Educational Aims and National Educational Goals (Tamil)

கல்வியின் நோக்கங்களும் இலங்கையின் தேசிய கல்விக் குறிக்கோள்களும்

மனித வாழ்க்கைத் தொடரின் வளம்மிகு இயக்கச் செயல்முறையாகக் கல்வி விளங்குகின்றது. புராதன குழுச் சமூகங்களில் பொருள் ஈட்டவும், பொருள் காக்கவும், சமூகமயப்படுத்தவும் சிறந்த திறன்களை பெற்றுக்கொள்ளவும் கல்வி பயன்பட்டது. இதனால் கல்விக்கும் பொருளாதாரக் கட்டமைப்புக்குமிடையேயுள்ள தொடர்புகள் உருவாக்கம் பெற்றன. இந்த அடித்தளத்தின் விசையும், செயலும் கல்வியைத் தழுவி உற்பத்தி முறைகளின் இயக்கத்தைத் திறன்மிக்கதுடையதாக்குகின்றன. பன்முகத்தன்மை கொண்ட சமூக உறவுகளின் ஒட்டுமொத்தமான தொகுப்பின் மூலக்காரணமாக அமையும் பொருளுற்பத்தி கல்வியைத் தழுவிக் கொள்கின்றது.


கல்வித் தொகுதி உள்ளிணைந்த பண்புகளைக் கொண்டதாகவும், ஒன்றையொன்று சார்ந்த அம்சங்களை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றது. கல்வி நீண்டகாலமாகவே தேடுதல்களையும் பொருளாகக் கொண்டு வந்துள்ளது. இயற்கை, சமூகம், உற்பத்தித்திறன் ஆகியவற்றின் இயக்கங்களிலே தேடுதல்கள் நிகழ்ந்தவண்ணமுள்ளன. கல்வி நிகழ்த்தும் இந்தத் தேடுதல் முடிவற்ற புதுப்பித்தலை ஏற்படுத்தியவண்ணமுள்ளது. கல்வியின் நோக்கங்கள் கலைத்திட்டத்தின் வழியாகச் செயல் வடிவைக் கொள்வதால்; கலைத்திட்ட நோக்கங்கள், கல்விநோக்கங்களிலிருந்து விடுபட்டுச் செல்ல முடியாது. மனித உயிர் வாழ்க்கையிலிருந்து கல்வியைப் பிரித்துவிட முடியாத நிலையில், வாழ்கை நீட்சி முழுவதும் தொடர்ந்து வினைத்திறன் மிக்க கல்வி ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டிய நோக்கம் கலைத்திட்டத்திற்கு ஏற்புடையதாகின்றது.

கல்வியின் குறிக்கோள்கள் என்பது மிக விரிவானதும், நீண்டகால நோக்கில் நிறைவேற்றிக்கொள்ளக்கூடியதுமான கல்வி நோக்கம் ஒன்றின் ஒருபகுதி ஆகும். இது குறுகியதானதாகவும் குறுங்கால நோக்கில் நிறைவேற்றிக் கொள்ளக்கூடியதுமான இலக்குகளைக் கொண்டது ஆகும். நோக்கத்தைப்போல் அன்றி குறிக்கோள் அடையப்பட்டுள்ளதா என அவதானிக்க முடியும். இலங்கையின் தேசிய கல்விக் குறிக்கோளானது தனிநபருக்கும் சமூகத்திற்கும் பொருந்தக்கூடிய வகையில் அதாவது தனிநபர் தேவைகளையும் தேசிய தேவைகளையும் நிறைவு செய்யும் பொருட்டு, நிலைபேறுடைய மனித விருத்தியின் எண்ணக்கருத்திட்ட வரம்பினுள் கல்வியினூடாக அடையக்கூடியவற்றை பெறும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.

கல்வியியின் முக்கியத்துவம் பற்றியும் உலகில் பல்வேறு பிரதேசங்களில் உள்ள அறிஞர்கள் காலத்திற்கு காலம் பல சிந்தனைக் கருத்துக்களை கூறியுள்ளனர். “தொம்சன்” என்பவர் கல்வி பற்றி கூறும் போது “ஒரு தனியாளின் வாழ்க்கையில் நடத்தையில் சிந்தனை மனப்பாங்கு என்பவற்றில் நிரந்தரமான மாற்றத்தை ஏற்படுத்தும் செல்வாக்கே கல்வி என்கிறார்”. இதன் மூலம் மாற்றமுறும் உலகத்தின் சவால்களுக்குத் தக்கவாறு முகம் கொடுப்பதோடு தேசிய பாரம்பரியத்தின் அதிசிறந்த அம்சங்களை அங்கீகரித்து பேணுதல் என்பது ஒவ்வொரு பிரஜைகளின் நிரந்தரமாக  ஏற்படவேண்டும் என்பதாகும். அமெரிக்கா கல்வி அறிஞ்ஞரான “ஜோன் டூயி” (1959 - 1952) பிள்ளைகளுக்குரிய சூழலையும் அங்கு வாழ்வதற்கு உதவும் அனுபவங்களையும் பெற்றுக்கொடுத்தல் கல்வியாகும். பிள்ளைகளுக்கு ஒற்றுமை, இணக்கம் சமாதானம் போன்ற எண்ணக்கருவுடன் பன்மை சமூகத்தின் கலாச்சாரத்தை ஏற்று ஒரு தேசத்தில் வாழுவதற்கு அனுபவங்களை பிள்ளைகளுக்கு வழங்குவதாகும்.
“பௌலாசி” (1746 - 1827) என்ற அறிஞரின் வரைவிலக்கணமானது கல்வி என்பதற்கு மனிதனது எல்லாத் திறன்களும் வாண்மைகளும் இயல்பாகவும் படிப்படியாகவும் இசைந்து வளர்ச்சி பெறுவதே ஆகும் என்பதாக அமைகின்றது. கல்வி மூலம் மாணவர்களின் திறன்களை வளர்ச்சியடைய செய்து மாணவர்களை வேலை உலகிற்கு தயார் செய்தல் வேண்டும் என்பதை இக்கூற்று வலியுறுத்துகின்றது.


பல கல்வியிலாளர்கள், தத்துவவியலாளர்கள், சமூகவியலாளர்கள், உளவியலாளர்களின் கருத்துக்களின்படி கல்வியின் பொதுவான நோக்கங்களை அடையாளப்படுத்த  முடியும். அவையாவன, 

  • தனியாளின் அறிவார்ந்த உணர்வார்ந்த சுமூகமான மற்றும் சம ஆளுமை பண்புகளை உருவாக்க வேண்டும்.
  • நாட்டின் நற்பிரசைகளை உருவாக்க வேண்டும். 
  • சுய பாதுகாப்பு கொண்ட பிரசைகளை உருவாக்க வேண்டும்
  • உயர்ந்த சந்தோச மற்றும் திருப்தி கொண்ட பிரசைகளை உருவாக்க வேண்டும்.
  • சூழலுக்கு ஏற்ற வகையில் தன்னை மாற்றி வாழ்பவர்களாக காணப்பட வேண்டும்.
  • சுய ஒழுக்கமுள்ள நல்ல மனிதர்களாக வாழ வேண்டும்.
  • பூமியில் பூரணமான வாழ்க்கை வாழ்பவர்களாகக் காணப்பட வேண்டும்.
  • நற்பண்புகளை கடடியெழுப்புவதாக காணப்பட வேண்டும்.
  • ஜனநாயக சமூக வினைத்திறன் உள்ளவர்களாக  காணப்பட வேண்டும்.
  • மேலதிகமாக சமய கொள்ளைகளை உள்ளடக்கியதாக  காணப்பட வேண்டும்.

 ஒரு நாட்டின் கல்வி வழங்கும் அடிப்படைகள் தேசிய குறிக்கோள்களுடனே பயணிக்க வேண்டும். அவ்வகையில் அதனை அந்தந்த நாடுகள் தமது நாட்டின் கலாச்சார. பண்பாட்டு விழுமிங்கள், பொருளாதார அரசியல் சித்தாந்தங்கள் மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப அடிப்படைகளையும் சர்வதேச ரீதியாக அமைந்த  பொது நோக்கங்களையும் துணையாகக் கொண்டு தமது கல்விச் செயற்பாடுகளை திட்டமிட்டுச் செயற்படுத்துகின்றன. அவ்வகையில் கல்வியின் பொதுவான நோக்கத்திற்கும், இலங்கையின் தேசிய கல்வி குறிக்கோள்களுக்கும் இடையிலான தொடர்புகளையும் ஆராய்வேமாக,

 குறிக்கோள் - 1
மனித கௌரவத்தைக் கண்ணியப்படுத்தல் எனும் எண்ணக்கருவுக்குள் தேசிய பிணைப்பு, தேசிய முழுமை, தேசிய ஒற்றுமை, இணக்கம், சமாதானம் என்பவற்றை மேம்படுத்தல் மூலமும் இலங்கைப் பன்மைச் சமூகத்தின் கலாசார வேறுபாட்டினை அங்கீகரித்தல் மூலமும், தேசத்தைக் கட்டியெழுப்புதலும் இலங்கையர் எனும் அடையாளத்தை ஏற்படுத்தலும்.

மேற்கூறப்பட்டுள்ள தேசிய கல்வி இலக்கானது இலங்கையில் வாழும் பல்லின கலாசாரத்தை சேரந் ;த மக்களினதும் சமய மொழி கலாசாரம் பண்பாடு நம்பிக்கைககள் என்பவற்றை பாதுகாத்தல்.  அனைத்து இன மக்களிடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி தேசப்பற்றை வளர்த்தல் மற்றும் இலங்கையர் எனும் தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டதாகும். இதன் மூலம் சகல இன மக்களும் பரஸ்பர ஒற்றுமையுடன் சமாதானமாக வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்குகின்றது. இவை பொது கல்வி நோக்கங்களான  நாட்டின் நற்பிரசைகளை உருவாக்க வேணடும் ஜனநாயக சமூக வினைத்திறன் உள்ளவர்களாக காணப்பட வேணடும். மற்றும் மேலதிகமாக சமய கொள்கைகளை உள்ளடக்கியதாக காணப்பட வேணடும் என்ற தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதாக காணப்படுகின்றது. 

குறிக்கோள் - 2
மாற்றமுறும் உலகத்தின் சவால்களுக்கு தக்கவாறு முகங்கொடுத்தலோடு தேசிய பாரம்பரியத்தின் அதிசிறந்த அம்சங்களை அங்கீகரித்தலும் பேணுதலும்.

நாளாந்தம் வளர்ச்சியடைந்து வரும் தொழில்நுட்பம் பூகோளமயமாதல் சூழல் மாசடைவு  போன்றன எமது அன்றாட வாழ்க்கையை மிகவும் சவாலுக்கு உட்படுத்துவதாக அமைகின்றது எனவே அவற்றை சிறந்த முறையில் வெற்றி கொள்வதுடன் எமது நாட்டின் தனித்துமான அம்சங்கள் கலாசாரம் பாரம்பரியம் மற்றும் மரபுரிமைகள் என்பவற்றையும் பாதுகாப்பதனை அடிப்படையாக கொண்டதாகும். எனவே இதன் மூலம் நவீனத்துவத்திற்கு இசைவாக்கமடைதல் பல்வேறு வகையான தொழில்களுக்கு ஏற்ற ஆளணியினரை சர்வதேச தரத்தில் உருவாக்குதல் இயற்கை இடர்களில் இருந்து பாதுகாப்பு பெறல் போன்றவற்றுடன் எமது கலாசாரம் பாரம்பரியத்திலிருந்து விலகிச்செல்லாமை என்பதுவும் எதிரப்பார்க்கப்படுகின்றது. இவை பொது கல்வி நோகக்மான சூழலுக்கு ஏற்ற வகையில் தன்னை மாற்றி வாழ்பவர்களாக காணப்பட வேணடும் என்பதனுடைய தேவைப்பாட்டினை பூர்த்தி செய்வதாக காணப்படுகின்றது. 

குறிக்கோள் - 3
மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், கடமைகள், கட்டுப்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு, ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள ஆழ்ந்த இடையுறாத அக்கறையுணர்வு என்பவற்றை மேம்படுத்தும் சமூக நீதியும் ஜனநாயக வாழ்க்கைமுறை நியமங்களும் உள்ளடங்கிய சுற்றாடலை உருவாக்குதலும் ஆதரித்தலும்.

ஐ.நா சபையின் மனித உரிமை பிரகடனத்தின் படி அனைத்து நாடுகளினதும் அனைத்து இன மக்களுக்கும் உரித்தான மனித உரிமைகள் காணப்படுகின்றன அவற்றை அனுபவிக்கும் அனைவரும் நிறைவேற்ற வேணடிய கடமைப்பொறுப்புகளும் வலியுறுத்தப்படுகின்றது. இவற்றின் அடிப்படையில் பாரக்கும் போது ஒவ்வொருவரும் மனித உரிமைகளை அனுபவிப்பதுடன் பிறரின் உரிமைகளுககும் மதிப்பளித்தலும் பொறுப்புக்களை நிறைவேற்றலும் எதிரப்பார்க்கப்படுகினறது. இதன் மூலம் அனைவருக்கும் உரிமைகளை உறுதி செய்யக்கூடிய உயர் ஜனநாயக விழுமிய பண்புகளை பாதுகாக்க முடியும். இவை அனைத்தும் சுய ஒழுக்கமுள்ள நல்ல மனிதர்களாக வாழ வேணடும் மற்றும் நற்பண்புகளை கட்டியெழுப்புவதாக காணப்பட வேணடும் என்ற பொது கல்வி நோக்கங்களின் வகிப்பாகங்களை ஏற்பதாக அமைந்துள்ளன.

குறிக்கோள் - 4
ஒருவரது உள, உடல் நலனையும் மனித விழுமியங்களுக்கு மதிப்பளிப்பதை அடிப்படையாகக் கொண்ட நிலைபேறுடைய வாழ்க்கைக் கோலத்தையும் மேம்படுத்தல்.


உடல் உள சுகாதாரத்தின் அடிப்படையில் ஒருவரது ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகின்றது. எனவே இதனை உயர் மட்டத்தில் பேணுவதற்கான திறன்களை வழங்குதல் மனிதாபிமானம் மற்றும் ஏனைய மனித பண்புகளை வளர்ச்சியடைய செய்வதுடன் அவற்றை வாழ்கை நீடித்ததாக அமைத்துக் கொள்வதற்கான வழிக்காட்டல்களை வழங்குகின்றது. இதன் மூலம் தனது சுயபாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் பிறரினுடைய பாதுகாப்புக்கு பங்களிப்பு செய்வதும் வலியுறுத்தப்படுகின்றது. இவை அனைத்தும் சுய பாதுகாப்பு கொண்ட பிரசைகளை உருவாக்க வேணடும் மற்றும் உயர்ந்த சந்தோச மற்றும் திருப்தி கொண்ட பிரசைகளை உருவாக்க வேண்டும் என்ற பொது கல்வி நோகக்ங்களின் தேவைப்பாட்டை நிவர்த்தி செய்வதாக அமைகின்றது.  

குறிக்கோள் - 5
நன்கு ஒன்றிணைக்கப்பட்ட சமநிலை ஆளுமைக்குரிய ஆக்க சிந்தனை, தற்துணிவு, ஆராய்ந்து சிந்தித்தல், பொறுப்பு, வகைகூறல் மற்றும் உடன்பாடான அம்சங்களை விருத்தி செய்தல்.


சகல துறைசார் சமநிலையான திறன்களை வளர்த்தல் மூலம் புத்தாக்கம் படைக்கக் கூடிய ஆற்றல்களை விருத்தி செய்தல். நன்மை தீமைகளை சீர்தூக்கிப் பார்த்து சிந்திக்கும் ஆற்றலை வளர்த்தல்,  பொறுப்புக்கூறல் தன்மையை வளர்த்தல், பொதுநலனின் மீது கவனம் செலுத்தி தீர்மானமெடுத்தல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டது. இவை தனியாளின் அறிவார்ந்த உணர்வார்ந்த சுமூகமான மற்றும் சம ஆளுமை பண்புகளை உருவாக்க வேணடும் என்ற பொது கல்வி நோக்கங்களின் அடிப்படை தேவைப்பாடுகளை திருப்திப்படுத்துவதாக அமைகின்றது.

குறிக்கோள் - 6
தனிநபரதும், தேசத்தினதும் வாழ்க்கைத் தரத்தைப் போசிக்கக் கூடியதும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிகக் கூடியதுமான ஆக்கப் பணிகளுக்கான கல்வியூட்டுவதன் மூலம் மனிதவள அபிவிருத்தியை ஏற்படுத்தல்.


ஒவ்வொரு தனிநபரினதும் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் எனும் போது கல்வி சுகாதாரம் பொருளாதாரம் மற்றும் பண்பாடு பழக்கவழக்கம் என சகல வழிகளிலும் தொடர்ச்சியாக உயர்வை காட்டும் வாழ்க்கை முறையை வழங்குவதாகும். இதன் மூலம் தனிநபரினது வாழ்கை நிலை உயர்வடைவதோடு அவை தாய் நாட்டின் அபிவிருத்திக்கும் பங்களிப்பு செய்வதாக அமைகின்றது. அபிவிருத்தி என்பது சகல துறைகளிலும் ஏற்படுகின்ற தொடர்ச்சியான வளர்ச்சியை பிரதிபலிப்பதாகும். எனவே இதன் மூலம் பொது கல்வி நோக்கமான பூமியில் பூரணமான வாழ்க்கை வாழ்பவர்களாகக் காணப்பட வேணடும். என்பதனுடைய அவசியம் வலியுறுத்தப்படுகின்றது.

குறிக்கோள் - 7
தனிநபர்களின் மாற்றத்திற்கு ஏற்ப இணங்கி வாழவும், மாற்றத்தை முகாமை செய்யவும் தயாரப் டுத்தவும் விரைவாக மாறிவரும் உலகில் சிக்கலானதும், எதிர்பாராததுமான நிலைமைகளைச் சமாளிக்கும் தகைமையை விருத்தி செய்தல்.


நாளாந்தம் ஏற்பட்டு வரும் அரசியல் பொருளாதார கலாசார மற்றும் தொழில்நுட்ப மாற்றம் காரணமாக தனிநபரினது வாழ்கைக்கோலமும் மாற்றமடைகின்றது. இவ்வாறான மாற்றங்களை முகாமை செய்தல் அதாவது சமூக மாற்றத்தின் மூலம் உருவாகின்ற வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்வதுடன் அச்சுறுத்தல்களை வெற்றிக் கொள்வதற்கான திறன்களை வழங்குவதாக அமைகின்றன. இவை சூழலுக்கு ஏற்ற வகையில் தன்னை மாற்றி வாழ்பவர்களாக காணப்பட வேண்டும் எனும் பொது கல்வி நோக்கத்தினுடைய தேவைப்பாட்டை பூர்த்தி செய்வதாக காணப்படுகின்றது.

குறிக்கோள் - 8
நீதி, சமத்துவம், பரஸ்பர மரியாதை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச சமுதாயத்தில் கௌரவமானதோர் இடத்தைப் பெறுவதற்குப் பங்களிக்கக் கூடிய மனப்பாங்குகளையும் திறன்களையும் வளர்த்தல்.


அனைத்து இன மக்களினதும் சமமான உரிமைகளை உறுதிப்படுத்துவதன் மூலம் சமூக நீதியை நிலைநாட்டல், ஒவ்வொரு தனிநபரும் ஏனைய இனத்தவருடன் சகோதரதுவத்துடன் பழகும் உணர்வை ஏற்படுத்தல், இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் தாய் நாட்டின் கீர்த்தியையும் புகழையும் சரவ்தேச அரங்கிற்கு எடுத்துச் செல்லக்கூடியவாறான புத்தாகக்ங்களை படைத்தல், மற்றும் நேர் மனப்பாங்கை வளர்த்தலுடன் தொடர்புடையதாகும். இவை நாட்டின் நற்பிரசைகளை உருவாக்க வேண்டும் மற்றும் நற்பண்புகளைக் கட்டியெழுப்புவதாக காணப்பட வேணடும் எனும் பொதுக் கல்வி நோக்கத்தினுடைய தேவைப்பாட்டை பூர்த்தி செய்வதாக காணப்படுகின்றது.   


பொதுக்கல்வி நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் தேசிய கல்விக் குறிக்கோள்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அதனை அடையக்கூடிய வழிகளும் பரவலாக காணப்பட்டபோதும், பூரணமான குறிக்கோளினை அடைவதில் நடைமுறைசார் பிரச்சினைகள் விமர்சனத்திற்கு உட்படுகின்றது. எனினும் எதிர்வரும் காலங்களில் இக்குறிக்கோள்களை அடையக்கூடிய மாற்று வழிகளும் அதற்கான மாற்றுச் சிந்தனைகளும் ஆராயப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் வருடங்களில் இத்தேசிய கல்வி குறிக்கோள்;கள் குறைக்கப்பட்டு அதனை அடைந்து கொள்வதற்கான சிறந்த வழிமுறைகள் கண்டறிந்து செயற்படுத்தப்படலாம். ஏனெனில் கல்வியானது தொழில் உலகுடனும் நவீன தொழில்நுட்பத்தினூடும் வளர்ச்சியடைய வேண்டிய ஒன்றாக சமகாலத்தில் நோக்கப்படுகின்றது. 







 

 


 

Comments

Popular posts from this blog

Trends of Curriculum Development (Tamil)

Student Centered Teaching (Tamil)

Sociological Bases of Curriculum (Tamil)

Subject based Curriculum and Integrated Curriculum (Tamil)

Selection of Curriculum Content (Tamil)