Ecological Systems Theory (Tamil)

 சுற்றுச்சூழல் அமைப்பு கோட்பாடு 


அறிமுகம்

யூரி ப்ரோன்பென்பிரென்னர் (Urie Bronfenbrenner, 1917-2005) - ன் குழந்தை வளர்ச்சியைப் பற்றிய அணுகுமுறையானது, இத்துறையில் முதன்மை நிலையை அடைந்துள்ளது. ஏனெனில் அது குழந்தையின் வளர்ச்சியில், சூழ்நிலையின் தாக்கம் பற்றி புதுமையான விளக்கத்தைத் தருகிறது. சூழலியல் அமைப்பு கோட்பாடு, குழந்தை சுற்றுச்சூழலில் உள்ள சிக்கலான தொடர்புகளால் பாதிக்கப்பட்டு வளர்வதாக கருதுகிறது. ப்ரோன்பென்பிரென்னர், சுற்றுச்சூழல் என்பது ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட, சிக்கலான செயல்படும் அமைப்பு (Complex functioning) என கருதுகிறார். இவற்றுள் வீடு, பள்ளி, குழந்தை அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சுற்றியுள்ள மக்கள், தவிர மற்ற அம்சங்கள் அடங்கியுள்ளன. சூழ்நிலையில், ஒவ்வொரு நிலையும் மற்றவற்றுடன் இணைந்து வளர்ச்சியை வெகுவாக பாதிக்கிறது. 




ஐந்து வகையான சுற்றுச்சூழல் அமைப்புகள்  ( The five environmental systems)

சுற்றுச்சூழல் அமைப்புக் கோட்பாட்டின்படி, நாம் வாழ்க்கை முழுவதும் எதிர்கொள்ளும் மாறுபட்ட சூழல்கள், நம் நடத்தையை பல நிலைகளில் பாதிக்கின்றன. இந்த அமைப்புகளில் நுண் அமைப்பு (The Microsystem), இடைநிலை அமைப்பு (The Mesosystem), புற அமைப்பு (The Ecosystem), பெரு அமைப்பு (The Macro system), கால ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் (The Chrono system) ஆகியவைகள் அடங்கும்.

1. நுண் அமைப்பு  (The Microsystem): சூழ்நிலையின்  உள் பகுதியில் உள்ள இந்த நுண் அமைப்பு, குழந்தையின் நேரடி சூழலில் நடைபெறும் செயல்கள், தொடர்பு முறைகள் ஆகியவற்றை கொண்டது. நம் வாழ்வில் நம்மைச் சுற்றியுள்ள நேரடி சூழல்தான் இது. இந்த அமைப்பில் நம்முடன் நேரடி தொடர்பு உள்ள குடும்பம், நண்பர்கள், சக மாணவர்கள், ஆசிரியர்கள், அருகில் வசிப்பவர் ஆகியோர் அடங்குவர். இதில் உள்ளோருடன் நாம் நேரடியாக தொடர்பு கொள்கிறோம். இக்கோட்பாட்டின்படி, நாம் மற்றவர்களுடன் பழகும் போது வெறும் அனுபவங்களை பெறுபவர் மட்டும் அல்ல, நாமும் அந்த சூழலை உருவாக்குவதில் பங்கு கொள்கிறோம்  என்பதாகும். 

2. இடைநிலை அமைப்பு (The Mesosystem): இரண்டாவது நிலையில் உள்ள இந்த அமைப்பில், வீடு, பள்ளி, சுற்றுப்புறத்திலுள்ளோர்  இவற்றுக்கிடையே உள்ள தொடர்புகள் அடங்கியுள்ளன. இந்த இடைநிலை அமைப்பில் நம் வாழ்வின் நுண் அமைப்புக்களுக்கிடையே உள்ள தொடர்பு உள்ளடங்கியுள்ளது. இதன் பொருள் நமது குடும்ப அனுபவங்கள், நமது பள்ளி அனுபவத்துடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என்பதாகும். உதாரணமாக, பெற்றோரால் ஒதுக்கப்பட்ட ஒரு குழந்தை, தம் ஆசிரியர் பற்றி, ஒரு நல்ல நோக்கை வளர்க்க வாய்ப்பு மிகக் குறைவு. மேலும் இக்குழந்தை, தன் நண்பர்களிடையே பழகும்போது, மதிப்பு குறைவானவராக தன்னை எண்ணி சக மாணவர்களிடமிருந்து விலகிச் செல்ல முடிவு செய்யலாம். 

3. புற அமைப்பு (The Ecosystem): இந்த சமூக அமைப்பில் குழந்தைகள் இல்லை ஆயினும், குழந்தைகளின் அனுபவங்களை பாதிக்கிறது. இந்த சூழலில், ஒருவர் முயற்சியுடன் செயல்படாமல் இருக்கும் சூழலுக்கும், முயற்சியுடன் செயல்படும் சூழலுக்கும் இடையே தொடர்பு ஏற்படுகிறது. ஒரு குழந்தை, தாயை விட, தந்தையின் மீது மிக்க பாசம் கொண்டதாக இருக்கும்போது, அவளின் தந்தை பல மாதங்கள் வெளிநாடுகளில் வேலைக்காக செல்லும்போது, குழந்தைக்கும், தாய்க்கும் இடையே உள்ள தொடர்பில் சிக்கல் தோன்றலாம். மாறாக, குழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஒரு வலுவான உறவும் ஏற்படலாம். 

4. பெரு அமைப்பு  (The Macro system): ப்ரோன்பென்பிரென்னரின் மாதிரியில் மிக வெளியே உள்ள இந்த நிலையில், கலாச்சார பண்புகள், சட்டங்கள், வழக்கங்கள், வளங்கள் ஆகியவைகள் அடங்கும். இது அந்த நபரின் கலாச்சாரத்தைக் குறிக்கிறது. இதில் ஒருவரின் அல்லது குடும்பத்தின் சமூக பொருளாதார அந்தஸ்து, அவருடைய இனம் (Ethnicity), அவர் வசிக்கும் நாட்டின் வளர்ச்சி நிலை ஆகியவை அடங்கும். உதாரணமாக, ஏழைக்குடும்பத்தில் பிறந்தால் தினமும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். 

5. கால ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் (The Chrono system): இதில் ஒருவர் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் (Transitions), ஒருவரின் ஆயுளில் மாற்றம் (Shifts in one’s lifespan) ஆகியன அடங்கும். ஒருவரின் நடத்தையை பாதிக்கும் சமூக பொருளாதார தாக்கங்கள் இதில் அடங்கும். இதற்கு ஒரு தெளிவான உதாரணம், விவாகரத்து (Divorce). இது வாழ்வின் ஒரு முக்கிய மாற்றம் ஆகும். இது தம்பதிகளின் உறவினை மட்டுமின்றி, குழந்தைகளின் நடத்தையையும்  பாதிக்கிறது. 

முடிவுரை 

சுற்றுச் சூழல் அமைப்பு; கோட்பாடு, சுற்றுச் சூழல் அம்சங்களானது, வளர்ச்சி நிலைகளில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை வலியுறுத்துகிறது. குறிப்பாக, ப்ரோன்பென்பிரென்னர்,  குடும்பத்திலும், அதன் நேரடி சூழலிலும் ஏற்படும் உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார் (Kail & Cavanaugh> 2007). ஆசிரியர்கள், உடன் பிறப்புகள்,  விரிவுபட்ட குடும்பம், வேலை மேற்பார்வையாளர்கள், சட்டம் இயற்றுவோர், ஆகியோர்கள் கொடுக்கும் சமூகப்பண்புகள், குழந்தைகளின் நேர்மறை வளர்ச்சியில் செல்வாக்கு வாய்ந்ததாக திகழ்கின்றன.  குழந்தையின் வளர்ச்சியில், பெற்றோரின் பங்கிற்கு முக்கியத்துவம் அளிக்கும், அரசியல் பொருளாதார கொள்கைகளுக்கு தகுந்த மதிப்பு அளிக்கப்பட வேண்டும்.



Comments

Popular posts from this blog

Trends of Curriculum Development (Tamil)

Student Centered Teaching (Tamil)

Sociological Bases of Curriculum (Tamil)

Subject based Curriculum and Integrated Curriculum (Tamil)

Selection of Curriculum Content (Tamil)