Bloom’s Taxonomy of Educational Objectives (Tamil)
புளுமின் கற்பித்தல் நோக்கங்களின் வகைப்பாடு
ஒவ்வொரு ஆசிரியரும் சில கற்பித்தல் நோக்கங்களை அடைவதற்காக பாடங்களைக் கற்பிக்கின்றனர். இந்நோக்கங்கள் அனைத்தும் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றனவா அல்லது அவற்றிற்கிடையே வேறுபாடு உள்ளனவா என்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு தெளிவான விளக்கம் காணப்படவில்லை. ஒரு சில ஆசிரியர்கள் இவை அனைத்தும் ஒரே பொருளைக் கொடுக்கின்றது என்கின்றனர். வேறு சிலர் ஒவ்வொரு வார்த்தையும் பல்வேறு பொருளைக் கொடுக்கின்றன என்கின்றனர். அதனால் நோக்கங்களை அறிவிப்பதில் ஆசிரியர்களுக்கிடையே ஒருமித்த தெளிவான கருத்தொற்றுமை காணப்படவில்லை. இதனை அமெரிக்க ஆசிரியர்களும் உணர்ந்திருந்தனர்.
அமெரிக்க கல்லூரி ஆசிரியர்கள் அவர்களது மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தியபோது அங்கு காணப்பட்ட பதில்களின் நோக்கங்கள் ஒரேவிதமாக இருந்தன என்று கூறுகின்றனர். அமெரிக்க உளவியலாளரான பெஞ்சமின் புளும் (Benjamin S. Bloom) என்பவரும் அவருடன் பணியாற்றியவர்களும் ஒன்று சேர்ந்து 1948-ல் அமெரிக்காவின பாஸ்டன் (Boston) நகரில் அமெரிக்க உளவியல் கழகக் கூட்டம் (American Psychological Association Convention) ஒன்றை நடத்திஇ கற்பித்தல் நோக்கங்களைப் பற்றி சில முடிவுகளை எடுத்தனர். அதில் முக்கியமானது நோக்கங்கள் என்பவை வரையறுக்கக் கூடிய விளக்கக் கூடிய உற்று நோக்கக் கூடிய பயிற்சி பெறக்கூடிய மதிப்பிடக்கூடிய நடத்தைக் கோலங்களாக வெளியிடப்பட வேண்டும் என்பதாகும்.
1956-ல் பெஞ்சமின் புளும்ஸ் அமைத்த வகைப்பாடு கற்றல் நோக்கங்களை வகைப்படுத்துவதற்கான மிகச் சிறந்த கோட்பாடு ஓன்றாகக் கருதப்படுகின்றது. இவர் கற்பித்தல் நோக்கங்களை மூன்று புலங்களாகப் பிரிக்கின்றார். அவையாவன
1)அறிவுசார்புலம்
2)எழுச்சிசார்புலம்
3)உள இயக்க சார்புலம்
இம்மூன்று புலங்களும் மனிதனின் சிந்தனை, மனப்பான்மை மற்றும் செயல் திறன்கள் என்ற மூன்று நிலைகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
1. அறிவுசார்புலம்
அறிவுசார்புலம் என்பது நுண்ணறிவுத் திறனை வளர்ப்பதும் அறிந்தவற்றை நினைவு கூர்வதும் மற்றும் அதனை மீட்டறிதலுமேயாகும். புளுமின் இப்புலம் அடிப்படை நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்குச் செல்லும் ஆறு முக்கியப் பகுதிகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.
1.1 அறிவு பெறுதல் (Knowledge)
அறிதல் தொகுதியின் முதல் மற்றும் அடிப்படைப்பிரிவு இதுவாகும். இது பெயர்கள் ஆண்டுகள் உண்மைகள் முறைகள் செயல்கள் பொது விதிகள் கொள்கைகள் கோட்பாடுகள் ஆகியவற்றை மீட்டறிதலை உள்ளடக்கியதாகும் . எனவேஇ இது நினைவாற்றலை உறுதிப்படுத்தும் நோக்கமாகும்.
1.2 புரிந்து கொள்ளல் (Understanding)
ஒரு பொருளைப்பற்றி அறிந்து கொள்வதோடு அது எவ்வாறு மற்றவற்றிலிருந்து வேறுபடுகிறது என்பதையும் தெரிந்து கொள்ளுதலை “புரிந்து கொள்ளல”; என்கிறோம்
1.3 பயன்படுத்துதல்( Application)
இம்மூன்றாம் நிலை தான் பெற்ற புரிந்து கொண்ட அறிவை புதிய வாழ்க்கைச் சூழ்நிலைகளில் பயன்படுத்துதலைக் குறிக்கும் . இதில் ஏன் எதற்கு எப்படி எவ்வாறு என்று வினாக்கள் கேட்டு அவற்றிற்கான காரணங்களைக் கூறும் செயல்கள் அடங்கும்.
1.4 பகுத்தல்( Analysis)
இப்பிரிவில் முழுமையான ஒன்றைப் பல பிரிவுகளாகப் பிரித்துப் பார்ப்பதோடு அவை ஒவ்வொன்றிற்குமிடையேயுள்ள தொடர்பினையும் அறிதல் அடங்கும்.
1.5 மதிப்பிடல்( Evaluation)
இதில் கருத்துக்களை மதிப்பிடல் அடங்கும். சரியானதா தவறானதா உண்மையானதா இல்லையா என்பன போன்றவற்றிற்;கு இதில் விடை காணலாம்.
1.6 தொகுத்தல்( Synthesis)
இது பகுத்தாராய்தலுக்கு நேர் எதிரான செயல் ஆகும். இதில் பல்வேறு பகுதிகளை ஒன்றிணைத்து ஒரு முழுமையை உருவாக்குவது ஆகும்.
2. எழுச்சி சார்புலம் (Affective Domain)
இப்புலம் என்பது மனப்பான்மை மதிப்புகள் ஆர்வங்கள் மற்றும் பாராட்டு போன்ற உணர்வு ரீதியான நோக்கங்கள் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
2.1 ஏற்றுக்கொள்ளுதல் ( Receiving)
ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதை உணர்தலும் அதனை ஏற்றுக் கொள்ள தயாராதலும் அடங்கும். மாணவர்கள் வகுப்பறையில் அளிக்கப்படும் தூண்டல்களுக்கேற்ப கவனத்தினை அளித்தல் இந்நிலையில் காணப்படுகிறது.
2.2 பதிலளித்தல் (Responding)
நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று அதற்குத் தேவையான பதிலளிப்பதும் இதில் அடங்கும் மாணவர்கள் வகுப்பறையில் கவனத்தோடு இருத்தல் மட்டுமே சிறந்த கற்றலுக்கு வழிவகுக்காது. தூண்டல்களுக்கேற்ப துலங்கல்களையும் வெளிப்படுத்த வேண்டும். இங்கே துலங்கல் என்பது பதிலளித்தல் மற்றும் வகுப்பறை நிகழ்வுகளில் உற்சாகத்தோடு பங்கேற்றல் போன்ற செயல்களைக் குறிக்கின்றது.
2.3 மதிப்பிடுதல் (Valuing )
பங்கேற்பதையும் பதிலளிப்பதையும் அடிப்படையாகக் கொண்டு எந்த ஒரு நிகழ்வையும் மதிப்பிடுதல் இப்பிரிவில் அடங்கும்
2.4 ஒருங்கமைத்தல் (Organizing)
பல்வேறு மதிப்புகளைச் சேர்த்துக் கட்டமைப்பதே ஒருங்கமைத்தல் எனப்படும். மாணவர் ஏற்றுக்கொண்ட பணிகளைச் செய்து முடித்தலும் இந்நிலையில் காணப்படும் செயலாகும்.
2.5 பண்புகள் (Characterization )
தான் பெற்ற அனுபவங்களை மதிப்பிட்டு வரிசைப்படுத்தியப் பின் அதனடிப்படையில் அப்பண்புக் கூறினை தனது வாழ்க்கை நெறிமுறையாக ஏற்றுக் கொள்ளுதல் இப்பிரிவில் அடங்கும்.
3. உள இயக்கச் சார்புலம் (Psychomotor Domain)
உள இயக்கச் சார்புலம் என்பது மாணவர்களின் உள மற்றும் இயக்கம் சார்ந்த திறன்களாகும். டேவ் என்பவர் உளஇயக்கச்சார் புலத்தினை அவற்றின் நோக்கங்களின் அடிப்படையில் ஐந்து வகைகளாக வகைப்படுத்தினார்.
3.1 பார்த்துச் செய்தல் (Imitation)
உற்று நோக்குதலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் மற்றவர்களைப் போலச் செய்யும் நடை உடை பாவனைகளைக் குறிக்கும்.
3.2 கையாளுதல் (Manipulation)
பல தரப்பட்டச் செயல்களை வேறுபடுத்திப் பார்த்துப் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுத்தலைக் குறிக்கும் .
3.3 துல்லியம் பெறுதல் (Precision )
இது செயலில் காணப்படும் துல்லியத் தன்மையையும் ஒரே விதமான தன்மையையும் குறிக்கும்.
3.4 தெளிவாகச் செய்தல் (Articulation )
தொடர்ச்சியானதும் பல்வேறு வகைப்பட்டதுமான செயல்களை ஒன்றுபடுத்துவதன் மூலமாக இவற்றிற்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துதல்.
3.5 இயல்பாக்கிக் கேட்டல் (Naturalization)
இது ஒரு செயலைக் குறைந்த பயிற்சியின் மூலமாக உயர்ந்தகட்டத் திறனை அடைதலைக் குறிக்கும். அதன் மூலம் அச்செயல் சுய சிந்தனையில்லாமலும் அதிக முயற்சியில்லாமலும் செய்யக்கூடிய அளவிற்குத்; தன்னிச்சையாக மாறுகிறது.
ஓவ்வொரு குழந்தையின் வளர்ச்சியும் நடத்தையும் இம்மூன்று புலங்களின் அடிப்படையிலேயே அமைகின்றன. ஆகவே ஆசிரியர்கள் கற்பித்தல் செயலில் ஈடுபடும் சமயங்களில் பாடப்பகுதிகளை இம்மூன்று புலங்களின் அடிப்படையில் அமைத்தல் அவசியமான செயலாகும்.
Comments
Post a Comment