற்றியமைத்துள்ளன.
Comments
Post a Comment